Based on a true story. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டக் கதை.
1. டீக்கடை
இமல் சத்தத்துடனே அந்த வெள்ளிக்கிழமை அவனுக்குத் தொடங்கியது. பனி நிறைந்த இருள் விலகாத அதிகாலையில், உறையவைக்கும் நீரிலும் நடுக்கமில்லாமல் குளித்து, ஈரம் உலராத தலைமுடியை வாரிக்கொண்டு, நெற்றியில் திருநீறிட்டுப்பின் வழக்கம் போல் தன் டீக்கடையைத் திறக்கத் தொடங்கினான் சரவணன்.
டீக்கடை என்கிற எல்லைக்குள் சரவணனின் விரல்கள் முதலில் தொடுவது அந்த இசைப்பெட்டியைத்தான். அதிலே தமிழ்க் கடவுள்களின் பாடல்களை டீக்கடைக்குள் மட்டுமே கேட்டு ரசிக்கக்கூடிய ஒரு ரம்யமான அளவில் ஒலிக்கச்செய்வான்.
ரோட்டில் இப்படியும் அப்படியும் செல்லும் வண்டிகளின் சத்தமும் ஹாரன் சத்தமும் அவ்வப்போது பாட்டின் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு செல்லும். பறவைகள் பல வந்து அதனதன் குரலில் காலை வணக்கம் சொல்லிவிட்டுச் செல்லும். தெருநாய்கள் வந்து நலம் விசாரித்துவிட்டு உப்பு பிஸ்கட்டை உரிமையாக உண்டுச் செல்லும்.
டீக்கடைக்குள் மாட்டியுள்ள தன் குலதெய்வப் படம், பலவிதமான முருகன் படங்கள், ஐயப்பன், பெருமாள், மதுரை மீனாட்சி அம்மனின் படங்களின் வழி அனைத்து கடவுள்களும் அவனை எப்போதும் கண்கொட்டாமல் சலனமின்றி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
மூன்று ஊதுபத்திகளை ஏற்றிவைத்து கடை முழுக்க கமலச்செய்வான். அனைத்து வேலைகளையும் இசையோடு ஒன்றிணைந்து செய்துக்கொண்டே இருப்பான். டீக்கடையில் எப்போதும் டி.எம்.எஸ்-சும், சீர்காழி கோவிந்தராஜனும், முருகனும், ஐயப்பனும் அருவமாக உடனிருப்பதாகவே அவன் உணர்வான். இளம்வயதில் கருப்பு சட்டை அணிந்துக்கொண்டு ஆன்மிகம் மறுத்தவன், மெல்ல இசையின் வழி முருகனையும் ஐயப்பனையும் மனதிற்கு நெருக்கமாக்கிக் கொண்டான். அவை தரும் ஆறுதலும் அமைதியும் வாழ்வில் முப்பதைந்து வயதிற்கு மேல்தான் உணர்ந்தான். பாலில் கலக்கும் சக்கரையைப்போல இசை தன் மனதில் எண்ணத்தில் கலப்பதை அலாதியாக உணர்வான்.
புறநகர்ப் பகுதியில் அதிகம் வியாபாரம் நடக்காத இடத்தில் அந்த டீக்கடை இருந்தது. சரவணன் டீக்கடையைத் தன் வீட்டு வாசலிலே கூறைப் போட்டு நீட்டிருந்தான். தனியே கடை வைக்கும் அளவிற்கு வசதியில்லை. ஜன்னல் ஏதும் இல்லாத அந்த அறை, குடும்பம் வசிப்பதற்காகக் கட்டிய கட்டிடம் இல்லை. வியாபாரம் செய்ய, கடை வைத்துக்கொள்ள, வாடகைக்கு விடுவதற்காக் கட்டியது. அதை வாடகைக்கு எடுத்து அதிலே தன் குடும்பத்தை தங்க வைத்துக்கொண்டு, டீக்கடையை வெளியே நீட்டிக்கொண்டான். வீட்டிற்கு ஒரு வாடகை, கடைக்கு ஒரு வாடகை கொடுக்க முடியாததால், ஊருக்குள் வாடகைக்கு இருந்த வீட்டை காலி செய்துவிட்டு இங்கே வந்து குடும்பத்துடன் ஒரு வருடமாக வசித்துவருகிறான்.
பால் வண்டி வந்து பால் கொடுத்துவிட்டுப்போனது முதல் டீக்கடைப்பிரியர்கள் வந்து பீடி சிகரெட் புகைத்துக்கொண்டு டீயை உரிந்துத் தள்ளிக்கொண்டிருக்கும் நொடி வரை சரவணனின் கண் முன்பே அந்த சாலை இருக்கும் நிலபரப்பின் நிறமும் வெப்பமும் மாறிக்கொண்டே இருப்பதை நித்தம் அவன் சாட்சிப்படுத்திக்கொண்டே வருவான். டீக்கடைக்கு வரும் அனைவருக்கும் முகம் சுளிக்காமல் தேநீர் போட்டுத்தருவதோடு, சிறு புன்னகையையும் இலவசமாய்த் தருவான்.
2. இருமல்
இப்படி இசையில் கரைந்துருகிக் கொண்டே சரவணன் டீக்கடை வேலைகளை செய்துக்கொண்டிருக்கும் போதும் இடையிடையில் வரும் இருமல் சத்தைத்தை அவன் கவனிக்காமல் இல்லை. ஒவ்வொரு முறை இருமல் சத்தம் கேட்கும் போதும் தான் செய்யும் வேலையை ஒரு கனம் நிறுத்திப்பின் தொடர்ந்தான். இருமல் சத்தம் அவனுது வீட்டில் இருந்துதான் வருகிறது. இத்தனை நாள் அவனிடம் இருந்த அந்த வேகமும் தெளிவும் இன்று அவனிடம் இல்லை. சற்று மனச்சிதைவுடன் காணப்பட்டான்.
