The Substance (2024) Not for all the adults

அது என்ன Not for all adults என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பெரும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கல்நெஞ்சமும் வேண்டும். அது அனைத்து adult-சுக்கும் இங்கு இருப்பதில்லை. இது ஒரு R rated movie என்பதால், R rating என்றால் என்ன என்று பார்த்துவிட்டு, அவற்றில் பட்டிலிடப்பட்டிருக்கும் விசயங்களை உங்களால் படத்தில் தயக்கமின்றி பார்க்கமுடியும் என்றால் இந்தப்படத்தை நீங்களும் பார்க்கலாம். இந்தப் படம் அமெசான் ப்ரைம் வீடியொவில் காணக்கிடைக்கிறது.


1. அழகும் பருவமும்

ஒரு பெண் பிறந்தது முதல் இறப்பு வரை அவள் பெண்தான். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு அவளிடம் இருக்கும். அதைக்கொண்டு பெண்ணின் பருவங்களை ஏழாகப் பிரிக்கிறார்கள்.

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை: 26-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

இந்த ஏழு பருவங்களின் வயது வரம்புகளும் அவ்வப்போது வேறுபடுகின்றன. ஆனால், பெண்ணின் பருவங்களை இப்படியாகத்தான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதில் பேரிளம் பெண்தான் நம் கதை கதாநாயகி. அவள் அரிவையாக (20 வயது) இருந்ததுமுதல் கதை நடக்கும் நிகழ்காலம் வரை நாற்பதைக் கடந்தபின்பும் துள்ளலாகவும், ஆரோக்கியமாகவும் வசீகரத்துடன் வாழ்ந்து வருகிறாள். புகழ் பணம் இருந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் குழந்தைகளும் இல்லை. அவளுடைய மிகப்பெரிய சொத்தே அவளுடைய மங்காத பேரழகுதான் என்று அவள் திர்க்கமாக நம்பி வாழ்ந்து வருகிறாள்.

ஒரு நாள் அவளின் வயதின் மூப்பு காரணமாக அவளுடைய வசீகரம் குறைய ஆரம்பிக்கிறது, ஆரோக்கியம் குன்றுகிறது. தன் கண் முன்னே தன் இளமை தன்னைவிட்டு போய்க்கொண்டு இருப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தன் அழகும் இளமையும் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என்று எண்ணுகிறாள். அதற்காக எதையும் செய்யத்துணிகிறாள். ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

நிற்க.


2. வாரிசு

தன்னுடலைக் கிழித்துப் பிறந்த பெண்பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டி வளர்க்கிறாள் ஒருதாய். மகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வேகமாகவும் வளர்கிறாள். ஆனால் அந்த தாய்க்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால், அந்தப் பெண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போதெல்லாம், அந்த தாய்க்கு முதுமை அதிகரிக்கிறது. குழந்தை வேகமாக தாய்ப்பால் குடிக்க குடிக்க குழந்தை அழகாய் மாறுகிறது, தாயின் இளமையோ வேகமாகக் குறைகிறது. குழந்தையின் பேரழகை உலகமே போற்றுகிறது. புகழுக்கு மயங்கிய குழந்தைக்கு நிறைய பால் தேவைப்பட்டது.

தாயினால் குழந்தையைத் தடுக்க முடியவில்லை. தாய்ப்பாசமோ, தன் உருவத்தை தானே தாக்குவதா, என்ற எண்ணமோ, ஏதோ ஒரு இனம்புரியாதக் காரணம் அந்தத் தாயினால் குழந்தையை நிறுத்தமுடியவில்லை. ஆனால், கருணையற்ற அந்தக்குழந்தை தான் மேலும் அழகாக மாற தன் தாயை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கே தள்ளிவிட்டது. தாய் சுதாரித்துக்கொள்ளும் தருணம் குழந்தை பலசாலியாகவும் தாய் பலகீனமாகவும் இருக்கிறாள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த யுத்தத்தில் தாய் மகளை தின்று தன் இளமையை அழகை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள்.

நிற்க


3. ஆவேசம்

ஒரு செல்வச் செழிப்பான வனம். அதில் எல்லா விதமான செடிகளும் கொடிகளும் மரங்களும் இருந்தன. எல்லா வகையான உயிரினங்களும் இருந்தன. நிலத்துக்கு மேலே தாவர வளங்களும், பல்லுயிர் வளங்களும், நிலத்துக்கு கீழே தங்கமும் இருந்தன. இந்த கோடிக்கணக்கான வயதுடைய வனத்திற்கு அதுவரை மனிதர்கள் யாரும் வந்ததேயில்லை. அப்படி ஒரு வனத்தில் மனிதர்களின் கால் பட்டது.

மனிதர்கள் முதலில் தாவரங்களைப் பறித்து, பசியாற்றினார்கள். மரங்களை வெட்டி பொருட்கள் பல செய்தார்கள். ஆடைகள் நெய்தார்கள். மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிப் புசித்தார்கள். நிலங்களை வெட்டி தங்கச்சுரங்கங்கள் அமைத்தார்கள். ஆபரணங்கள் செய்து மிடுக்காய் நடனமாடி கவர்ந்தீர்த்து புணர்ந்து இனத்தைப் பெருக்கினார்கள்.

ஆயிரம் வருடங்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். எல்லா வளங்களும் தீர்ந்தப்பிறகு வேறு வளமான வனம் தேடினார்கள். தேடிக்கொண்டிருக்கும் போதே சிலர் வெள்ளம் வந்து மூழ்கி மரணித்தனர். சிலர் நிலச்சரிவில் சிக்கி மாண்டனர். சிலர் பட்டினியில் இறந்தனர். யாருக்கும் அந்த வனம் போல வேறு வனம் கிடைக்கவில்லை. தங்கம் வீதியில் இரைந்துக் கிடந்தது. எல்லாரும் இறந்தப்பிறகு மழை வந்தது மீண்டும் அந்த வனம் துளிர்விட ஆரம்பித்தது.

நிற்க


எது அழகு?

எனக்குப் பிடித்தமான தத்துவம் ஒன்று இருக்கிறது. அது

அழகாய் இருப்பதெல்லாம் நமக்குப் பிடித்திருப்பதில்லை.

நமக்குப் பிடித்திருப்பவை எல்லாம் அழகாய் தெரிகிறது.

அழகு என்பது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது. தோற்றம் சார்ந்தது இல்லை. நம்ப மாட்டீர்கள் அல்லவா? சரி, அவரவரது அம்மாவும் அப்பாவும் அவரவருக்கு அழகுதானே? தாத்தா பாட்டி, அழகு இல்லையா? அசிங்கம் என்று சொல்லி விடுவீர்களா? உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? பார்க்கப் பார்க்க எல்லாம் அழகாய் தெரியும் என்பது பொய். சிலரைப் பார்க்க பார்க்க எரிச்சலும் வரும். ஆக, அழகு, பிடித்தம் எல்லாமுமே அகம் சார்ந்த விசியம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘அழகு’ என்று ஒன்று இருக்கிறது. அது வியாபாரம் சொல்லும் ‘அழகு‘. நிறுவனங்கள் லாபத்திற்காக, உள்நோக்கத்திற்காக அழகு என்பதற்கான வரையரையை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

  1. வெள்ளை அல்லது சிவப்பாய் இருந்தால் அழகு
  2. கூந்தல் நீளமாக இருந்தால் அழகு
  3. இடுப்பு மட்டும் ஒல்லியாக இருந்தால் அழகு
  4. தாடை கூர்மையாக இருந்தால் அழகு
  5. மூக்கு சின்னதாக க்யூட்டாக இருந்தால் அழகு
  6. உதடு சற்று பெரிதாய் இருந்தால் அழகு
  7. புருவங்கள் திருத்தப்பட்டிருந்தால் அழகு
  8. கை கால்களில் ரோமங்கள் மழிக்கப்பட்டிருந்தால் அழகு
  9. நகங்கள் சற்று நீளமாகவும் பளபளப்பாகவும் நிறங்கள் பூசி இருந்தால் அழகு
  10. கூந்தல் வளைவு நெளிவாக இல்லாமல் நேராக இருந்தால் அழகு
  11. மினுமினுக்கும் ஆடை அனிந்திருந்தால் அழகு
  12. அதுவரை ஆடை மறைத்திருந்த மேனியை சற்று தெரியும்படி ஆடை அனிந்தால் அழகு
  13. ஆடையைக் குறைத்துக் கொண்டால் அழகு
  14. உதட்டில் சாயம் அப்பிக்கொண்டால் அழகு
  15. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன எல்லாமும் வியாபார நோக்கம் மட்டுமே அன்றி வேறில்லை. இவை அனைத்தும் வெளிச்சாயம் மற்றும் புறம் சார்ந்த விசியங்கள். இவையனைத்தும் இருந்தும் சிலரை பலரை நமக்குப் பிடிக்காமல் போகும். அதன் பிறகு அவர்கள் நம் கண்களுக்கு அழகாய் தெரியமாட்டார்கள். பிறகு எது அழகு?

  1. அன்பாய் இருத்தல் அழகு
  2. ஆசையாய் கொடுத்தல் அழகு
  3. உண்மையாய் இருத்தல் அழகு
  4. சுத்தமாய் இருத்தல் அழகு
  5. ஆரோக்கியமாய் இருத்தல் அழகு
  6. கடமையை செய்தல் அழகு
  7. கட்டுப்பாடுடன் இருத்தல் அழகு
  8. பரிவாய் இருத்தல் அழகு
  9. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன அனைத்தும் அகம் சார்ந்த விசியங்கள். இந்தப் பண்புடையவர்களின் முகம் எப்படி இருந்தாலும் நமக்குப் பிடிக்கும். இவை அனைத்தும் நம் தாத்தாப் பாட்டியிடம் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘மீடியா’ என்று ஒன்று இருக்கிறது. (டிவி, சினிமா, ரேடியோ, விளம்பரம், யுடியூப், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.) அவை பெண்களை எப்போதும் ஒப்பனை செய்து கொள்ளத்தூண்டிக்கொண்டே இருக்கிறது.

பெண்கள் மீதான காதலை வெளிப்படுத்தும் போது, அவளது புற அழகை வர்ணிக்காமல், அவளது அகப்பண்புகளை வர்ணித்து குண்நலன்களை வர்ணித்து எழுதிய சினிமாப்பாடல்களை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்? இருக்காது, இருக்கவே இருக்காது. பெண்களின் கண்ணில் தொடங்கி, அவளது நிழல் வரை எல்லாமும், நிறம், அளவு, தோற்றம் என்று உடல் உறுப்புகளை வர்ணித்தே இருக்கும்.

காதலன் காதலியை நினைத்துப் பாடும் பாட்டில் ஏன் அவளைக் காதலிக்கிறான் என்பதற்கான காரணத்தை தேடிப்பாருங்கள், அழகு என்ற ஒற்றைக்கூற்றைத் தவிர வேறு எதுவும் இருக்காது. ஆக, ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது மூன்று அல்லது நான்கு ஜான் இடத்தைதான். அதற்குள் இருப்பவற்றை கடித்துக் குதறியப்பிறகு, “நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு, அதுக்குதாண்டா வந்துபோறேன் டெய்லி வைனுசாப்புக்கு”ன்னு பாட்டு பாடுவார்கள்.

