தப்புன்னு எடுத்த எடுப்புல பதிலளிப்பது பேச்சு சுவைக்கு தகும். அது மேலோட்டமான பதிலே தவிற தெளிவான இறுதியான பதிலல்ல. மெய்யறிவுடன் அனைத்து கோணங்களையும் ஆராய்வதுதான் சரியான புரிதலை ஏற்படுத்தும். அதோடு தீர்வையும் கொடுக்கும்.
சரி முதலில் இருந்து வருவோம். இயல்பிலேயே நாம் வீட்டில் இருந்துதான் முதல் பாதி அறிவைப் பெறுகிறோம். இரண்டாம் பாதியை வகுப்பறைகள் கற்பிக்கும். பிறகு இவ்விரண்டு கல்வியும் மாறி மாறி ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும், பாதிக்கும். வீட்டில் கற்றுக்கொள்வதை வகுப்பிலும், பள்ளியில் கற்றுக் கொள்வதை வீட்டிலும் வெளிப்படுத்திப் பார்ப்போம். இப்படித்தான் குழந்தைகள் நம் சமூகத்தில் மெல்ல மெல்ல கலக்கிறார்கள்.
மதிப்பெண் முறை
இதைப் புரிந்துகொள்ள, இந்தக் கல்வி முறையை மிக உயரத்திற்கு சென்று கழுகு பார்வையில் பாருங்கள். நாம் குழந்தைகளுக்கு மனிதர்களாய் வாழ கற்றுக் கொடுக்கிறோமா, இல்லை பணம் சம்பாரிக்கும் மிஷினை உருவாக்குகிறோமா என்று தெரியும்.
பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பொருள் ஈட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிட்டால், பொருளாதாரம் பற்றிய விவரம் தெரிந்துவிடும்.
எல்லாருக்குமே தத்தம் பிள்ளைகள் ஊரறிந்த கம்பெனியின் ஆபிசில் ஏசியில் உட்கார்ந்துதான் வேலைப்பார்க்க வேண்டும் என்று ஆசை. இதற்காக பிள்ளைகள் இழப்பவை என்னென்ன என்று பட்டியலிடுங்கள்.முதலாவது அவர்கள் கேள்வி கேட்கவே மறக்கடிக்கப் பட்டிருப்பார்கள்.
குழந்தைகளின் சுபாவமே தெரியாததை கேள்வி கேட்டு தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்த கல்வி முறை குழந்தைகளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதற்கு மதிப்பெண் வைத்து குழந்தைகளை தரம்பிரிக்கிறது.
ஒரு வகுப்பில் முப்பது குழந்தைகளில் மூன்று பேரை மட்டும் அறிவாளி என்று முத்திரை குத்தி மற்ற எல்லா குழந்தைகளின் மனத்திலும் தாழ்வு மனப்பான்மையை விதைக்கின்றன. அந்த மூன்று குழந்தைகள் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மிதப்பில் அதன் பிறகு எந்தக் கேள்வியுமே கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பிள்ளைகளை எல்லாரும் எவ்வளவு மெச்சிக் கொள்வார்கள் என்று சொல்ல வேண்டாம். மற்ற குழந்தைகள் நாம் முட்டாள் என்று நம்பி எந்த கேள்வியும் கேட்க தயங்கி வாயை மூடிக்கொள்கிறார்கள். அடிமை சமூகம் அமைய அங்குதான் அடிக்கல் நாட்டப்படுகிறது. தன்னைச்சுற்றி எது நடந்தாலும் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத ஒரு மலட்டு சமூகம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. இது சரியான கல்வி முறை அன்று. ஒரு குழந்தை கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் பழகி இருக்க வேண்டும்.
பதில்களுக்கு மதிப்பெண் அளிப்பது போல் கேள்விகளுக்கும் மதிப்பெண் அளிக்கும் வண்ணம் ஒரு கல்வி திட்டம் கொண்டு வந்தால், அந்த பிள்ளைகள் வளர்ந்து ஊடுருவும் சமூகத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் தினறிப்போகும். ஒவ்வொரு இன்னல்களுக்கும் கேள்வி கேட்க பழகிய சமூகத்திடம் எந்த முறைகேடுகளும் எளிதில் அரங்கேறிவிட முடியாது.
ஆக, அடிமை சமூகம் உருவாக வேண்டுமெனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை மட்டும் எழுதப் போராட வைக்கும் கல்வி முறையை விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் சமூகம் எவ்வளவு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை அடையும் என்று யூகித்துப் பாருங்கள்.