தன் மூன்றரை வயது மகள் ஜெயஸ்ரீ புதன் கிழமையில் இருந்து இருமிக்கொண்டே இருக்கிறாள். மார்கழி பனியில் பலரும் சிரமம்ப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜெயஶ்ரீ சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தாள். சளியும் இருமலும் அவளை சோகத்தின் வடிவமாய்க் காட்டியது.
சமீப நாட்களில் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த சில குளறுபடிகளால் வரிசையாக மூன்று பச்சிளம் குழந்தைகள் இறக்க நேரிட்டது. நாளிதழ்களிலும் அரசு மருத்துவமனை செவிலியர்களின் அலட்சியமே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்று அச்சிட்டுருந்தார்கள். டீக்கடைக்கு வரும் சிலரும் அந்த சம்பவத்தைப் பற்றிப் பேசாமல் இல்லை.
"இதெல்லாம் அரசாங்கத்தின் மூலம் நடக்கும் பணக்காரர்களின் அஜெண்டா, அவர்களின் வழிகாட்டுதலின் படியே எல்லாம் நடக்கிறது. இப்படி அரசு மருத்துவமனையின் தரத்தை குறைத்துக்கொண்டே இருந்தால்தான் பணம் இருப்பவன் தனியார் மருத்துவமனைக்கு போவான். தனியாரிடம் இருந்து வரி வசூலிக்கலாம். எல்லாரும் இலவச மருத்துவம் எடுத்துக்கொண்டால், தனியார் எப்படி வரி கட்டுவார்கள்? தனியார் மருந்து ஆலைகள் எப்படி லாபம் பார்ப்பார்கள்? அவர்கள் லாபம் பார்க்காமல் எப்படி வரி கட்டுவார்கள்?"
என்று ஏதேதோ புரியாத விளக்கங்களை சரவணனிடம் விளக்கிக்கொண்டிருந்தார் வரலாற்று ஆசிரியர் திரு.இரவிச்சந்திரன். அவர் இத்தனையும் சொல்லி முடிப்பதற்குள் அவர் வாங்கிய டீயே ஆறிப்போனது.
3. அரசு மருத்துவமனை
ஜெயஶ்ரீ டவுனில் உள்ள அந்த அரசு மருத்துவமனையில்தான் பிறந்தாள். அப்போதுக்கூட ‘அங்கு இலவச மருத்துவம்தானே பெறுகிறார்கள்’ என்ற அலட்ச்சியத்தன்மை சில பணியாளர்களிடம் வெளிப்பட்டது. அவர்களின் கீழான நடமுறைகள் அந்த நாட்களில் ஜெயஶ்ரீ பிறந்ததைக்கூட சரவணனால் மகிழ்ச்சியுற விடாமல் மனதில் உறுத்திக்க்கொண்டே இருந்தது.
உச்சக்கட்டமாக, பிரசவம் முடிந்த சில மணித்துளிகளே ஆன ஒரு பெண்ணை, இரு செவிலியர்கள், பிரசவம் பார்த்ததற்காக பணம் கேட்டிருக்கிருக்கிறார்கள். அந்தச் சமயம் பணம் தரக்கூட வசதியும் இல்லை, ஆளும் இல்லை அந்தப் பெண்ணிற்கு. அந்தக் கோவத்தில் பிரசவித்த களைப்பு குறையாத அந்தப்பெண்ணை படுக்கையில் படுத்திருந்தபோதே அவள் உடலை மூடியிருந்த பச்சைநிறத் துணியை உருவி நிர்வாணப்படுத்தி, “காசில்லாத உனக்கெல்லாம் எதுக்குடி மானம்” என்று கேட்டிருக்கிருக்கிறார்கள். மேற்கொண்டு அவளின் பிறப்புறுப்பையும் மார்பகத்தையும் கொச்சையாக ஒப்பிட்டார்கள். அவ்வளவு மயக்கத்திலும் வலியிலும் இருந்தாள். பிரசவ வலிகுறையாத அந்தப்பெண்ணால் துளியும் அசையக்கூட முடியவில்லை. மானம் காக்க அவள் கைகூட அன்று அவளுக்கு உதவவில்லை. எந்தக்கிருஷ்ண பகவானும் வரவில்லை. தமிழ்க்கடவுள்களின் புகைப்படம் கூட பிரசவ அறையில் இல்லை. இருந்திருந்தால் அவர்கள் எப்போதும் போல கண்கொட்டாமல் சலனமின்றி இந்த அவலத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்தப் பெண்மணி சரவணனின் மனைவி செல்வி.
