ஸ்மார்ட்போனை அன்லாக் செய்து ஹப்பி (Hubby) என்ற தொடர்பை அழைக்கிறாள் மகிழா. 21ம் நூற்றாண்டின் அழகிய காதல் டூயட் பாடல் ஒன்று காலர் ட்யூனாக, கிளிப்பில் சிக்காத முடியொன்று காதில் உரசுவது போல் மகிழாவின் காது மடலில் மென்மையாய் ஒலிக்கிறது. மறுமுனையில் சினுங்கிய செல்போனை எடுத்து “சொல்லுடி” என்றான் விஷ்ணு.
“நா ஆட்டோல வந்துட்டிருக்கேன், நீ ஸ்டேஷன்லதானே இருக்க..?”
“ஆ… இங்கதான் இருக்கேன், வா…”
“ஓகே, 5 மினிட்ஸ், ஐ வில் கம்…”
விஷ்ணு, “ஒகே” என்று இணைப்பை துண்டிக்கிறான்.
ஆட்டோ ரயில் நிலையத்திற்கு வருகிறது, மகிழா இறங்கிய உடன், வரவிருக்கும் ரயிலுக்காக காத்திருந்த 60 வயது கிழவன் முதல், ஆட்டோ ஓட்ட வந்த 19வயது இளைஞன் வரை அனைத்து ஆண்களின் கண்களையும் கவர்ந்து இழுத்தது, மகிழாவின் பருவ அழகும், ஒழுக்கமாக அவள் அணிந்திருந்த ஊதா புள்ளிகள் நிறைந்த வெண்ணிற சுடிதாரும்தான்.
ஆட்டோ ஓட்டுனரிடம் காசைக் கொடுத்துவிட்டு, ரயில் நிலைய கட்டிடத்தை பார்த்து நகர்கையில், அவள் மீது விழுந்திருந்த பாதி கண்கள் சுயநினைவுக்கு திரும்பி அவரவர் பணியை செய்வது போல பாவித்தன.
அவள், ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்தாள். நிலையத்தின் அனைத்து கண்களும் நிஜமாகவே அவரவர் பணியைப் பார்க்க தொடங்கின.
உள்ளே விஷ்ணு ரயில்வே நிலைய அதிகாரியாக அமர்ந்திருந்தான், மகிழாவைக் கண்டதும், உதட்டில் சிரிப்புடன், எழுந்து, “என்ன அதுக்குள்ள வந்துட்ட..?” என்று சொல்லியபடி மர நாற்காலி ஒன்றை நகர்த்தி, அவள் அமர ஏதுவாக மின் காத்தாடியின் காற்று படும்படியாக போடுகிறான்.
“என்னங்க ஆபிசர் உபசரிப்புலாம் பலமா இருக்கு..?” கிண்டலாக நகைத்துவிட்டு நாற்காலியில் அமர்கிறாள்.
”என்ன சாப்பிடற..?”
பக்கத்து அறையில் இருந்த பணியாளர் சுப்பையாவை குரலுயர்த்தி அழைத்து நூறு ரூபாய் தாளை கொடுத்து இரண்டு குளிர் பானம் வாங்கி வர அனுப்பினான்.
இதற்கிடையில், இவ்வளவு நேரம் தன் வலது கைக்கும் மெலிந்து வளைந்து வளர்ந்த சிறு இடைக்கும் நடுவில், இடிபட்டு போதையில் தொங்கிய கைபையை கழற்றி, அதனுள் இருந்து திருமணப் பத்திரிகையை எடுத்து மேசையின் மீது வைக்கிறாள்.
“சாம்பிள் பிரின்ட் ரெடி ஆகிறிச்சா..?” என்று வினவிக்கொண்டே திருமண பத்திரிகையை விரித்துப் பார்க்கிறான்; பத்திரிகையில் இருக்கும் உரையை உரக்க படிக்க ஆரம்பித்தான்.