வளர்ப்பு
உங்கள் குழந்தை எவ்வளவு பெரிய பள்ளியில் படித்தாலும் சரி, அடிப்படை விசியங்களில் அவனுக்கு அடிமை குணம் ஊட்டப்பட்டிருக்கும்.
அவர்கள் ஒருபோதும் நல்ல ஆன்மாவை உடைய மனிதர்களாய், மனசாட்சிக்கு அஞ்சும் மனிதர்களாய், தத்தம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனிதர்களாய், சக மனிதர்களை மனிதத்துடன் நடத்தும் மனிதர்களாய், பகுத்தறிவு கொண்ட மணிதர்களாய், எதிர்கால தொலைநோக்கு பார்வை கொண்ட மணிதர்களாய், பொதுவுடமை போற்றும் மனிதர்களாய் வளர்வதே இல்லை. பணத்திற்கும் சம்பளத்திற்கும் பெரிய கம்பெனியில் வேலை என்ற மோகத்திலும்தான் ஆசைப்படுகிறார்கள். விளைவு ?
உங்கள் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். வளர உதவுங்கள். உட்கார்ந்த இடத்திலே வேலை செய்யும் வேலை மட்டும் நல்ல வேலை இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எந்த வேலையும் நல்ல வேலைதான்.
- ஆண் பெண் உறவுகளை கையாளத்தெரியாமல் மிக மிக மோசமான விபரீதங்கள் எட்டும்.
- உறவினர்கள் அற்று போவார்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் ஒட்டியும் ஒட்டாமல் ஃபேமிலி பிரண்டஸ் ஆவார்கள்.
சரி இது மட்டுந்தான் அவலமா என்றால் இல்லை. உங்களின் பிள்ளை சொகுசான வாழ்க்கை வாழ்வது என்றால் நீங்கள் எப்படி கனவு கண்டு வைத்திருப்பீர்கள்?
- அவன்/அவள் சிட்டியில் சொந்தமான பெரிய அப்பார்ட்மெண்டிலோ பீச் அவுசிலோ இருக்க வேண்டும்.
- காலை எழுந்ததும் டீ காபி போட்டுதர ஒரு வேலை ஆள் இருக்க வேண்டும்.
- ஆபிசுக்கு கிளம்பிய உடன் வேலைக் காரர்கள் டிப்பன் செய்து ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
- சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே கைகழுவிவிட்டு எழுந்து காருக்கு செல்ல வேண்டும்.
- காரை டிரைவர் துடைத்து வைத்திருந்து, இவர் வந்தவுடன் கதவைத் திறந்து காத்திருந்து, காரினுள் ஏறிய பின்னர் கதவை மெல்ல முடவேண்டும்.
- காரில் செல்லும் போது தி ஹிந்த ஆங்கில நாளிதழ் படிக்க வேண்டும்.
- வானுயர்ந்த பில்டிங்கின் முகப்பில் கார் நின்றவுடன் அங்கு காத்திருந்த பி.ஏ. கார் கதவுகளை திறந்துவிட வேண்டும்.
இப்படி எல்லாமே சினிமாவில் வரும் காட்சிகள். பின்னணி இசை கொடுத்து மிகைப்படுத்தப்பட்ட தினிப்பு ஆசைகள்.
இப்படியாக மெல்ல மெல்ல அனைவரும் ராஜாவாக மந்திரியாக வாழ ஆசை படுகிறோம். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. சொகுசாக படித்து, சொகுசாக பரீட்சை எழுதி, சொகுசாக வேலை வாங்கி, சொகுசாக செட்டில் ஆகிவிட வேண்டும் என்று அனைவரும் ஓடுகிறோம்.
பையன் பேங்குல மேனேஜரா இருக்கான்னு சொல்லவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது? உண்மையில் வங்கிகள் சமூக முன்னேற்றத்திற்கு எப்படி பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை இந்த தற்சார்பு பொருளாதாரம் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
போட்டியும் படிப்பும்
இப்படியாக வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய மைதானத்தில் நூறு விளையாட்டுகள் நடைபெருகின்றன. ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றிபெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். நூற்றில் ஒரு விளையாட்டு படிப்பு. அதிலும் முதல் மூன்று பேருக்குதான் பரிசு கிடைக்கும். இருந்தும் அந்த விளையாட்டின் வியாபாரத்திற்காக கவர்ச்சிகரமான (அபாசமான அல்ல) பல விளம்பரங்களை பரப்பி படித்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என நம்ப வைத்து சொற்ப உதாரணங்களைக் காட்டி வசியப்படுத்துகிறார்கள். ஏனைய விளையாட்டுகளிலும் பரிசுகள் உண்டு என்பதையே மக்கள் மறந்து விடுகிறார்கள்.