அந்த நேரம் அவன் அரசு மருத்துவமனையில் செல்வியின் பிரசவ அறைக்கு வெளியில் காத்திருந்தான். அப்போது அவனது நண்பன் சண்முகம் சரவணனின் கைபேசியில் அழைத்து சண்முகத்தின் மனைவிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாகக் கூறினான். சண்முகம் நல்ல நண்பன். சிறு வயதுமுதலே பழக்கம். சண்முகம் ஒரு தழுதழுத்தக்குரலில் உதவி கேட்கவும், சரவணனால் தவிர்க்க முடியவில்லை. சரவணன் ‘தன் மனைவியின் பிரசவத்திற்காகக் காத்திருக்கிறேன்‘ என்றுகூட சொல்லாமல் எழுந்துப் போய்விட்டான். அதே டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரத்தம் கொடுத்துவிட்டு, சண்முகம் தந்த ஐநூறுரூபாய் பணத்தை வாங்க மறுத்துவிட்டு, அவனது நன்றியை மட்டும் வாங்கிக்கொண்டு, திரும்ப வந்த ஒரு மணி நேரத்திற்குள், செல்வியை செவிலியர்கள் தகாதமுறையில் நடத்தியிருந்தார்கள். செல்வி அதை சரவணனிடம் இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்தப்பிறகுதான் சொன்னாள். செல்விக்கு ‘ஒரு கணவன் தன் மனைவியின் பிரசவத்தைவிட எது ஒன்றாவது முக்கியமாக இருக்குமா?’ என்ற கோவம் சரவணன் மீது இருந்தது. செல்வி நடந்ததை சொல்லும்போது சரவணனால் அதை எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.
இந்த சம்பவங்களின் பாதிப்பு சரவணனனுக்கும் செல்விக்கும் அரசு மருத்துவமனை மீது ஒரு பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
4. பணம்
ஜெயஶ்ரீயை வழக்கமாக ஒரு தனியார் க்ளினிக்கில்தான் தேவைப்படும்போது காட்டிவந்தார்கள் சரவணனும் செல்வியும். அந்த க்ளினிக்கில் உள்ள டாக்டர்.பிரசன்னா இளம் வயதுடையவர். மிகக்குறைந்த கட்டணம்தான் வாங்குவார். ஐம்பது நூறு ரூபாயில் ஆலோசனையும் மருந்தும் கிடைத்துவிடும். நேற்று வியாழக்கிழமை அவரிடம் சென்று பார்த்ததில் அவர் ஜெயஶ்ரீயின் நெஞ்சிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப்பார்த்துவிட்டு நெஞ்சில் சளி நிறைய இருப்பதால் பெட்டில் அட்மிட் ஆகி மருத்துவம் பார்க்கச் சொல்லியிருந்தார். ஆனால், தனியார் மருத்துவமனையில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு சரவணனிடம் பணம் இல்லை. அரசு மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு தைரியமும் நம்பிக்கையும் இல்லை, அந்த இடத்தில் நடந்த அவலத்திற்காக அதை இன்னும் மன்னிக்கவும் இல்லை.
சரவணனன் அவனுக்கு தெரிந்தவர்களிடத்தில் விசாரித்ததில், தனியார் மருத்துவமனையில் குழந்தையை அட்மிட் செய்து மருத்துவம் பார்க்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்தது ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு ஆகும் என்று அறிந்திருந்தான். அந்தப்பணம் அவன் ஒரு மாதத்திற்கு செலவு செய்வதைவிட அதிகம். மாத வருமானமே ஐயாயிரம்தான் வரும் அவனுக்கு. சரவணனும் செல்வியும் கடந்த சில மாதங்களாக சேமித்துவைத்தப் பணம் மூவாயிரமும் புதன்கிழமை அன்று அரசாங்கம் பறித்துச் சென்றிருந்தது.
புதன்கிழமை சில சலவைச்சட்டை அதிகாரிகள் வந்து சரவணனின் டீக்கடையில் கமெர்சியல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தாமல், வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தியதற்காக அபராதம் ஆயிரம் ரூபாயும் மேற்கொண்டு கமர்சியல் சிலண்டருக்கான வைப்புத்தொகை (டெபாசிட் அமவுண்ட்) மூவாயிரத்தி ஐநூறும் வசூலித்துச் சென்றார்கள். சரவணனனைக் கெஞ்சவும் வைத்தார்கள். இறுதியில் அவர்கள் கிளம்பும்முன் நல்லவர்கள் போல சரவணனுக்கு மேற்கொண்டு அறிவுரையும் சொன்னார்கள். அவர்களுக்கு பணம் கொடுக்கவே சரவணன் அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்க வேண்டியதாய் இருந்தது. அந்த அதிகாரிகளையும் எல்லா சாமிகளும் புகைப்படங்களின் வழி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்தனுப்பியப் பிறகு சரவணன் எல்லா சாமிப்படங்களையும் ஒருமுறைப் பார்த்துக்கொண்டான்.
சரவணன் வெள்ளிக்கிழமை முழுவதும் பணத்தைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். ஜெயஶ்ரீயின் இருமல் அதிகமாகிக்கொண்டேச் சென்றது. டீக்கடைக்கு ஆள் யாரும் அதிகம் வரவில்லை. சரவணன் தன் கடையில் கடனில் டீக்குடித்தவர்களிடம் இரண்டு நாட்களாக பாக்கியை செலுத்தச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறான். எல்லோரும் ஏதோதோ காரணம் சொன்னார்கள், ஏழில் ஏதாவது ஒரு கிழமையைச் சொல்லி அதில் தந்துவிடுகிறேன் என்றார்கள். முப்பதில் ஒரு தேதி சொல்லி அதில் தந்துவிடுகிறேன் என்றார்கள். ஒரு சிலர் மட்டுமே தரவேண்டிய தொகையைத் தந்துவிட்டார்கள். கையில் ஐநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. யாரிடம் பணம் கேப்பது என்று யோசித்தவனுக்கு சரசுப் பாட்டி ஞாபகம் வந்தாள்.
