சிறுகதை: கெட்டக்கனவு

1

விமல் விலங்கு மாட்டப்பட்ட தன் கைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். எதையோ நினைத்தவனாக மீண்டும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொட்டுகிறது. விம்மி விம்மி அவனது ஆற்றல் தீர்ந்திருந்தது. நீதிமன்றத்தில் அவனைச் சுற்றிலும் எழும் எந்த சத்தமும் அவது கவனத்தை ஈர்க்கவில்லை. அருகில் இருக்கும் பலரும் விமலைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருப்பதாக அவன் உணர்கிறான். இருந்தாலும் விமல் யாருக்கும் தன் பார்வையை கொடுக்கவில்லை. வேறு எங்கோ சிந்தனையை தொலைத்து விட்டவனைப்போல் இரு போலிஸ் காரர்களுக்கு இடையில் தலை நிமிராமல் தேம்பியவாறு அமர்ந்திருக்கிறான்.

சற்று தூரத்தில் வரிசையாக நின்றிருந்த பைக்குகளுக்கு பக்கத்தில் ஐந்தாறு பேர் நின்று விமலையே கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டு, அவர்களுக்குள் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் கண்ணீருடனும் குரோதத்துடனும் மௌனித்திருந்தான். அவன்தான் மனோஜ். அவர்களுக்கு பக்கத்தில் வயதான தம்பதியர் எங்கோ தரையை பார்த்த வண்ணம் நின்றிருக்கிறார்கள். அவர்களின் கோலமே அவர்களை ஏதோ பெருந்துயரம் ஆட்கெண்டிருப்பதை சொல்கிறது. மனோஜின் நண்பர்கள் ஏதேதோ பேசி அவனை தூண்டுவதும் கோவப்படுத்துவதுமாக இருந்தார்கள்.

இன்னொரு பக்கம் விமலின் அப்பா அம்மா இருவரும் விமலுக்கு பக்கத்து பெஞ்சில் பேச்சற்று செய்வதறியாமல் அமர்ந்து இருந்தார்கள்.

2

சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி பதிவு திருமணம் செய்து சரண்யாவை கற்பழித்து கொலை செய்திருப்பதாக விமல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சரண்யா கர்ப்பமாக இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்ததால் அனைவரது நெஞ்சும் திடுக்கிட்டிருந்தது. விமல் தங்கியிருந்த வீட்டின் ஓனர் விமலுக்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டார். மேலும், சரண்யாவின் கர்ப்பத்தில் விமலுக்கு சந்தேகம் வந்துதான் ஆத்திரத்தில் கொன்றுவிட்டான் என்ற வதந்தி பேச்சுகளையும் சிலர் எரியவிட்டனர்.

3

குற்றவாளி கூண்டில் விமல் தலை குனிந்து நிற்கிறான். வழக்கத்திற்கு மாறாக கோர்ட்டில் மிக சொற்ப ஆட்களே இருந்தார்கள். கேஸ் கட்டை விரித்து மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு ஜட்ஜ், “விமல், உங்க மனைவி சரண்யாவ கொலை செஞ்சது நீங்கதான்னு ஒத்துக்கிறீங்களா?” என்று கேட்டு முடிப்பதற்குள் விமல், அழுது மங்கிய குரலில் கண்ணீருடன் “நான்தான் என் வைஃப்ப கொன்னேன், ஆனா நான் வேணும்னு கொல்லல, நா லவ் பண்ணி கல்யாணம் பண்ணவள நானே கொலபண்ணி என்ன பண்ண போறேன்.? என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் நீங்களாச்சும் நம்புங்க” என்று ஆரம்பித்தான்.

4

சரண்யாவும் நானும் ஒரே காலேஜ். ஃபஸ்ட் ஃப்ரென்ட்ஸாதான் பழகுனோம் அப்றம் புடிச்சுபோய் லவ் பண்ணோம். நான் வேலவாங்கிட்டு எங்க வீட்ல விஷியத்த சொன்னேன் யாரும் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அவ வீட்லயும் ஸ்டேடஸ் பாத்தாங்க. அப்றம் ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு சென்னை வந்துட்டோம. எனக்கு நல்ல வேல நல்ல சம்பளம். இந்த ரெண்டு மாசத்துல சின்ன சின்ன சண்ட வந்தாலும் சந்தோசமாத்தான் இருந்தோம்.

