சிறுகதை: Appavin Spotify Playlist

1 இறப்பு

நான் மூச்சுவிடும் சத்தம் நின்று சில நொடிகள் இருக்கலாம். இதயத்துடிப்பின் வேகம் மெல்ல குறைந்து வந்தது. இறுதியாய் ஒரு து(ண்)டிப்பு. பிறகு ஒரு பெரும் நிசப்தம். நள்ளிரவில் பூக்கள் வென்னிறப்பூக்களின் இதழ்கள் விரியும் ஒலியைவிட மெல்லிய ஒலியோடு ஒரு அசைவு. நான் இலகுவாய் உணர்ந்தேன். ஏதோ பரவசம் என்னை வந்து ஆட்கொண்டது போல இருந்தது. உடலில் இருந்த அசௌகரியங்கள் அனைத்தும் மறைந்துப்போயின. முதுகு வலிக்கவில்லை. இதுதான் இறப்பு என்றால் யாரும் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு இலகுவாக இருந்தது. உடலின் கணம் இல்லை. காற்றுப் போல உணரத் தொடங்கினேன்.

என் பெயர் அங்கமுத்து. நான் இறந்தப்பிறகு சில நிமிடங்கள் நான் எங்கும் செல்லவில்லை. எனது உடலைப் பார்த்துக்கொண்டு அங்கேயேதான் இருந்தேன். உட்காரவும் இல்லை. நிற்கவும் இல்லை. கால்களை உணராமல் இருந்தேன். எதுவும் புரியவில்லை. அருகில் தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவியை எழுப்ப முயன்றேன். அவளைத் தொட முடியவில்லை. எனது மகனையும் எழுப்ப முயற்சித்தேன் அவனையும் தொட முடியவில்லை. கனவுதான் என்று நம்ப முயற்சித்தேன். விழித்துவிடலாம் என்று கண்களை இறுக மூடித் திறந்துப்பார்த்தேன்.

என்னைச்சுற்றி பலரும் என் கண்களுக்கு மெல்லத் தெரிய ஆரம்பித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் அனைவரும் எனக்கு முன்பே இறந்துப் போனவர்கள். சில முகங்களை என்னால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அமைதியே வடிவாய் அத்தனை முகங்கள். ஆவிகள் என்று நான் அதுவரை நினைத்திருந்த பலக்கூற்றுகள் உண்மையாகவே இருந்தன.

என்னைச்சுற்றி இருந்த பெருங்கூட்டத்தில் என்னுடைய பெரிய அண்ணன் மாரிமுத்து என்னருகில் இருந்தார். அவரிடம் நான் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, ஆறுதலாய் ஒரு அணைப்பை எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாய்க் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார். என் அத்தை வள்ளி என்னைப் பிடித்துக்கொண்டு அழுதுக்கொண்டே இருந்தார். பாட்டி ரஞ்சிதம் எனது தலையில் கைவைத்து கண்களை மூடி ஏதோ முனுமுனுத்துவிட்டு சென்றுவிட்டார். மீசை வைத்த ஒரு பெரியவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. பிறகுதான் புலப்பட்டது அவர் என் அப்பா என்று. மூன்று வயதில் பார்த்தது. அவரை நான் தெளிவாய்ப் பார்த்தது இன்றுதான்.

இவ்வளவும் நொடிக்கு மூன்றரை முறை சுற்றும் மின் காற்றாடியின் ஒரு சுற்றில் நடந்தவைதான். நேரம் மிகப்பொருமையாக நகர்ந்தது நான் உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்தில் இருந்ததால்தான் என்று அனுமானித்தேன். அழுதும் எனக்கு கண்ணீர் வரவில்லை. இறந்ததற்காக அழவில்லை. எதற்காக அழுதேன் என்று தெரியவில்லை. இறப்பு என்றால் சோகமான விடயம் என்று நம்பியிருந்ததால் அழுதிருக்கலாம்.

