/the social dilemma_ & THE CIRCLE (2017)

/the social dilemma_ ஒரு ஆவணப்படம். நெட்ஃபிலிக்ஸில் காணக்கிடைக்கிறது. டிஜிட்டல் உலகம் நம்மை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதன் கூர்முனைகள் நம் தினசரிகளை, நம் இயல்புகளை, நம் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை நாம் அளவிட்டுப் பார்க்கத் தவறுகிறோம். இந்த ஆவணப்படம் அப்படிப்பட்ட அளவீட்டை உள்ளடக்கியதுதான்.

தொலை தொடர்பு என்பது இன்றளவில் மிக அவசியமானது. மறுப்பதற்கில்லை. ஆனால், அருகில் இருப்பவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளுமளவிற்கு தகுதிவாய்ந்ததா? யோசித்துப்பாருங்கள். மனிதர்களின் இயல்பு வெகு வேகமாக மாறிவருகிறது.

பிறரிடம் வாய்விட்டு வார்த்தைகளில் பேசுவதைக் காட்டிலும் chatboxகளில் எமொஜிகளிலும், abbrevationsகளிலும் மட்டுமே பேசத்தெரிந்த தலைமுறை நம் கண்முன்னே உருவாகிக் கொண்டிருக்கின்றது. இவர்களின் உலகம் வெவ்வேறானதாக இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வோரு உலகத்தில் வாழ்கின்றார்கள். ஏனென்றால் பெரும்பாலான இணையதளங்கள் செயலிகள் ஒவ்வொருவரின் பயன்பாட்டை வைத்து ஒரு குறிப்பிட்ட மாடலை உருவாக்குகிறது. அதைக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி (News feed) காட்டுகின்றது. எல்லாமே கருத்துகள்தான். opinions. எதுவும் உண்மையோ சரியான தகவலோ அல்ல. Not a fact. வெறும் கருத்துகளை மட்டும் நம்பி செயல்படும் பெரும் மனிதக் கூட்டம் பேராபத்தானது. அது ஒரு கலவரத்தையும் உண்டுபடுத்தும். பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு Pizzagate Conspiracy என்று கூகிள் செய்து பாருங்கள்.

புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அதை குறைசொல்லி, பழைய பெருமைகளைப் பேசி பழமைவாதத்தை தூக்கிப்பிடிக்கும் அறிவிலிகளின் புலம்பல் இல்லை இந்த ஆவணப்படம். புதிய கண்டுபிடிப்புகள் தொழிநுட்பங்கள் நமக்கு எந்த அளவிற்கு நன்மை செய்கின்றன, எந்த அளவிற்கு தீமை செய்கின்றன என்பதை தெளிவாக ஆராய்ந்து, இந்த தீமைகளை சகித்துக்கொள்ளும் அளவிற்கு, பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு இருக்கின்றனவா என்று நம் முன்னே காட்டுகிறார்கள்.

உச்சகட்டமாக சில குழந்தைகளின் உயிர் வரை இந்த தொழில்நுட்பங்கள் குடித்திருக்கின்றன.

முகநூல் நிறுவனர் மார்க் 2024 ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதை இந்த லிங்கில் தருகிறேன் படித்துப் பாருங்கள். https://www.bbc.com/news/technology-68161632

இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசும்போது, THE CIRCLE எனப்படும் டாம் ஹான்க்ஸ் நடித்த திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

மக்களின் ப்ரைவசி தகவல்கள் தனியார்களின் கைகளில் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் பணம் பார்க்காமலா இருப்பார்கள்? தனியாரிடம் மக்களின் நேரமும் கவனமும் செல்லும் போது, அதை அவர்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை யார் எப்போது உருவாக்குவது. மக்களின் தகவல்களை பெரும் நிறுவனங்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்துவார்கள் என்ற உத்திரவாதத்தை யார் அளிப்பது? அப்படி தொழில்நுட்பத்தின் பெருஞ்சக்கரத்தில் மக்களும் குழுந்தைகளும் நசுங்காமல் பாதுகாப்பாக வாழும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில்,

~ வா. சூர்யதேவன்.

Leave a Comment