5. சரசுப்பாட்டி
சரசுப்பாட்டி செல்வியின் அம்மாவின் அம்மா. சரசுதான் சரவணனுக்கும் செல்விக்கும் எப்போதும் உறுதுணையாய் இருந்தவள். அவர்களை சேர்த்து வைத்தவளும் சரசுதான். போன வருடம் வயது மூப்பால் இறந்துவிட்டாள். செல்வி தன் முதல் கணவனைப் பிரிந்து தன் பாட்டி வீட்டிற்கே வந்துவிட்டாள். செல்வியின் அம்மா எப்போதோ இறந்துவிட்டாள். செல்வி பருவமடைவதற்கு முன்பிருந்தே அவளை வளர்த்தது அவளது பாட்டி சரசுதான். செல்வி வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வீட்டிற்கு வந்து நிற்கும் போது அவள் கருவுற்றிருந்தது அவளுக்கேக்கூடத் தெரியாது. ஆனால், அவளின் மார்பகத்தைப்பார்த்தே சரசு அனுமானித்துவிட்டிருந்தாள். அந்தக் குழந்தையை சரசும் செல்வியும் நல்லபடியாக பெற்று எடுத்தார்கள். அது ஆண் குழந்தை. அந்தக்குழந்தைக்கு ஜெயசீலன் என்று பெயரும் வைத்தார்கள். ஜெயசீலனுக்கு ஒரு வயது இருக்கும்போது, செல்வியை சரவணனுக்குக் கட்டிகொடுக்க சரசு முயற்சி செய்தாள். சரவணன் எந்த வேலைக்கும் போனதில்லை. ஊரில் சும்மா குடித்துவிட்டு கோவில் மரத்தடியில் படுத்துக்கிடப்பான். அவன் யாரையும் ஏமாத்தியதில்லை என்று சரசுப்பாட்டிக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே ஏமாந்த செல்விக்கு சரவணன் சரியான ஜோடியாக இருப்பான் என்று சரசுப்பாட்டி கணக்குப்போட்டாள்.
பார்ப்பவர்கள் கண்ணுக்கு சரசுப்பாட்டி செல்வியின் வாழ்வை சூனியமாக்குகிறாள் என்று தோன்றியது. சில ஊர் மீசைகளுக்கும் வேட்டிகளுக்கும் செல்வியை அடையும் வாய்ப்பைக் கிழவி கெடுக்கிறாள் என்று அடிவயிறு எரிந்தது. என்றோ ஒருநாள் பசியில் இருந்த சரவணனுக்கு சரசுப்பாட்டி சோறு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள். அதை அவளேக்கூட மறந்திருக்கக்கூடும். ஆனால் அதன் நினைவை வைத்துக்கொண்டு சரசுப்பாட்டி கேட்டுக்கொண்டதற்காக செல்வியைத் திருமணம் செய்ய சரவணன் ஒப்புக்கொண்டான். சண்முகமும் மற்ற நண்பர்களும் வேண்டாம் என்று சொல்லியும் சரவணன் கேட்கவில்லை.
திருமணம் முடிந்த அன்று முதலிரவுக்கு முன்பு செல்வியிடம் சரசுப்பாட்டி,
செல்வீ, சரவணன் நல்லவந்தான், ஆனா ஆம்பள, அவனுக்கு செயசீல மேல அன்புலாம் வராது, அவன உன் கையில வச்சிக்கனும்னா நான் சொல்ற மாதிரி அவன்கூட ஒரு புள்ளைய பெத்துக்கோ, அப்போதான் அவன் உன் குடும்பத்து மேல பாசமா இருப்பான். புரியுதா? என்னடி அமைதியாவே இருக்க, ஆம்பளைங்க ரெண்டு பொண்டாட்டி வச்சிக்க என்னைக்காவது கூச்சப்பட்டு இருக்கானுங்களா? நீ மட்டும் ஏன்டி பத்தினியா இருக்கனும் நெனைக்கிற? உன் மொதப்புருசன் வருவான்னு இன்னுமா நம்பிட்டு இருக்க? எவனும் வரமாட்டானுங்க, ஆம்பளைங்களுக்கு சோறு கண்ட எடமே சொர்க்கம்னு இருப்பானுவ, மாரு கண்ட எடமே மயங்கிக்கெடப்பானுவ.
என்று அறிவுரை சொல்லி அறையினுள் அனுப்பினாள். அங்கே சரவணன் செல்வியைக் கண்டதும், எழுந்து நின்று, என்னப்பேசுவது என்று தெரியாமல் இருந்தான். செல்வி நின்று கொண்டே இருந்தாள். சரவணன் ஆசையாய் அருகில் செல்ல, செல்வி பயத்திலும் ஒப்பில்லாமலும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். சரவணன் செல்வியின் மனதைப் புரிந்துக் கொண்டவனாய், சட்டென்று வெளியே சென்று ஜெயசீலனுடன் கயித்துக்கட்டிலில் படுத்து தூங்கிவிட்டான். செல்வி அழுகையை அடக்கிக்கொண்டே அறையினுள் சுருண்டுப் படுத்துக்கிடந்தாள். சரசு உட்பட பலரும் இதைக் கண்டு முகம் சுளித்தார்கள். சிரித்தார்கள். ஏளனம் பேசினார்கள். அடுத்தநாள் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். சரவணனும் செல்வியும் ஜெயசீலனும் வாழத் தொடங்கினார்கள்.
