Coffee Addict ☕️

I’m a coffee addict என்று சொல்லிக்கொள்ள அனைவருக்கும் இன்று பிடிக்கிறது. இன்ஸ்டா பேஸ்புக்  வாட்சப்  போன்ற பல தளங்களில் இளம் வயதினர் தங்களை காஃபி அடிக்ட் என்று பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காஃபி அடிக்ட்டாக இருப்பது உண்மையில் பெருமைக்கொள்ளக்கூடிய விசியமா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதுதான் பதில். அப்படியானால் காஃபி ஆபத்தானதா என்றால் அதுவும் இல்லை. அமிர்தமும் அளவுக்கு மிஞ்சினால் விஷம் என்பதுபோல காஃபி உட்கொள்ளுவதற்கும் சில வரம்புகள் உண்டு.

நம் உடல் சோர்வடையும் போது இயற்கையாகவே நமது உடலில் இருக்கும் Adenosine என்ற மூலக்கூறு நமது மூளையைச் சென்றடையும். அடினோசைனின் வேலையே மூளையை உறங்கச் சொல்வதுதான். நாம் காஃபி உட்கொள்ளும் போது அதில் உள்ள Caffeine என்ற மூலக்கூறு மூளையை சென்றடையும்.

அடினோசைன் செல்ல வேண்டிய இடங்களை இந்த காஃபீன் ஆக்கிரமித்து கொண்டு மூளையை சுறுசுறுப்பூட்டும். ஆனால் மூளையை சென்றடையாத அடினோசைன்கள் பக்கத்திலேயே காத்துக்கொண்டு இருக்கும். நமது உடல் மேலும் அதிக அடிசைன்களை மூளைக்கு அனுப்பிவிடும். பிறகு காஃபீன் தீர்ந்த உடன் காத்துக்கொண்டிருந்த மொத்த அடினோசைன்களும் மூளையை சோர்வுற வைக்கும். ஓய்வு எடுக்கச் சொல்லி, தூங்கச் சொல்லி தாலாட்டுப் பாடும். இம்முறையும் நீங்கள் சோர்வடையாமால் இருக்க வேண்டுமானால் மீண்டும் காஃபியை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் காஃபி அடிக்ட்டுகள் ஆகிறோம்.

ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் பலருக்கும் காஃபி என்பது ஒரு இன்றியமையாத துணை எனலாம். முக்கியமாக மதிய வேளைகளில் சாப்பிட்ட பிறகு கண்ணைச்சொருகும் சயங்களில் சூடான காஃபி என்பது ஒரு அல்டிமேட் புஸ்டர். இரவு நேர பணியாளர்களுக்கு சொல்லவே வேண்டாம். ஆனால் ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை அல்லது அதைவிட அதிகமாக காஃபி உட்கொள்ளுவது ஆரோக்கியமானது அல்ல. 

உடல் சோர்வடையும் போது நாம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்படி ஓய்வு எடுக்க அனைவரும் படுத்தவிட்டால் எந்த வேலையும் நடக்காது. எனவே வேலை செய்யும் நேரத்தில் சோர்வுறாமல் இருப்பதற்கு மட்டுமே காஃபியை அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் எழுந்த உடன் பெட்காஃபி குடிப்பது பழக்கமாக இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நமது உடல் இயற்கையாகவே Cortisol என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். இந்த கார்டிசால் நம்மை தூக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு கொண்டுவரும். அதனால் காலை நேரங்களில் காஃபியை உட்கொள்வது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. மேலும் அலுவலகத்திற்கு அடித்து பிடித்து சென்றதில் உடல் சோர்வடைந்திருந்தாலோ, அலுவலக அமைதியும் ஏசி காற்றும் கலந்ததில் ரம்யமாக தூக்கம் கட்டியணைத்தாலோ மட்டும் காலை பத்து மணி அளவில் அன்றைய முதல் காஃபியை உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தூக்கம் அறவே தவிர்க்கப்படும். அடுத்த மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு உறக்கம் ஊடுருவும். மதியம் இரண்டு மணி அளவில் ஒரு கப் காஃபி உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். அதன் பின்னர் அன்றைய நாளுக்கான காஃபியை தவிர்ப்பது உடலுக்கு நன்மைத்தரும். மாலை நான்கு மணிக்கு பிறகு குடிக்கும் காஃபியில் உள்ள காஃபீன் இரவு தூக்கத்தை பாதிக்கும். தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு பிரதான காரணமே காஃபி உட்கொள்வதுதான் என்றால் நம்புவது கடினமாகத்தானே இருக்கும். 

இரண்டு முறை பெரிய கப்பில் கால் லிட்டர் காஃபியைக் குடிப்பதைக் காட்டிலும், சிறிய கப்பில் மூன்று முறை குடிப்பது நல்லது. சரியாக காலை பத்து மணிக்கு ஒரு காஃபி பிறகு மதியம் இரண்டு மணிக்கு ஒரு காஃபி என்று ஒரே அடியாக மாறவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் காஃபியின் பாதிப்பு அவரவர் உடலுக்கேற்ப வேறுபடும். எனவே உங்களுக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது என்பதைக்கவனித்து காஃபியை உட்கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் சோர்வுற்று தூங்கி விழும்வரை காத்திருக்கக்கூடாது. ஏனென்றால் அடினோசைனால் உறங்கிய மூளையை கஃபீனைக்கொண்டு எழுப்பி வேலை செய்ய சொல்வது நீண்ட நேர புத்துணர்வைத் தராது. மாறாக தூக்கம் வரும் சமிக்ஞைகள் தெரிந்தவுடனே காஃபியை உட்கொள்வது நல்ல நீண்ட புத்துணர்வைத் தரும். 

எனவே இயல்பாக அவ்வப்போது காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டு நிதானமாக யோசித்து எப்போது காஃபி உட்கொள்ள வேண்டும் என்ற தெளிவுடன் இருங்கள். காஃபி அடிக்ட் என்பதை விட ஹெல்த் அடிக்ட் என்பது பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேலும் காஃபி குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ரியன் ப்ரெளன் (Ryan Brown) என்பவர் காஃபி மீது கொண்ட ஆர்வத்தினால், காஃபி குறித்த தகவல்களை உலகம் முழுவதும் பயனித்து சேகரித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். புத்தகத்தின் பெயர் Dear Coffee Buyer. இதை நீங்கள் காஃபீ குடித்துக்கொண்டேகூட படித்து பயன்பெறலாம். 

வா. சூர்யதேவன்

4 thoughts on “Coffee Addict ☕️”

  1. Good information. Very useful for those who are consuming coffee on regular basis without knowing any of above mentioned news.
    👏👏👏

    Reply

Leave a Comment