மகிழா தன் மனதிற்குள் நானம் கொண்டதோடு உதட்டின் சிரிப்பில் மெல்ல அவனைக் கொல்கிறாள்.
“நெனச்சதெல்லாம் சாதிச்சுக்கிற..! சரியான ஆளுதான் நீ…” என்று எள்ளி நகையாடிவிட்டு, அவன் கையைக் கிள்ளினாள்.
“நான் என்ன சாதச்சிகிட்டேன்..? எல்லாம் உன்னாலதான்” என்றான் விஷ்ணு.
மகிழா, முகத்தில் ஒரு செல்லமான பெரும் கோபத்துடன், “காலேஜ்ல நானா முதல்ல உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினேன்..? நானா உன்ன சுத்தி சுத்தி வந்து லவ் பண்ண வச்சேன்..? நானா ரயில்வே எக்ஸாம் எழுதி வேல வாங்கிட்டு ஃபேமிலியோட உங்க வீட்டுக்கு வந்து மேரேஜ்க்கு ஓகே பண்ணினேன்..? எல்லாத்தையும் நீயே பண்ணிட்டு எல்லாம் என்னாலதான்னு ஈஸியா சொல்ற..? ம்ம்..?” என்று படபடவென பேசித் தீர்த்தாள்.
விஷ்ணு, இது எதையும் கேட்காமல், அவள் பேசும்போது அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்த அவளிரு கரங்களை பற்றி “இதுக்கெல்லாம் காரணம் நீ இல்ல, உன் கண்ணுதான்… ம்ம் ஓகேவா..?” என்றுகூறி சிரித்துக்கொண்டே சமாதானம் செய்தான்.
“உடனே ஐஸ் வைக்காதடா..!” என்று அவள் கைகளைகட்டி தன் வயிற்றின் மீது வைத்து கொண்டு, புருவத்தை உயர்த்தி, கொஞ்சலாக மிரட்டுகிறாள்.
அவளின் செய்கையில் அழகும் நளினமும் பின்னிப் பிணைவதில் மயங்கிய அவன் மனமுவந்து வாய் விட்டு சிரிக்கிறான்.
“சிரிச்சது போதும் வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்…” என்கிறாள்.
“இல்லடி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு, ஈவினிங் வெளிய போலாம்” என்றுதன் கடமையை மனதில் வைத்துக் கொண்டு அவளின் அழைப்பை தள்ளி வைக்கிறான்.
“நா போறேன், வரதுனா வா…” என்றுகோபித்துக் கொண்டு வெளியேறுகிறாள்.
“ஏய் கொஞ்சம் இருடி…” என்று அவளைதடுத்து நிறுத்தும் முன் அலுவலக தொலைபேசி அலறுகிறது.
வேலையில் நேர்மை கொண்ட அவனது மனம் முதலில் தொலைபேசியை எடுத்து பதிலளிக்க சொல்கிறது. தற்போது நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் தொடர்வண்டி அல்லாமல் மற்றொரு எக்ஸ்பிரஸ் வண்டியும் அந்நிலையத்தை இன்னும் சில நிமிடங்களில் கடக்கவிருப்பதை தொலைப்பேசி வாயிலாக அறிகிறான்.
உடனே ஒலிபெருக்கி மூலம் இச்செய்தியை நிலையத்தில் தெரிவிக்கிறான். வரவிருக்கும் எக்ஸ்பிரஸ் வண்டிக்காக தண்டவாளத்தின் தடம் மாற்றியை இயக்கி பக்கத்து தண்டவாளம் வழியே அது கடந்து செல்லும் படியாக செய்கிறான்.