திருமணத்திற்குப்பிறகு ஏன் வாழ்க்கை கசக்கிறது? நாமக்கு காதலிக்க சொல்லித்தந்த சினிமா, அழகான பெண்களைத்தான் காதலிக்க சொல்லித் தந்தது. நமக்கு பிடித்தமான பெண்களை காதலிக்க சொல்லித்தரவில்லை. இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வண்ன ஓவிய விளம்பரங்களும், புகைப்படங்களும் வந்தப்பிறகு, நாம் திரும்பும் திசையெல்லாம், விளம்பரப் பலகைகளிலும், டிவி விளம்பரங்களிலும், சினிமாக்களிலும், வெள்ளைத் தோல் பெண்களையே நடிக்க வைத்து நம் கண்களில், அவர்கள் மட்டுமே பட்டுக் கொண்டிருந்ததாலும், நமக்குப் பிடித்தமான நடிகரின் காதலியும் சினிமாக்களில் வெள்ளையாக இருந்து வந்ததாலும், நமக்கும் நம்மை அறியாமலே நம் மூலைக்குள் வெள்ளையாய் இருக்கும் பெண்களைத்தான் அழகிகள் என்றும் அவர்களே நாம் காதலிக்கத் தகுதியானவர்கள் என்றும் ஆழமாக நம்பவைத்திருக்கிறார்கள்.

‘அங்கவை சங்கவை’ என்று சிவாஜிபடத்தில் ஒரு காட்சி வரும். அதெல்லாம் நிற வன்மத்தின் உச்சம்.

இதன் மற்றோரு வியாபார வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் ‘Fair and Lovely’. கருப்பாக இருக்கும் பெண்களின் மனதில் அவர்கள் தாழ்வுமனப்பாண்மையோடுதான் இருக்கிறார்கள் என்று விளம்பரத்தில் காட்டி காட்டி, உண்மையிலேயே தாழ்வுமனப்பாண்மையை வரவழைத்துவிட்டார்கள். ஆண் வர்க்கமும், பொண்ணு செவப்பா எலுமிச்ச பழ கலர்ல இர்ந்தால்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிக்க, வியாபார முதலைகளின் காட்டில் பணமழைதான்.

மற்றொரு பெரும் மோசடி ஒல்லியான தோற்றம். உடற் பருமனுடன் இருக்கும் எல்லோரையுமே ஒரு தாழ்வுமனப்பாண்மைக்கு தள்ளிக்கொண்டே இருக்க வேண்டியது. உடற்பருமனுடன் ஆரோக்கியமாக இருந்தவர்களே இல்லையா? ஒல்லியான தோற்றமுடைவர்கள் அனைவரும் நூறுவயது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதீத உடற்பருமன் ஆபத்துதான். ஆனால், அதைக்கொண்டு வியாபராம் செய்ய லாபம் பார்க்க மக்களை பயமுறுத்த வேண்டிய அளவிற்கு லாப வெறியில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களே உஷார்.

ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் அழகான பெண்களுக்கான வரையறையை நிறுத்தாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கின்றன. பெண்களும் விட்டில் பூச்சியாய் அந்த ரசாயன சாயங்களை வாங்கி தேவையற்ற செலவை செய்து உடல்நலத்தையும் மனநலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அந்த சினிமா, சீரியல், விள்மபரங்கள், பார்க்கும் ஆண்கள் சிவப்பழகு பெண்களையே நாங்கள் சைட் அடிப்போம், காதலிப்போம், திருமணம் செய்வோம், கருப்பான பெண்களை கலாய்ப்போம் என்று பெண்களை ஒல்லியான தோற்றம், சிவப்பழகு இத்யாதி இத்யாதி அழகை நோக்கி ஓட வைக்கிறார்கள். பெண்களும் சலைக்காமல் ஓடுகிறார்கள்.

பெருநிறுவன முதலாளி ஆண்களுக்கு பண லாபம். சாதாரன மக்களில் இருக்கும் ஆசாமி ஆண்களுக்கு வென்னிறத்தோல் கொண்ட பெண்ணுறுப்புகள் லாபம். பெண்களுக்கு என்ன லாபம்?

அவள் பேரழகி என்ற சொற்பகால பட்டமா?

~

வா. சூர்யதேவன்

3.33 am டிசம்பர் 19, 2024

(கடைசிவரை படத்தைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்று நினைக்கவேண்டாம். படத்தைப்பாருங்கள். இந்தப் பதிவு முழுக்கவே அந்தப்படத்தில் இருப்பவை பற்றிதான். ஆனால் இப்படியே இல்லை)

/the social dilemma_ & THE CIRCLE (2017)

/the social dilemma_ ஒரு ஆவணப்படம். நெட்ஃபிலிக்ஸில் காணக்கிடைக்கிறது. டிஜிட்டல் உலகம் நம்மை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதன் கூர்முனைகள் நம் தினசரிகளை, நம் இயல்புகளை, நம் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை நாம் அளவிட்டுப் பார்க்கத் தவறுகிறோம். இந்த ஆவணப்படம் அப்படிப்பட்ட அளவீட்டை உள்ளடக்கியதுதான்.

தொலை தொடர்பு என்பது இன்றளவில் மிக அவசியமானது. மறுப்பதற்கில்லை. ஆனால், அருகில் இருப்பவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளுமளவிற்கு தகுதிவாய்ந்ததா? யோசித்துப்பாருங்கள். மனிதர்களின் இயல்பு வெகு வேகமாக மாறிவருகிறது.

பிறரிடம் வாய்விட்டு வார்த்தைகளில் பேசுவதைக் காட்டிலும் chatboxகளில் எமொஜிகளிலும், abbrevationsகளிலும் மட்டுமே பேசத்தெரிந்த தலைமுறை நம் கண்முன்னே உருவாகிக் கொண்டிருக்கின்றது. இவர்களின் உலகம் வெவ்வேறானதாக இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வோரு உலகத்தில் வாழ்கின்றார்கள். ஏனென்றால் பெரும்பாலான இணையதளங்கள் செயலிகள் ஒவ்வொருவரின் பயன்பாட்டை வைத்து ஒரு குறிப்பிட்ட மாடலை உருவாக்குகிறது. அதைக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி (News feed) காட்டுகின்றது. எல்லாமே கருத்துகள்தான். opinions. எதுவும் உண்மையோ சரியான தகவலோ அல்ல. Not a fact. வெறும் கருத்துகளை மட்டும் நம்பி செயல்படும் பெரும் மனிதக் கூட்டம் பேராபத்தானது. அது ஒரு கலவரத்தையும் உண்டுபடுத்தும். பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு Pizzagate Conspiracy என்று கூகிள் செய்து பாருங்கள்.

புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அதை குறைசொல்லி, பழைய பெருமைகளைப் பேசி பழமைவாதத்தை தூக்கிப்பிடிக்கும் அறிவிலிகளின் புலம்பல் இல்லை இந்த ஆவணப்படம். புதிய கண்டுபிடிப்புகள் தொழிநுட்பங்கள் நமக்கு எந்த அளவிற்கு நன்மை செய்கின்றன, எந்த அளவிற்கு தீமை செய்கின்றன என்பதை தெளிவாக ஆராய்ந்து, இந்த தீமைகளை சகித்துக்கொள்ளும் அளவிற்கு, பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு இருக்கின்றனவா என்று நம் முன்னே காட்டுகிறார்கள்.

உச்சகட்டமாக சில குழந்தைகளின் உயிர் வரை இந்த தொழில்நுட்பங்கள் குடித்திருக்கின்றன.

முகநூல் நிறுவனர் மார்க் 2024 ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதை இந்த லிங்கில் தருகிறேன் படித்துப் பாருங்கள். https://www.bbc.com/news/technology-68161632

இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசும்போது, THE CIRCLE எனப்படும் டாம் ஹான்க்ஸ் நடித்த திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

மக்களின் ப்ரைவசி தகவல்கள் தனியார்களின் கைகளில் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் பணம் பார்க்காமலா இருப்பார்கள்? தனியாரிடம் மக்களின் நேரமும் கவனமும் செல்லும் போது, அதை அவர்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை யார் எப்போது உருவாக்குவது. மக்களின் தகவல்களை பெரும் நிறுவனங்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்துவார்கள் என்ற உத்திரவாதத்தை யார் அளிப்பது? அப்படி தொழில்நுட்பத்தின் பெருஞ்சக்கரத்தில் மக்களும் குழுந்தைகளும் நசுங்காமல் பாதுகாப்பாக வாழும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில்,

~ வா. சூர்யதேவன்.

Coffee Addict ☕️

I’m a coffee addict என்று சொல்லிக்கொள்ள அனைவருக்கும் இன்று பிடிக்கிறது. இன்ஸ்டா பேஸ்புக்  வாட்சப்  போன்ற பல தளங்களில் இளம் வயதினர் தங்களை காஃபி அடிக்ட் என்று பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காஃபி அடிக்ட்டாக இருப்பது உண்மையில் பெருமைக்கொள்ளக்கூடிய விசியமா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதுதான் பதில். அப்படியானால் காஃபி ஆபத்தானதா என்றால் அதுவும் இல்லை. அமிர்தமும் அளவுக்கு மிஞ்சினால் விஷம் என்பதுபோல காஃபி உட்கொள்ளுவதற்கும் சில வரம்புகள் உண்டு.

நம் உடல் சோர்வடையும் போது இயற்கையாகவே நமது உடலில் இருக்கும் Adenosine என்ற மூலக்கூறு நமது மூளையைச் சென்றடையும். அடினோசைனின் வேலையே மூளையை உறங்கச் சொல்வதுதான். நாம் காஃபி உட்கொள்ளும் போது அதில் உள்ள Caffeine என்ற மூலக்கூறு மூளையை சென்றடையும்.

அடினோசைன் செல்ல வேண்டிய இடங்களை இந்த காஃபீன் ஆக்கிரமித்து கொண்டு மூளையை சுறுசுறுப்பூட்டும். ஆனால் மூளையை சென்றடையாத அடினோசைன்கள் பக்கத்திலேயே காத்துக்கொண்டு இருக்கும். நமது உடல் மேலும் அதிக அடிசைன்களை மூளைக்கு அனுப்பிவிடும். பிறகு காஃபீன் தீர்ந்த உடன் காத்துக்கொண்டிருந்த மொத்த அடினோசைன்களும் மூளையை சோர்வுற வைக்கும். ஓய்வு எடுக்கச் சொல்லி, தூங்கச் சொல்லி தாலாட்டுப் பாடும். இம்முறையும் நீங்கள் சோர்வடையாமால் இருக்க வேண்டுமானால் மீண்டும் காஃபியை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் காஃபி அடிக்ட்டுகள் ஆகிறோம்.

ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் பலருக்கும் காஃபி என்பது ஒரு இன்றியமையாத துணை எனலாம். முக்கியமாக மதிய வேளைகளில் சாப்பிட்ட பிறகு கண்ணைச்சொருகும் சயங்களில் சூடான காஃபி என்பது ஒரு அல்டிமேட் புஸ்டர். இரவு நேர பணியாளர்களுக்கு சொல்லவே வேண்டாம். ஆனால் ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை அல்லது அதைவிட அதிகமாக காஃபி உட்கொள்ளுவது ஆரோக்கியமானது அல்ல. 