ஏனோ திடீரென்று என் நண்பன் கந்தவேல் நினைவிற்கு வந்தான். அவனும் நானும் அந்த மாரியம்மன் கோவில் அரச மரத்தடியில் பேசிச் சிரித்தது ஞாபகம் வந்துவிட்டது. அவனிடம் மட்டும்தான் நான் வாழ்வின் நல்லது கெட்டது நடந்தது நடக்காதது என சகலத்தையும் பேசித் தீர்த்துள்ளேன். அவன்தான் என் ஆதர்ச ஸ்நேகிதன். அவனை நினைத்துக் கொண்டிருக்கும் போதே மாரியம்மன் கோவில் அரசமரத்தடி கான்கிரீட் தளத்திற்கு அருகில் நான் சென்றுவிட்டேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால், என் வீடு எங்கோ தூரமாக இழுத்துச் செல்லப்பட நான் மட்டும் இருந்த இடத்திலேயே கால்கள் இன்றி நின்று கொண்டிருக்க, அரச மரத்தடி இடம் தானாக என்னிடம் வந்தது போலத்தான் இருந்தது. நான் நகர்ந்தது போல எனக்கு உணரவில்லை. பூமி எனக்காக சுழன்றதுப் போல இருந்தது. பூமியில் கால் பதிக்காத என்னால் நகர முடியாதது எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை. அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், அரச மரமே காற்றில் சலசலக்க, அங்கு வீசிய காற்றை என்னால் உணரமுடியவில்லை. காற்று போல உணரும் என்னால் காற்றை உணரமுடியவில்லை. முதல் முரண்.

கந்தவேல் வீட்டை அடுத்த நொடிப்பொழுதில் எனதருகில் இழுத்தேன் என்றும் சொல்லலாம். நான் கந்தவேல் வீட்டிற்கு சென்றேன் என்றுகூட சொல்லலாம். கந்தவேல் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான். அவன் குறட்டைவிடும் சத்தம் எனக்குக் கேட்டது. நான் எழுப்பும் எந்தச் சத்தம் அவனுக்குக் கேட்கவில்லை. இரண்டாம் முரண்.

அவனது செல்போன் சரியாகக் காலை ஐந்துமணிக்கு அலாரம் அடித்தது. கந்தவேல் பாதி தூக்கத்தில் அதை அனைத்தான்.

இந்த சத்தம் எனக்கும் கேட்டது. காற்றும் தீண்டாத என்னை இசை தழுவியது. காற்றின் அசைவு என்னை வருடாத போது, காற்றின் அதிர்வு மட்டும் என் செவிப்பறையில் அதிர்வுகளைத் தந்ததுதான் மூன்றாம் முரண்.

>>>>> (கதையை வேகமாய் முன் நகர்த்திச் செல்கின்றேன்.) ஏனென்றால் இறந்துப்பிறகு நடக்கும் எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால், நீங்கள் ஆச்சர்யப்பட எதுவும் இல்லாமல் போய்விடும். வெறும் மூன்றே மூன்று முரண்களைத்தான் சொல்லி உள்ளேன். எண்ணமுடியாத ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. சிரிக்கவும் அழவும் ஆச்சர்யப்படவும் கோபப்படவும் வருத்தப்படவும் இவ்வுலகில் கோடி நிகழ்வுகள் கொட்டிக்கிடக்கின்றன. சொர்க்கம் நரகம் இரண்டுமே இந்தப்பூமிதான். நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதை அனுபவிக்கலாம்.

தலைக்கு மேல் ஒரு ஜீவ ஜோதி தெரிகிறதே அதுதான் பெருவொளி. ஆவியாக வாழப் பிடிக்கவில்லை என்றால் அந்த ஜீவ ஜோதியில் கலந்துவிடலாம். ஒளியானப்பிறகு எந்த உணர்வும் இருக்காது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் எனும் ஐம்புலன்களில் பார்த்தல், கேட்டல் தவிற மற்ற மூன்று புலன்களும் செயல்பட முடியாது போய்விடும். ஜீவ ஜோதியில் கலக்கும் போது பார்த்தல் கேட்டல் ஆகிய கடைசி இரண்டு புலன்களும் நின்றுவிடும். பலரும் இப்பூமியில் வாழ்ந்தது போதும், பார்த்தது போதும் என்று பெருவொளியில் கலந்துவிடுவார்கள்.

