தற்கொலைக் காதல்கள்

காட்சி 1:

வழக்கம் போல ஆஃபிஸுக்கு வெளியில் நின்று ஃபோனில் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபிஸுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியே வந்து  பால்கனியில் வசதியாக ஒரு கார்னரை தேர்வு செய்து சாய்ந்து நின்றுகொண்டேன். இப்போது ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்த வீடியோக்களும் ஒரு சலுப்பை ஏற்படுத்தின. ஃபோனை லாக் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சிலாகித்து ரசிக்கும் அளவிற்கு காற்று ஒன்றும் வீசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரவு காணக்கிடைத்த காட்டுத்தீயும் அந்த மலையில் இன்று ஜொலிக்கவில்லை. சற்றே பெரும்மூச்சுடன் திரும்பி இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த ரவுண்டானாவை வேடிக்கைப்பார்த்தேன்.

எப்போதும் அந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுழன்று சென்று கொண்டேயிருக்கும். உயரத்தில் இருந்த வாகன நெரிசலைக்காண்பதே ஒரு அலாதி இன்பம்தான் போல இருந்தது. எல்லாத்துக்கும் உயரத்தில் இருக்கும் கடவுளுக்கும் நாம் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கும், நாம் முட்டிக்கொள்வதைப் பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்குமோ என்னவோ. நாமக்குள்ளும் கடவுள் இருப்பாரென்றால், கடவுளுக்குள்ளும் நாம் இருக்கலாம் தானே. இன்று அப்படி ஒரு சம்பவம்.

ஒரு பெண், சேலைக்கட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்கிறாள். எவ்வளவு நேரமாக அங்கு நிற்கிறாள் என்று எனக்கு தெரியாது. பைக்கில ஒரு ஆள் வந்தான், அவளது கையைப்பிடித்து வண்டியில் ஏற சொன்னான். துல்லியமாக என்ன பேசினார்கள் என்று இரண்டாவது மாடியில் இருந்த எனக்கு தெரியாது. அங்கிருக்கும் ஐம்பது  வண்டிகளின் சத்தமும் அவற்றிலிருந்து  வரும் நூறு ஹாரன் சத்தமும்  அவர்களின் பேச்சை நசுக்கியிருந்தன. அவர்களை யாரும் மோதிவிடவில்லை. இருந்தாலும். வேறு என்ன சொல்லிருக்கப்போகிறான்? பத்து  நொடிகளாவது அவள் இசைவதாக இல்லை.

எனக்கு என் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளும் ஆஃபிசுக்கு உள்ளேதான் இருந்தாள். வேகமாக சென்று அவளை அழைத்து வந்தேன். அந்த முப்பது நொடிகளும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று பேராசைதான் எனக்கு. ரவுண்டானாவின்  அருகில் ஒரு ஜோடி நிற்பதையும் அவன் வந்த பைக்கும் நடுரோட்டிலே இருப்பதையும் அவள் பார்த்தாள். நாங்கள் அந்த எபிசோடுகளை கடந்து வந்தாயிற்று என்றவாறு பேசினோம். எப்படியும் அவ ஏறி போயிருவா. வேற என்ன செய்ய முடியும்? என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த ஆள் அந்தப்பெண்ணின் காலில் விழுகிறான், அவள் பின்னால் நகர்ந்து அவனது கையை விலக்குகிறாள். அவள் அப்போதும் வண்டியில் ஏறி உட்காரவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஐந்து ஆறு நிமிடங்கள் அவள் அசையவில்லை. அவனோ வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அவளது கைகளைப்பற்றி கெஞ்சிக்கொண்டு இருக்கிறான். இறுதியில் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளது முந்தானையை அள்ளி மடியில் பிடித்துக்கொண்டாள். அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிரிப்பு இல்லை. வாழ்வின் மீதான பெரும் கோபமும், வெறுப்பும் மட்டும் நிறையவே இருந்தன. அவர்களது பைக் கிளம்பிப்போவதைப்பார்த்துக்கொண்டிருந்த செளமியா,”நீயா இருந்திருந்தா நேரா ஒரு ஹோட்டலுக்குதான் வண்டிய விடுவ.” என்று சொல்லி நகைத்தாள். “ஆமா, சாப்பாட்ட முன்னாடி வச்சிகிட்டு யாராலும் சண்ட போட முடியாது”என்று என் சாப்பாட்ராம கேரக்டருக்கு வக்காலத்து வாங்கினேன்.