உடல் சோர்வடையும் போது நாம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்படி ஓய்வு எடுக்க அனைவரும் படுத்தவிட்டால் எந்த வேலையும் நடக்காது. எனவே வேலை செய்யும் நேரத்தில் சோர்வுறாமல் இருப்பதற்கு மட்டுமே காஃபியை அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் எழுந்த உடன் பெட்காஃபி குடிப்பது பழக்கமாக இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நமது உடல் இயற்கையாகவே Cortisol என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். இந்த கார்டிசால் நம்மை தூக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு கொண்டுவரும். அதனால் காலை நேரங்களில் காஃபியை உட்கொள்வது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. மேலும் அலுவலகத்திற்கு அடித்து பிடித்து சென்றதில் உடல் சோர்வடைந்திருந்தாலோ, அலுவலக அமைதியும் ஏசி காற்றும் கலந்ததில் ரம்யமாக தூக்கம் கட்டியணைத்தாலோ மட்டும் காலை பத்து மணி அளவில் அன்றைய முதல் காஃபியை உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தூக்கம் அறவே தவிர்க்கப்படும். அடுத்த மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு உறக்கம் ஊடுருவும். மதியம் இரண்டு மணி அளவில் ஒரு கப் காஃபி உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். அதன் பின்னர் அன்றைய நாளுக்கான காஃபியை தவிர்ப்பது உடலுக்கு நன்மைத்தரும். மாலை நான்கு மணிக்கு பிறகு குடிக்கும் காஃபியில் உள்ள காஃபீன் இரவு தூக்கத்தை பாதிக்கும். தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு பிரதான காரணமே காஃபி உட்கொள்வதுதான் என்றால் நம்புவது கடினமாகத்தானே இருக்கும். 

இரண்டு முறை பெரிய கப்பில் கால் லிட்டர் காஃபியைக் குடிப்பதைக் காட்டிலும், சிறிய கப்பில் மூன்று முறை குடிப்பது நல்லது. சரியாக காலை பத்து மணிக்கு ஒரு காஃபி பிறகு மதியம் இரண்டு மணிக்கு ஒரு காஃபி என்று ஒரே அடியாக மாறவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் காஃபியின் பாதிப்பு அவரவர் உடலுக்கேற்ப வேறுபடும். எனவே உங்களுக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது என்பதைக்கவனித்து காஃபியை உட்கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் சோர்வுற்று தூங்கி விழும்வரை காத்திருக்கக்கூடாது. ஏனென்றால் அடினோசைனால் உறங்கிய மூளையை கஃபீனைக்கொண்டு எழுப்பி வேலை செய்ய சொல்வது நீண்ட நேர புத்துணர்வைத் தராது. மாறாக தூக்கம் வரும் சமிக்ஞைகள் தெரிந்தவுடனே காஃபியை உட்கொள்வது நல்ல நீண்ட புத்துணர்வைத் தரும். 

எனவே இயல்பாக அவ்வப்போது காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டு நிதானமாக யோசித்து எப்போது காஃபி உட்கொள்ள வேண்டும் என்ற தெளிவுடன் இருங்கள். காஃபி அடிக்ட் என்பதை விட ஹெல்த் அடிக்ட் என்பது பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேலும் காஃபி குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ரியன் ப்ரெளன் (Ryan Brown) என்பவர் காஃபி மீது கொண்ட ஆர்வத்தினால், காஃபி குறித்த தகவல்களை உலகம் முழுவதும் பயனித்து சேகரித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். புத்தகத்தின் பெயர் Dear Coffee Buyer. இதை நீங்கள் காஃபீ குடித்துக்கொண்டேகூட படித்து பயன்பெறலாம். 

வா. சூர்யதேவன்

ஒரு காதல் வந்தால் போகாது! அது போனால் குற்றம் ஆகாது! – Modern Love Chennai

யாயும் ஞாயும் டைட்டில் பாடலில் இருந்தே தொடங்குவோம். யுகபாரதி எழுதி, ஷிவானி பண்ணீர்செல்வம் பாடி, யுவன் அமைத்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை.

ப்ரைம் வீடியோவில் மே 18ல் வெளியான இந்த ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ், காதல் என்ற ஒற்றைப் புள்ளியை வைத்து ஆறு கதைகள் வரையப்பட்டிருந்தாலும், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான தொகுப்பாக இருக்கிறது.

முதல் படம்: லாலாகுண்டா பொம்மைகள். ராஜுமுருகனின் வழக்கமான ஸ்டைலில், சமூக அவலங்களை ஆங்காங்கே அடிக்கோடிட்டு காதலோடு பயனிக்க வைத்து இறுதியில் ஒரு குபீர் ட்விஸ்டை கொடுத்துவிட்டார். படம் ஜாலி.

இரண்டாவது படம்: இமைகள். தமிழ் சினிமாவில் மாமாங்கமாக காதலில் வெற்றியடைவதென்பதை திருமணம் செய்து கொள்வதென்று இலக்கணமே வகுத்துவிட்டனர். திருமணத்திற்குப் பிறகும் எப்படி காதலோடு பயனிப்பது என்பதுகுறித்த படங்கள் மிகமிக சொற்பமாகவே உள்ளன. ஆணோ பெண்ணோ, குறை என்பது யார் ஒருவரிடமும் இருக்கலாம். எந்த ஒரு குறையும், குடும்பத்தில் மகிழ்ச்சியை, அன்பை கெடுத்துவிடாமல் இருக்க வாழ்க்கைத்துணையின் புரிதலும், அக்கறையும் நிறையவே தேவை. இருந்தாலும், இந்தப்படத்தில் மனைவிக்கு ஒரு பிரச்சனை இருக்க, கணவனுக்கு ஒரு தேவை இருக்க, “மனைவி வீணை கற்றுக்கொள்வது அவளக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்ற கவனின் ஐடியாவைக் கேட்டால் ‘அதற்கு இது பதில் இல்லையே’ என்ற வடிவேலு வசனம்தான் வாயில் வருகிறது. மனைவியின் பிரச்சனை தீர்ந்ததா? தெரியவில்லை. கணவன் ஆசைப்பட்டதுபோல மனைவி இன்னொரு குழந்தைக்கு ஒத்துக்கொண்டாளா? தெரியவில்லை. ஒரு இரவு முழுக்க கணவன் யோசித்து எடுத்த முடிவுதான் மனைவி வீணை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. அதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறான். படத்தில் வேறு சில பிரச்சனைகளையும் இயக்குநர் காட்டாமல் இல்லை. மனைவிக்கு காலையில் அதிகப்படியான வேலைகள் இருக்கின்றன. ஆனால், கணவன் அதைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. இனிமேல் கண்டுகொள்வானா? மனைவிக்கு பார்வை முழுவதுமாக மறைந்துப்போன பிறகு எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? இறுதியில் வீணை வாசித்துவிட்டால் மட்டும் மற்றப் பிரச்சனைகள் சரியாகிவிடுமா? வேலை அதிகமாக இருக்கும் போது, வெளியே சென்று ஒரு டீ தம் போட்டுவிட்டு வருவது போல, அலுப்பு நிறைந்த விருப்பமற்ற வேலை நாட்களின் மத்தியில் வீக்கெண்ட் நண்பர்களுடன் ஒரு பாருக்குச் சென்று பீர் சாப்பிடுவது போல, மனைவிக்கு அவ்வப்போது வீணை வகுப்பும், ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்-ஆ இல்லை ட்ரெக்கா? எனக்கு புரியவில்லை. “வேலை செய்ய கஷ்டமா இருக்கா? புள்ள பெத்துக்க கஷ்டமா இருக்கா?, இந்தா புடி வீணைய, கொஞ்ச நேரம் நோண்டிட்டு வந்து வேலை பாரு, புரியுதா?” என்று தடித்த குரலில் சொல்வதாகவே எனக்கு கேட்கிறது. பேரன்பே பாடல் ஃபேவரிட்.

மூன்றாவது படம்: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி. பலரைப்போலும் சினிமாக்காதலைப் பார்த்து பார்த்து நிஜ உலகிலும் சினிமாத்தனமான காதலைத் தேடும் ஒரு பெண்ணின் கதை. துள்ளலான ஜாலியான படம். ‘குக்கூனு கூவும் காகம் நீ’ பாடல் செம. படம் முழுக்க ரசித்தேன். அங்கங்க சிரித்தேன். முக்கியமாக, டேட்டிங்க் ஆப் மூலமாக பல ஆண்களை ஒரு ரெஸ்டாரெண்ட்டில் சந்திக்கிறாள். அது ரகளையான சீக்குவன்ஸ். அதில் ஒருவன் கதாசிரியன், சாப்பிட்ட பில்லை நீட்டும்போது அவன் சொல்லுவான், “காதாசிரியருங்க, கததான் வரும். காசு வராது. அவங்ககிட்டயே குடுங்க”. இதைக்கேட்டதும் கனெக்ட் ஆகி யோவ் டைரெக்டரு… யாருயா நீனு தேடிப்பாத்தேன். கிருஷ்ணக்குமார் ராம்குமார். தெரிந்த முகம்தான். படத்தின் இன்னொரு இடத்தில் ஒரு ரோமியோ வருவார், முக்கியமான நேரத்தில், “ஒரு முக்கியமான விசியம் கேட்கனும்‘ என்பான். மல்லிகா, “நான் விர்ஜினானு தெரியனுமா?” என்பாள். ரோமியோ, “ஹே, இதெல்லாம் ஒரு விஷியமா, என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு? நான் ஒன்னும் ஓல்ட் ஃபேஷன் கிடையாது. இது வேற விசியம்.” மல்லிகா, “என்ன விசியம்?” ரோமியோ, “நீங்க என்ன ஆளுங்க?” என்று கேட்பான். புஹாஹா என்று கைத்தட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். படங்களில் மழையில் நனைந்துகொண்டே நடனமாடுவதை பின்னனி இசையை சேர்த்து செம ரொமான்டிசைஸ் செய்திருப்பார்கள். ஆனால், நிஜத்தில் கொச கொசவென இருக்கும் என்ற கூற்றை ஏற்க மறுப்பாள் மல்லிகா. இறுதியில் வைபவும் மல்லிகாவும் சேர்ந்து மழையில் நனைந்துகொண்டே டேன்ஸ் ஆடும் போது, மழையே பின்னனி இசையாகிப்போனதே காதல். யெஸ், ரொமாண்டிக் லவ் நிஜ உலகில் சாத்தியமே. நமக்குத் தேவை சரியான ஆள் மட்டுமே. அமைந்து விட்டாள், வாழ்வின் பல சீன்கள் பெஸ்ட் ரொமாண்டிக் சீன்ஸ்தான். பிஜிஎம் இல்லாமலே கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி போல காதலாய் சிரிக்கலாம். படத்தில் சரக்கடிக்கும் தம்மடிக்கும் சீன்களை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

நான்காவது படம்: மார்கழி.காதல் காமத்தில் உச்சம் தொடும். காதலின் அதீத வெளிப்பாடே காமம்.” என்பதான போதனைகள்தான், சினிமா முழுக்க நிரம்பிவழிகிறது. மார்கழியில், ஜாஸ்மீனுக்கு காதல் வருவதே மில்டனை தன்னோடு அந்தரங்கமாக கற்பனை செய்து பார்ப்பதிலிருந்துதான். நிதர்சனம் இதுதான். ஒருவரை காமுறுவதாக கற்பனை செய்வதை தடுக்கமுடியாதிருப்பதே காதலின் முதல் அறிகுறி. அப்படி இணை சேருவதை அழகாய் அலங்கரிப்பதும், நியாயப்படுத்துவதும், புனிதப்படுத்த முயற்சிப்பதும், காதல் என்ற சொல்தான். ஹார்மோன்களால் தூண்டப்படுகிறோம். இசையால் இச்சைகளை காதலாக்கி கொண்டாடித் தீர்க்கிறோம். இந்தப்படத்தில் காதல் தோன்றுவதையும் அது இருவருள்ளும் அழகாய் படர்ந்திருப்பதையும் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் காமம் உச்சம் பெருவது காதலில். இளையராஜவின் இசை இன்பத் தேன்.