2 கேசட் பெட்டி

இறந்தப்பிறகு ஆவிகளுக்கு இசைதான் ஆறுதல். காலை நான்கு மணிக்கு டீக்கடையைத் திறந்து, வாசல் தெளிப்பதற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கும் பாடல்களைக் கேட்க, ஆயிரமாயிரம் ஆவிகள் ஒவ்வொரு டீக்கடையிலும் கூடியிருப்பார்கள். ஒரு நாற்காலியில் ஒரு லட்சம் ஆவிகள் கூட உட்கார்ந்து இருப்பார்கள். யாரும் அடித்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒருவரை ஒருவர் தீண்ட முடியாது. கடந்து செல்லும்போது கூட ஊடுருவிக் கொள்வார்கள். பார்த்துக் கொள்ளலாம். பேசிக்கொள்ளலாம். அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் சண்டையிடாமல் இருக்க மாட்டார்கள்.

நான் இறந்தப்பிறகு, எனக்கும் ஆறுதலைத் தருவது இசைதான். உயிரோடு இருந்தபோது டவுனுக்குச் சென்று ஒவ்வொரு கேசட்டையும் வாங்கி வருவேன். ஆசையாய் வாங்கிவந்த கேசட்டுகளை டேப் ரெகார்டரில் போட்டு திரும்பத் திரும்பக் கேட்பேன். சந்திராவும் கேட்பாள். நான் சும்மா உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். சந்திரா சமைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்பாள். (ஆணாதிக்கம் இல்லை. எனக்கு அவ்வளவுதான் தெரியும். அவ்வளவுதான் எனக்கு தெரியும் என்பது சந்திராவுக்கும் தெரியும்.) ஒரு நாளும் சந்திரா என்னை வேலைக்கு போகச் சொல்லி கடிந்தது இல்லை. அதற்காக நான் தினமும் வீட்டிலேயே இருந்ததும் இல்லை. இசையே போதையாகிப்போன எனக்கு, கந்தவேல்தான் பாக்கெட் சாராயத்தை பரிந்துரைத்தான். யாரையுமே வெறுக்காத சந்திரா கந்தவேலை மட்டுமே வெறுத்தாள். அவனும் நானும் சேர்ந்து சாராயம் குடிப்போம் என்பதால்.

எங்கோ நான் கேள்வி பட்டிருக்கிறேன், இரு போதை வஸ்துகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று. சாராயத்தையும் கஞ்சாவையும் சேர்க்கலாகாது, கஞ்சாவையும் அபினையும் சேர்க்கலாகாது, கள்ளையும் சாராயத்தையும் சேர்க்கலாகாது. இது எதனோடும் இளையராஜாவின் பாடலை சேர்த்தல் ஆகவே ஆகாது. போதை ராஜபோதை ஆகிவிடும். ராஜாவின் போதை ஆகிவிடும். சாராயத்தில் இல்லாத ஏதோ ஒரு தொலைந்துபோன ரகசியம், அந்த விடுபட்டு மந்திரம், ராகமாய் ரிங்காரமாய் ராஜாவின் இசையில் பொதிந்துள்ளது.

