யாயும் ஞாயும் டைட்டில் பாடலில் இருந்தே தொடங்குவோம். யுகபாரதி எழுதி, ஷிவானி பண்ணீர்செல்வம் பாடி, யுவன் அமைத்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை.
ப்ரைம் வீடியோவில் மே 18ல் வெளியான இந்த ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ், காதல் என்ற ஒற்றைப் புள்ளியை வைத்து ஆறு கதைகள் வரையப்பட்டிருந்தாலும், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான தொகுப்பாக இருக்கிறது.
முதல் படம்: லாலாகுண்டா பொம்மைகள். ராஜுமுருகனின் வழக்கமான ஸ்டைலில், சமூக அவலங்களை ஆங்காங்கே அடிக்கோடிட்டு காதலோடு பயனிக்க வைத்து இறுதியில் ஒரு குபீர் ட்விஸ்டை கொடுத்துவிட்டார். படம் ஜாலி.
இரண்டாவது படம்: இமைகள். தமிழ் சினிமாவில் மாமாங்கமாக காதலில் வெற்றியடைவதென்பதை திருமணம் செய்து கொள்வதென்று இலக்கணமே வகுத்துவிட்டனர். திருமணத்திற்குப் பிறகும் எப்படி காதலோடு பயனிப்பது என்பதுகுறித்த படங்கள் மிகமிக சொற்பமாகவே உள்ளன. ஆணோ பெண்ணோ, குறை என்பது யார் ஒருவரிடமும் இருக்கலாம். எந்த ஒரு குறையும், குடும்பத்தில் மகிழ்ச்சியை, அன்பை கெடுத்துவிடாமல் இருக்க வாழ்க்கைத்துணையின் புரிதலும், அக்கறையும் நிறையவே தேவை. இருந்தாலும், இந்தப்படத்தில் மனைவிக்கு ஒரு பிரச்சனை இருக்க, கணவனுக்கு ஒரு தேவை இருக்க, “மனைவி வீணை கற்றுக்கொள்வது அவளக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்ற கவனின் ஐடியாவைக் கேட்டால் ‘அதற்கு இது பதில் இல்லையே’ என்ற வடிவேலு வசனம்தான் வாயில் வருகிறது. மனைவியின் பிரச்சனை தீர்ந்ததா? தெரியவில்லை. கணவன் ஆசைப்பட்டதுபோல மனைவி இன்னொரு குழந்தைக்கு ஒத்துக்கொண்டாளா? தெரியவில்லை. ஒரு இரவு முழுக்க கணவன் யோசித்து எடுத்த முடிவுதான் மனைவி வீணை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. அதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறான். படத்தில் வேறு சில பிரச்சனைகளையும் இயக்குநர் காட்டாமல் இல்லை. மனைவிக்கு காலையில் அதிகப்படியான வேலைகள் இருக்கின்றன. ஆனால், கணவன் அதைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. இனிமேல் கண்டுகொள்வானா? மனைவிக்கு பார்வை முழுவதுமாக மறைந்துப்போன பிறகு எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? இறுதியில் வீணை வாசித்துவிட்டால் மட்டும் மற்றப் பிரச்சனைகள் சரியாகிவிடுமா? வேலை அதிகமாக இருக்கும் போது, வெளியே சென்று ஒரு டீ தம் போட்டுவிட்டு வருவது போல, அலுப்பு நிறைந்த விருப்பமற்ற வேலை நாட்களின் மத்தியில் வீக்கெண்ட் நண்பர்களுடன் ஒரு பாருக்குச் சென்று பீர் சாப்பிடுவது போல, மனைவிக்கு அவ்வப்போது வீணை வகுப்பும், ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்-ஆ இல்லை ட்ரெக்கா? எனக்கு புரியவில்லை. “வேலை செய்ய கஷ்டமா இருக்கா? புள்ள பெத்துக்க கஷ்டமா இருக்கா?, இந்தா புடி வீணைய, கொஞ்ச நேரம் நோண்டிட்டு வந்து வேலை பாரு, புரியுதா?” என்று தடித்த குரலில் சொல்வதாகவே எனக்கு கேட்கிறது. பேரன்பே பாடல் ஃபேவரிட்.