ஐந்தாவது படம்: பறவைக்கூட்டில் வாழும் மான்கள். ஃபக். ஆண் எவ்வளவு பேராசைக்காரனாக இருக்கிறான். ஒருவளை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகள் பெற்று, வேலைக்கு சென்று வரும் ஒரு ஆணுக்கு தினசரி பயணத்தில் ஒரு பெண் தோழி அமைய, அவளையும் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ய மனைவியோடே பேசுகிறான். புது காதலியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள். நான் கலாச்சாரம் பாரம்பரியம் பட்டு சேலை வேட்டி சட்டை என்றெல்லாம் அளக்க மாட்டேன். மனைவியாக வரும் ரேவதி என்பவள் குடும்பத்திற்காக உழைத்து வந்திருக்கிறாள். அவளது குடும்பத்தை எதற்காக அவள் விட்டுக்கொடுக்க வேண்டும்? ரவி’க்கு ரேவதியை பிடிக்காமல் போனதற்காகவா? ரவிக்கு ரோஹினியை பிடித்துப்போனதற்காகவா? ஆண் பொதுவாகவே வெரைட்டியை தேடுபவன். எந்தப் பெண்மீதும் சில நாட்களுக்குப் பிறகு சலுப்பு தட்டுபவன். பெண்கள் விசியம் என்றால், அன்லிமிட்டட் ஆப்ஷன்ஸ் வைத்துக்கொள்ள தயங்காதவன். மனம்போன போக்கில் வாழ்க்கையை செலுத்துவது நிஜத்தில் வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு புரட்டிப்போட்டுவிடும். மனம் என்பது ஒரு குரங்கு போல, கிளைக்கு கிளை மட்டும் அல்ல, மரம் விட்டு மரமும் தாவும். கண்டபடி தாவும்போது நாம்தான் செல்லமாக செருப்பாலடித்து, அன்பாக ஒரு கொட்டு வைத்து, உமிழ்நீரை உமிழ்ந்து ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு, பெரிய லார்ட்டு போல டயலாக் பேசுவதோ, ஆண் என்ற அகம்பாவத்தில் தான் செய்வதுதான் சரி என்று திரிவதோ அந்த ஆணுக்கே கூட நல்லதற்கில்லை. (டாக்ஸிக் துணையுடன் வாழவேண்டாம். ஆனால், ரேவதி டாக்ஸிக் இல்லை.) ரவி கத்தவில்லை. முறைக்கவில்லை. வற்புருத்தவில்லை. ஆனால், தனக்கு வேண்டும் என்பதை செய்துகொள்கிறான். அதனால் யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அவனுக்கு மயிரா போச்சி என்பதாக இருக்கிறான். படத்தின் இறுதியில் வரும் அந்த குட்டிப்பாப்பாவின் நரேஷன் அருமையாக இருந்தது. அதே சமயத்தில் பரிதாபமாகவும் இருந்தது, என்றாவது ஒருநாள் அப்பா, ரோஹினி அம்மா மீது ஆசைப்பட்டே ரேவதி அம்மாவை கழட்டி விட்டார் என்று தெரிய வரும்போது? குழந்தைகளுக்கு அப்போதும் இனிக்குமா? அல்லது அடடா எப்படி நமக்கு வலிக்காமல் அப்பா ஜோடி மாற்றிக் கொண்டார் என்று இனிக்குமா? குறைந்த பட்சம் ரோஹினி மீதான ஆர்வத்தை கள்ளத்தனமாகவே முடித்திருக்கலாம். முடிந்து இருக்கும். அதை குடும்பமாக மாற்ற முயற்சிப்பது ரேவதிக்கு நடக்கும் அநியாயம் இல்லையா? அதை அவளே ஏற்றுக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது அநியாயம்தான். ஆண்களின் பேராசைதான் இது மாதிரியான கதைகளையும் க்ளோரிஃபை செய்யப்பார்ப்பது.

ஆறாவது படம்: நினைவோ ஒரு பறவை. இது தனிப்பதிவாகவே எழுதலாம். பரவாயில்லை இங்கேயே எழுத முயற்சிக்கிறேன். இயக்குநர் தியாகராஜா குமாரராஜா வழக்கம்போல, வாழ்வின் மீதான தத்துவங்கள், தியரிகள், கேள்விகள், பிரபஞ்சம், சொசைட்டி, வரலாறு, கடவுள், ஏலியன், கேவ்மென், பூனைகள், cancer kuchigal என தன் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் அழகாக ஒரு ரொமான்டிக் படத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார். நினைவோ ஒரு பறவை படம், சூப்பர் டீலக்ஸ் படத்தின் spin off. பூனைகள் காணாமல் போவது, கீழ்வீட்டு சேட்டு பொண்ணு, வானத்தில் பறக்கும் தட்டு தென்படுவது, ‘வாழ்வின் இரகசியம்’ என்னும் பிட்டுபடம், என நிறைய ரெபரெண்ஸ்கள் வருகின்றன. காதல் இலக்காவுக்கு வருவோம். பெண்ணின் பெயர் Sam. தமிழில் சம் என்று வாராது. அவள் பெயரை காதலன் K, ஸ்சஅம் என்றே உச்சரிப்பான். இருவரும் செய்யும் காதலே அப்பட்டமான, உன்னதமான காதல் என்பேன். இதில் ஈகோ இல்லை. வன்மம் இல்லை. வஞ்சம் இல்லை. அகம்பாவம் இல்லை. ஆதிக்கம் இல்லை. பேதம் இல்லை. இன்பம் இருக்கிறது. சிரிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. குழந்தைத்தனம் இருக்கிறது. பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஸ்டுபிடிட்டி இருக்கிறது. அதனாலே இந்தக் காதல் மிகவும் அழகாய் இருக்கிறது. Near perfect காதலாக இருக்கிறது. காமமும் இந்தப்படத்தில் இசைபோல ஒன்றிவிட்டது. “ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்டா டேய்” என்று ஸ்சஅம் சொல்வதாய் இருக்கட்டும், “கோமாவுக்கு போய் எல்லாம் மறந்தும் நான் உன்னமட்டும்தான ஸ்சஅம் மறக்கல” என்று K சொல்வதாய் இருக்கட்டும், pure ecstasy. ‘தேன் மழையோ’ பாடல் காதுகளுக்கு ஆர்கஸம் என்று சொல்லுவேன், தப்பு தப்பாக கற்பனை செய்ய வேண்டாம். கேட்டுவிட்டு நீங்களும் ஆர்கஸம் அடையுங்கள். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம்போல இதுவும் கதையை பாதி சொல்லி மீதி சொல்லாமல், நம்மை நமக்கே உண்டான தனித்தனி தியரிகளுடன் திரியவைக்கும்; பறக்க வைக்கும். நினைவோ ஒரு பறவை.

மொத்தத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ மட்டும் அவுட் ஆஃப் தி பாக்ஸ். எல்லாப்படத்திலுமே பின்னனி சப்தங்கள், இசைகள், குறிப்பிட்டு பாராட்டுமளவிற்கு தூள்கிளப்பி இருக்கிறார்கள்.

சூர்யாவாசு. 3.ஜூன்.2023. மாலை 6.53

உறவுகள் – உணர்வுகள் – மாயை Relativity of Relationship

Relativity of Relationship

உறவுகளின் பிம்பம் உண்மையா? மாயையா?

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன், மாமன், மச்சான் என்று எந்த ஒரு உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்களை நாம் புரிந்து வைத்திருப்பதும், அவர்கள் தங்களை இப்படிப்பட்ட நபர் என வெளிப்படுத்திக் கொள்வதும் மாறுதல்களுடன்தான் இருக்கும். நாம் ஒருவரை ஒரு மாதிரியாக புரிந்து வைத்திருக்கலாம். அது உண்மையிலேயே அவர் அப்படித்தான் என்பதாகவும் இருக்கலாம், அல்லது உண்மையில் அவர் வேறு விதமாகக்கூட இருக்கலாம். அவரிடம் அதை சொன்னோமேயானால் பெரும்பாலானோர் அதை அப்படியே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தன்னிலை விளக்கம் தருவார்கள், வாதிடுவார்கள், சண்டைக்கு வருவார்கள், வஞ்சம் வைத்துக்கொள்வார்கள், கோபித்துக்கொள்வார்கள், அரிதாக சரிசெய்ய வேண்டியதை திருத்திக்கொள்வார்கள். இதில் நாம் ஒருவரை புரிந்து வைத்திருப்பதிலும்கூட திருத்தம் தேவைப்படலாம். தன் தவறை உணரும்போது தயங்காமல் அதை திருத்திக்கொள்வதும் நன்று.

நான் என்னை எப்படிப்பட்டவனாக வெளிக்காட்டிக்கொள்ள நினைக்கிறேன் என்பதும், என்னை மற்றவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் நிச்சயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். நம்மை உள்ளபடியே யாரும் புரிந்துக்கொள்வதும் இல்லை. நாமும் யாரையும் உள்ளபடியே புரிந்து வைத்திருப்பதும் இல்லை.

உதாரணமாக ஒருவரின் அப்பா நிஜத்தில் கஞ்சனாக இருப்பார். அவர் மகனுக்கோ மகளுக்கோ சல்லி காசு கூட செலவு செய்திருக்க மாட்டார். பணத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் இருப்பார். ஆனால், அவர் தன்னை அவ்வாறே வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். மாறாக, தன் பிள்ளைகளுக்காகத்தான் நான் பணத்தை சேத்துவைக்கிறேன் என்று சொல்லுவார். உண்மையில் அந்த அப்பாவின் நோக்கம் பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதாகக்கூட இருக்கலாம். அல்லது பணத்தின் மீதான ஒரு மாயை, ஒரு பற்றுதல் கூட இருக்கலாம். சிலர் தன்னிடம் இருக்கும் பணத்தின் எண்ணிக்கையைப் பார்த்து பார்த்து மனநிறைவு அடைவர். நாம் ஒருவர் மீது வைக்கும் கருத்தும் அவர் அதற்கு தரக்கூடிய தன்னிலை விளக்கமும் நிச்சயம் ஒத்துப்போகாது. ஆனால் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் உண்மை யாதென்று புரிந்திருக்கும்.

மாயைகள் பலவிதம்

ஒருவரை அளவுக்கு அதிகமாக நம் அருகிலோ, நம் எண்ணத்திலோ இடம் கொடுக்கும் போது, பலவிதமான இல்லூஷன்கள் நமக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது.

தள்ளி இருக்கும்போது பிடித்திருக்கும், நெருங்க நெருங்க வெறுப்பீர்கள்.

தள்ளி இருக்கும் போது வசீகரிக்கும், நெருங்கும் போது பிடித்துவிடும், சிலாகிக்கும், சற்று விலகி நின்று பார்த்தால் மட்டுமே மயக்கத்தில் இருந்தது தெரியும்.

தள்ளி இருக்கும்போது பிடிக்காது, அருகில் செல்ல செல்ல பிடித்துவிடும்.

சிலருக்கு மனிதர்களை எப்போதுமே பிடிக்காது. மற்றவர்களின் குணங்களில் உள்ள குறைகளையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அனைவரையும் வெறுப்பார்கள்.

அரிதாக சிலர் மட்டும் இந்த வகைமைக்குள் வராமல் ‘நீங்கள் நல்லவரா கெட்டவரா’ என்று கேட்கும்படியாக இருப்பார்கள். இவர்கள் நியுட்ரெல் கேரக்டர் இல்லை. இவர்கள்தான் இயல்பானவர்கள். தான் செய்யும் செயல்களை மற்றவர் எப்படி புரிந்துகொள்கிறார் என்பதை விடவும் தான் செய்யும் செயல்கள் தன்னைப்பொறுத்தவரை நியாயமாக இருக்கிறதா என்பதையே அதிகம் சிந்திப்பவர்கள். இவர்களை இவர்களாகவே ஏற்றுக்கொள்வது சற்றுக்கடினம்.