நான் சொத்து போல சேர்த்துவைத்தது எல்லாம் என் அலமாரியில் உள்ள இந்த நூற்றுக்கணக்கான கேசட்டுகள்தான். திருத்தம். நூற்றுக்கணக்கில் வைத்திருந்த கேசட்டுகள் இப்போது ஒரு நூறு கேசட்டுகள்தான் இருக்கின்றன. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று கந்தவேலுக்கு கொடுத்துவிடுவேன். நானும் கந்தவேலும் அந்த டேப் ரெக்கார்டரை எடுத்துக்கொண்டு அரச மரத்தடிக்கு போய்விடுவோம். இசையோடு கலந்து கண்களை மூடினால் நினைவுகளில் எங்கோ பயணித்துவிடுவோம். கண்களை திறக்கும்போதுதான் அரச மரம் வானத்தை மறைத்துக்கொண்டு நிலவொளியைத் தன் இலைகளால் சல்லடை போட்டு சலித்து எங்கள் மீது தெளித்துக்கொண்டிருக்கும். தவளைகளின் ரிங்காரமும், வெட்டுக்கிளியின் ரிங்காரமும், ராஜாவின் இசைக்கு போட்டி போட்டு கச்சேரி நடத்தும். எப்போதாவது என் மகன் கோபி வந்து “ப்பா அம்மா உன்ன சாப்பிட கூப்டுச்சு” என்று அழைப்பான். கந்தவேலை ஒருமுறை பார்ப்பேன். அவன் “போய் வா” என்றொரு சமிக்ஞையை சிறு தலையசைப்பில் தருவான். டேப் ரெக்கார்டரில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் முடிவடையும் வரை நான் காத்திருப்பேன். என் மகனும் எதுவும் பேசாமல் எனக்காகக் காத்திருப்பான். பாடல் முடிந்ததும் நானும் என் மகனும் வீட்டுக்கு வருவோம். கந்தவேல் அவன் வீட்டுக்குப் போவான்.

தினமும் இரவு, ஏதோ ஒரு கேசட்டை எடுத்து போட்டு பாட்டு கேட்டுக்கொண்டேதான் தூங்குவேன். இசையே தாலாட்டாக இருக்கும்.

நான் இறக்கும் முன்பே அந்த டேப் ரெக்கார்டர் பழுதடைந்துவிட்டது. டவுனில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் சரி செய்ய முடியாது என்று கூறிவிட்டார்களாம். அதுவே எனக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு நானும் சந்திராவும் நகரத்திற்கு சென்ற போது ஆசையாய் வாங்கிவந்த டேப் ரெக்கார்டர் அது.

பயன்படுத்தாத கேசட்டுகளை அலமாரியில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இறந்துப்போன என் அப்பா அம்மாவின் போட்டோ, என் தாத்தாவின் போட்டோ, என் போட்டோ என்ற வரிசைக்குக் கீழே உள்ள அலமாரியில், உயிரற்ற நிலையிலும் இறந்துப்போகாத நூறு கேசட்டுகள் இருக்கின்றன. அதில் உள்ள பாடல்களை நான் இவ்வுலகின் பல இடங்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் எனது வீட்டில் அமர்ந்துக்கொண்டு கேட்பதற்கே அத்தனை ஆசை எனக்கு. எப்போதாவது வீட்டில் உள்ள அரசாங்கத் தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்த பாடல் ஒலிக்கும், எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் ஆவியை நொடிப்பொழுதில் இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவேன். என் மகன் கோபி சேனலை மாற்றிவிடுவான். எனக்கு கோபம் வரும். அவன் தலையில் நறுக்கென கொட்டுவேன். அவனுக்கு வலிக்காது. நான் அடித்தேன் என்றுகூடத் தெரியாது. அவனது பாடல் ரசனையைக் கண்டு எனக்கு சகிக்கமுடியாதக் கோபம் வரும். அதிக ஒலி எழுப்பும் பெரும் நவீன கருவிகளைக்கொண்டு வாசிக்கப்படும் கன்றாவியான இரைச்சல்களை இசை என்று கேட்டுக்கொண்டிருக்கிறான்.

3 கோபியின் ப்ளேலிஸ்ட்

கோபியை நான் நன்கு வளர்க்கவில்லை என்ற கோபம் என்மீதே எனக்கு உள்ளது. இசையை ரசிக்கத்தெரிந்த எனக்கு பிள்ளையை நன்கு வளர்க்கத் தெரியவில்லை. பதினேழு வயதில் சிகரெட் புகைக்கிறான். அவனை அடி வெளுத்துவிட்டேன். அது கோபிக்கு தெரியாது. எனக்கு கோபம். இதை எதற்கு புகைக்கிறான் என்று. அதிலிருந்து ஓரிரு நாள்தான் இருக்கும் பீர் குடிக்கிறான். அதைக்கூட தாங்கிக்கொள்வேன். பிறகு செல்போனில் ஒரு பாட்டை வைத்துக்கேட்டான், நான் மட்டுமல்ல, அங்கிருந்த பதினேழு ஆவிகளும் தெறித்து பறந்தோடிவிட்டோம்.

