மதிய வேள, மணி ரெண்டு இருக்கும், ஒன்றைக்கு வர பஸ்ஸ இன்னும் காணோம். பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ மணிய பாத்தாலும் வாட்சு ரெண்டு நிமிஷந்தான் ஆனதா காட்டுது. செல்லு மாத்தி ரெண்டு வருசந்தான் ஆவுது. அதுக்குள்ளையா தீந்துருக்கும்..? வெயிலாச்சும் கொஞ்சம் கருண காட்டலாம், மேகமாச்சும் கொஞ்சம் நிழல் தரலாம்னு இல்ல. தோசகல்லுல தெளிச்ச தண்ணிய ஆவியாவுரதுக்கு முன்னாடியே வேலக்கமாத்துல வலிச்சு வீசுன மாறி, கொஞ்சங்கூட மேகமே இல்லாம வானம் இப்டி சுட்டேரிக்குது. ஒதுங்கி நிக்க ஒரு மரங்கூட இல்ல. செருப்பு போடாததால பாதம் வேற சுடுது. பழைய செருப்பு போட்டுட்டு போனா அவ்வளவு மரியாதையா இருக்காதுன்னு வெறும் காலோட வந்தது கொஞ்சம் தப்புதான்.
ரெண்டு பக்கமும் நெல் வயலுக்கு நடுவுல தார்ரோடு மட்டும் வகுடு மாதிரி ரொம்ப தூரத்துக்கு படுத்து கெடக்குது. மூனு மைலு நடந்து வந்ததுல காலு அங்கங்க துடிக்கிறது தெரியுது. இந்த பஸ்காரன் இவ்வளவு லேட்டாதான் வருவான்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் நின்னு நின்னே வந்திருப்பேன்.
நெல் வயல் ஓரமா வரப்புல கொஞ்சம் பச்சையா புல்லுங்க மொளச்சு கெடக்குது, அதுல வேணும்னா போயி நின்னுக்கலாம். எவ்வளவு நேரந்தான் காலு சுடுமண்ணுல படமா நிக்க இப்படியும் அப்படியுமா ஆடிகிட்டே இருக்குறது ? காலு வலிக்கும் போது பாதம் சுடுறது ஒன்னும் அவ்வளவு எதமா இல்ல.
வரப்புல ஏறி நின்னப்புறந்தான் தெரிஞ்சிது அங்க நெரிஞ்ச முள்ளு நெறைய மொளஞ்சு கெடக்குதுன்னு. கோவமா என் பாதத்துல குத்தி கீழ எறங்க சொல்லிரிச்சி. பின்ன மில்லு காரர் காட்டு வரப்புல நான் போய் நிக்குறது குத்தம்னு வரப்புக்கு தெரியாதா என்ன ? அதுவும் சரிதான்.
கோவம் வருதுதான் ஆனா யாருகிட்ட காட்ட? சொந்த காரங்கள பாக்க வந்த எனக்கு இவ்வளவு தண்டனையா ?
ரெண்டு கால்ல ஒரு கால தூக்கிகிட்டு ஒரு பாதம் ரொம்ப சூடான அப்புறம் இன்னொரு கால்ல நின்னுப்பேன். எங்கையாவது இருந்து கொக்கு என்ன பாத்துச்சுன்னா “இவன் ஏன் நம்மள மாதிரி ஒத்தக் கால்ல நிக்குறான் ? அதுவும் தண்ணி இல்லாத வயலுக்கு பக்கத்து” ல னு சிரிக்கும்.
திடீருன்னு எங்க இருந்தோ பறந்து வந்த அந்த சிவப்பு பிளாஸ்டிக் கவர் என் கண்ணுல பட்டுடுச்சு. காத்துல அல மோதிட்டு இருந்த அந்த கவர கோழிய அமுக்குற மாறி அமுக்கி காலுக்கு அடியில வச்சிக்கிட்டேன். வச்சப்புறந்தான் தெரிஞ்சிது அது ரிலையன்ஸ் கடை பையின்னு. அன்னிக்கு ஒரு தடவ இந்த மாறி பையிக்குத்தான் அஞ்சுருவா கேட்டானுவ. இருக்கட்டும் இருக்கட்டும் இதுக்காவது ஆவுதே. சூடு பாதத்துல படல. மனசுல குத்தால அருவில நொழஞ்ச திருப்தி.