இப்போது கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இடது பக்கம் இருப்பவரைப் பாருங்கள். கோபத்துடன் முகம் சுழிப்பதைப்போல இருக்கிறார் அல்லவா? வலது பக்கம் உள்ளவரைப் பாருங்கள் சாந்தமான முகத்துடன் இருக்கிறாரா? நீங்கள் இதை மொபைலிலோ கம்ப்யூட்டர் மானிட்டரிலோ பார்த்துக்கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவை விட்டு சற்று விலகிச்சென்று கொண்டே பாருங்கள். முறைத்தவரின் முகம் சாந்தமாகவும், சாந்தமானவரின் முகம் முறைப்பதைப் போலவும் தோற்றமளிக்கும். சும்மா ஒரு ட்ரை பண்ணுங்க.

Credit: COURTESY OF AUDE OLIVA M.I.T. AND PHILIPPE G. SCHYNS University of Glasgow

இது போலதான். நாம் ஒரு நபருடன் அளவுக்கு அதிகமாக பழகும்போது பல மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறோம். இதுமாதிரியான தருணங்களில் எந்த ஒரு விளிம்புக்கும் போகாமல், ஒருவரை பிடிக்கும் என்ற தூரத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு அவரை அனுகுவதோ பழகுவதோ என்றென்றைக்கும் நன்மை தரும். நல்ல நட்பில், நல்ல உறவில் நீண்ட காலம் பயணிக்க முடியும்.

யாராக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் அவர் பேசுவதை நாம் கேட்கும் போது நிச்சயமாக நாம் முரண்படுவோம். அந்த முரண் மிக இயல்பானது. ஒருவரது எண்ணமும் மற்றவரின் எண்ணமும் நூறு விழுக்காடு அப்படியே ஒற்றுப்போகாது. ஒரு நபரை பிடித்திருக்கிறது என்றால் அவரை அந்த தூரத்திலேயே வைத்து ரசிப்பதுதான் நமக்கும் நல்லது, அந்த நபருக்கும் நல்லது.

The more you know a person, either you hate or you love. The less you know a person, you can like and admire him.

உங்களோடு நெருக்கமாக இருந்த போது நீங்கள் வெறுத்த ஒரு நபரை சிறிது காலம் கழித்து பார்க்கும் போது அந்த வெறுப்பு அறவே இல்லாமல் இருக்கும். அந்த நபரின் நல்ல பிம்பம் புலப்படும்.

உங்களோடு நெருக்கமாக இருந்தபோது நீங்கள் சிலாகித்து நேசித்த ஒரு நபரை, சிறிது காலம் விலகி நின்று பார்க்கும்போது, அவர் எப்படி உங்களை இன்ஃப்லூயன்ஸ் செய்தார் என்பது உங்களுக்கே ரிவீல் ஆகும்.

நீங்கள் ஒரு நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அறையை பகிர்ந்து கொள்ள விரும்பி, அறையில் அவருடன் இருந்து பிறகு அது சரிபட்டு வராமல், அறையை காலி செய்த அனுபவம் நிச்சயம் இருக்கும் அல்லவா? காலி செய்யவில்லை என்றாலும் அந்த நண்பர் மீது முன்பு இருந்த அபிப்ராயம் குறைந்து வேண்டா வெறுப்பாகவே இருக்கவேண்டி வந்திருக்கும்.

மகாத்மா அவர்களுடன் நீங்களும் நானும் முழு நாளும் முழு வாரமும் இருந்திருந்தால் எப்படியெல்லாம் அவரை வெறுத்திருப்போம் என்று யோசித்துப் பாருங்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் பொக்கைவாய் சிரிப்பு மட்டுமே. அவர் இருமி நாம் கேட்டதில்லை. அவர் குரட்டைவிட்டு நாம் கேட்டதில்லை. அவர் பெண்களிடம் கொஞ்சிப்பேசி நாம் பார்த்ததில்லை. அவர் அசட்டு ஜோக் சொல்லி நாம் கேட்டதில்லை. அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசி நாம் பார்த்ததில்லை. பூமர் வசனங்கள் மொழிந்து பார்த்ததில்லை. அதனால்தான் அவர் மகாத்மா என்ற புனித பிம்பத்தை நாம் ஏற்கிறோம்.

Gandhi’s unusual diet very often left him highly constipated and spending hours at a time in the bathroom. But where things get weird (at least for most Westerners) — according to Gandhi: Naked Ambition, a 2010 biography by Jad Adams — is in how Gandhi dealt with his constipation. According to Adams, Gandhi would routinely invite one or more of the many female companions he kept around into the bathroom to visit with him while he was on the toilet.

https://allthatsinteresting.com/gandhi-facts-quotes-dark-side#:~:text=He%20was%20staunchly%20racist%20for,20s%20through%20his%20mid%2D40s.

இது மகாத்மா காந்தி அவருக்கு மட்டும் இல்லை, நாம் உயர்வாக நினைக்கும் பல ஆளுமைகளுக்கும், புனிதமாகக் கருதும் பல மதகுருக்களுக்கும், ஹீரோவென வாழும் பல டம்மி பீசுகளுக்கும் பொருந்தும். நிஜத்தில் அவர்களுடன் சிறிது காலம் பயணித்தாலே அவர்களின் குணங்களில் உள்ள நிறைகுறைகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். ஒருவர் கஞ்சனாக இருக்கலாம், ஓட்டைவாயாக இருக்கலாம், சுயநலவாதியாக இருக்கலாம், பீடோபைலாக இருக்கலாம், நல்லதாக இருக்கும் யாவற்றையும் கெடுத்து வைக்கும் சேடிஸ்ட்டாகக்கூட இருக்கலாம். இவை அனைத்து குணங்களும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நமக்குத் தெரியாத வரையில், நம்மை பாதிக்காத வரையில் நமக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

இதனால்தான் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்று எளிதாக சொல்லி வைத்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது அதில் ஆயிரமாயிரம் முரண்கள் வரக்கூடும். இது மிகமிக இயல்பான ஒன்று. அடுத்தவரின் பிழைகளை பேசிப்பேசி ஆர்கஸம் அடைவது ஒன்றும் ஆகச்சிறந்த செயல் இல்லை. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஞாபகம் என்னும் துரோகி

நம் மூளை ஒன்றும் கணினி கிடையாது. தரவுகளை அப்படியே பதிவேற்றி வைத்திருந்து வேண்டிய நேரத்தில் அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள. கணினியில் 0 மற்றும் 1 என எல்லாவற்றையும் பைனரியில் பதிவேற்றிக் கொள்ளும். ஒரு தரவானது ‘சூழியம்’ என இருக்க முடியும் அல்லது ‘ஒன்று’ என இருக்க முடியும்.

மூளை அப்படிக்கிடையாது. சின்ன சைபர், பெரிய சைபர், பச்சை நிற சைபர், மங்கலான சைபர், ஒல்லியான ஒன்று, குட்டையான ஒன்று, பாதி, முக்கால், கால், .625 என எண்ணில் அடங்காத வித்தியாசங்கள் இந்த சைபர் முதல் எண் ஒன்று வரை இருக்கின்றன. இந்த எர்ரர்கள் ஏற்படுத்தும் விளைவு ஒருவரை ஃபிராடு என்றும் ஏமாற்றுக்காரனென்றும் பெயர் வாங்கிக் கொடுத்துவிடும். (சிலர் உண்மையிலேயே ஃபிராடாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை)

பொய்கள் பல வகைப்படும். சுயநினைவுடன் பொய் சொல்வதை நான் கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. தூங்குபவரை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாத அல்லவா? அது போல் தன்னை அறியாமல் பொய் சொல்ல நேரிடும் வகைமைகளை நான் பட்டியலிடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.

Glitch/Repaired memory lies: மூளை தரவுகளை நினைவு படுத்தும் போது, அதில் பழுது ஏற்பட்டு வேறு ஒரு தரவை அது எடுத்து தரும். உதாரணமாக நண்பரிடம் ஒருவர் நான்காயிரம் பணம் வாங்கியிருப்பார். ஒரு மாதம் கழித்து யோசித்துப்பார்க்கும் போது மூவாயிரம் வாங்கியதாகவே அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். பேசும் போது மூவாயிரம் என்று சொல்லி, நண்பர் இல்லை நாலாயிரம் என்று சொல்லி, கடைசியில் வேறு எங்காவது சோதித்து உறுதிபடுத்தும் போது, ஆமாம், நாலாயிரம்தான் என்று உண்மையை உணர்ந்து சாரி மச்சான். கன்ஃப்யுஸ் ஆகிட்டேன் என்று ஒப்புக்கொண்டுவிடுவார். இதில் ஒருவர் பொய் சொல்வதாகத் தெரியும். ஆனால், மூளை செய்யும் சிறு பிழையினால் அவரது கேரக்டரையே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கும் பலரும் வந்துவிடுவர்.

Influenced memory lies: இன்ஃப்லூயன்ஸ் பொய்கள். ஒருவரது நினைவில் மங்கலாக இருக்கும் ஒரு தரவை, இன்னொருவர் சொல்லும் தரவு மறைத்துவிடும். உதாரணமாக, ஒருவர் நண்பரிடம் நான்காயிரம் வாங்கி இன்னொருவருக்கு தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வாங்கியவர் திருப்பித்தரும் போது மூவாயிரம் தந்து அவ்வளவுதான் வாங்கியதாக சொன்னால், இவரது நினைவில் தெளிவில்லாமல் இருந்த நாலாயிரம் என்ற பிம்பத்தை மூவாயிரம் என்ற பிம்பம் மறைத்துவிடும். முதலாவது நண்பரிடம் இவர் மூவாயிரம் திருப்பித் தர அவர் நாலாயிரம் கேட்க, இவரும் மூவாயிரம்தான் வாங்கியதாக வாதிட நேரிடலாம். இதில் இவருக்கு எந்த லாபமும் இல்லைதான். ஆனால் மூவாயிரம்தான் தான் வாங்கியாதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். இதற்கும், அக்கவுண்ட் எதாவது எடுத்து செக் செய்யும் போதுதான் உண்மை வெளிப்படும். பிறகு சாரி நண்பா கன்ப்யூஸ் ஆகிட்டேன் என சர்ரண்டர்தான். இதிலும் கேரக்டர் டேமேஜ்தான் மிச்சம்.

Defensive memory lies: ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பைக் சாவியைக் கொடுக்கிறார். நண்பர் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். பிறகு பைக் சாவி தேவைப்படும் போது கொடுத்தது ஞாபகம் இருக்குமே தவிர, திரும்பி வாங்கியது ஞாபகம் இருக்காது. இப்பொது அந்த நபர் சாவியை வாங்கி எங்கு வைத்திருப்போம் என்பதை யோசிக்க மாட்டர். சாவியை தான் திரும்ப பெறவே இல்லை என்றும் வாதிடுவார். அல்லது மறுபடியும் கொடுத்துவிட்டேன் என்று வாதிடுவார். (மூளை அவ்வாறு ரீகிரியேட் செய்துவிடும்.) உண்மையில் சாவி எங்கவது அலமாரியில்தான் வைத்திருப்பார். தேடுவதற்கு மூளை சலுப்பு பட்டுக்கொண்டு, என்னிடம் சாவி குறித்த தகவலே இல்லை என வாதிடும். மூளையின் சோம்பேறித் தனம் அல்லது தேடி கிடைக்காவிட்டால் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது வெளியே தெரிந்து அவமானம் வரும் என்ற பயத்தினால், நடந்த ஒரு சம்பவத்தை, இல்லை என மறுத்து பேச மூளையே நிர்ப்பந்திக்கும். சாவி கிடைத்தப்பிறகு ‘சாரிடா சுத்தமா ஞாபகமே இல்லை!, மறந்துட்டேன்.’ என சமாளிப்பார்கள். இது மூளை செய்யும் சொதப்பல்களே அன்றி சம்மந்தப்பட்டவரின் கேரக்டர் இல்லை. இந்தப் பிரச்சனை இருப்பவர்களிடம் பரிவர்த்தனை செய்யும் போது குறைந்தபட்ச கவனமாவது அல்லது ஆதாரத்துடன் பரிவர்த்தனை செய்துக்கொள்வது அவசியத் தேவை.