சந்திராவிடம் எக்ஸாம் ஃபீஸ் என்று சொல்லி ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு, அதில் முன்னூறு ரூபாய்க்கு ஒரு இயர்ஃபோன் வாங்கினான். வாங்கிய உடன் அவன் கேட்ட முதல் பாடலே காது வலித்தது.

அந்த இயர்போனில் கோபி கேட்கும் அனைத்துப் பாடல்களுமே காதுகளை துளைக்கும் பாடல்கள்தான். தூங்கும் போதும் கேட்கிறான். நடக்கும் போதும் கேட்கிறான். பஸ்ஸில் போகும்போதும் கேட்கிறான். பாத்ரூமிலும் கேட்கிறான். குளிக்கும் போதும் கேட்கிறான். என்னால் அவன் அருகில் போகவே முடியவில்லை. அவன் பார்க்கும் கேட்கும் இசைகள் யாவும் என்னை அவனிடம் நெருங்கவிடவில்லை. என்னால் அந்தை சத்தத்தையெல்லாம் இசை என்றே எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பரிட்சையில் பெயிலாகிவிட்டு தன்னை ஒப்பேற்றிக்கொள்ள ஒரு பாடலை கேட்டுக்கொண்டிருந்தான். எனக்கு ஆத்திரம் வந்தது. அவன் ஏன் வருத்தப்படவில்லை என்று. தான் செய்த தவறுக்கு, தான் செய்யத்தவறிய கடமையை எண்ணிக்கூட வருத்தப்பட கோபி தயராக இல்லை. எல்லா நேரத்திலும் தான் செய்த எல்லா செயல்களுக்கும் திமிருடனே பதில் பேசிக்கொண்டிருந்தான்.

சந்திராவை எல்லா வகையிலும் அவன் ஏமாத்திக்கொண்டிருந்தான். இதற்காகவே நான் வீட்டுக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டேன். சந்திரா என்னை நினைத்து என் படத்திற்கு மாலையிட்டு வணங்கும்போது தவறாமல் அவளோடு இருப்பேன். அப்போதும் இந்தப்பையன் என்னை வணங்க மாட்டான். அதுசரி. நான் என்ன அப்படி பண்ணிவிட்டேன். அவன் என்னை கை எடுத்து வணங்க. சாமி மாதிரி கும்பிடனும்னா சாமி மாதிரி நான் குடும்பத்த காப்பாத்திருக்கனும். நான் இப்படி வருந்திக்கொண்டிருக்கும் போதே அவன் ஒரு பாட்டு போட்டான், நான் மீண்டும் செத்துப்போலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

கோபி காலேஜில் அவனது வகுப்பில் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான். அந்த சமயத்தில் மட்டும் சில பாடல்களை அவன் கேட்க, நானும் அவனோடு கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் பெரும்பாலனவை இளையராஜாவின் இளையமகன் இசையமைத்தது என்று தெரிந்தது. இருக்காதா பின்ன. அப்பா மாதிரிதானே பையன் இருப்பான். என் பையன் கோபிய விடுங்க. நான் யுவன்ன சொன்னேன்.

கோபி காதலித்த பெண் கோபியின் தொடர்பை மெல்ல விலக்கிக்கொண்டிருந்தாள். கோபிக்கு அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அனுபவம் இல்லை. அவளை தேவிடியா என்று திட்டிவிட்டான். அந்தப்பெண் மீது தப்பு ஏதும் இல்லை. ‘கோபி அவளுக்கு சரியான ஜோடி இல்லை’ என்று அவள் நம்புகிறாள். கோபி தன் வாழ்வில் இருந்து அவளை நீக்கிவிடுவதைவிட சரியான செயல் ஒன்றும் இல்லை. ஆனால் கோபி தேவையில்லாத செயல்களை செய்தான். ரம் குடித்து வாந்தி எடுத்தான். சந்திராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தேடிக்கண்டுபிடித்து அந்த பிய்ந்துப்போன இயர்ஃபோனை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். சந்திராவை நான் அணைத்துக் கொண்டேன். என்னை மயக்கியது இசைதான். அவனையும் இசைதான் சரிசெய்யும் என்று அவள் நம்பினாள். கண்ணீர் வராது என்றாலும் நான் அழுதேன்.

