The Substance (2024) Not for all the adults

அது என்ன Not for all adults என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பெரும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கல்நெஞ்சமும் வேண்டும். அது அனைத்து adult-சுக்கும் இங்கு இருப்பதில்லை. இது ஒரு R rated movie என்பதால், R rating என்றால் என்ன என்று பார்த்துவிட்டு, அவற்றில் பட்டிலிடப்பட்டிருக்கும் விசயங்களை உங்களால் படத்தில் தயக்கமின்றி பார்க்கமுடியும் என்றால் இந்தப்படத்தை நீங்களும் பார்க்கலாம். இந்தப் படம் அமெசான் ப்ரைம் வீடியொவில் காணக்கிடைக்கிறது.


1. அழகும் பருவமும்

ஒரு பெண் பிறந்தது முதல் இறப்பு வரை அவள் பெண்தான். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு அவளிடம் இருக்கும். அதைக்கொண்டு பெண்ணின் பருவங்களை ஏழாகப் பிரிக்கிறார்கள்.

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை: 26-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

இந்த ஏழு பருவங்களின் வயது வரம்புகளும் அவ்வப்போது வேறுபடுகின்றன. ஆனால், பெண்ணின் பருவங்களை இப்படியாகத்தான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதில் பேரிளம் பெண்தான் நம் கதை கதாநாயகி. அவள் அரிவையாக (20 வயது) இருந்ததுமுதல் கதை நடக்கும் நிகழ்காலம் வரை நாற்பதைக் கடந்தபின்பும் துள்ளலாகவும், ஆரோக்கியமாகவும் வசீகரத்துடன் வாழ்ந்து வருகிறாள். புகழ் பணம் இருந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் குழந்தைகளும் இல்லை. அவளுடைய மிகப்பெரிய சொத்தே அவளுடைய மங்காத பேரழகுதான் என்று அவள் திர்க்கமாக நம்பி வாழ்ந்து வருகிறாள்.

ஒரு நாள் அவளின் வயதின் மூப்பு காரணமாக அவளுடைய வசீகரம் குறைய ஆரம்பிக்கிறது, ஆரோக்கியம் குன்றுகிறது. தன் கண் முன்னே தன் இளமை தன்னைவிட்டு போய்க்கொண்டு இருப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தன் அழகும் இளமையும் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என்று எண்ணுகிறாள். அதற்காக எதையும் செய்யத்துணிகிறாள். ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

நிற்க.


2. வாரிசு

தன்னுடலைக் கிழித்துப் பிறந்த பெண்பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டி வளர்க்கிறாள் ஒருதாய். மகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வேகமாகவும் வளர்கிறாள். ஆனால் அந்த தாய்க்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால், அந்தப் பெண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போதெல்லாம், அந்த தாய்க்கு முதுமை அதிகரிக்கிறது. குழந்தை வேகமாக தாய்ப்பால் குடிக்க குடிக்க குழந்தை அழகாய் மாறுகிறது, தாயின் இளமையோ வேகமாகக் குறைகிறது. குழந்தையின் பேரழகை உலகமே போற்றுகிறது. புகழுக்கு மயங்கிய குழந்தைக்கு நிறைய பால் தேவைப்பட்டது.

தாயினால் குழந்தையைத் தடுக்க முடியவில்லை. தாய்ப்பாசமோ, தன் உருவத்தை தானே தாக்குவதா, என்ற எண்ணமோ, ஏதோ ஒரு இனம்புரியாதக் காரணம் அந்தத் தாயினால் குழந்தையை நிறுத்தமுடியவில்லை. ஆனால், கருணையற்ற அந்தக்குழந்தை தான் மேலும் அழகாக மாற தன் தாயை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கே தள்ளிவிட்டது. தாய் சுதாரித்துக்கொள்ளும் தருணம் குழந்தை பலசாலியாகவும் தாய் பலகீனமாகவும் இருக்கிறாள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த யுத்தத்தில் தாய் மகளை தின்று தன் இளமையை அழகை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள்.