ஆனா, இப்போ சூடு உச்சி மண்டைல எரியுது. தல முடியின் அடர்த்தி கம்மியாயிட்டே வருது. வயசு அதிகமாயிட்டே போவுது. பெருமூச்சி விட்டுட்டு, தலைக்கு என்னத்த வைக்குறதுன்னு யோசிக்குறப்போ சிறுசா ஒரு சத்தம் காதுல விழுவுது. அது மோட்டார் சத்தம். திரும்பி பாத்தா பஸ்ஸு கானல் நீருக்கு பின்னாடி அலைந்து வளைந்து வந்துகிட்டு இருக்குது. அத பாத்த ஒடனே இன்னும் சந்தோசம். என்னா வேகத்துலதான் வருதுன்னு தெரியல ரொம்ப நேரமா ரொம்ப தூரத்துலையே இருக்குது. எப்படியும் அது வந்திரும்னு தெரிஞ்சும் மனசு அத வா வா சீக்கிரம் வா ன்னு கூப்டுகிட்டே கெடக்குது. இந்த ஸ்டாப்பிங் ல நா மட்டுந்தான் நிக்குறேன்னு நிறுத்தாம போயிருவானோனு மனசு பயப்படுது. இந்த டவுனு பஸ்சுக்கு நாமலும் கணக்குதான்னு அதுவே பதிலும் சொல்லிக்குது. அப்படியே நிறுத்தாம போனாலும் அது வர்ற வேகத்துக்கு ஓடி போய் கூட ஏறிடலாம் போலன்னு மனசு பஸ்ஸுல ஏற்றத பத்தியே பேசிட்டு இருக்குது.
நான் இங்க நிக்குறத நல்லா பாத்தும் பக்கத்துல வந்துதான் ப்ரேக் அடிக்கிறான் அந்த டிரைவர். சர்க்கார் வேலைல இருக்குற திமிரு போல, கிராமத்தான்னா அவ்வளவு எளக்காரம். வண்டி இருக்குற கண்டிசனுக்கு ப்ரேக் அடிச்சும் கிரீச் கிரீச்சுன்னு அலறிகிட்டு என்னத் தாண்டி பத்து அடி போயிதான் நின்னு தொலைக்குது. சைக். வேகமா போயிதான் எரிக்கணும்னு எட்டி கால வைக்கைலதான் நாடு பாதத்துல கூறான கல்லு ஒன்னு நறுக்குன்னு குத்தி ஓடுற என்ன அசிங்கமா முகம் சுளிக்க வைக்குது. கொஞ்சம் முன்னாடியே நிறுத்தி இருந்தா கல்லுகுத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம்.
பஸ்ஸுல ஏறின அப்புறந்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்குது. இருந்தாலும் டிரைவர் கண்டக்டர பாக்கும் போது எரிச்சலாதான் வருது. வழக்கம் போல மன்னிச்சி விட்ற வேண்டியதுதான். சரி உக்காரலாம்னு பாத்தா என் கெட்ட நேரம் போல பஸ்ஸுல சீட்டே இல்ல. எல்லாரும் உக்காந்து இருக்காங்க. என்ன மாதிரியே இன்னொரு பொண்ணு கூட நிக்குது.
எனக்காக நின்ன பஸ்சு மறுபடி கெளம்புது. டிரைவர் கீர்ற மாத்தி வண்டிய நவுத்தும் போது, சல்லடைல போட்ட நெல்ல பொம்பளைங்க உலுக்குற மாதிரி வண்டில இருந்த எல்லாரையும் இந்த பஸ்சு உலுக்கிவிட்டதுல, தூங்கிட்டு இருந்த ரெண்டு பெருசு கண்ண முழிச்சி எங்க இருக்கோம்னு பாக்குதுங்க. கண்டக்டர் கிட்ட வரத்துக்கு முன்னாடியே நான் பையில இருந்த பத்து ரூவா நோட்ட எடுத்து நீட்டிகிட்டு இருந்தேன். அவரு கிட்ட வந்ததும்,
“கீச்சம்பட்டி ஒன்னு”ன்னேன்.