4. Office Politics

கோபிக்கு ஒரு வேலையில் ஒழுங்காகப் போய் வருவது வரவில்லை. எங்குப்போனாலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே நின்றுவிடுவான். அது சரியில்லை, இது சரியில்லை, அவன் அப்படி, இவன் இப்படி, சம்பளம் கம்மி, என்று எதாவது ஒரு குறையை மற்றவரிடம் பேசிப் பேசியே இருக்கும் வேலையை கெடுத்துக்கொள்வான்.

நண்பர்கள் கடன் கேட்டால் தருகிறான். திருப்பி கேட்க மறந்துவிடுகிறான். தயங்குகிறான். அவசரத் தேவை எனும்போது மற்ற நண்பர்களிடம் கடன் வாங்குகிறான். அவர்களிடம் இருந்து வரும் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை. அதனால், ஆஃபிஸில் கோபியின் மீது ஒரு சரியில்லாத அபிப்ராயம் இருந்தது.

இப்போது இவன் இருக்கும் ஆஃபிஸ் இவனுக்கு பிடித்திருக்கிறது. காரணம் அங்கு வேலை செய்யும் இன்னொரு பெண் சரண்யா. அவளைப் பார்ப்பதற்காகவே அவள் வரும் பஸ்ஸில் வருவான். வரும் போது ஒரு பாட்டு. வேலை முடிந்து போகும்போது ஒரு பாட்டு. அன்று பஸ்ஸில் பாடும் பாட்டை இவன் வாட்சப் ஸ்டேடஸ் வைப்பான். அவளே தினமும் முதல் ஆளாக பார்ப்பாள். கண்டக்டரிடம் பேசி நண்பனாக்கிக் கொண்டான், கோபி தரும் பென்ட்ரைவில் உள்ள புதுப்புது காதல் பாடல்களை ஒலிக்கச் செய்வதில்தான் அவன் தன்னை ஒரு கலாரசிகனாக பந்தா காட்டிக்கொண்டிருந்தான்.

சம்பள உயர்வு கேட்க வேண்டி அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அந்த நண்பர்கள் இவன்போல் இல்லை. இவன் பேசியதை மிகைப்படுத்தி முதலாளியிடம் பத்தவைத்துவிட்டார்கள். இந்த சூதுவாது எல்லாம் தெரியாத கோபி, மாங்கு மாங்கு என்று வேலை பார்த்துக்கொண்டிருக்க, முதலாளி வந்து அனைவர் முன்பும் அவனது வேலையின் தரம் பற்றி தாழ்வாகப் பேசியதோடு, கோபி அலுவலக நண்பர்களிடம் வாங்கிய கடனை சம்பளத்தில் கழித்துக்கொள்வதாகவும், அவரே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடனைத் திருப்பித்தருவதாகவும் கூறுகிறார். ஐம்பது பேர் இருந்த அந்த இடத்தில், கோபி பேச்சற்று கண்ணில் நீருடன் நின்றான்.

சரண்யா இருக்கும் இடத்தை அவன் நன்கு அறிவான். கவனமாக அவள் நிற்கும் இடத்தை மட்டும் கண்கொடுக்காமல், தன் பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டான்.

4. வலி தீர்க்கும் பாடல்கள்

வரும் வழியெல்லாம். ஃபோனை எடுத்துப் பார்த்துக்கொண்டே வந்தான். அவன் இயர்ஃபோனை எடுத்து காதில் சொருகி எதோ பாட்டைப்போட்டான். அதைப் பிடிக்காமல் மாற்றினான். அடுத்தப் பாட்டையும் மாற்றினான். அடுத்தப் பாட்டையும் மாற்றினான். அடுத்தடுத்து வந்த எந்தப்பாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. வரிசையாக மாற்றிக்கொண்டே வந்தவன், ஒரு இடத்தில் பாடல் கேட்பதை நிறுத்திவிட்டு, பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்கினான்.