அன்று தொடங்கி அடுத்த இரண்டரை வருடங்களுக்கு செல்வியும் சரவணனும் கணவன் மனைவியாய் இருந்தார்களேத் தவிற, வாழவில்லை. ஜெயசீலனின் நல்ல நண்பனாகிப்போனான் சரவணன். சரவணன் ஜெயசீலனிடம் சிநேகிதமாய்ப் பழகுவதைப் பார்த்தே சரவணனை செல்விக்குப் பிடித்துப்போனது. சரவணனுக்கு ஒரு வாரிசைத் தன்மூலம் பெற்றுத்தர செல்வி விரும்பினாள். அவள் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டரை வருடங்கள் என்றாலும், அதிலே அவள் தன் முதல் கணவனை முழுவதுமாக மறந்திருந்தாள். அவள் நினைவுகளில் எல்லாம் சரவணனே இருந்தான். பிறகு செல்வி விரும்பியது போல் சரவணனின் வாரிசு உருவாக ஒருவருடம் தேவைப்பட்டது. அந்தக் குழந்தைதான் ஜெயஶ்ரீ. ஜெயசீலன் தன் தங்கையை ஆசையாய்ப் பார்த்துக்கொள்வான். செல்விக்கு கடந்த ஆறு வருடங்கள் வாழ்க்கை அன்பாய் அழகாய் இருந்தது. அதனால் சரசுப்பாட்டியின் இறப்புக்கூட அவளைப் பெரிதாய் பாதிக்கவில்லை. சரவணன் அப்படி அன்பாய் மூவரையும் பார்த்துக்கொண்டான். சரசுப்பாட்டிக்கு உலகம் தெரியாது என்றாலும் மனிதர்களின் மனது நன்றாய்த் தெரிந்திருந்ததை அடிக்கடி செல்வி நினைத்து சரவணனிடம் ஆச்சர்யப்பட்டுக்கொள்வாள்.
6. வரலட்சுமி
சரவணனுக்கு உதவக்கூடிய இடத்தில் இருப்பவன் சண்முகம் மட்டுமே. ஏற்கனவே அவனிடம் ஐநூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தான் சரவணன். சண்முகம் அரிசி மில் ஓனரின் பையன். ஜெயஶ்ரீ பிறந்த அதே தினத்தில்தான் சண்முகத்தின் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் தன்ஷிகா என்பதை ஒன்றிரண்டு முறை சண்முகத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். முன்புப் போல சரவணனும் சண்முகமும் நட்பு பாரட்டுவதில்லை. வேலையின் பளு காரணமாக அவரவர் நாட்களைக் கடத்துவதே அவரவருக்கு பெரும் பாடாகிவிட்ட இன்றைய காலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து நேரம் பார்க்காமல் பேசித்தீர்க்கும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
சரவணன் டீக்கடையை மாலை ஐந்து மணிக்கெல்லாம் மூடிவிட்டு அங்கிருத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சண்முகத்தின் வீட்டிற்கு நடந்தே சென்றான். சண்முகத்தின் வீடு காம்பவுண்ட் வைத்துக் கட்டிய இரண்டு மாடி பெரிய வீடு. அரிசி மில்லும் வீடும் ஒரே காம்பவுண்டுக்குள் இருக்கும். உள்ளே சென்றவன் சண்முகத்தைத் தேடினான். நைட்டியின் மேல் துண்டை சால் போல போட்டுக் கொண்டு ஒரு பெண்மணி வீட்டின் முற்றத்தில் இருந்து, “யாருங்ணா வேணும்?” என்று கேட்டாள். அவள் சண்முகத்தின் மனைவி வரலட்சுமி. சண்முகத்தின் திருமணத்தன்று வரலட்சுமியை திருமணப் பெண்ணாகப் பர்த்தது. பிறகு இன்றுதான் பார்க்கிறான்.
சரவணன், ” சண்முகம் இல்லைங்களா?”
வரலெட்சுமி, “அவரு வெளிய போயிருக்காருங்க”
சரவணன், “எப்போ வருவான்னு சொன்னாரா?”
வரலெட்சுமி, “இல்லைங் அவரு எப்ப வருவாருன்னு சொல்லைங்ளே” என்று சொல்லிவிட்டு சரவணனனையே பாத்துக்கொண்டிருந்தாள்.
சரவணன், “சரிங்க, சண்முகத்துக்கு போன் போட்டேன் எடுக்கல, அதான் நேர்ல பாத்துப் பேசிட்டு போலாம்னு வந்தேன்.” என்று சொல்லிப் பிறகு என்ன செய்வதென்று யோசித்து, “சண்முகம் வந்தான்னா சரவணன் வந்துட்டு போனன் மட்டும் சொல்லுங்க. இல்லன்னா ஃபோன் பண்ணச் சொல்லுங்க”
வரலட்சுமி, “சரிங்கணா”
சரவணன் காம்பவுண்டைக் கடந்து வந்தான். வீட்டுக்குச் செல்ல கால்கள் மறுத்தன. செல்வி ஜெயஶ்ரீயை வைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல தயாராக இருப்பாள் என்று எண்ணினான். அவளை ஏமாற்றவும் மனமில்லாமல், அங்கே அருகில் இருந்த வேப்பமரத்தடியில் கிடந்த கல்லில் அமர்ந்துக்கொண்டான். அங்கிருந்து சண்முகத்தின் மில்லில் நடக்கும் வேலையையே பார்த்துக்கொண்டு சண்முகத்திற்காகக் காத்திருந்தான். தூரத்தில் எங்கோ மாரியம்மன் கோவிலின் ஸ்பீக்கர்
"கண்ணபுர நாயகியே மாரியம்மா.. நாங்க கரகமேந்தி ஆடவந்தோம் பாருமம்மா... கண்திறந்து பார்த்தாலே போதுமம்மா... எங்க கவலையெல்லாம் மனசவிட்டு நீங்குமம்மா..."
என்று பக்தியை பிரபஞ்சத்திற்கு ஒலிபரப்பிக்கொண்டிருந்தது.