“ஒருவா இருக்கா?”ன்னாரு
அவர்ட்ட சில்லற இல்ல போல, பையில ரெண்டு அம்பது காசுதான் கெடந்துச்சு. சாமி போட்டோக்கு முன்னாடி எதுக்கு சும்மாக் கெடக்குதுன்னு வீட்டுல கெளம்பும் போது எடுத்து பையில போட்டது இப்போ ஒதவுது.
ரெண்டு அம்பது காச நீட்டினேன். அது செல்லாதுன்னு சில எடத்துல இப்பலாம் வாங்குறதுக்கூட இல்ல.
ஒரு சின்ன யோசனைக்கு அப்புறம் அத வாங்கிக்கிட்டாரு. அவரு பையில சில்லறைய தேடுறப்போதான் ஒரு அதிசயத்தப் பாத்தேன்.
ஆஹா அதோ ஒரு சீட்டு, அந்த பொண்ணுக்கு அப்பால, காலியா இருக்குதே, அந்த பொண்ணு போயி உக்காரதுக்குள்ள, நாம போயி எடத்த புடிச்சிக்கனும்னு மனசு கணக்குப் போட, கண்டக்டர் ஒரு பழைய அஞ்சுருவா நோட்ட நீட்டினாரு. பட்டாம்பூச்சி ரெக்க போல தொட்டாலே கிழிஞ்சிரும் போல இருந்துது. அப்பவே புரிஞ்சிகிட்டேன், கர்மா கண்டக்டர் மூலமாவும் வரலாம்னு.
அந்த அஞ்சுருவ நோட்ட வாங்கி பத்ரமா பையில வச்சிகிட்டே நகரும்போது எனக்கு முன்னாடியே போய் கண்டக்டர் அந்த சீட்ட நெரப்பிட்டாரு. காலைல யார் முஞ்சில முழிச்சேங்கிற அளவுக்கு இந்த பஸ் என்ன சோதிச்சிரிச்சு.
கால் ரெண்டுலயும் தசைகள் துடிக்கிது. காலுக்கு ஒய்வு கொடுத்தே ஆவனும். எங்கையாவது அஜ்ஜஸ் பண்ணி ஒக்கார முடியுமான்னு தேடுரப்போதான் அந்த பொண்ண நல்லா பாத்தேன். இளம்பச்சை நெறத்துல சேல கட்டிருந்தாள். பாவம் அவளுக்கும் உக்கார இடமில்லை. என்ன மாரியே அவளும் நிக்கிறா.
எதேச்சைய பாக்குற மாதிரி அவ என்னைய பாக்குறத நான் பாத்துட்டேன். நான் பாத்ததும் அவ கண்ண திருப்பிகிட்டா. அவ அழகுக்கே யாராச்சும் அவளுக்கு சீட் கொடுக்கலாம்னு மனசு வழிஞ்சிது. சரி சரி சல்லு ஊத்தினது போதும்னு யதார்த்தமா இருக்குற மாதிரி நடிக்க ஆரமிச்சேன். ஆனாலும் மனக்கண் அவ கிட்டயேதான் திரிஞ்சிட்டு இருந்துச்சி. நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன்னு ஒன்னு ரெண்டு தடவ சட்ட வேட்டிய தொட்டு சரி பாத்துகிட்டேன்.
நான் பண்றத எல்லாம் அவ பக்கத்துல இருந்த சீட்டுல ஒக்காந்திருந்த கெழவி முரச்சி நோட்டம் உட்டுகிட்டு இருக்குது.
அந்த கிழவிய கவனிச்சப்பதான் பாத்தேன், அங்க ரெண்டு வாக்கிங் ஸ்டிக் இருந்திச்சி. கால் இல்லாதவங்க வச்சிருந்து அத பாத்திருக்கேன். அந்தக் கிழவியோட கால பாக்கலாம்னு பாத்தா சேல மறச்சிருந்திச்சி. கிழவியோட எந்தக் கால் இல்லையோ தெரியல. பாவம். இப்போ பாக்குறேன், மொறச்சாப்புல இருந்த அந்த கெழவியோட கண்ணு இப்போ கருணையே வடிவமா தெரியுது. சைக். அவ ஒரே மாதிரித்தான் பாக்குறா. என் மன ஓட்டந்தான் அவ பார்வைக்கு ஏதேதோ அர்த்தத்த அப்பிவிடுது.