அதோ அங்கிருக்கும் டாஸ்மாக்கைப் பார்த்துவிட்டுதான் இறங்கிவிட்டான். படுபாவி பையன். ‘இவன் ஏன் இப்டி குடிச்சே சாவறான் தெரியல’. என்னை அறியாமல் நான் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன். அவனுக்கு கேட்காது என்று எனக்கு தெரியும். ஏதோ ஒரு மஞ்சள் நிற மூடி இருந்த சாரயத்தை வாங்கினான். குடித்தான். குடித்தான். பாதிக்கும் மேல் குடித்தே விட்டான். போதை தலைக்கேறி நடக்க ஆரம்பித்தான்.

தள்ளாடி தள்ளாடி நடந்தே அரச மரத்தடிக்கு வந்தான். வந்த வேகத்தில் கான்கிரீட் திட்டில் சாய்ந்து படுத்தான். அங்கிருந்த ஊர்காரர்கள் அங்கமுத்து பையன் கோபியா இது? ஏன் இப்டி பண்றான்? என்று சலசலக்க ஆரம்பித்தார்கள். பெருமாள் நொண்டிக்கொண்டே சென்று சந்திராவை அழைத்து வந்தான். சந்திராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோபியை தூக்கி நிறுத்த முயற்சித்தாள்.

கோபி போதையில் சந்திராவை தள்ளிவிட்டு, “என்ன தொடாத ஊமச்சி, உன்னாலத்தான் எல்லாம்.”

ஊமச்சினு சந்திராவ அவன் சொன்னதில்ல. எல்லாரும் அவள அப்டி கூப்டுவாங்க. நானும் கோபியும் அவள அப்டி கூப்டதில்ல.

“நீயும் உன் புருசனும் எதுக்குடி என்ன பெத்தீங்க? வாரிசு இல்லாத சொத்துக்கு வாரிசு வேணும்னா? அன்னைக்கே என்ன சாவ அடிச்சிருக்கலாம்ல,”

அவன் சொல்றது, கோபி பத்து வயசுல தண்ணி டேங் மேல ஏறி அவ்ளோ உயரத்துல இருந்து கீழ விழுந்துட்டான். ஆஸ்பித்திரில மூல செத்துரிச்சி சொல்லிட்டாங்க. கோமாவுக்கு போயிட்டான். எப்போ கண்ணு முழிப்பான்னே தெரியாதுனு டாக்டர் சொன்னாரு. அப்போ கோர்ட்டுல ஒரு கேசு போயிட்டு இருந்துச்சி, கருணைக் கொலைய அனுமதிக்கலாமா, இல்ல சட்டவிரோதம் ஆக்கலாமானு, எல்லாருமே கோபிய கருணைக்கொலை பண்ணிறலாம், தீர்ப்பு வந்தப்பறம் பண்ண முடியாதுனு அவசரப் படுத்தினாங்க. எல்லாருடைய பேச்சையும் கேட்டுட்டு நானும்கூட சரி சொல்லிட்டேன். ஏன்னா மூனு மாசமா கோபி கோமாவுலதான் இருந்தான். ஆனா சந்திரா ஒத்துக்கல. நான் பாத்துக்குறேன் சொல்லி எல்லாரையும் எதிர்த்து நின்னாள். இந்த விசயம் வளர்ந்த அப்றம் கோபிக்கு தெரியும். அததான் இப்போ போதைல சொல்லி திட்டிட்டு இருக்கான். சந்திரா அவன காப்பாத்திவிட்டதாலதான் இவ்வளவு கஷ்டங்களையும் அவன் சந்திக்கிறானாம்.