நிற்க


3. ஆவேசம்

ஒரு செல்வச் செழிப்பான வனம். அதில் எல்லா விதமான செடிகளும் கொடிகளும் மரங்களும் இருந்தன. எல்லா வகையான உயிரினங்களும் இருந்தன. நிலத்துக்கு மேலே தாவர வளங்களும், பல்லுயிர் வளங்களும், நிலத்துக்கு கீழே தங்கமும் இருந்தன. இந்த கோடிக்கணக்கான வயதுடைய வனத்திற்கு அதுவரை மனிதர்கள் யாரும் வந்ததேயில்லை. அப்படி ஒரு வனத்தில் மனிதர்களின் கால் பட்டது.

மனிதர்கள் முதலில் தாவரங்களைப் பறித்து, பசியாற்றினார்கள். மரங்களை வெட்டி பொருட்கள் பல செய்தார்கள். ஆடைகள் நெய்தார்கள். மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிப் புசித்தார்கள். நிலங்களை வெட்டி தங்கச்சுரங்கங்கள் அமைத்தார்கள். ஆபரணங்கள் செய்து மிடுக்காய் நடனமாடி கவர்ந்தீர்த்து புணர்ந்து இனத்தைப் பெருக்கினார்கள்.

ஆயிரம் வருடங்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். எல்லா வளங்களும் தீர்ந்தப்பிறகு வேறு வளமான வனம் தேடினார்கள். தேடிக்கொண்டிருக்கும் போதே சிலர் வெள்ளம் வந்து மூழ்கி மரணித்தனர். சிலர் நிலச்சரிவில் சிக்கி மாண்டனர். சிலர் பட்டினியில் இறந்தனர். யாருக்கும் அந்த வனம் போல வேறு வனம் கிடைக்கவில்லை. தங்கம் வீதியில் இரைந்துக் கிடந்தது. எல்லாரும் இறந்தப்பிறகு மழை வந்தது மீண்டும் அந்த வனம் துளிர்விட ஆரம்பித்தது.

நிற்க


எது அழகு?

எனக்குப் பிடித்தமான தத்துவம் ஒன்று இருக்கிறது. அது

அழகாய் இருப்பதெல்லாம் நமக்குப் பிடித்திருப்பதில்லை.

நமக்குப் பிடித்திருப்பவை எல்லாம் அழகாய் தெரிகிறது.

அழகு என்பது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது. தோற்றம் சார்ந்தது இல்லை. நம்ப மாட்டீர்கள் அல்லவா? சரி, அவரவரது அம்மாவும் அப்பாவும் அவரவருக்கு அழகுதானே? தாத்தா பாட்டி, அழகு இல்லையா? அசிங்கம் என்று சொல்லி விடுவீர்களா? உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? பார்க்கப் பார்க்க எல்லாம் அழகாய் தெரியும் என்பது பொய். சிலரைப் பார்க்க பார்க்க எரிச்சலும் வரும். ஆக, அழகு, பிடித்தம் எல்லாமுமே அகம் சார்ந்த விசியம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘அழகு’ என்று ஒன்று இருக்கிறது. அது வியாபாரம் சொல்லும் ‘அழகு‘. நிறுவனங்கள் லாபத்திற்காக, உள்நோக்கத்திற்காக அழகு என்பதற்கான வரையரையை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