7. சண்முகம்
மணி ஆறைக் கடந்தப் பிறகு ஒரு புல்லட் சத்தம். அது சண்முகம்தான். சரவணன் ஆவலாய் எழுந்தான். முதலில் சண்முகம் சரவணனை சரியாகப் பார்க்கவில்லை. யாரோ என்று நினைத்திருந்தான். சரவணன் கையை அசைத்து வேகமாக இரண்டடி முன்னே வைக்கவும், சரவணனை அடையாளம் கண்டுக்கொண்டு சண்முகம் புல்லட்டை நிறுத்தினான்.
புது புல்லட்டில் சரவணனை ஏறச்சொன்னான் சண்முகம்.
சரவணன், “நீ முன்னாடி போ, நா பின்னாடியே வரேன்.”
சண்முகம், “அட வாடா, பந்தா காட்டாத” என்று வழுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி காம்பவுண்டிற்குள் வண்டியை விட்டான். வீட்டின் முன்பு புல்லட்டை நிறுத்திவிட்டு, சரவணனை வாசலின் வராண்டாவில் இருக்கும் சோபாவில் உட்காரவைத்தான். வரலெட்சுமியிடம் தண்ணீர் எடுத்து வரச் சொன்னான். சரவணன் தண்ணீரைக் குடித்தான். வரலெட்சுமியின் நைட்டியைப் பிடித்துக்கொண்டு அவள் பின்னாலே திடுதிடுவென தன்ஷிகா வந்துக்கொண்டும் போய்க்கொண்டும் இருந்தாள். சரவணன் புதிதாய் இருப்பதால் தன்ஷிகா தன் இயல்பில் விளையாடவில்லை.
வரலட்சுமி இவர்கள் இருவரும் என்ன பேசப்போகிறார்கள் என்று கேட்க வேண்டும் என்பதில் தீர்க்கமாய் இருந்தாள். சண்முகம் சாதியப்பாகுப்பாடு பார்க்கமாட்டான்தான். ஆனால் வரலட்சுமி அப்படியில்லை.
சண்முகம் பொதுவாக நலம் விசாரித்துப் பிறகு என்ன விசியம் என்று கேட்டான். சரவணன் தயக்கத்துடனே, “என் பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல, ஹாஸ்பிட்டல்ல சேக்கனும், ஒரு முவ்வாயிரம் பணம் வேணும். அடுத்த மாசம் தந்துருவேன்.” என்று சொல்லிமுடித்தான். அது வரைப் பேசிய இயல்பான குரல், சரவணனிடம் கடன் கேட்கும் போது இல்லை. குரலில் விரிசல் இருந்தது.
சண்முகம் சற்று அமைதியானான். சண்முகம் என்ன யோசிக்கிறான் என்று சரவணனால் யூகிக்க முடியவில்லை. சண்முகம் முதல் மூன்று நொடிகளுக்கு சரவணன் சொல்வது பொய் என்றே நினைத்தான். சரவணன் அந்த அசௌகரியமான அமைதியைக் கலைக்க, “ஜிஹெச்சிக்குத்தான் போலாம்னு இருந்தோம், இப்ப அந்த மூனு கொழந்தைங்க செத்துப்போன விசியம் தெரிஞ்சிதலிருந்து, செல்வி பயப்படுறா. அதான் பிரசண்ணா டாக்டரும் பெட்ல அட்மிட்பண்ணி ட்ரீட்மெண்ட் எடுத்துக்க சொல்லி..” சரவணன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவனது குரலில் கெஞ்சும் தொனி வந்ததில் மனம் இலகி சண்முகம் சட்டென எழுந்தான். உள்ளே சென்றான். சரவணனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றும் தெரியவில்லை.
உள்ளே சென்ற சண்முகம், பிரோவைத் திறந்து பணத்தை எடுக்க முற்பட்டான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வரலட்சுமி வந்து சண்முகத்திடம் அதட்டலானக் குரலில், “ஏனுங்க் என்னப் பண்ணப் போறீங்க்?” என்று கேட்டாள். சண்முகம் சமாதானப் படுத்தும் குரலில், “அவன் பொண்ணுக்கு ஆஸ்பிட்டல் செலவுக்கு காசில்லாம இருக்கான், கடங்கேக்குறான். அதான் தர்றேன்.” வரலட்சுமி மீண்டும் அதே எதிர் கட்சி வக்கீல் தொனியில், “அத நீங்க நம்புறீங்களாக்கும்?” என்று கேட்டாள்.
வெளியே சோபாவில் சரவணனின் மூளையில், சண்முகத்திடம் ‘ஐயாயிரமா கேட்டிருக்கலாமே’ என்ற எண்ணம் வலுவாய் எழுந்தது. ஐயாயிரம் அதிகம் என்பதாலே சரவணன் மூவாயிரம் மட்டும் கேட்டான். எதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அவனைத் தன் தேவைகளைக்கூட உச்சரிக்க முடியாத அளவிற்கு அடக்கி ஒடுக்கி இருந்தது. அது நூறாண்டுகளாய் இருக்கும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடு. பிறகு சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்தான். சண்முகத்தின் வாசற்கதவருகே வந்து ஒரு சில நொடி உள்ளேப்போக யோசித்தான். ஏதோ ஒரு மனப்போராட்டம் அவனுள் அரங்கேறிக்கொண்டிருந்தது.