மறுபடி நின்னுகிட்டு இருந்த அந்த பொண்ண பாத்தேன். அமைதியான முகத்தோட ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தாள். இந்தப் பாவப்பட்ட கிழவிக்கு அவதான் ஒக்கார சொல்லி சீட்டு கொடுத்துருக்கனும். முப்பது வயசுல நமக்கே இப்புடி வலிக்குதே. அந்தக் கிழவி எப்படி கைத்தடிய ஊனி ஊனி நடப்பாளோ. இந்த கிழவி மேல இறக்கப் பட்டுதான் அந்தப் பொண்ணு உதவி பண்ணிருப்பா. இந்த பஸ்லையே அவளுக்குத்தான் நல்ல மனசுன்னு அவளுக்கு அவார்டெல்லாம் கூட கொடுக்க ஆரமிச்சிட்டேன்.
இந்த காலத்து பொண்ணுங்க கூட பெரியவங்க கஷ்டத்த புரிஞ்சி, தான் கஷ்டம்மா நெனச்சி உதவுறாங்க. பரவால.
“இந்த மனசுலாம் அந்த காலத்து பொண்ணுங்ககிட்டதான் வரும், இப்போ இருக்கிற பொண்ணுங்க எல்லாம் எங்க அப்டி நெனைக்குறாங்க ?” னு எவ்வளவு நாள் நான் தப்பா புரிஞ்சிகிட்டு இருந்தேன். இப்போதான் புரியுது, பொண்ணுங்க என்னைக்குமே கருணையின் வடிவம்னு. அந்த பொண்ணு மேல நான் வச்சிருந்த ஒரு கண்ணு இப்போ மரியாதையா மாறுறத நான் கவனிச்சேன்.
நல்லா போயிகிட்டு இருந்த பஸ்ஸ, கண்டக்டர் விசில் அடிச்சு,
“சொமதாங்கி சீட்டு கேட்டது யாரும்மா ? சீக்கிரம் எறங்கு” ன்னு சொல்லிட்டு, பஸ்ஸின் மேற் கூரையை இரண்டு முறை தட்டினார். டிரைவர் பிரேக் அடிக்கிற சத்தம் க்ரீச்சின்னு விசில் சத்தத்த விட அதிகமா அலறுச்சி. க்ரீச் சத்தத்தக் கேட்டு அந்தப் பொண்ணு லேசா மொகத்த சுழிச்சித இன்னொரு தடவப் பாக்கவே மறுபடியும் பிரேக் போட சொல்லி கேக்கலாமான்னு இருந்துச்சி. சரி இந்த ஸ்டாப்பிங்ல யாராவது இறங்கினா அந்தப் பொண்ணே உக்காந்துக்கலாமுன்னு முடிவெடுக்கும்போது, தியாக சிகரமாவே நான் என்ன நெனச்சிகிட்டேன். இந்த மாதிரி விட்டுக் கொடுக்குற குணம் வேற யாருக்கு வரும்?
ஆனா யாருமே இறங்குற மாதிரி தெரியலையே. காலைல தேதி கிழிக்குறப்பவே என் மேஷ ராசிக்கு கஷ்டம்னு போட்டிருந்தான். ஆனா இவ்வளவு கஷ்டம் வரும்னு நான் நெனைக்கல.
யாருமே ஏறங்கலன்னா யாருக்குதான் கண்டக்டர் விசில் அடிச்சான்னு பாக்குறப்போதான், அந்த பொண்ணு ரெண்டு வாக்கிங் ஸ்டிக்கையும் பஸ்ஸுல இருந்தபடியே கீழ வச்சிட்டு ஒரு கால ஊன்னி ஊன்னி கீழ இறங்குறத பாத்தேன். என் காலு வலிக்குறது நின்னுருச்சி. டக்குன்னு நெஞ்சுக்குழி கனமாச்சி. பஸ்சு கெளம்புறதுக்கு முன்னாடி அந்த கெழவியையும் பஸ்சுல ஒக்காந்திருந்த எல்லாரையும் திரும்ப ஒரு முறை நல்லா பாத்துக்கிட்டேன்.
Story by
Suryadevan Vasu