காட்சி 2:

பிறகு பேசி முடித்துவிட்டு, வேலையையும் முடித்துவிட்டு ஆஃபிசில் இருந்து கிளம்பினோம். செளமியா வந்த டியோவில் அவளும், நான் வந்த காரில் நானும் கிளம்பினோம், அப்போது அன்றிரவு செய்வதற்கு நான் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதில் செளமியா இல்லை. அவளிடம் அனுமதி கேட்டேன். ஒழுங்காக வீட்டுக்கு வா என்று அதட்டலுடன் ஆணையிட்டாள். வீட்டில் பேசிக்கொள்ளலம் என்று மலுப்பிக்கொண்டிருந்தேன். அந்நேரம், ஆஃபிசின் அருகில் ஒரு இருபதைத்தாண்டிய ஆண் பிள்ளை, நல்ல உயரம், யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். சட்டென சிறுபிள்ளைப்போல அழ ஆரம்பித்தான். அழுதுக்கொண்டே சில சில வார்த்தைகளை உச்சரித்தான். நான் செளமியாவிடம் கேட்டேன், “தம்பி என்ன பேசுறாரு?”. யாருக்கு தெரியும்? ஒன்னும் கேக்கல. ட்ராபிக் எத்தனை பேச்சுக்களை முழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு ராட்சசன் என்பதை உணர்ந்துகொண்டேன். அந்த ராட்சசனைத்தாண்டி ஒரே ஒரு வார்த்தை மட்டும் எனதிரு காதுகளில் விழுந்தது. “சொல்லுடி” என்ற வார்த்தை. பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

காட்சி 3:

நான் வீட்டுக்கு செல்லும் வழியில் எனது தம்பி அர்ஜுனை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினேன். அவன் வரும் வரை காரிலேயே காத்திருந்தேன். எல்லா ஜன்னல்களும் மூடியிருந்தும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. வெளியே இறங்கி யாரெனப் பார்த்தேன். அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்‌. “ஏய், நீ, வா, போ, டி” என்ற சொற்களின் மூலம் மறுபக்கத்தில் இருப்பது ஒரு பெண் என யார் வேண்டுமானாலும் யூகித்துவிடலாம். இங்கு மட்டும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி சத்தத்தை விடவும் இவனது சத்தம் பலமாய் இருந்தது. ஆத்திரத்துடன் கத்தி கத்திப் பேசினான்‌. நான்கு நடை கிழக்கும் திரும்பி நான்கு நடை மேற்கும் என திரும்பத் திரும்ப நடந்துக் கொண்டிருந்தான்‌. நான் எனது காரை சற்று நகர்த்தி அவனுக்கும் காருக்கும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்திக்கொண்டேன். ஆத்திரத்தில் அருகில் இருக்கும் பொருட்களை உடைப்பது ஆண்களின் இயல்பு என்று எண்ணினேன். ஏன்னா நான் அப்டிதான்.

காட்சி 4:

தம்பி  அர்ஜுன் வந்தப்பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்சி யா காயத்ரியா என்பது அவனது குழப்பம். நான்சிக்கு அர்ஜுனைப் பிடித்திருக்கிறது. நான்சி க்ரிஸ்டின், அவளைக்கட்டிக்கொள்ள வேண்டுமானால் கிறுத்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்பது அவளின் அம்மாவது நிபந்தனை. நான்சியும் அம்மாவின் விருப்பப்படியே எல்லாமும் நடக்கனும் என்று சொல்லிவிட்டாள். நான்சி ஒரே பொண்ணு. வேற யாரும் இல்லை. அப்பா எப்போதோ இறந்துவிட்டார். குடும்ப சொத்தாக ஒரு கோடி இருக்கலாம். மேலும், நான்சி சொந்தமகள் இல்லை, வளர்ப்பு மகள் என்றும், இது அவளுக்கு மட்டும் தெரியாது என்றும் கூறினான். நான் குறுக்கிட்டேன், கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நான்சியிடம் யாராவது இதை சொல்லி இருப்பார்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த ஒரு கிக்கும் கிடைக்கப்போவது இல்லை. ரகசியத்தை கசியவிடுவதிலேயே தனது கெத்தைக்காட்டிக் கொள்ளும் கூட்டம் இது.

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் செளமியாவிற்கு கால் செய்து 

நான், “பத்து இருவதுக்கு மாமனிதன் படத்துக்கு போலாம் வரியா?”, 

அவள், “யாரெல்லாம் போறீங்க?”;

நான், “வேற யாரு நீயும் நானும் மட்டும்தான். வேற யார நீ எதிர்பாக்குற?”

