Article 19(1)(a) in The Constitution Of India 1949 – to freedom of speech and expression
எழுத்து உரிமைக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதனை அச்சிட்டு பிரசுரம் செய்யும் உரிமைக்கும் தனியே ஒரு பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமோ என்கிற எண்ணத்தை வலியுறுத்தும் ஒரு உண்மை நிகழ்வும் ஒரு நிழற்படமும்மாய் கெளரி லங்கேஷும் 19(1)(a)வும்.
இந்தத் திரைப்படம் பெங்களூரில் 2017 செப்டம்பர் 5ல் நடத்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரான கெளரி லங்கேஷ் (வயது 55) அவர்களின் படுகொலையை கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை குறிக்கவே விஜய் சேதுபதியின் பெயர் ‘கெளரி சங்கர்’ என கொண்டு வரப்பட்டது. (‘சங்கர்’ என பெயரிட்டதற்கும் உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் 16ல் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட கெளசல்யாவின் கனவர் ‘சங்கர்’-கும் தொடர்பு உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை. அது கெளரவக் கொலை என்பது குறிப்பிடப்பட்டது.) கெளரி லங்கேஷ் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல அவர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ‘கெளரி லங்கேசு பத்ரிகே’ என்ற கன்னட வார இதழின் தலைமையாசிரியர். இவரது அப்பா P.லங்கேஷ் அவர்கள் தொடங்கிய பத்திரிக்கை அது. கெளரி லங்கேஷ் அவர்கள் இந்துத்துவா அவர்களுக்கு எதிராக அவரது பத்திரிக்கையில் எழுதிவந்ததினால், மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இப்படத்திலும் கெளரி சங்கரை மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுக் கொல்கின்றனர். அதே அதிகாலை நேரம் அது. படத்தில் சங்கரைக் கொன்ற இடம் தருமபுரி மாவட்டம். தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டும் போது கூட அவர் ஒரு சின்ன புன்னகையோடு தோட்டாக்களை பெற்றுக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.
கெளரி லங்கேஷ் அவர்கள் திருமணமாகி விவாகரத்தும் ஆனவர். குழந்தைகள் யாரும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைகளை அநியாயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் உண்மையான journalist-ஆக வாழ்ந்து வந்தார். திரைப்படத்திலும் கெளரி சங்கர் (விஜய் சேதுபதி) அவர்களை தனிமையான ஆளாகத்தான் காட்டுவார்கள். தன் ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையைக் கூட அவர் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தெருவில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து குப்பையில் போடுகிறார். சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் அன்பும் தன்மீதுகூட இருந்ததில்லை என்பது போன்ற காட்சியமைப்புதான். இதை மனதில் வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறே அமைந்து போனது.
இப்படத்தின் நாயகி பெண்குட்டி (நித்யா மேனன்), கேரளாவில் தன் அப்பாவின் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். தனது அப்பா தொடங்கிய கடையை, அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சரிவர பார்த்துக்கொள்ளாததால், பெண்குட்டியே எடுத்துக்கொள்கிறார். யாருடைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிடாக்கூடாதென தன்னுடைய ஆசை எண்ணம் யாவற்றையும் பொருட்படுத்தாமல் வாழும் இந்தியப்பெண்கள் பெரும்பாலானோரது பிம்பமே இப்பெண். அதனாலோ என்னவோ இப்படத்தில் இவளது பெயர் இதுவென குறிப்பிட படவில்லை. இப்படத்தில் வரும் இசைகள் இப்பெண்குட்டியின் இதயத்துடிப்பாக எண்ண ஓட்டத்தின் இனிய சப்தமாக, அவளது உணர்வுகளை நம் மனதிற்கு கடத்தி விடுகிறது. உண்மையில் படத்தின் நாயகன் இசைதான். படம் மெதுவாக நகர்வதாக இருந்தாலும் தேவையான நேரம் கொடுத்தால்தான் பார்வையாளர்களின் மனதில் இப்பெண்குட்டியின் மனப்போராட்டம் சென்றடையும் என்ற முடிவு சரியானாதாகவே நம்புகிறேன்.
இப்படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சி. எழுத்தாளர் கெளரி சங்கர் (வி.சே.) தான் எழுதிய ‘கருப்பு’ என்னும் புத்தகத்தை நகல் எடுப்பதற்காக இப்பெண்குட்டியின் கடைக்கு வருகிறார். அதை நகல் எடுக்க சொல்லியும் அன்றிரவு வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கடைசியாக அப்பெண் கேட்கிறாள், பைண்டிங் பண்ணவா இல்ல ஸ்பைரல் போடவா என்கிறாள். கெளரி சங்கர், “உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவரது பணி எழுதுவது அதை என்ன செய்ய வேண்டும் என்பது இச்சமூகமே முடிவு செய்யட்டும் என்பதாகவே என் காதுகளில் விழுகிறது.
அதன் பிறகே அவர் கொல்லப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ‘கருப்பு’ எனும் புத்தகமும் அதன் நகலும் அப்பெண்குட்டியினிடமே இருந்துவிடுகிறது. கடைக்கு வந்து நகலெடுக்க சொன்னவர் யாரென்றே தெரியாத பெண்குட்டி அவரது இறப்புக்கு பின்பே அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். இச்சமூகம் இறந்தபிறகுதான் ஒருவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறது. சிலை வைக்கிறது. வாழும் பலரையும் கொண்டாட மறந்துவிடுகிறது. பலரது படைப்புகளையும்கூட மறந்துவிடுகிறது.