  1. வெள்ளை அல்லது சிவப்பாய் இருந்தால் அழகு
  2. கூந்தல் நீளமாக இருந்தால் அழகு
  3. இடுப்பு மட்டும் ஒல்லியாக இருந்தால் அழகு
  4. தாடை கூர்மையாக இருந்தால் அழகு
  5. மூக்கு சின்னதாக க்யூட்டாக இருந்தால் அழகு
  6. உதடு சற்று பெரிதாய் இருந்தால் அழகு
  7. புருவங்கள் திருத்தப்பட்டிருந்தால் அழகு
  8. கை கால்களில் ரோமங்கள் மழிக்கப்பட்டிருந்தால் அழகு
  9. நகங்கள் சற்று நீளமாகவும் பளபளப்பாகவும் நிறங்கள் பூசி இருந்தால் அழகு
  10. கூந்தல் வளைவு நெளிவாக இல்லாமல் நேராக இருந்தால் அழகு
  11. மினுமினுக்கும் ஆடை அனிந்திருந்தால் அழகு
  12. அதுவரை ஆடை மறைத்திருந்த மேனியை சற்று தெரியும்படி ஆடை அனிந்தால் அழகு
  13. ஆடையைக் குறைத்துக் கொண்டால் அழகு
  14. உதட்டில் சாயம் அப்பிக்கொண்டால் அழகு
  15. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன எல்லாமும் வியாபார நோக்கம் மட்டுமே அன்றி வேறில்லை. இவை அனைத்தும் வெளிச்சாயம் மற்றும் புறம் சார்ந்த விசியங்கள். இவையனைத்தும் இருந்தும் சிலரை பலரை நமக்குப் பிடிக்காமல் போகும். அதன் பிறகு அவர்கள் நம் கண்களுக்கு அழகாய் தெரியமாட்டார்கள். பிறகு எது அழகு?

  1. அன்பாய் இருத்தல் அழகு
  2. ஆசையாய் கொடுத்தல் அழகு
  3. உண்மையாய் இருத்தல் அழகு
  4. சுத்தமாய் இருத்தல் அழகு
  5. ஆரோக்கியமாய் இருத்தல் அழகு
  6. கடமையை செய்தல் அழகு
  7. கட்டுப்பாடுடன் இருத்தல் அழகு
  8. பரிவாய் இருத்தல் அழகு
  9. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன அனைத்தும் அகம் சார்ந்த விசியங்கள். இந்தப் பண்புடையவர்களின் முகம் எப்படி இருந்தாலும் நமக்குப் பிடிக்கும். இவை அனைத்தும் நம் தாத்தாப் பாட்டியிடம் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘மீடியா’ என்று ஒன்று இருக்கிறது. (டிவி, சினிமா, ரேடியோ, விளம்பரம், யுடியூப், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.) அவை பெண்களை எப்போதும் ஒப்பனை செய்து கொள்ளத்தூண்டிக்கொண்டே இருக்கிறது.

பெண்கள் மீதான காதலை வெளிப்படுத்தும் போது, அவளது புற அழகை வர்ணிக்காமல், அவளது அகப்பண்புகளை வர்ணித்து குண்நலன்களை வர்ணித்து எழுதிய சினிமாப்பாடல்களை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்? இருக்காது, இருக்கவே இருக்காது. பெண்களின் கண்ணில் தொடங்கி, அவளது நிழல் வரை எல்லாமும், நிறம், அளவு, தோற்றம் என்று உடல் உறுப்புகளை வர்ணித்தே இருக்கும்.

காதலன் காதலியை நினைத்துப் பாடும் பாட்டில் ஏன் அவளைக் காதலிக்கிறான் என்பதற்கான காரணத்தை தேடிப்பாருங்கள், அழகு என்ற ஒற்றைக்கூற்றைத் தவிர வேறு எதுவும் இருக்காது. ஆக, ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது மூன்று அல்லது நான்கு ஜான் இடத்தைதான். அதற்குள் இருப்பவற்றை கடித்துக் குதறியப்பிறகு, “நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு, அதுக்குதாண்டா வந்துபோறேன் டெய்லி வைனுசாப்புக்கு”ன்னு பாட்டு பாடுவார்கள்.