Profit memory lies: இதுதான் மிகமிக ஆபத்தான பொய் வகை. தன்னுடைய லாபத்திற்காகவே, மூளை தான் முன்பு கூறியதை மாற்றி அமைத்துக்கொண்டு, நடக்காத ஒன்றை, சொல்லாத ஒன்றை அல்லது சொல்லிய ஒன்றை மாற்றிப்பேசும். உதாரணமாக இரு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும், பில் கட்டும் போது, ‘மச்சான் போன தடவ நான் பே பண்ணிட்டேன். இப்போ நீ பே பண்ணிடு’ என்று ஒரு நண்பன் கூற. ‘டேய் போன தடவயும் நான்தான்டா பே பண்ணினேன்.‘ என்று வசனங்கள் ஆரம்பித்து அவரவர் ஞாபகத்தைக்கொண்டே வாதிடுவரே தவிர, ‘சரி எனது ஞாபகம் தவறாகக்கூட இருக்கலாம்‘ என்று இருவரில் ஒருவர்கூட விளங்கிக்கொள்ளமாட்டார்கள். அவர்களது ஞாபகம் அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ஏனென்றால் செலவை மிச்சப்படுத்த லாப நோக்கத்திலேயே நெடுங்காலமாக இயங்கி வரும் மூளைக்கு இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். இந்த லாப நோக்கத்தில் இயங்கும் மூளையை நம்பி நல்ல நண்பர்கள்கூட சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இப்படி நடந்த ஒரு சம்பவத்தையோ, பேசிய வார்த்தைகளையோ, மூளையின் ஞாபகத்தில் இருந்து ஒருவர் எடுத்து தரும்போது நிச்சயமாக அதில் மாறுதல்கள் ஏற்படும். நடந்ததை நடந்ததுபோலவே எடுத்துசொல்லும் ஆற்றல் நம்மிடம் மிகமிகக் குறைவுதான். அதனால்தான் முக்கியமான தகவல்களை எல்லாம் எழுத்துவடிவத்தில் அச்சிட்டு வைக்கிறார்கள். காலங்கள் மாறினாலும் அச்சிட்ட எழுத்துக்கள் மாறுவதில்லை. ஞாபகங்கள் மாறிவிடும். இப்போது யோசித்துப்பாருங்கள் நம்முடன் பழகியவர்களை பழகிக்கொண்டிருப்பவர்களை அவர்களின் ஞாபகம் பிழையாகிப்போனதன் விளைவாக அவர்களை எவ்வளவு தாழ்வாக நினைத்திருப்போம் என்று. இனியும் அப்படி யாரையும் ஞாபகத்தினால் ஏற்படும் முரண்களைக்கொண்டு தவறாக எடைப்போட வேண்டாம். முடிந்த அளவிற்கு பிற தரவுகளைக்கொண்டு பழுதடைந்த ஞாபகத்தை சரிசெய்ய முயற்சியுங்கள். ஞாபகத்தை விடவும் மனிதர்களின் உணர்வு பெரிது.

தனது ஞாபகம் தவறாக இருக்கிறது’ என்பதற்கும் ‘தான் தவறானவன்’ என்பதற்கும் எவ்வளவு வித்தியசங்கள் இருக்கிறது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Stockholm Syndrome

நெட்ஃப்லிக்ஸ்-ல் மனி ஹெயிஸ்ட் பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிட்சையம் ஆகியிருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் இந்த வார்த்தை தெரிந்திருக்கக்கூடும். நல்ல வார்த்தை. ஏன் நல்ல வார்த்தை என்று சொல்கிறேன் என்று உங்களுக்கே புரியும்.

ஒரு நபருடன் மட்டுமே குறிப்பிட்ட காலம் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் போது, அவர்மீது ஒரு இனம்புரியாத பந்தம் மனதினுள் ஏற்படும். உங்களுடைய எல்லா உணர்வுகளையும் ஒரு நபருடனே நீங்கள் பகிர நேரும்போது, அந்த நபர் உங்களின் மனதிற்கு மிகமிக நெருக்கமாகி விடுகிறார். அது அவர்மீது அன்பு இருப்பதாக, பாசம் இருப்பதாக, காதல் இருப்பதாகக்கூட சித்தரித்துக்கொள்ளும். அவர் இல்லாமல் இருக்கும் சூழலை மனதினால் எளிதில் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. ஏனென்றால் மனதிற்கு சமீபத்தில் ஒரு நபருடன் 24 மணி நேரமும் பயணித்திருக்கிறது. அதன் விளைவு, அந்த நபர் இல்லாமல் எதையுமே கற்பனை செய்வது சற்று கடினமாக இருக்கும். இந்த உணர்விற்கு அன்பு, பாசம், நேசம், காதல், என்று என்ற க்ளோரிஃபிகேசனும் தேவையில்லை. புனிதப்படுத்த முயற்சிக்காமல், பி.ஜி.எம். போடாமல் உற்று கவனியுங்கள்.

ஒரே நபருடன் ஒரே அறையில் உண்டு, உறங்கி, பேசிப் பழகும் போது, அந்த நபரின் இயல்பு புதிதாக இருப்பதால் மனித மனமானது அந்த ஒருவரை எளிதில் மனதில் ஒட்டிக்கொள்ளும். இதைத்தான் கமல்ஹாசன் குணா படத்தில் அபிராமிக்கு இந்த எஃபக்டை வரவழைத்துக்காண்பித்தார். காதல் கொண்டேன் படத்தில் செல்வராகவன் சொல்லிப்போனார்.

மூளையைப் பொறுத்தவரையில் சமீபத்தில் எது அதை மிகவும் பாதித்தத்தோ அதை எளிதில் மறக்காது. அது ஒரு பாட்டாக இருக்கலாம். ஒரு படமாக இருக்கலாம். ஒரு பொருள், வாகனம், இடம், செயல், நபர், சூழல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஒரு நிறத்தின் சாயம் விரல்களில் ஒட்டிக்கொள்வது போல என்று புரிந்துகொள்ளலாம். தேய்த்து கழுவாத வரையில் அது விரல்களை விட்டுப் போவதேயில்லை அல்லவா? அது போலதான் சில இசை, வார்த்தை, பாடல், முகம், நபர் என மனதிற்கு இதமளிக்கும் அல்லது பழகிப்போன அல்லது எந்தவொரு ஆழ்மன உணர்விற்கு உட்படுத்தும் எதுவாகவும், யாராகவும் இருக்கலாம், அதன் இருப்பை நீண்டகாலம் உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனம், அதன் இன்மையை எளிதில் கையாளத்தெரியாமல் அதன் இருப்பைத் தேடித்திரியும். இதுதான் Stockholm Syndrome.

இந்த சிண்ட்ரோம் எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் வருவதேற்கே அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நாமெல்லாம் சாதாரன மனிதர்கள்தானே. உணர்ச்சிவசப்பட்டு நம் அறிவை மீறி அவசரப்பட்டு செயல்பட்டுவிடும் இயல்பான மனிதர்கள்தான்.

சரி இது வஞ்சகர்கள் மட்டுமே செய்யும் வசியம் போன்ற செயலா என்றால் இல்லை. சாதாரனவரும் இதை அவரை அறியாமலே செய்ய முடியும். இரு இயல்பான நபர்கள் ஒரு அறையில் இருந்தாலே இந்த சிண்ட்ரோம் இருவருக்குள்ளும் எளிதாக தானாக உருவாகிக்கொள்ளும். திட்டமிட்டு இதனை செயல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. (எதிர்பாலினமாக இருந்தால் மிகச்சுலபமாக இது அரங்கேறும்) ஆனால், அதே சமயம், சில டாக்சிக் நபர்களுடன் நாம் இதே சிண்ட்ரோமினால் ஆட்கொள்ளப்பட்டு அந்த நபருடனே நெடுங்காலம் பயனிக்க நேரலாம். அதுமாதிரியான நேரங்களில் நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். டாக்சிக் நபர்களின் உறவைப்பற்றி சுருக்கமாக (ஆம் சுருக்கமாகப்) பார்ப்போம்.

டாக்சிக் ரிலேசன்ஷிப்

யாரெல்லாம் டாக்சிக்? நமக்கு பிடிக்காதவரெல்லாரையும் டாக்சிக் என்று முத்திரைக் குத்தி அவப்பெயரை உண்டாக்கிடலாமா? கோபப்படுபவரெல்லாம் டாக்சிக்கா? குறை சொல்லுபவர்கள் எல்லாம் டாக்சிக்கா? இதற்கான வரைமுறை அவரவர் வசதிக்கேற்ப மாறிக்கொண்டேதான் இருக்கிறது. டாக்சிக் என்றால் நச்சு, விசம். நம் மன நலனுக்கும், வாழ்க்கை நலனுக்கும் கேடான எந்த ஒரு உறவையும் டாக்சிக் எனலாம். ஆனால் டாக்சிக் நபர்களை வேறு சில வார்த்தைகளைக்கொண்டு புனிதப் படுத்த முயற்சிப்பார்கள். அதனை பட்டியலிடுகிறேன்.

தாய்ப்பாசம் என்ற பெயரில் Toxicity: சில குடும்பங்களில் அம்மாக்கள் டாக்சிக் நபர்களாக இருப்பார்கள். தாய்ப்பாசம் என்ற பெயரில் அழுதுப் புலம்பி புரனிப்பேசி குடும்ப நபர்களின் நிம்மதியை குலைப்பதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார்கள். எதிர்த்து யார் பேசினாலும் தாய்மையின் வேதனைகளை மேற்கோள்காட்டி சென்மெண்ட்டாக தாக்கி மடக்கிவிடுவார்கள். இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. டாக்சிக் மம்மிக்கள்.

அப்பாபாசம் என்ற பெயரில் Toxicity: சிறந்த உதாரணம் சமீபத்தில் வந்த டான் படத்தின் ஆகச்சிறந்த அப்பா சமுத்திரக்கனி. பாசத்தைக்கூட அடித்துதான் காட்டுவாராம். அடங்கப்பா.