மூன்றாவது படம்: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி. பலரைப்போலும் சினிமாக்காதலைப் பார்த்து பார்த்து நிஜ உலகிலும் சினிமாத்தனமான காதலைத் தேடும் ஒரு பெண்ணின் கதை. துள்ளலான ஜாலியான படம். ‘குக்கூனு கூவும் காகம் நீ’ பாடல் செம. படம் முழுக்க ரசித்தேன். அங்கங்க சிரித்தேன். முக்கியமாக, டேட்டிங்க் ஆப் மூலமாக பல ஆண்களை ஒரு ரெஸ்டாரெண்ட்டில் சந்திக்கிறாள். அது ரகளையான சீக்குவன்ஸ். அதில் ஒருவன் கதாசிரியன், சாப்பிட்ட பில்லை நீட்டும்போது அவன் சொல்லுவான், “காதாசிரியருங்க, கததான் வரும். காசு வராது. அவங்ககிட்டயே குடுங்க”. இதைக்கேட்டதும் கனெக்ட் ஆகி யோவ் டைரெக்டரு… யாருயா நீனு தேடிப்பாத்தேன். கிருஷ்ணக்குமார் ராம்குமார். தெரிந்த முகம்தான். படத்தின் இன்னொரு இடத்தில் ஒரு ரோமியோ வருவார், முக்கியமான நேரத்தில், “ஒரு முக்கியமான விசியம் கேட்கனும்‘ என்பான். மல்லிகா, “நான் விர்ஜினானு தெரியனுமா?” என்பாள். ரோமியோ, “ஹே, இதெல்லாம் ஒரு விஷியமா, என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு? நான் ஒன்னும் ஓல்ட் ஃபேஷன் கிடையாது. இது வேற விசியம்.” மல்லிகா, “என்ன விசியம்?” ரோமியோ, “நீங்க என்ன ஆளுங்க?” என்று கேட்பான். புஹாஹா என்று கைத்தட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். படங்களில் மழையில் நனைந்துகொண்டே நடனமாடுவதை பின்னனி இசையை சேர்த்து செம ரொமான்டிசைஸ் செய்திருப்பார்கள். ஆனால், நிஜத்தில் கொச கொசவென இருக்கும் என்ற கூற்றை ஏற்க மறுப்பாள் மல்லிகா. இறுதியில் வைபவும் மல்லிகாவும் சேர்ந்து மழையில் நனைந்துகொண்டே டேன்ஸ் ஆடும் போது, மழையே பின்னனி இசையாகிப்போனதே காதல். யெஸ், ரொமாண்டிக் லவ் நிஜ உலகில் சாத்தியமே. நமக்குத் தேவை சரியான ஆள் மட்டுமே. அமைந்து விட்டாள், வாழ்வின் பல சீன்கள் பெஸ்ட் ரொமாண்டிக் சீன்ஸ்தான். பிஜிஎம் இல்லாமலே கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி போல காதலாய் சிரிக்கலாம். படத்தில் சரக்கடிக்கும் தம்மடிக்கும் சீன்களை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
நான்காவது படம்: மார்கழி. “காதல் காமத்தில் உச்சம் தொடும். காதலின் அதீத வெளிப்பாடே காமம்.” என்பதான போதனைகள்தான், சினிமா முழுக்க நிரம்பிவழிகிறது. மார்கழியில், ஜாஸ்மீனுக்கு காதல் வருவதே மில்டனை தன்னோடு அந்தரங்கமாக கற்பனை செய்து பார்ப்பதிலிருந்துதான். நிதர்சனம் இதுதான். ஒருவரை காமுறுவதாக கற்பனை செய்வதை தடுக்கமுடியாதிருப்பதே காதலின் முதல் அறிகுறி. அப்படி இணை சேருவதை அழகாய் அலங்கரிப்பதும், நியாயப்படுத்துவதும், புனிதப்படுத்த முயற்சிப்பதும், காதல் என்ற சொல்தான். ஹார்மோன்களால் தூண்டப்படுகிறோம். இசையால் இச்சைகளை காதலாக்கி கொண்டாடித் தீர்க்கிறோம். இந்தப்படத்தில் காதல் தோன்றுவதையும் அது இருவருள்ளும் அழகாய் படர்ந்திருப்பதையும் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் காமம் உச்சம் பெருவது காதலில். இளையராஜவின் இசை இன்பத் தேன்.