திருமணத்திற்குப்பிறகு ஏன் வாழ்க்கை கசக்கிறது? நாமக்கு காதலிக்க சொல்லித்தந்த சினிமா, அழகான பெண்களைத்தான் காதலிக்க சொல்லித் தந்தது. நமக்கு பிடித்தமான பெண்களை காதலிக்க சொல்லித்தரவில்லை. இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வண்ன ஓவிய விளம்பரங்களும், புகைப்படங்களும் வந்தப்பிறகு, நாம் திரும்பும் திசையெல்லாம், விளம்பரப் பலகைகளிலும், டிவி விளம்பரங்களிலும், சினிமாக்களிலும், வெள்ளைத் தோல் பெண்களையே நடிக்க வைத்து நம் கண்களில், அவர்கள் மட்டுமே பட்டுக் கொண்டிருந்ததாலும், நமக்குப் பிடித்தமான நடிகரின் காதலியும் சினிமாக்களில் வெள்ளையாக இருந்து வந்ததாலும், நமக்கும் நம்மை அறியாமலே நம் மூலைக்குள் வெள்ளையாய் இருக்கும் பெண்களைத்தான் அழகிகள் என்றும் அவர்களே நாம் காதலிக்கத் தகுதியானவர்கள் என்றும் ஆழமாக நம்பவைத்திருக்கிறார்கள்.

‘அங்கவை சங்கவை’ என்று சிவாஜிபடத்தில் ஒரு காட்சி வரும். அதெல்லாம் நிற வன்மத்தின் உச்சம்.

இதன் மற்றோரு வியாபார வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் ‘Fair and Lovely’. கருப்பாக இருக்கும் பெண்களின் மனதில் அவர்கள் தாழ்வுமனப்பாண்மையோடுதான் இருக்கிறார்கள் என்று விளம்பரத்தில் காட்டி காட்டி, உண்மையிலேயே தாழ்வுமனப்பாண்மையை வரவழைத்துவிட்டார்கள். ஆண் வர்க்கமும், பொண்ணு செவப்பா எலுமிச்ச பழ கலர்ல இர்ந்தால்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிக்க, வியாபார முதலைகளின் காட்டில் பணமழைதான்.

மற்றொரு பெரும் மோசடி ஒல்லியான தோற்றம். உடற் பருமனுடன் இருக்கும் எல்லோரையுமே ஒரு தாழ்வுமனப்பாண்மைக்கு தள்ளிக்கொண்டே இருக்க வேண்டியது. உடற்பருமனுடன் ஆரோக்கியமாக இருந்தவர்களே இல்லையா? ஒல்லியான தோற்றமுடைவர்கள் அனைவரும் நூறுவயது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதீத உடற்பருமன் ஆபத்துதான். ஆனால், அதைக்கொண்டு வியாபராம் செய்ய லாபம் பார்க்க மக்களை பயமுறுத்த வேண்டிய அளவிற்கு லாப வெறியில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களே உஷார்.

ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் அழகான பெண்களுக்கான வரையறையை நிறுத்தாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கின்றன. பெண்களும் விட்டில் பூச்சியாய் அந்த ரசாயன சாயங்களை வாங்கி தேவையற்ற செலவை செய்து உடல்நலத்தையும் மனநலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அந்த சினிமா, சீரியல், விள்மபரங்கள், பார்க்கும் ஆண்கள் சிவப்பழகு பெண்களையே நாங்கள் சைட் அடிப்போம், காதலிப்போம், திருமணம் செய்வோம், கருப்பான பெண்களை கலாய்ப்போம் என்று பெண்களை ஒல்லியான தோற்றம், சிவப்பழகு இத்யாதி இத்யாதி அழகை நோக்கி ஓட வைக்கிறார்கள். பெண்களும் சலைக்காமல் ஓடுகிறார்கள்.

பெருநிறுவன முதலாளி ஆண்களுக்கு பண லாபம். சாதாரன மக்களில் இருக்கும் ஆசாமி ஆண்களுக்கு வென்னிறத்தோல் கொண்ட பெண்ணுறுப்புகள் லாபம். பெண்களுக்கு என்ன லாபம்?

அவள் பேரழகி என்ற சொற்பகால பட்டமா?

~

வா. சூர்யதேவன்

3.33 am டிசம்பர் 19, 2024

(கடைசிவரை படத்தைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்று நினைக்கவேண்டாம். படத்தைப்பாருங்கள். இந்தப் பதிவு முழுக்கவே அந்தப்படத்தில் இருப்பவை பற்றிதான். ஆனால் இப்படியே இல்லை)

Leave a Comment