உங்களை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்திப்பாருங்கள். நீங்கள் செய்யும் வேலை எத்தகையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த வேலையை திருத்தமாக செய்ய நீங்கள் கடந்து வந்த காலமும் அதற்கு நீங்கள் கொடுத்த விலையும் தகுமானதா ? இல்லை வெறும் கல்வி வியாபாரத்திற்காக நீங்கள் உபயோகப்படுத்தப்பட்டீர்களா ? நீங்கள் செய்யும் வேலையை செய்ய நிச்சயமாக இளங்கலை முதுகலை என கல்லூரி படிப்பு மிகவும் அவசியமானதா ? அல்லது அந்தத் துறைசார்ந்த ஒரு வருட படிப்பு போதுமானதா ?
இயல்பிலேயே நாம் புதிய முயற்சிகளை எடுக்க பயமூட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம். அதன் விளைவுதான் பி.இ., எம்.இ, படித்த இளைஞர்கள் ஐயாயிரத்திற்கும் ஆறாயிரத்திற்கும் வேலை கிடைத்தால் போதும் என்று போராடும் அவலம் ஏற்படுகிறது. முதலீடு செய்யவும் தொழிலில் லாபம் ஈட்டவும் யாரும் இங்கு வகுப்பெடுப்பது இல்லை. வரி குறித்த அடிப்படை புரிதலும் யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை. சட்டம் குறித்த அறிவும் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
இருபது வயது வரை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கும் படிப்பிற்கும் நாம் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதை யாரும் இங்கு ஆச்சர்யமாய் பார்ப்பதாய் தெரியவில்லை. மாறாக எல்லாருக்கும் இதுதான் நடக்கிறது என்றால் நமக்கும் இது நடந்தால் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.
ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது, பனிரெண்டாவது பாடதிட்டத்தை கவனியுங்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல் என பட்டியல் இருக்கிறது. தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் சயின்ஸ் குருப் இல்லையென்றால் கம்ப்யுட்டர் குருப். ஏனென்றால் நாம் ஆனால் டாக்டர் இல்லையேல் இஞ்சினியர். இத்தனையும் படித்த மாணவர்கள் இவற்றை என்றாவது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி இருக்கிறார்களா ? வாழ்கைக்கு முக்கியமான உணவும் அதை உற்பத்தி செய்யும் விவசாயத்தையும் மூன்றாம் தர தொழிலாக சித்தரித்தது யார் ? சமூக வாழ்க்கைக்கு முக்கியமான பொருளாதாரத்தை யார் எப்போது நமக்கு கற்றுக் கொடுக்க போகிறார்கள். அரசியல் குறித்த அறிவு மாணவர்களுக்கு தேவை இல்லை என்று யார் முடிவு செய்தது ? பட்ஜெட் குறித்தும் வரிகள் குறித்தும் யார் நமக்கு எடுத்து சொல்வது ? நாம் ஓவ்வருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விடம் இவைதான். ஆனால் நாமோ கணக்கு பாடத்தில் நூறு வாங்கவே போராட பழகியுள்ளோம். நூறில் நூறு பேருக்கும் உணவு, விவசாயம், பொருளாதாரம், அரசாங்க படிநிலை, local governance, சட்டம், குறித்த அறிவு தேவை அல்லவா? இவற்றை விடுத்து ஏன் மற்ற பாடங்களின் அடிப்படையை தாண்டி ஆழ படிக்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்டால், கணிதவியல் Research and Development போன்ற உயர்ந்த படிப்புகளுக்கு கணிதவியல் முக்கியம் போன்ற பதில்கள் வருகின்றன. மாணவர்களில் யார் யார் எந்த எந்த துறையில் சிறந்து வருவார்கள் என்று கண்டறிய தெரியாமல் எல்லாருக்கும் ஒரே பாடத்திட்டம் போட்டு, அதில் சிலரை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது. இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் ?
வெறுமனே மக்கள்தொகையில் இருந்து வேலைக்கு தகுதியான ஆட்களை வடிகட்டும் ப்ராசஸ்தான் இந்த இருவது வருட படிப்பு என்று புரியும்போது வாழ்வின் பாதி முடிந்துவிடுகிறது. மீதி கேள்விக்குறியாகி விடுகிறது.