வாழ்க்கை மீதோ, வேலைமீது, எதன் மீதோ, ஏன் கனவன்மீதோ/ மனைவிமீதோ இருக்கும் கோபத்தைக்கூட, வயதிலும் உருவத்திலும் சிறியதாக இருப்பதாலே குழந்தைகள் மீது ஒட்டுமொத்தக் கோபத்தையும் கட்டவிழ்த்துவிடும் அப்பா அம்மாக்களை 90ஸ் கிட்ஸ் தலைமுறைவரை பார்த்திருப்பார்கள். விதவிதமான சாமான்களைக்கொண்டு தன் மகன்களை வெளுத்து வாங்குவார்கள். குழந்தைகள் தவறு செய்ததற்காக அடிவாங்கியதை விடவும், பெற்றோர்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் அடிவாங்கியதுதான் அதிகமாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும். ஏன் பிறந்தோமோ என்கிற அளவிற்கு அடி பின்னி பெடலெடுத்திருப்பார்கள். குழந்தை வளர்ப்பு என்ற சொல்லின் தேவையே இவ்வகை டாக்சிக் பெற்றோர்களால் வந்ததுதான். இவர்களைப் பொருத்தவரை சோறு போட்டு, துணி மணி வாங்கிக்கொடுத்து, ஸ்கூலுக்கு பணம் கட்டிவிட்டால், இவர்களின் கடமை நூறுக்கு இருநூறு விழுக்காடு நிறைவடைகிறது. இதையே அரும்பெரும் தியாகமாகக் கருதுவார்கள். இதுபோக அடித்து துன்புறுத்தியது, வசைப்பாடி தாழ்வு மனப்பாண்மையை மனதில் நிரப்பியது, வாழ்க்கையை வெறுக்குமளவிற்கு அவமானப்படுத்தியது, போன்றவையெல்லாம் எந்தக்கணக்கிலும் வராதவை. இதுபோக தலைக்கு மேல் கடனை வாங்கிவிட்டு மகன்களை மகள்களை கடனை திருப்பி செலுத்தைவைக்கும் பெற்றோர்களையும் நாம் பார்க்காமல் இல்லை. உங்களுக்கு புள்ளையா பொறந்தது ஒரு குத்தமாடா? என்று புலம்பும் அளவிற்கு சிக்கல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் அன்பான பெற்றோர்கள்.

நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள், பிள்ளைகள் பெற்றோரை விட்டுவிட்டு போய் விடுவார்கள். பிள்ளைகள் அப்படி செய்ய பெற்றோர்கள்தான் முதல் காரணமாக இருப்பார்கள். அன்பாக பாசமாக சரியாக வளர்க்கும் குழந்தைகள் வளர்ந்து பெரியவரானப்பிறகு பெற்றோர்கள் மீது நன்றி கொள்வார்கள். (இங்கும் விதிவிலக்குண்டு) ஆனால், பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கி, மனதிலும், உடலிலும், ஆரோக்கியத்திலும் சரி செய்ய முடியாத காயங்களை பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் புறக்கனிப்பதே பிள்ளைகள் அவர்களுக்கு வழங்கும் விடுதலை என்றே நான் பார்க்கிறேன்.

வசதியாக வளர்த்தால்தான் நல்ல குழந்தை வளர்ப்பு என்றில்லை. எந்த வசதியும் இல்லை என்றாலும், அன்புடன், நற்பண்புகளுடன் குழந்தைகளை வளர்க்கும் அவர்களுக்காக உழைக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும், குழந்தைகள்தான் சாமி. அருவி படத்தில் வரும் குக்கோட்டி குன்னாட்டி என்ற பாடலின் வரிகள் எப்போதும் என்னை மெய்சிலிர்க்க தவறியதே இல்லை.

வந்தாயே என் சேயாக
என் தாயும் அது நீயாக
ஏழைன்னு நினையாதே
என் சாமி நீ தானே

Baby Track (Kukkotti Kunaatti) – Video Song | Aruvi | Arun Prabu | Bindhu Malini, Vedanth

அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தால் டாக்ஸிக் பேரண்டின்க் என்று அர்த்தம் இல்லை. “பயபக்தி” என்று படித்திருப்பீர்கள். பயம் தான் முதலில். பிறகுதான் பக்தி. குழந்தைகள் மனம்போனபோக்கில் போகாமல் இருக்க அவ்வப்போது சில சில திருத்தங்கள் தேவைப்படும். அவர்களாக புரிந்துகொள்ளும் வயதிற்கு வரும்வரை சிலபல சமயங்களில் அவர்களை கண்டிப்புடன் நடந்த வேண்டிய சூழல் வரும். அப்போது, அம்மு குட்டி, செல்லம் என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டு இருத்தலாகாது. திருடுவது அறமற்ற செயல் என்ற முடிவுக்கு வர ஒரு குறிப்பிட்ட வயது தேவைப்படும். அந்த வயதிற்கு வரும் முன்பே திருடப்பழகும் குழந்தைக்கு அறம் குறித்த பாடம் புரியாது. ஆனால் வலி குறித்த அறிவு இருக்கும். திருடினால் அடிப்பார்கள். அடித்தால் வலிக்கும். அதனால் திருட வேண்டாம் என்று சில காலம் வளர்வார்கள். அறம் குறித்த அறிவு வந்தப்பிறகு, திருடினால் வலிக்கிறதோ இல்லையோ, மனம் உருத்தும் என்ற நிலைக்கு வருவார்கள். அதுவரை திருடாமல் இருக்கவும், திருட்டின் மூலம் சுகத்தை அனுபவிக்காது இருக்கவும் பெற்றோர்கள், தேவையான கண்டிப்புடன் இருப்பதும், முறையான குழந்தை வளர்ப்புதான். (போலீஸ் அடிக்குப் பயந்து மறுமுறை திருடாமலும் வம்பு தும்புக்கு போகாமலும் வாழ்பவர்கள் பலர். வலி ஒன்றே சிறந்த மொழி)

நண்பர் என்ற பெயரில் Toxicity: இவ்வகை நபர்களை கடந்து வராத ஆட்களே இருக்க மாட்டீர்கள். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், ஆஃபீஸ், ரூம், ஏரியா, என்று திசையெங்கும் டாக்சிக் நண்பர்கள் பரவிக்கிடப்பார்கள். பொதுவாக இவர்களை நான் வசைப்பாடுவது இல்லை. ஏனென்றால் இவர்கள் நமக்கு நிறைய பாடங்களை சொல்லிக்கொடுப்பார்கள். பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, போல இவர்களிடம் விலகுவது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. டாக்சிக் நண்பர்களை சிறு முயற்சியில் வாழ்க்கையில் இருந்தேக்கூட தூக்கி எறிந்துவிடலாம். பெற்றோரையோ, கணவன் மனைவியையோ, மகன், மகளையோ அப்படி தூக்கி எறிந்துவிட முடியாது. நண்பர் என்ற பெயரில் நம்மை சுற்றி சிதறிக்கிடக்கும் டாக்சிக் நபர்களை இனங்காண்பது எளிது. உங்கள் பணத்தில் மங்கலம் பாடிக்கொண்டிருப்பார். அல்லது பணத்தை அவர் செலவு செய்து உங்களின் பொன்னான நேரத்தை உறிஞ்சிக்கொண்டிருப்பார். அல்லது உங்களின் பலவீணம் தெரிந்து அதைக்கொண்டே உங்களின் நிம்மதியைக் கெடுக்க முக்காலமும் வேலைபார்த்துக்கொண்டே இருப்பார்.

காதல் என்ற பெயரில் Toxicity: விரிவாக சொல்ல வேண்டுமா என்ன? காதல் என்ற பெயரில் மன்மதன் படத்தில் வரும் ரீமாசென்னிடமோ, அர்ஜுன் ரெட்டியில் வரும் அர்ஜுனிடமோ சிக்கிய ஆணோ பெண்ணோ, அவர்களிடம் கேட்டால் கண்ணீர் வடித்திடுவார்கள். லவ் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு நெஞ்சை புண்ணாக்கி, ரனமாக்கி வைத்திடுவார்கள். ஒன்னுமே இல்லாத விசியத்திற்கெல்லாம், அப்ப உனக்கு என் மேல லவ் இல்லல என்று ஆரம்பித்து, நான் சாகுறேன் என்பது வரை. எல்லாமே ஸ்பாய்லர்ஸ்தான். கட்டம் சரியில்லாத நேரம் யாருக்கும் லவ்வுக்கு ஓகே சொல்லிவிடாதீர்கள். சிலர் காதல் என்ற பெயரில் நேரத்தை தின்பார்கள், சிலர் பணத்தை சுரண்டுவார்கள், சிலர் உடலை அனுபவிப்பார்கள், சிலர் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராக பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவர் எத்தகைய புத்திசாலியாக இருந்தாலும் டாக்சிக் பேர்வழிகளிடம் மாட்டாமல் இருப்பதற்கு அசாத்தியமான துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் வேண்டும். துர்-அதிர்ஷ்டவசமாக துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் பலரிடமும் இருப்பதில்லை.

வாழ்க்கைத்துனை என்ற பெயரில் Toxicity: கணவனோ மனைவியோ எதோ ஒரு வகையில் நிம்மதியைக் கெடுத்து வைக்கும் துனை டாக்சிக்தான். இதில் பாலின பேதமில்லாமல் ஆணோ பெண்ணோ யார்வேண்டுமானாலும் டாக்சிக்காக இருக்கலாம். அவர்கள் டாக்சிக் என்பது அவர்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். பாம்புகள் குடும்பமாக இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக்குடும்பத்தில் கிளி ஒன்று வாக்கப்படுகிறது. பாம்பு கடித்தவுடன் கிளிக்கு விஷமேறும். கடித்த பாம்புக்கு இத்தனை நாட்களாக நாங்கள் எல்லாம் இப்படித்தான் கடித்துக்கொண்டு நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிளி மட்டும் ஏன் மயங்குவது போல் நடிக்கிறது? என்றே தோன்றும். ஒன்றும் செய்வதற்கில்லை. கிளி அதுவாகப் பார்த்து பறந்து தனக்கு தானே விடுதலை அளித்துக்கொண்டால்தான் உண்டு. இல்லையென்றால் விஷத்துடனே, கடியுடனே, அடியுடனே, உதையுடனே வாழப் பழகிக்கொள்ளும். கிளிகள் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கின்றன. யாரும் மறுப்பதற்கில்லை. அதற்காக பெண்களும் டாக்சிக்கில் சலைத்தவர்கள் இல்லை. கனவனை கைக்குள் போடுவதில் இருந்து, கனவனின் அம்மாவை வில்லியாக்கி வீட்டை ரெண்டாக்குவது வரை, கனவர்களின் தாலியறுப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். சபாஷ் சரியான போட்டி என்று விசிலடித்து கைத்தட்டி குதூகலிக்கும் அளவிற்கு ஆண்களுக்கு டார்ச்சர் தருகிறார்கள். டார்சச்ர் என்று சொல்லிவிட்டால் வேறு அழுது உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து பஞ்சாயத்து வைத்துவிடுவார்கள்.