அன்னைக்கு சரண்யா போன் பண்ணி வீட்டுக்கு அவ அண்ணெ மனோஜ் வந்திருக்காருன்னு என்ன சீக்கிரம் வர சொன்னாள். அன்னைக்குன்னு என்னால சீக்கிரம் போக முடியல. ஆபிஸ் டென்சன்ல வீட்டுக்கு போனப்போ மச்சான் கெளம்பியிருந்தாரு. அதுக்கு முன்னாடி அவர்கிட்ட எதுவும் பேசினதே இல்ல அதனால எனக்கும் என்ன பேசுறதுன்னு தெரில. அவருக்கும் என்ன பேசுறதுன்னு தெரியல. அப்புறம் சட்டுன்னு அவரே கெளம்பி போயிட்டாரு. ஆனா அவரு போறதுக்கு முன்னாடி வீட்டு ஓனர்கிட்ட கைல ஃபோன வச்சிகிட்டு ஏதோ பேசிட்டு இருந்தத மாடில இருந்து ஜன்னல் வழியா பாத்தேன். போன் நம்பர் வாங்கிருப்பாருன்னு நெனச்சேன். வீட்டு ஓனரும் அவரும் ஒரே ஆளுக.

அவரு போனப்புறம் சரண்யா, “எதுக்கு இப்டி பயந்து சாவுற நம்மள என்ன கொன்னா போட்றுவாங்க?” னு கேட்டாள்.

எனக்கு அவ அப்டி கேட்டது சுத்தமா புடிக்கல.

நான் யாருக்குடி பயப்படுறேன் ?

எங்க அண்ணெ சும்மாதா என்ன பாக்க வந்துச்சி. நீ பயப்படாத.

நான் யேண்டி உன் அண்ணனுக்கு பயப்படனும்.? கோவத்த கெளப்பாத

அப்றம் எதுக்கு லேட்டா வந்த ?

ஆஃபீஸ்ல நறை’யா வேல இருந்துச்சுடீ

ஆங்… நம்பிட்டேன்…

கம்முனு யிரு நானே டென்சன்ல இருக்கேன்.

சும்மா சமாளிக்காத. பயம்னா பயம்னு ஒத்துக்கோ.

இப்ப என்னடி உன் பிரச்சன ? இன்னிக்கும் சண்ட போடணுமா ?

சரி விடு விடு, எங்க அண்ணெ நம்மள ஊருக்கே வந்து இருக்க சொல்லிட்டாரு. நாம ஊருக்கே போயிரலாம்.

என்னடி பேஸ்ற நீ ? நீ சொல்றத பாத்தா நா என்னமோ உன் அண்ணனுக்கு பயந்துதா சென்னைக்கு வந்தமாதிரி பேஸ்ற ? 

இல்லயா பின்ன ?

யேய் எனக்கு இங்கதானடி வேல கெடச்சுது.

ம்ம்ம் ஊருல கெடச்சிருந்தா மட்டும் அங்கையே இருந்துருப்பியாக்கும்.

சிறுவாச்சூர்ல யாரு உங்கப்பனா ஐ.டி. கம்பெனி வச்சிருக்கான் ?

தேவயில்லாம எங்க அப்பாவ அவன் இவன்னு பேஸ்ன, நானும் உங்கப்பாவ அவன் இவன்னு பேசுவேன்.

எனக்கு கோவம் தாங்கல. சரண்யாவ பட்டுன்னு அறஞ்சிட்டேன். அந்நேரம்னு பாத்து சத்தம்  கேட்டு  வந்த வீட்டு ஓனர் கதவு தொறந்திருந்ததால பாத்துட்டாரு. அவ அழுதுட்டே உள்ள போய் கதவ சாத்திகிட்டா.  அப்புறம் ரொம்ப நேரம் கெஞ்சி பேசி மன்னிப்பு கேட்டதுக்கு அப்றம்தான் சமாதானம் ஆகி கதவ தொறந்தா.

இப்பலாம் நீ முன்ன மாறி இல்ல ரொம்ப கோவ படுற.

சரி விடு இனிமே கோவ படுல. ஆனா நீ கோவ படுத்தாம இருக்கனும்.

“ம்ம்ம் இதுவரைக்கும் நீ கோவ பட்டா நான் மட்டுந்தான் டிப்ரஸ் ஆவேன், இனிமே கோவபட்டா இன்னொரு ஆளும் டிப்ரஸ் ஆவும்.” னு வயித்துல கைய வச்சாள், அப்போதான் எனக்கு தெரியும் சரண்யா கன்சீவ் ஆகிருக்கான்னு. எனக்கு சந்தோசம் தாங்கல. அவளுக்கு எதாச்சும் வாங்கி தரனும் போல இருந்திச்சி. வா வெளிய போலாம்னு கூப்ட்டேன். அவ வரல.

அவ அண்ணன் வாங்கி வந்த ஸ்வீட்ட எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டேன். ஸ்வீட் பாக்ஸ வாங்கி லேம்ப்புக்கு கீழ வச்சிட்டு, ஆசையா என்ன கட்டிபுடிச்சி, “இனிமே என்ன திட்டாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”” னு பாவமா சொன்னாள். எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சப்புறம் தூங்கிட்டோம்.