அதற்கான பணிகளை முடித்துவிட்டு, தன் காதலியைப் பார்க்க விரைந்து அலுவலகத்தை விட்டு வெளியேற முயலுகையில் சுப்பையா கையில் இரு குளிர்பானங்களுடன் எதிரே நிற்பதை பார்க்கிறான். அவருக்கு நன்றி சொல்லி சில்லென்ற அவ்விரு கண்ணாடி கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை வாங்கி மேசை மீது வைத்து விட்டு மீண்டும் தன் காதலியை தேட தொடங்குகினான். அலுவலகத்தை விட்டு சில அடி தூரம் நடந்த உடனே “தம்பி, பாப்பா இந்த பக்கமா போனாங்கப்பா…” என்றுஅவன் நகர்ந்த திசைக்கும் எதிர் திசையை காட்டினார் சுப்பையா. ”சரி தேங்க்ஸ்ண்ணா..” என்று சொல்லிவிட்டு நடைமேடையின் இறுதிவரை பார்வையை வீசிப்பார்க்கிறான். அவளைக் காணவில்லை. விரைந்து நகர்கிறான். நடைமேடையின் பக்கவாட்டில் பயணிகள் வண்டி நின்று கொண்டிருக்கிறது, சிலர் பெட்டியில் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருந்தனர்.
விஷ்ணு ஒவ்வொரு பெட்டியாக கவனித்தபடி வேகமாக நடக்கிறான். ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர், ஹிந்து, முஸ்லிம், அலுவலக வேலைக்குச் செல்பவர்கள், கூலி வேலைக்குச் செல்பவர்கள் என பலதரபட்ட ஜனங்களையும் பார்க்கிறான். கடைசி பெட்டி வரை நடந்த விஷ்ணு அங்கு மகிழா இல்லை என்று உணர்ந்து பார்வையை திருப்பும் முன் சற்று தூரத்தில் மகிழாபோல யாரோ தென்படுவதை உணர்கிறான். உற்று நோக்கி பார்க்கையில் அது மகிழாதான் என்பதை உறுதி செய்து அவளை நோக்கி இரண்டு அடிகள் வைத்த உடனே ஏதோ ஆபத்து என்பதை அறிகிறான்.
மகிழாவோ தன் கால்கள் தண்டவாளத்தின் தடம் மாற்றியில் சிக்குண்டு இருப்பதால் அலறிக் கொண்டிருக்கிறாள். என்ன ஆபத்து என்பதை விஷ்ணு புரிந்துக் கொள்ளும் இரு நொடி வேளையில் அந்நிலையத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் வண்டியும் அவன் கண்களுக்கு தெரிகிறது. மகிழா விஷ்ணுவை கண்டுவிட்டு “விஷ்ணு காப்பாத்துடா, கால் மாட்டிகிச்சுடா…” என்று அலறுகிறாள். மறுநொடியே, வாளை தூக்கிக் கொண்டு வெட்ட வரும் வில்லனைப் போல, மகிழாவின் உயிரைப் பறிக்க ஒலியெழுப்பிக் கொண்டு ரயில் விரைகிறது. விஷ்ணு அடுத்தடுத்த நொடிகளில் தன் இதயம் கணப்பதை உணர்கிறான்.
நடக்கவிருக்கும் கோரத்தை யூகித்த அவன் தடம் மாற்றியை திருப்பி மகிழாவை காப்பாற்ற, திரும்பி இரண்டு அடிகள் நகர்வதற்குள் அவன் கால்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. காரணம் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் ரயிலை அவன் மறந்துவிடவில்லை. தடம் மாற்றியை இயக்கி மகிழாவை தப்பிக்க வைத்தால் வருகின்ற விரைவு ரயில் நின்று கொண்டிருக்கும் பயனிகள் ரயிலில் மோதிவிடும் என்பதை உணர்கிறான். இரண்டு தண்டவாளங்கள் மட்டுமே அந்நிலையத்தில் இருப்பதும் அவனுக்கு நன்கு தெரியும். இதற்கிடையில் மகிழா பலமுறை, ”விஷ்ணு… விஷ்ணு…” என்று சிக்குண்ட அவள் காலை பற்றிக் கொண்டு கதறிவிட்டாள்.
