மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022

ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் அக்கண்ணாடியின் கூர்மையில் நாம் கிழித்துக்கொள்ளாமல் இருப்பது சிரமம்.

மகேஷ் நாராயணன் எழுதி ஒளிப்பதிவு செய்ய சாஜிமோன் பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது. நேரம் ஒதுக்கி பார்க்குமளவிற்கு தரமான படைப்பு.

வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் நாம் எவ்வளவுதான் நல்ல சிந்தனைகளை மனதிற்குள் கொண்டிருந்தாலும், சூழ்நிலை நம்மை சோதிக்கும்போது, மனதில் ஆத்திரமும், வன்மம், கோபமும் முட்டி மோதிக்கொண்டு முதலில் வந்து நிற்கும். நல்லவை மனதின் ஏதோ ஒரு மூலையில் பாய் விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அனிக்குட்டனாக நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வாழ்க்கை தந்த வலியை யாரிடமெல்லாமோ கோபமாய் கொட்டித் தீர்க்கப்பார்க்கிறார். ஆனாலும் தீரவில்லை. இறுதியில் அழுது கொட்டுகிறார் வலியும் வன்மமும் தீர்ந்து விடுகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற எண்ணத்தினாலோ என்னமோ, வலியைக்கூட கோபமாகவே வெளிப்படுத்தத் தெரிகிறது அனிக்குட்டன் உட்பட பல ஆண்களுக்கு. முழு சைக்கோக்கள் இல்லை இவர்கள், ஷார்ட் டேர்ம் சைக்கோக்கள்.

படம்முழுக்க அனிக்குட்டன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது போல இருக்கும். அவன் கோபப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் வரும்போது அவனால் பொறுமை காக்க முடியவில்லை. காற்றடைத்த பலூனில் ஊசி குத்தியது போல வெடித்துச்சிதறுகிறான். என்றோ எங்கோ எதற்கோ யாரிடமோ ஏற்பட்ட வலி உணர்வு, அவனை நிழல்போல துரத்திக்கொண்டே வருகிறது.

மனிதன் ஒரு சமூகவிலங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. மனிதன் ஒரு உண்ர்ச்சிமிகு மிருகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆறு அறிவு இல்லை நூறு அறிவு இருந்தாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான். படம் நெடுக இதனை காட்சிப்படுத்திக் கொண்டே வருவர். அனிக்குட்டன் புத்திசாலி, சாமர்த்தியகாரன், விவரமான மனிதன். ஆனால் என்ன பயன், கோபம் அவனை அடிமுட்டாளாக்கிவிட்டது.

படத்தின் இன்னொரு ராட்சசன் இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான். இசையின் மழையில் நனைந்து நனைந்து மனமென்னும் ஈரமற்ற மலை கரைந்து சரிந்து தரைமட்டம் ஆகிவிடுகிறது. இயற்கை சீற்றத்திற்கு இசைப்புயலின் இசை ராகம் கூட்டியிருந்தது.

ஆயிரம் வருஷம் வாழும் ஒருவன் எத்தனை வருஷம் நல்லவனாக இருப்பான்? முதல் ஐநூறு ஆண்டுகள்? கடைசி நூறு ஆண்டுகள்? அறுபது வருசம் வாழும் நாமும் அப்படித்தான். இடையில் நல்லவராய் இருப்போம். இடையில் கெட்டவராய் இருப்போம். கெட்டதை உணர்ந்து திருந்தி நல்லவராய் இருப்போம். நல்லவராய் இருந்து பயனில்லை என்று அலுத்துபோய் மனம்போன போக்கில் அலைவோம். எல்லாம் முடியும் போது எது நல்லது என்று தேடித்தேடி அதை நோக்கி மட்டுமே நகர்வோம். இறுதி நிமிடங்களில் அனிக்குட்டன் தேடுவதைப் போல.

இது ஃபீல் குட் மூவி இல்லை. ஃபீல் கில்ட் மூவி. நாம் வில்லன் இல்லைதான். ஆனால் நல்லவனும் இல்லை. நமக்குள் இருக்கும் நல்லவனை வெளியில் கொண்டுவர போதாத காலம் வரும்வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் நல்லதில் மனதில் இட்டுச்செல்லுங்கள். இதை உணர்த்த ஃபகத் ஃபாசிலும், ரஹ்மானும், மகேஷ் நாராயணனும், சாஜிமோனும், படத்தில் பங்களித்த அனைவரும் கைகோர்த்து படத்தை செதுக்கியுள்ளனர்.