நடுராத்திரி கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு, போய் கதவ தொறந்தா அவ அண்ணன் மனோஜ் கோவமா நின்னாரு. அவருக்கு பின்னாடி வீட்டு ஓனர் இருந்தாரு. மனோஜ் கையில அரிவாளோட என்ன வெட்ட வந்தாரு. அவருக்கும் எனக்கும் பயங்கர சண்ட. ‘என் தங்கச்சியவா அடிச்ச’னு என் கையில வெட்டிட்டாரு. கோவத்துல நானும் டேபில்ள இருந்த கத்திய எடுத்து அவர குத்திட்டேன்.

ஆன்னு சரண்யா கத்துற சத்தம் கேட்டுதான் முழிச்சேன். அப்புறந்தான் எனக்கு புரிஞ்சிச்சி அவ அண்ணன் என்ன வெட்ட வந்தது வெறும் கனவுன்னு. ஆனா அவ வைத்துல கத்தி சொருகி இருந்துச்சி, என் கை அந்த கத்திய புடிச்சிருந்திச்சி.

5

நடந்ததை சொல்லிமுடித்து விமல் குற்றவாளி கூண்டிலேயே உக்கார்ந்து அழ ஆரம்பித்தான். மனோஜிற்கு கோபம் பொறுக்கவில்லை. வீட்டு ஓனர் நம்பாமல் விமலை பார்த்துக் கொண்டிருந்தார். விமலின் அப்பாவும் அம்மாவும் விமலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வந்தார்கள்.

விமலின் அப்பா, சின்ன வயசுல விமலுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருந்திச்சி. அப்போ ஒரு நாள் அவன் கனவுல வெறி நாய் ஒன்னு வந்து அவன் அம்மாவ கடிக்க போவ, அவன் அத அடிச்சி வெரட்டிட்டு இருந்தான்.

ஆனா நெசத்துல அவன் அம்மாவையே கட்டையால அடிச்சி அவளுக்கு பணண்டு தைலு.” (விமலின் அம்மா தனது தலையை திருப்பி நீளமான தழும்பை ஜட்ஜிடம் காட்டுகிறார். ஜட்ஜ் அருவருப்பாகி முகம் சுழிக்கிறார்.)அவன்தான் அம்மாவ அடிச்சான்னு தெரிஞ்சுநானா அம்மாவ அடிச்சேன்? நானா அம்மாவ அடிச்சேன்?’ னு அழுது அழுது ஒரு வாரம் அவன் தூங்கவே பயந்து கெடந்தான். டாக்டர்கிட்ட போய் மாத்திர மருந்து குடுத்து அப்புறம் ஒருவழியா சரியாச்சு. இப்பவும் அவன் அந்த பொண்ண கொல்லணும்னு கனவுலையும் நெனைக்கல. கெட்டக்கனவு அவன அப்பிடி செய்யவச்சிரிச்சி.”

6

மேலும் பல விசாரணைகளுக்கு பிறகு நீதிபதி, “இறந்த சரண்யாவின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கணவர் விமல், தன் மனைவியை கொள்வதற்கு எந்த மூர்க்கமான நோக்கமும் இல்லை என்பதாலும், தூக்கத்தில்தான் அவர் தன் மனைவியை கொன்றிருப்பதாலும், சரண்யாவின் இறப்பை விபத்து என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே விமலை நிரபராதி என்று கூறி அவரை விடுதலை செய்ய இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.” என்று சொல்லி முடித்த மறு கணம், மனோஜ் பெரும் சத்தம் போட்டு கையில் அரிவாளுடன் விமலை நோக்கி ஓடிவருகிறான். அவனது நண்பர்களும் கையில் கத்தியுடன் ஓடிவருகிறார்கள். விமலின் கழுத்தை நோக்கி மனோஜ் அரிவாளை பெரும் வேகத்துடன் வீச, தடுக்க வந்த விமலின் அப்பாவின் கழுத்தில் அரிவாள் இறங்கிவிடுகிறது. ரத்தம் தெறிக்க விமலின் அப்பா தரையில் சரிகிறார். அனைவரும் திகைத்துப்போய் நிற்கிறார்கள். விமலுக்கு கோபம் கனலாய் எரிய ஓடிவந்த ஒருவனின் கையில் இருந்த கத்தியை வெடுக்கென பிடுங்கி மனோஜின் வயிற்றில் வேகமாக சொருகுகிறான்.

7

ஆ என்று சரண்யா கத்தும் சத்தம் கேட்டு விமல் தூக்கத்தில் இருந்து விழிக்கிறான். சரண்யாவின் வயிற்றில் கத்தி சொருகப் பட்டிருக்கிறது. விமலின் கை அந்த கத்தியை பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஸ்வீட் பாக்ஸ் நைட் லேம்ப்பிற்கு பக்கத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறான்.

நிஜமாவே அது ஒரு கெட்டக்கனவு.