ஐந்தாவது படம்: பறவைக்கூட்டில் வாழும் மான்கள். ஃபக். ஆண் எவ்வளவு பேராசைக்காரனாக இருக்கிறான். ஒருவளை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகள் பெற்று, வேலைக்கு சென்று வரும் ஒரு ஆணுக்கு தினசரி பயணத்தில் ஒரு பெண் தோழி அமைய, அவளையும் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ய மனைவியோடே பேசுகிறான். புது காதலியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள். நான் கலாச்சாரம் பாரம்பரியம் பட்டு சேலை வேட்டி சட்டை என்றெல்லாம் அளக்க மாட்டேன். மனைவியாக வரும் ரேவதி என்பவள் குடும்பத்திற்காக உழைத்து வந்திருக்கிறாள். அவளது குடும்பத்தை எதற்காக அவள் விட்டுக்கொடுக்க வேண்டும்? ரவி’க்கு ரேவதியை பிடிக்காமல் போனதற்காகவா? ரவிக்கு ரோஹினியை பிடித்துப்போனதற்காகவா? ஆண் பொதுவாகவே வெரைட்டியை தேடுபவன். எந்தப் பெண்மீதும் சில நாட்களுக்குப் பிறகு சலுப்பு தட்டுபவன். பெண்கள் விசியம் என்றால், அன்லிமிட்டட் ஆப்ஷன்ஸ் வைத்துக்கொள்ள தயங்காதவன். மனம்போன போக்கில் வாழ்க்கையை செலுத்துவது நிஜத்தில் வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு புரட்டிப்போட்டுவிடும். மனம் என்பது ஒரு குரங்கு போல, கிளைக்கு கிளை மட்டும் அல்ல, மரம் விட்டு மரமும் தாவும். கண்டபடி தாவும்போது நாம்தான் செல்லமாக செருப்பாலடித்து, அன்பாக ஒரு கொட்டு வைத்து, உமிழ்நீரை உமிழ்ந்து ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு, பெரிய லார்ட்டு போல டயலாக் பேசுவதோ, ஆண் என்ற அகம்பாவத்தில் தான் செய்வதுதான் சரி என்று திரிவதோ அந்த ஆணுக்கே கூட நல்லதற்கில்லை. (டாக்ஸிக் துணையுடன் வாழவேண்டாம். ஆனால், ரேவதி டாக்ஸிக் இல்லை.) ரவி கத்தவில்லை. முறைக்கவில்லை. வற்புருத்தவில்லை. ஆனால், தனக்கு வேண்டும் என்பதை செய்துகொள்கிறான். அதனால் யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அவனுக்கு மயிரா போச்சி என்பதாக இருக்கிறான். படத்தின் இறுதியில் வரும் அந்த குட்டிப்பாப்பாவின் நரேஷன் அருமையாக இருந்தது. அதே சமயத்தில் பரிதாபமாகவும் இருந்தது, என்றாவது ஒருநாள் அப்பா, ரோஹினி அம்மா மீது ஆசைப்பட்டே ரேவதி அம்மாவை கழட்டி விட்டார் என்று தெரிய வரும்போது? குழந்தைகளுக்கு அப்போதும் இனிக்குமா? அல்லது அடடா எப்படி நமக்கு வலிக்காமல் அப்பா ஜோடி மாற்றிக் கொண்டார் என்று இனிக்குமா? குறைந்த பட்சம் ரோஹினி மீதான ஆர்வத்தை கள்ளத்தனமாகவே முடித்திருக்கலாம். முடிந்து இருக்கும். அதை குடும்பமாக மாற்ற முயற்சிப்பது ரேவதிக்கு நடக்கும் அநியாயம் இல்லையா? அதை அவளே ஏற்றுக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது அநியாயம்தான். ஆண்களின் பேராசைதான் இது மாதிரியான கதைகளையும் க்ளோரிஃபை செய்யப்பார்ப்பது.