வீட்டினுள் சண்முகம், “அவன எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்டீ, அவன் யாரையும் ஏமாத்தினது இல்ல. நல்லவன்.” என்று வக்காலத்து வாங்க, வரலட்சுமி, “அதுக்கு, வெள்ளிக்கிழம அதுவுமா பொழுதுசாஞ்சப்பொறவு யாராச்சும் காசத் தருவாங்களா? நாளைக்குக் காலைல வந்து வாங்கிக்க சொல்லுங்க. வெளக்கு வச்சப்பொறவு பத்து ரூவாக்கூட வீட்டவுட்டு வெளியப்போறது ஆவாதுங்க” என்று சொல்லி நைட்டியைப் பிடித்து இழுத்துக் கொண்டு சினுங்கிக்கொண்டிருந்த தன்ஷிகாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பீரோவின் கதைவை சாத்திப் பூட்டினாள். சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான். கண்டிப்பாக வரலட்சுமியிடம் மல்லுகட்டி சரவணனுக்குக் கடன் தர முடியாது. அப்படி தந்துவிட்டால் இன்றிரவு அவள் கச்சேரியை ஆரம்பித்து தன்ஷிகாவை வைத்துக்கொண்டு ஆட்டமாடிவிடுவாள் என்று யூகித்தான். பிறகு, தயங்கிக்கொண்டே வெளியே வந்தான்.
சரவணன் சோபாவில் கவனத்தை எங்கோ தொலைத்தவன் போல அமைதியாய் இருந்தான். அவனிடம் சண்முகம், “சரவணா, இன்னிக்கிதான் அரிசி லோடு மூனு லாரி அனுப்பிவிட்டுருக்கேன். நைட்டு எனக்கு பணம் வந்துரும். நீ போய் கொழந்தைய ஹாஸ்பிட்டல்ல சேரு. நாளைக்குக் காலைல நான் காச எடுத்துட்டு வரேன். அங்க எதும் கேட்டாங்கன்னா எனக்கு ஃபோன் போடு. நான் பேசுறேன்.” என்று சண்முகம் தன்னால் முடிந்ததைச் சொன்னான். சரவணன் சண்முகத்திற்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். சண்முகத்தின் முகத்திலும் குரலிலும் ஒரு மலுப்பல் இருந்ததை யார்வேண்டுமானாலும் எளிதில் கண்டுபிடிக்கலாம். பால்ய ஸ்நேகிதன் சரவணன் கண்டுபிடிக்க மாட்டானா? சரவணன் சிந்தனையற்று நடக்கும் போது, அதே தொலைதூரத்தில் அதே கோவிலில் ஒலிபெருக்கி ஓயாமல் பாடிக்கொண்டிருந்தது.
"புன்னைநல்லூர் மாரியம்மா புவனம் போற்றும் தேவியம்மா கண்திறந்து எங்களையே கொஞ்சம் நீயும் பாருமம்மா...."
ஏனோ சரவணனுக்கு இந்த பக்திப் பாடல்களெல்லாம் கடவுள்கள் நம்மை கெஞ்ச வைத்து அதை இசையுடன் சேர்த்து ரசித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
8. விடியாத காலை
சரவணன் வீட்டை அடைந்தபோது, செல்வி வாசலிலே அமர்ந்திருந்தாள். அவள் சரவணனை எதிர்பார்த்துத்தான் காத்திருந்தாள். சரவணன், “சண்முகம் காலைல வந்து பணம் தர்றானாம். நாம் வேணும்னா இப்பவே ஆஸ்பிட்டல் போயிரலாம். காலைல பணத்தைக் கட்டிறலாம்.” என்றான். செல்வி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதியை சரவணனால் எளிதில் கையாள முடியவில்லை. வீட்டினுள் ஜெயஶ்ரீ தூங்கிக்கொண்டிருந்தாள். அவளின் மூச்சு சத்தம் நன்றாகக் கேட்டது. சளி மூக்கை அடைத்ததில் அவள் வாயில்தான் மூச்சை விட்டுக்கொண்டிருந்தாள். ஜெயஶ்ரீயை தடவி விட்டுக்கொண்டே இருந்தான். அன்றிரவு ஓரிருமுறை ஜெயஶ்ரீ இருமலினால் சிரமப்பட்டாள். பிறகு பனிரெண்டு மணிக்கு நன்கு தூங்கிப்போனாள். ஜெயசீலனும் செல்வியும் உடன் தூங்கினார்கள்.
காலை மூன்றரை மணிக்கு சரவணனுக்கு விழிப்பு வந்தது. எழுந்தவன் சற்று நேரம் நிதானமாய் இருந்தான், பிறகு எதுவொன்றோ சரியாய்ப்படவில்லை அவனுக்கு. அருகில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயஶ்ரீயைப் பார்த்தான். சிரமப்பட்டு அவள் விட்டுக்கொண்டிருந்த மூச்சு சத்தம் அப்போது இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள். இருமல் சத்தமும் கொஞ்ச நேரமாகக் கேட்கவில்லை என்பதை மெல்ல உணர்ந்தான். ஜெயஶ்ரீக்கு மூச்சுத்தினறலும் சரியாகிவிட்டது சளியும் தீர்ந்துவிட்டதென்று என்று ஒருகனம் நம்பினான். மறுகனமே அவள் தூங்குவதில் ஏதோ சரியில்லை என்று அவளை சரியாக படுக்கவைத்தான்.