விஷ்ணு, மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் விரைவு ரயிலைப் பார்க்கிறான். அது நிறுத்தப்படக்கூடிய குறைந்த பட்ச தூரத்திற்குள் மகிழா இருக்கிறாள். விரைவு ரயிலை இதற்கு மேல் நிறுத்த முயற்சித்தாலும் அது மகிழா இருக்கும் இடத்தைக் கடந்துவந்துதான் நிற்கும்.
மீண்டும் திரும்பி பயனிகள் ரயிலைப் பார்க்கிறான். ரயிலில் அவன் பார்த்த அனைத்து உயிர்களின் மதிப்பும் அவன் மனதிற்குப் புரிகிறது. மகிழாவை காப்பாற்றியாக வேண்டும் , அதே நேரத்தில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது, வருகின்ற விரைவு ரயிலை நிறுத்த முயற்சிப்பதும் பயன்தராது.
இரு நொடிகள் தன் கண்களை மூடி யோசித்த விஷ்ணு, கண்களை திறந்த உடன் மகிழாவை நோக்கி ஓடுகிறான். மகிழாவோ, கண்ணீர் மல்க அழுது கதறி கொண்டு இருக்கிறாள். மகிழாவை அடைந்த விஷ்ணு அவளின் இரு கைகளை பற்றிஅவளை நிற்க வைக்கிறான். அவள் புலம்பும் எதையும் காதில் வாங்காமல் அவள் கண்ணீரைத் துடைக்கிறான். அவள் நெற்றியில் குறுக்கிட்டிருந்த சில கூந்தல் கற்றைகளை ஒதுக்கி, அவள் கண்ணங்களை பிடித்து நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்.
ரயில் தன்னை நெருங்கவதை அறிந்த மகிழா பயத்திலும் பதற்றத்திலும் செய்வதறியாது தடுமாறிய பொழுதும் விஷ்ணுவை தள்ளிப்போக சத்தமிட்டு தன் கைகளால் தள்ளுகிறாள். விஷ்ணு தன் பலத்தினால் மகிழாவை இருக்க பிடித்து அவளை கட்டி அணைக்கிறான். மகிழாவின் கண்ணீர் விஷ்ணுவின் தோளை தொட மகிழாவின் காதில் விஷ்ணு, ”நானும் வரேன்…” என்று மெல்ல கூறினான். அவனது குரலில் மரண பயம் துளிகூட இல்லாததைக் கண்டு மகிழா நெகிழ்ந்து அவனை தள்ளுவதை நிறுத்தி, மீண்டும் ஒருமுறை அவன்மீது காதல் கொண்டாள்.
விரைவு ரயில் அவர்களது உயிரைச் சத்தமில்லாமல் கிள்ளி எடுத்துச்சென்றது.
பச்சினங்களுக்கு மட்டுமே அந்தக் கோரத்தின் இரைச்சல் பூகம்பமாய்க் கேட்டிருந்ததுபோல, அந்தக்கணமே அத்தனை பறவைகளும் பதறிப்பறந்து களைந்தன. ஸ்டேசனைச் சுற்றி வேலையேதும் இன்றி ஓய்வாகப் படுத்திருந்த அத்தனை பைரவர்களும் எழுந்து நின்று, பிரபஞ்ச பேரதிர்வுகளுக்குக் காரணம் என்னவென்று யூகிக்க முயன்றன. பூமி-கிரக வாசிகளான பூனைகளோ தத்தம் தலையை மட்டுமே திருப்பிப் பார்த்தன, மூன்று நொடிகளுக்குப் பிறகு, எல்லாம் புரிந்ததுபோல, எதுவும் நடக்காதது போல, தன் அன்றாட அத்துமீறல்களை திருட்டுத்தனமாய்த் தொடர்ந்தன.
காதலர்களுக்காகக் காத்திருந்த சில்லென்ற இரு குளிர்பானங்கள்தான் அவர்களுக்கான முதல் கண்ணீரைத் தன் கண்ணாடி மேனியில் வழியவிட்டுக் கொண்டிருந்தன.
Story by
Suryadevan Vasu