சரி நூறில் பத்து பேரை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள், மற்றவர்களின் நிலைமை ? Collateral damage ? எல்லாவற்றிற்கும் அதிகாரவர்கத்தை குறை சொல்வதை நான் சரி என்று நம்பவில்லை. மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வேலை வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐ.டி. நிறுவனங்களிடம் கை ஏந்தி நிற்பதை நிறுத்தி விட்டு, நம் ஊரின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் நம்மால் பங்களிக்க முடியும் என்று சிந்தியுங்கள். நம் ஊர் முன்னேறும் நாமும் முன்னேறுவோம். படித்தால் தான் செட்டில்மென்ட் என்ற மாயை விடுங்கள். கற்றல் இருந்தால்தான் செட்டில்மென்ட். அரசியல்வாதிகள் சிறந்த உதாரணங்கள்.
எல்லா கால கட்டத்திலும் மக்களின் அன்றாட வாழ்கையை கடப்பதில் ஒரு இடைவெளி இருக்கும், அதை நிறப்பும் நிறுவனம் வெற்றி பெரும். உதாரணம் Flipkart, சக்தி மசாலா போன்ற நிறுவனங்கள்.
போலி விளம்பரங்களில் இன்னும் எத்தனை நாள்தான் மயங்கிக் கிடக்க போகிறோமோ.
இரண்டு விரல்களை நீட்டி ஒன்றை தொடு என்று அதிகார வர்க்கம் நம்மிடம் கேட்கும் நேரத்தில் மீதியுள்ள எட்டு விரல்களை பற்றியும் யோசித்து முடிவெடுங்கள்.
கல்வி வியாபாரம் சரியா ?
இன்று பல இருபாலர் பள்ளிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆண் பிள்ளைகள் தனி வகுப்புகளிலும் பெண் பிள்ளைகள் தனி வகுப்பிலும் இருந்து படிக்கிறார்கள். ஏன் இந்த பிரிவினை ? எத்தனை நாள் இந்த பிரிவினை பெண் பிள்ளைகளை துர்சம்பவங்களில் இருந்து காப்பாற்றும் ?
அந்தந்த பள்ளி நிர்வாகம் தொல்லையின்றி பெண்பிள்ளைகளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பத்தான் இந்த ஏற்பாடுகள். அதன் விளைவு கல்லூரிக்கு சென்றவுடன் அடக்கிவைத்த ஆசைகள் பீறிட்டு கொட்டும். காதல் என்ற பெயரில் ஏதோதோ செய்யத் துணியும். சில இடங்களில் கல்லூரிகளிலும் பிரித்து வைத்திருந்து நாண்கு வருடங்கழித்து அனுப்பி விடுகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்திலோ திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் பேசவே மாட்டார்களா ? அப்போது ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு ஏற்படாதா ? சிறு பிசகு ஏற்பட்டாலும் வல்லுணர்வு, பாலியல் தொல்லை என எப்பெரும் விபரீதங்கள் ஏற்படும்? இதெல்லாம் ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று எண்ண வேண்டாம். அது தவறு.
குழந்தைகளுக்கு முறையாக காமத்தையும், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்தாதது பெற்றோர் மற்றும் பள்ளியின் தவறு இல்லையா ?
உணர்வுகளை வழிபடுத்த கற்றுத்தருவதும் கல்விதான். வெறுமனே பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற பிள்ளைகளை தள்ளுவதெல்லாம் பள்ளி நிர்வாகத்தின் சுயநலம். வியாபாரத்தில் லாபம் ஈட்ட பிள்ளைகளை பலியாடாக ஆக்கிவிடுகிறார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர் பாலினத்தின் உடல்மீதிருக்கும் மாயையை உடைத்தெறியும் முக்கியமான பொறுப்பை யார்தான் ஏற்றுக்கொள்வது ? பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. தவறு நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அது தம் இடத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையில் மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கரையே இல்லை. கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம் இதுதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும் வெறும் பத்துகிலோ புத்தகம் பிள்ளைகளின் வாழ்வை நிர்ணையித்து விடுமா ? அதைப் பெற்றோர்களும் நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம் ?
(பகுதி 2ல் தொடரும்…)
மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.
பின்னுட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.
Surya devan V —— 16.09.2018
“பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பொருள் ஈட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிட்டால், பொருளாதாரம் பற்றிய விவரம் தெரிந்துவிடும்.”
இந்த புரிதல் இருந்தாலே
இளைய தலைமுறை ஒரு ஆரோக்கியமான கல்வி கற்க தொடங்கிவிடும் ..
“உங்கள் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். வளர உதவுங்கள். உட்கார்ந்த இடத்திலே வேலை செய்யும் வேலை மட்டும் நல்ல வேலை இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எந்த வேலையும் நல்ல வேலைதான்.”
இந்த புரிதால்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவை ..
பதிவு மிக சிறப்பு ..!!💐💐