அவன் வாய்க்கு வந்தத பேசி தீர்த்தப் பிறகும் சந்திரா அவன கைத்தாங்கலா கூட்டிட்டு வந்து வீட்டுல படுக்க வச்சாள். கோபி திடீரென எழுந்து நான் சேகரித்து வைத்திருந்த கேசட்டுகளை அள்ளி எடுத்து தூக்கிப்போட்டு உடைத்தான். “இவரு பெரிய கலாரசிகரு, கேசட்டு வாங்கின காசுக்கு, ஆடு மாடு வாங்கிருந்தாக்கூட, அத மேச்சி பொழச்சிருப்பேன், இன்னும் கொஞ்சம் பெரிய வீடா இருந்தாக்கூட தறி ஓட்டி பொழச்சிருப்பேன். கண்ட கண்ட நாய்கிட்டலாம் நான் பேச்சு வாங்கிருக்க மாட்டேன்.” >>>>>>>

அவன் என்னையும் சந்திராவையும் திட்டிட்டே தூங்கிப்போனான். எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த சந்திராவால அழ மட்டும்தான் முடிந்தது. எனக்கே என்மேல கோபம். சந்திராவ என் மடியில படுக்க வைக்க தோனிச்சி. அவ சாஞ்ச இடத்துல என் மடிய வச்சிக்கிட்டேன். அதிகாலை விடிஞ்சிது. கோபி மெல்ல எழுந்தான். நான் கோபிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு பெருஞ்சோதிய நோக்கி மேலே போனேன். இதற்கு மேலும் என்னால கோபி படுற கஷ்டத்தையும், சந்திரா படுற கஷ்டத்தையும் பார்க்க முடியாது. இசைய கேட்டு காலந்தள்ளுற அளவுக்கு நான் ஒன்னும் தகுதியான ஆள் இல்ல.

பெருஞ்சோதிக்கு அருகில் செல்லும் போது ஒரு பாடல் கேட்டது.

அது கோபியின் இயர்போனில் ஒலிக்கிறது. வீட்டிற்கு வந்துப் பார்த்தேன். வீட்டில் சிதறிக்கிடந்த அந்த கேசட்டுகளில் இருக்கும் பெயரைப் பார்த்து அந்தப் பாடலை போனில் தேடி அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அதை ஒரு பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். நான் சேகரித்து வைத்திருந்த அனைத்து கேசட்டுகளையும் பார்த்து அதைத் தேடி சேகரித்து வைத்துக் கொண்டான். அந்தப் பாடல் பட்டியலுக்கு அவன் அவைத்த பெயர் “Appavin Spotify Playlist”.

கோபியை அணைத்துக்கொண்டேன். ஆயிரம் முத்தங்களை அவன் நெற்றியில் கொடுத்தேன்.

5 Share

பிறகு ஒரு நாள் வழக்கமாக கோபி வேலைக்கு செல்லும்போது, பஸ் ஏறிய உடன் ப்ளூடூத்தில் என்னுடைய பாடல் பட்டியலை ப்ளே செய்வான். கோபிக்கு அந்தப் பஸ்ஸில் அப்படி ஒரு செல்வாக்கு. அதே பஸ்ஸில் வரும் இன்னொருவனும் இந்தப் பாடல் பட்டியல் பிடித்துப்போய் வந்து கண்டக்டரிடம் விசாரித்தான். கண்டக்டர், “இந்தப் பஸ்ஸுக்கு டிஜே அவருதான்” என்று கோபியை கைகாட்டினான். அந்த இன்னொருவன் கோபியிடம் வந்து பாடல் பட்டியல் நன்றாக இருக்கிறது, பகிர முடியுமா என்று கேட்டான். பகிர்ந்த உடன் அவன் கேட்டான். ‘அப்பாவின்’னா என்ன என்று.

கோபி, “அதுவா, அப்பா இல்லாம என்ன பண்றதுன்னு தெரியாம அலஞ்சிட்டு இருந்தேன். இந்த பாட்டெல்லாம் எங்க அப்பா கேட்டது. இது கேட்கும் போது அவர் ஞாபகம் இருக்கும். அவர் என்கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். அதான். அப்பாவின் ப்ளேலிஸ்ட்.”

Link–> https://open.spotify.com/playlist/0EjviiEgROUdy8XUvmSvRz?si=37e3b6f6b6824226

அன்று முதல் அவன் உடனே நானும் பயனிக்கிறேன். இசையோடு. மகனோடு. இளையராஜாவோடு.

~

சூர்யதேவன்.வாசு

10-sep-2023 – 3.08 a.m.