அவரை தெரிந்து கொள்ளும் பயனத்தில் சமூகத்தில் சத்தமில்லாமல் கிடக்கும் பல கேள்விகளையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். தன் சகோதரியிடமும்கூட அவளது கேள்விகேட்கத் தயங்கும், தன் கருத்தை சொல்லாமல் தவிர்க்கும் மனப்போக்கை கண்டு சமூகம் எப்படி கேள்விகளுக்கும் அதை எழுப்பும் குரல்களுக்கும் பூட்டு போட்டுள்ளது என சாட்சி படுத்திக்கொள்கிறாள். அவ்வப்போது காட்டப்படும் கருப்புக்கொடியும் கம்யுனிசக் கொடியும் சொல்லாமல் நிறைய சொல்லிவிட்டுப்போகின்றன.
ஆற்றோடு மிதந்து வரும் ஏதோ ஒரு பறவையின் இறகை தன் மேசைவரை கொண்டு வந்து வைத்துக்கொள்கிறாள் அப்பெண்குட்டி. கெளரி எழுதிய பிற புத்தகங்களுக்கும் அப்படிதான் அவள் தன் மேசையில் இடம் கொடுக்கிறாள்.
இப்படத்தின் ஒரு காட்சியில் கெளரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வந்த கெளரி பதறிப்போய் தேடுவது தான் எழுதிய புத்தகத்தின் தாள்களைத்தான். எதைவிடவும் தன் எழுத்துதான் முக்கியம் என இருக்கும் ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தின் அசலை அப்பெண்ணிடம் நம்பிக்கையோடு கொடுத்துவிட்டுச் செல்கிறார். அப்பெண்ணும் அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுகிறாள். அவள் இஷ்டம்போல செய்கிறாள். அதுவே சரியானதாக இருக்கிறது. எது சரியோ அதுவே எனது இஷ்டம் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தடைகிறாள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “ஒரு எழுத்தாளருக்கு இந்த உலகம் என்ன தந்துவிடப்போகிறது?” என்ற கேள்விதான் “அவர் எழுத வேண்டுமா?” “அப்படி எழுதினால் எதை எழுத வேண்டும்? ” போன்றவற்றை முடிவு செய்கிறது. நன்கு கவனித்தீர்களானால் ஒன்று புரியும். ஒரு எழுத்தாளர் இவ்வுலகுக்கு எவ்வளவோ தரலாம், பதிலுக்கு இவ்வுலகம் ஒரு எழுத்தாளருக்கு மரியாதையையும் வசதியையும் மட்டுமே தரவியலும். இதை உணர்ந்ததினால்தான் சில எழுத்தாளர்கள் கொடுக்கவல்ல இடத்தைவிட்டு விலக மறுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை எழுத்தாளனை விலைக்கு வாங்கிவிட முடியாது. அப்படி வாங்க முடிந்தால் அவன் சாதாரன கதாசிரியராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நேர்மையான எழுத்தாளராகவும் ஒரு இயக்குனராகவும், நல்லதை கொடுக்கவல்ல இடத்தில் இருந்து பொறுப்புடன் திருமதி இந்து V. S. இப்படத்தை செதுக்கியுள்ளார்.
கெளரி சங்கரை கொலை செய்யும் மர்ம நபர்கள் வரும் இருசக்கர வாகனத்தின் ஒலி, படத்தின் இறுதியில் அப்பெண்குட்டி தன் கடையை அடைத்துவிட்டு வெளியே செல்லும்போதும் வரும். கெளரி சங்கரைக் கொன்ற போது வந்த அதே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுவிடுமோ என்ற பதற்றத்தை அது தந்துவிடுகிறது. சத்தம் கேட்டதா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Hotstar-ல் படம் காணக்கிடைக்கிறது. தேட்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் நிச்சயமாக ஃப்லாப் லிஸ்டில் சேர்த்திருப்பார்கள். ஓடிடி என்பதால் இது மக்களுக்கு சென்றடைய போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
விஜய் சேதுபதியின் பேச்சு இன்னும்கூட நன்றாக இருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் இன்னும் வீரியமாக இருந்திருக்கலாம். இந்திய மசாலாப் படங்களைப் பார்த்து பார்த்து ஊறிப்போன மனதிற்கு இயல்பான இறுக்கட்ட காட்சிகள் சற்று சலூப்பூட்டுவதாகவே தோன்றுகிறது. இப்படத்தைப் போன்ற படங்கள் அதிகம் வரும் போது இந்த dramatic, cinematic எல்லாமும் மனதின் எதிர்பார்ப்புகளில் இருந்து குறைந்துவிடும்.
“ஒரு படத்தைக்காண்பவர் அப்படத்தில் என்ன காட்டப்படுகிறதோ அதைப் பார்ப்பதைக்காட்டிலும்ம் தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் காண்கிறார்.” – (இதைச் சொன்னவர் யாரென சரியாகத் தெரியவில்லை. மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சொல்லியதாக ஞாபகம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.)
-சூர்யா வாசு 10.00 pm 11-08-2022