அவள், “எப்டியும் உன் ஃப்ரெண்ட்ஸ், அர்ஜுன், யாராவது வருவாங்களே!”

நான், “அதெல்லாம் யாரும் இல்ல, நீயும் நானும் மட்டும்தான், சீக்கிரம் சொல்லு, இப்பவே மணி ஒம்பதே முக்கால்.”

அவள் நீண்ட யோசனைக்குப்பிறகு வரவில்லை என்றாள்.

அர்ஜுன், காயத்ரியைப்பற்றி பிறகொரு நாள் சொன்னான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறாள். அப்பா போலீஸ், அவர் இறந்தப்பிறகு அவரது போலீஸ் வேலையை இவள் வாங்கிக்கொண்டாள். வீட்டில் அம்மா அப்ரானி. மாமாதான் எல்லாமும். ஏற்கனவே ஒரு கல்யானம் நிச்சயம் ஆகி, கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் காணாமல் போய்விட்டாளாம். நேப்பால் வரை தனியாக ரயிலில் பயணித்துவிட்டு திரும்ப வந்துவிட்டாலாம்.

காயத்ரி அர்ஜுனிடம், “நீ நல்ல ஃப்ரெண்டுன்னு தெரியும், ஆனா ஹஸ்பண்ட் மெட்டீரியலான்னு தெரியல, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் லிவிங்’ல இருந்து பாக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாள். இதை நானும் அர்ஜுனும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா என்ன? எத மீன் பண்றா? காலைல எழுந்திரிச்சு பாத்தரமெல்லாம் வெளக்கி வைக்கனுமா? சலுப்பா இருக்குன்னு சொன்னா சமைச்சு தரனுமா? இல்ல, என்ன சொதப்பு சொதப்புனாலும் சூடு சொரனலாம் வராம கோவப்படாம இருக்கனுமா? ஒன்னும் புரியலையே.

எனக்கு தெரிஞ்சி அவ யாரையோ பாத்து நல்லா பயந்துருக்கா. கல்யாணம் பண்ணா இவ்ளோ அவஸ்தப்படனும்னு அவ மனசுல இருக்கு. அதனாலதான் உன்ன நல்ல ஃபிரண்டா தெரிஞ்சிருந்தும் நீயும் நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு காட்டுமிராண்டியா மாறிடுவியோனு பயப்படுறா. இந்த சொசைட்டீல நிறைய சைக்கோங்க இருக்கு, தாலி கட்ற வரைக்கும் நைஸ் டு பி பர்ஸனா நடந்துக்குவானுங்க, ஒன்ஸ் தாலிகட்டிட்டா போதும், இஷ்டத்துக்கு போட்டு ஹரஸ் பண்ணுவானுங்க. அப்டியும் இருக்கானுங்க. இது எந்த சைக்கோ நல்ல சைக்கோன்னு கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்ல. காயத்ரி உன்கிட்ட ஓபன்னா கேட்டுட்டா. 

சொல்லு அவகிட்ட, “கல்யாணம் பண்ணினா எப்டியும் காலத்துக்கும் சண்ட போட்டுதான் ஆகனும். யார்கூட சண்ட போடப்போறங்கிறதுதான் நீ ச்சூஸ் பண்ண வேண்டியது. யார்கிட்ட சண்டப்போட்டாலும், மண்ணிப்பு கேட்டோ, இல்ல மண்ணிச்சோ, மறுபடி சமாதானம் ஆகி அடுத்த கணமோ, அடுத்த நாளோ இயல்பா பேசி சிரிச்சி வாழ்க்கைய வாழமுடியனும். அப்டி யார்கிட்ட தோனுதோ அவங்களையே கட்டிக்க சொல்லு”னு சொல்லிட்டேன்.

காயத்ரியே ஒத்துக்கொண்டாலும், அவளது வீட்டில் எப்படி பேசி சம்மதம்வாங்குவது என்று அர்ஜுனுக்கு ஒரே யோசனை. கண்டிப்பாக காதல் திருமணம் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றான். ஏன் என்றேன். ஏற்கன்வே ஒரு கல்யாணத்த நிறுத்தி எங்க மானத்த வாங்கின. இப்ப லவ் பண்ணி வேற அசிங்கப்படுத்துறியா என்று சண்டைக்கு வருவார்கள்.