ஆறாவது படம்: நினைவோ ஒரு பறவை. இது தனிப்பதிவாகவே எழுதலாம். பரவாயில்லை இங்கேயே எழுத முயற்சிக்கிறேன். இயக்குநர் தியாகராஜா குமாரராஜா வழக்கம்போல, வாழ்வின் மீதான தத்துவங்கள், தியரிகள், கேள்விகள், பிரபஞ்சம், சொசைட்டி, வரலாறு, கடவுள், ஏலியன், கேவ்மென், பூனைகள், cancer kuchigal என தன் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் அழகாக ஒரு ரொமான்டிக் படத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார். நினைவோ ஒரு பறவை படம், சூப்பர் டீலக்ஸ் படத்தின் spin off. பூனைகள் காணாமல் போவது, கீழ்வீட்டு சேட்டு பொண்ணு, வானத்தில் பறக்கும் தட்டு தென்படுவது, ‘வாழ்வின் இரகசியம்’ என்னும் பிட்டுபடம், என நிறைய ரெபரெண்ஸ்கள் வருகின்றன. காதல் இலக்காவுக்கு வருவோம். பெண்ணின் பெயர் Sam. தமிழில் சம் என்று வாராது. அவள் பெயரை காதலன் K, ஸ்சஅம் என்றே உச்சரிப்பான். இருவரும் செய்யும் காதலே அப்பட்டமான, உன்னதமான காதல் என்பேன். இதில் ஈகோ இல்லை. வன்மம் இல்லை. வஞ்சம் இல்லை. அகம்பாவம் இல்லை. ஆதிக்கம் இல்லை. பேதம் இல்லை. இன்பம் இருக்கிறது. சிரிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. குழந்தைத்தனம் இருக்கிறது. பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஸ்டுபிடிட்டி இருக்கிறது. அதனாலே இந்தக் காதல் மிகவும் அழகாய் இருக்கிறது. Near perfect காதலாக இருக்கிறது. காமமும் இந்தப்படத்தில் இசைபோல ஒன்றிவிட்டது. “ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்டா டேய்” என்று ஸ்சஅம் சொல்வதாய் இருக்கட்டும், “கோமாவுக்கு போய் எல்லாம் மறந்தும் நான் உன்னமட்டும்தான ஸ்சஅம் மறக்கல” என்று K சொல்வதாய் இருக்கட்டும், pure ecstasy. ‘தேன் மழையோ’ பாடல் காதுகளுக்கு ஆர்கஸம் என்று சொல்லுவேன், தப்பு தப்பாக கற்பனை செய்ய வேண்டாம். கேட்டுவிட்டு நீங்களும் ஆர்கஸம் அடையுங்கள். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம்போல இதுவும் கதையை பாதி சொல்லி மீதி சொல்லாமல், நம்மை நமக்கே உண்டான தனித்தனி தியரிகளுடன் திரியவைக்கும்; பறக்க வைக்கும். நினைவோ ஒரு பறவை.
மொத்தத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ மட்டும் அவுட் ஆஃப் தி பாக்ஸ். எல்லாப்படத்திலுமே பின்னனி சப்தங்கள், இசைகள், குறிப்பிட்டு பாராட்டுமளவிற்கு தூள்கிளப்பி இருக்கிறார்கள்.
சூர்யாவாசு. 3.ஜூன்.2023. மாலை 6.53