அப்போது அவளது மேனி சில்லிட்டுருந்ததைக் கவனித்தான். எழுந்து மின்விளக்கை எரியவிட்டான். ஜெயஶ்ரீ அசைவின்றி இருந்தாள். அவளது நெஞ்சு மூச்சை உள்ளிழுத்து பெரிதாகவில்லை. மின்விளக்கின் வெளிச்சத்தில் செல்வி விழித்துக்கொண்டாள். ஜெயஶ்ரீயை அணைத்து ஒளியினால் அவள் விழித்துக்கொள்ளாதபடி அவள் முகத்தை மறைக்க முற்பட்டாள். சில நொடிகளில் செல்வியும் ஜெயஶ்ரீயின் உடல் வெப்பமின்றி இருப்பதையும், அசைவற்று இருப்பதையும் கவணித்துவிட்டாள். சரவணனை கேள்வியாகப் பார்த்தாள். சரவணனின் கண்களில் கண்ணீர் ஏற்கனவே வழிந்தோடிக் கொண்டிருந்தது.
செல்வி பதறி எழுந்து அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களை அழைத்து அவர்களின் உதவியோடு ஆட்டோ ஒன்றை வரவழைத்து மருத்துவமனைக்கு ஜெயஶ்ரீயை தூக்கிக்கொண்டு சரவணனுடன் விரைந்தாள். ஜெயசீலன் ஒன்றும் புரியாமல் பாதி தூக்கத்தில் எழுந்து வாயின் விளிம்பில் சல் ஒழுகிக் காய்ந்த தடத்தைத் துடைக்காமல் வாசலில் உட்கார்ந்து இருந்தான். இதையும் சாமிப் படங்கள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன.
அன்றைய தினம் எப்படி மணித்துளிகள் போயின என்றே சரவணனுக்குத் தெரியவில்லை. செல்வியின் அழுகையும் ஜெயசீலனின் அழுகையும் இவனை ஏதோ செய்திருந்தது. என்ன செய்யவேண்டும் என்று ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஊர் மீசைகளும் கிழவிகளும் என்ன செய்ய வேண்டும் என்பதை மாற்றி மாற்றிப்பேசி மணிக்கொரு பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தார்கள். விசியம் தெரிந்த சண்முகம் மதியம் ஒரு மணிக்கு என்பது ரூபாய் சாமந்திப்பூ மாலையுடன் வந்தான். சரவணனின் கையில் ஐயாயிரம் பணத்தைத் தினித்து விரல்களை மடக்கி மூடிவிட்டு நகர்ந்தான். சரவணன் அந்த ஐநூறு ரூபாய்த் தாள்களை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணில் நீர் ததும்பி, அந்தப் பணத்தாள்கள் மங்கலாய்த் தெரிந்தன.
இறுதியாக இடுகாட்டில் ஜெயஶ்ரீயை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினான் சரவணன். செல்விக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் ஒன்றுதான். “நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன். எனக்கு ஏன் இப்படி நடக்கணும்?”
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் சரவணன் சண்முகத்தின் வீட்டிற்குச் சென்றான். சண்முகம் அப்போது வீட்டில் இல்லை. தன்ஷிகா மட்டுமே வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
தன்ஷிகாவின் கையில் அதே ஐநூறு ரூபாய்த் தாள்களைக் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டான். சரவணன் செல்வதைப் பார்த்த வரலட்சுமி, தன்ஷிகாவின் கையில் பணம் இருப்பதைப் பார்த்தாள். உள்ளிருந்து சொம்பு நீரை எடுத்து வந்து, பத்து ஐநூறு ரூபாய்த் தாள்களையும் தீட்டு கழிக்க நீரில் அலசி வீட்டிற்குள் உலரவைத்தாள். தன்ஷிகாவின் கையையும் கழுவ மறக்கவில்லை, வரலட்சுமி. சரவணன் வந்து பணத்தை திருப்பிக்கொடுத்ததை தனக்கு தெரியாது என்று சாதிக்கத் தயாராக இருந்தாள். சண்முகத்திடம் நடந்ததைப் பற்றி எதுவும் தெரியாதுபோல்தான் காட்டிக்கொள்ளப்போகிறாள்.
இன்று ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்குச் செல்லும் வழியில் மீண்டும் அதே தூரத்துக் கோவிலில் பாடல் ஒலித்தது.
"ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா... நங்க எண்ணிவந்த வரங்கொடுக்க வாருமம்மா... ஆயிரங்கண் படைத்தவளே பாரமம்மா... இங்கு உன்னையன்றி வேறுகதி ஏதம்மா..."
பிறகு சரவணனுக்கு தூங்கும் போதெல்லாம் சிரமப்பட்டு மூச்சுவிடும் சத்தமும், இமல் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. வெள்ளிக்கிழமைகளின் மீதொரு வெறுப்பும் வந்தது. மனிதர்களின் காரணகாரியங்களின் மீது பெருங்கோபமும் வந்தது.
சரவணன் மீண்டும் முருகன் பாடல்களை கேட்கத் தொடங்கினான். அதன் மூலமே தன் பெரும் கோவங்களையும் இல்லாமல் போகச் செய்ய முயற்சித்தான். மீண்டும் பக்திப்பாடல்களின் மூலம் கரைந்துருகிட எண்ணினான்.
நல்லவன் நல்லவனாகவே வாழ்வதற்கு இங்கு வழியில்லை. வல்லவன் நல்லவனாக இருபதற்கான சாத்தியமும் இல்லை. வலிமை என்பதே பிற உயிரைக் கொல்வதிலும் அடக்குவதிலும்தானே அளவிடப்படுகிறது. நல்லவன் முட்டாளாவான் நலிவான். அறிவாளி கெட்டவனாவான் வளர்வான். வலியவன் நல்லவனாய் வளர்வது உண்டோ? வளர்ந்தாலும் நிலையாய் நிற்பதும் உண்டோ?
~
சூர்யதேவன்.வா
01.10.2023 4.51am