நீ காயத்ரியையே கல்யாணம் பண்ணிக்கு. நான்சிய கட்டிக்கிட்டு உன்னால உன் இயல்புக்கு மாறா வாழமுடியாது. காயத்ரிக்கு சில மனக்குழப்பம்தான் இருக்கு, நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு வா, நானும் செளமியாவும் பேசுறோம். அவதான் உனக்கு செட் ஆவா. அவ ஃபோட்டோ காட்டு பாக்கலாம். அர்ஜுன் அவனது ஃபோனில் இருந்து ஓரிரு ஃபோட்டோவைக் காட்டினான். லட்சனமான முகம். உனக்கு காயத்ரியா நான்சியானுலாம் குழம்ப வேண்டாம். ஒரே முடிவா காயத்ரிய கல்யாணம் பண்ற வழிய பாரு.

காட்சி 5:

ஒரு வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். செளமியாவிடம் அர்ஜுனுடனான பேச்சுகளின் சுருக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவள் குறுக்கிட்டு, “புங்கவாடில, பூங்கொடி மவ காவ்யா சூசைட் பண்ணிக்கிட்டாளாம்.” 

எனக்கு ஒரு நிமிடம் யாரென கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

சற்று நினைவுகளை திரட்டிக்கொண்டு, “யாரு?”

செளமியா, “பூங்கொடி மொவப்பா, காவியா, நீ கூட பூங்கொடி மவளா நீஈயி.. னு கிண்டல் பண்ணுவியே”

நான்,”ஆமா காவியா? அவளா அப்டி பண்ணா?”

செளமியா, “ஆமாம் எதோ லவ் மேட்டராம், வீட்ல தெரிஞ்சிரிச்சி போல, வேற மாப்ள பாத்து கல்யாணம் தேதி குறிச்சிட்டாங்க. அதான் சூசைட் பண்ணிக்கிட்ட”

காவியா காதலிக்கும் வயதுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது எனது முதல் ஆச்சர்யம். ஆனால், அந்த ஆச்சர்யத்தை நான் அடைவதற்குள் அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும் என்பது பெரும் அதிர்ச்சி. 

சின்ன பொண்ணுதான் அவ. பதினாறு இல்ல பதினெட்டு வயசுதான் இருக்கும்.

வீட்டுல என் தங்கச்சி சபியிஷா படுத்திருந்தா, அவள எழுப்பி என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். சபியின் சிநேகிதிதான் காவியா. லவ் பண்ணினது அஜித்னு ஒரு பையன. முன்னாடி வீடாம். டிப்ளமோ படிச்சிட்டு சென்னைல வேலபாக்றானாம். எங்க ஊர்ல பொறந்துட்டு தெள்ளவாரி ஆகாம படிச்சிட்டு வேலைக்கு போறதுலாம் ஒரு பெரிய சவால். அந்தப்பையன் படிச்சிட்டு வேலைக்கு போறதே எனக்கு பெருசாதான் தெரிஞ்சிது. காவியாவோட அம்மா பூங்கொடிதான், “அவனதான் கட்டிகுவன்னா நீ செத்து ஒழிடி”னு சொல்லிருச்சாம். அவ கொஞ்ச நாளாவே யார்கிட்டயும் பேசுறதே இல்லையாம். அவங்க அப்பா செல்வம் வண்டிக்கு போயிருந்தாராம். அவர் வர வரைக்கும் காத்திருந்து, அவர பாத்துட்டு, வீட்ல யாரும் இல்லாத சமையம் அம்மா பூங்கொடியோட சேலைல தூக்கு போட்டுகிட்டாளாம்.

எல்லாரும் பூங்கொடிய திட்டினாங்க, செல்வம் உட்பட சிலர் அடிச்சாங்க. ஆனா, போஸ் மாடம் பண்ண விடாம, ப்ளஸ் டூவுல மார்க்கம்மி அதனால புள்ள சூசைட் பண்ணிக்கிச்சினு விசியத்த மூடி மறச்சிட்டாங்களாம். மார்க் எவ்வளவுன்னு கேட்டேன். ஐநூறுக்கு முன்னூத்தி தொன்னூத்தி ஏழுன்னா சபி. புங்கவாடி போலாமா சபின்னு கேட்டேன். இல்லண்ணா, அப்பவே அவள எடுத்துட்டாங்கண்ணா என்றாள்.

மனசு கேட்காமல், அவளைப்பற்றியும், ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களைப்பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் குற்றங்கள் பற்றியும், ஜாதி, பணம், எல்லாம் எப்படி எல்லாத்தையும் பாதிக்கிறது என்று என்னென்னமோ பேசினோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செளமியாவும் சபியும் தூங்கச் சென்றார்கள்.

நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் போட்டுவிட்டு, கிச்சன் சிங்க்கில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

-சூர்யா வாசு // 27-ஜூன்-2022

Leave a Comment