பிள்ளை என்ற பெயரில் Toxicity: இது மிக அரியவகை டாக்சிக். பெரும்பாலும் பெண்கள்தான் இவ்வகை டாக்சிக்கில் ஈடுபடுவார்கள். பெற்றோரின் உழைப்பை, சேமிப்பை, சொத்தை, நிம்மதியை, அபேஸ் செய்வதிலேயே முழுநேரத்தையும் செலவிடுவார்கள். இவர்களின் உழைப்புச் சுரண்டல் கார்ப்பரேட்டைவிடவும் மோசமாக இருக்கும். குடும்ப அரசியலில் பி.ஹெச்.டி, டாக்டரேட், என உச்சம் தொட்டவர்கள். ஆங்காங்கே ஆண் பிள்ளைகளும் அப்பாக்களின் நிம்மதியை ஊதாரித்தனமாக கெடுக்காமல் இல்லை. வீட்டில் எல்லாம் இருந்தும் மகனின் பொறுப்பற்ற போக்காலும், ஆனவத்திற்கென்றே செய்யும் திருச்செயல்களாலும் பெற்றோரின் நிம்மதி கெட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சொந்தம் என்ற பெயரில் Toxicity: சொந்தம் என்றாலே நிச்சயம் டாக்சிக்காகத்தான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் இயல்பு. பலரும் கேட்கத் தயங்கும் ஒரு கூர்மையான கேள்வியை சித்தப்பனோ மாமனோ மூஞ்சி மேலேயே கேட்பார்கள். அத்தையும் பெரியம்மாவும் புரனிப்பேசியே புதுப்புது புரளிகளை கிளப்பி விடுவார்கள். இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள், இவர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுப்பதோ, விவரிப்பதோ, பயனற்றது, ஒவ்வொரு சம்பவத்திற்கும் அவரவருக்கேற்ப ப்ளாக்பஸ்டர் திரைக்கதை ஒன்றை தீட்டி வைத்திருப்பார்கள். அதை பப்ளிஷ் செய்தால்தான் அவர்களுக்கு தூக்கம் வரும். அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும். விட்டுவிடுங்கள். இவர்களை முடிந்த அளவிற்கு மண்டைக்குள் ஏற்றாதீர்கள். நல்லது கெட்டதில் பார்ப்பதோடும் பேசுவதோடும் இவர்களின் இருப்பை, பேச்சை மறந்துவிடுவது மனநிம்மதியை கெடுக்காமல் இருக்கும்.

அம்மா, அப்பா, கனவன், மனைவி, மகன், மகள், சொந்தம் என இத்தனை இடத்திலும் டாக்சிக் நபர்கள் சூழ்ந்திருப்பார்கள். ஏதேனும் ஒன்றிரண்டு தருணங்களில் நமக்கு நன்மையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். பல சமயங்களில் பாவங்களையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். இவர்களை அறவே நம் வாழ்வில் இருந்து விலக்குவது அவ்வளவு எளிதானக்காரியம் இல்லை. அதே சமயத்தில் இவர்களின் அத்தனை டாக்சிக் சித்ரவதைகளையும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டு விதியே என வாழ்வதும் அவசியமில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது ஒருவரின் மன அமைதிக்கு மிக முக்கியம். பல உறவுகளும் திருவிழா பலூன் போல நம்மை விரல் நுணியில் அழுத்திப்பிடித்துக்கொண்டு அடிப்பார்கள், பட்டெனெ விலகிப்போனால் ரப்பர் பேண்ட் கயிறு நம்மை அந்த கையிடமே திரும்ப இழுக்கும். திரும்பத் திரும்ப நம்மை அடிப்பதும் நாம் சிறுது விலகிப் பின் அவரிடமே போவதும் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒருவித லியிப்பை ஏற்படுத்தும். விளையாடும் போது ஒரு ஹார்மோன் சுரக்கும் அது போல ஒரு டோப்பமைன் திருப்தி நம்மை வாட்டி வதைப்பதில் கிடைக்கும்.

இதில் டாக்சிக் நண்பர்களிடம் இருந்து விலகுவது மட்டும் எளிது. அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு ரீல்ஸ், வாட்சப் ஸ்டேடஸ் என்று எதையாவது உருட்டிக்கொண்டிருந்துவிட்டு அடுத்த ஜோக்கரைத்தேடி போய்விடுவார்கள்.

Stockholm syndrome with Toxic personalities

டாக்சிக் நபர்களின் பிடியில் இருப்பதே ஒரு சாபம்தான். அதுவும் நமக்கே தெரியாமல் அவர் மீது நமக்கு அன்பு இருக்கிறது, பாசம் இருக்கிறது, நேசம் இருக்கிறது, மயிறு இருக்கிறது என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை என்று யோசித்துப்பாருங்கள். ஒன்றாக இருப்பதாலே ஒருவர்மீது அன்பும், காதலும், மரியாதையும் வந்துவிடுமா என்ன? மனதிற்கு பழகிப்போனதால் வரும் இருப்பின்மீதான ஏக்கம். ஒருவரது இன்மையை எதிர்கொள்ள தயாராக இல்லாத மனதின் பெருங்குழப்பம். ஒருவருடன் இருப்பதாலேயே நாம் அவரை விரும்புகிறோமா? அல்லது அவரை விரும்புவதாலேயே நாம் அவருடன் இருக்கிறோமா?

நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை குறிப்பிடுகிறேன். எனக்கு தெரியாததை நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

யாருடன் நீங்கள் முக்கியமான நேரங்களையோ அல்லது அதிகப்படியான நேரங்களையோ செலவிடுகிறீர்களோ, அவரைப்பற்றீ நீங்கள் மற்றவரிடம் புலம்பித் தள்ளுகிறீர்களா என்று யோசித்துப்பாருங்கள். மனதிற்குள்ளே குமுறினாலும் அதுவும் புலம்பல்தான்.

இந்த புலம்பல்களை சம்மந்தப்பட்ட நபரிடமே கொண்டு செல்லும்போது. சரியான விசியங்களுக்கு மறுத்துப்பேசாமல் சரி என்று தன்னைத்திருத்திக் கொள்ள முற்படுபவர் டாக்சிக் இல்லை. நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று ஆரம்பித்து உங்களையே குற்ற உணர்விற்கு ஆளாக்கி உங்களைப் பெருந்தன்மையாக மண்ணிக்கிறாரா என்று சோதித்துப்பாருங்கள். அவர் உங்களை கஷ்டப்படுத்தியற்கும் அவரே உங்களை பெருந்தன்மையாக மன்னித்தாரென்றால் டாக்சிக்தான்.

அந்த டாக்சிக் நபர் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு, உங்கள் மூளை உங்களின் உள்ளுணர்வு சொல்வதை பொருட்படுத்தாமல் போட்டு புதைக்க முற்படும். இந்தப்போராட்டத்தின் மனரனங்களை இதை எதிர்கொண்டவர்களால் மட்டுமே உணரமுடியும். (இதில் நீங்களும் ஒருவரென்றால், உங்களோடு நானும் நிற்கிறேன்).

சம்மந்தப்பட்ட நபர் வருத்தப்படும் போதோ, அழுவும் போதோ, வலியினால் துடிக்கும்போதோ, உங்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாது. ஏனென்றால் உங்கள் ஆழ்மனதில் அந்த நபர் டாக்சிக் என்று நன்கு பதிவாகி இருக்கும். உங்கள் அறிவு உங்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் படி அந்த நபர் இருந்திருப்பார். உங்களின் மீது அத்தகைய ஆளுமையை நிறுவியிருப்பார்.

உங்களின் எல்லா முடிவுகளையும் பாதிப்பார். அதில் அவரது விருப்பம், லாபம், எல்லாமும் இருக்கும். ஆனாலும் அவையெல்லாம் உங்களின் நல்லதிற்காகத்தான் கூறுவதாக தங்க முலாம் பூசுவார்.

உங்களிடம் இருந்து ஏதேனும் ஒன்றை சுரண்டிக் கொண்டிருப்பார். அது உழைப்போ, உடலோ, நேரமோ, பணமோ, இடமோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வுலகில் எல்லாமும் tradeதான். உங்களின் உடலுக்கே நீங்கள் உணவளித்தால்தான் அது உங்களுக்காக இயங்கும். இப்படிதான் உலகில் எல்லாமும் இயங்குகிறது. ஒன்றைக்கொடுத்தால்தான் எது ஒன்றும் இயங்கும். ஆனால், கிடைக்கும் யாவற்றையும், தேவைக்கு மீறி, அளவுக்கு மீறி, ஒருவரின் பேராசைக்காக சுரண்டுவது மனிதர்களின் குரூர் குணங்களில் ஒன்று. உங்களுடன் இருப்பவர், உங்களிடம் தேவைக்கு அதிகமாக் எதை சுரண்டுகிறார் என்று கவனியுங்கள். சுரண்டினால் டாக்ஸிக். இல்லையென்றால் ஓகே.

கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், தண்டித்தல், அவமானப்படுத்துதல், குற்றவுணர்வுக்கு ஆளாக்குதல், பாலியல் ரீதியாக தாழ்மையுணர்வை உண்டாக்குதல், அத்துமீறல்கள், காட்டுமிராண்டி போல் கத்துதல், குரலை உயர்த்தி அழுகையை நிறுத்துதல், அசிங்கமாக பேசி கார்னர் செய்தல், மிரட்டுதல், மற்றவரிடமோ யாரிடமோ நடந்ததை சொல்லிவிடுவேன் என மிரட்டுதல், கொலை மிரட்டல், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுதல், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுதல், தூக்குப்போட்டுக் கொள்வதாக நாடகமாடுதல், இத்யாதி, இத்யாதி, இத்யாதி, வன்கொடுமைகளும் டாக்சிக் நபர்களின் ஆகச்சிறந்த பண்புகள்.

இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சரியான நபரை அனுகி, அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், காவல் நிலையத்தில் புகாரளித்து, டாக்சிக் டார்ச்சரில் இருந்து முதலில் உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த சொர்க்கபூமியில் வாழ்ந்துவிட ஒரு வேலையும், பாதுகாப்பான ஒரு வீடு அல்லது விடுதி, கீழான எண்ணம் கொண்டு நெருங்கும் மனிதர்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல், இவை போதும். வாழ்வை அமைதியுடன் ரசனையுடன் வாழ்ந்திடலாம்.

மாயத்திரை விலகும்

எல்லோருடனும் பழகுங்கள். எல்லா உறவுகளும் மாயை போன்றது. யாரையும் அவ்வளவு புனிதமாக, பெர்ஃபெக்ட்டாக நினைக்க வேண்டாம். அதற்காக எல்லோரையும் சைக்கோ சேடிஸ்ட் என்றும் என்ன வேண்டாம். எல்லாரிடமும் பரிவுடனும், அன்புடனும் அதே நேரத்தில் ஜாக்கிரதையுடனும் தேவையான இடைவெளி விட்டும் நடந்து கொள்வது என்றென்றைக்கும் நன்மை தரும். யாரும் இங்கு black-உம் இல்லை. யாரும் இங்கு white-உம் இல்லை. இங்கு எல்லோருமே க்ரே கேரக்டர்கள்தான். சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள், காரியவாதிகள், அன்பர்கள், நண்பர்கள், நல்லவர், கெட்டவர், கயவர்கள் எல்லோருமே ஒன்றுதான். ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு குணம் வெளிப்படும். நெகட்டிவ் குணங்கள் நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்காமல் இருங்கள்.

Nobody is black; Nobody is white; We all are grey. Not black & white. Its pure GREY.

பல நேரங்களில் பல மனிதர்கள் பலவாறாக நடந்துக்கொள்வர். அவர்களின் நடத்தை நம்மை பாதிக்காத அளவிற்கு நாம்தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் மன அமைதி, நம் வாழ்க்கைக்கான நிம்மதி, நம் மகிழ்ச்சி எல்லாமும் நமக்குதான் முக்கியம். அவற்றை நம்மைவிடவும் யாரும் பத்திரமாக சீரழிக்காமல் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். நல்லவர், கெட்டவர், பிடித்தவர், பிடிக்காதவர், பொய் பேசுபவர், சண்டை மூட்டிவிடுபவர், கேடு நினைப்பவர், சேடிஸ்ட், டாக்சிக், என எல்லா வகையான மனிதர்களையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாரிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்காமல், அவர்களில் கீழான செயல்களுக்கு மதிப்பளிக்காமல், உங்களை அதன் பாத்திப்பில் இருந்து விலக்கிக்கொண்டு, படு உஷாராக வாழ்க்கையை கொண்டு சென்றீர்கள் என்றால், இவ்வினிய வாழ்க்கை உங்கள் வசம்.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 30.04.2023

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023