சிறுகதை: நல்லசாமி

1. தவிப்பு

பரபரப்பாகப் பேசுவதற்கு எந்த விசயமும் இல்லாத நாளை மென்று விழுங்குவது மிகவும் சலிப்புற்றதாக சப்பென்று இருக்கும். அதன் நீளமும் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு நாளில்தான் நல்லசாமி செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தான். அதுவே நல்லசாமிக்கு ஒருவிதமான கவலையைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

சுவைப்படப் பேசுவதற்கு எதாவது கிடைக்காதா என்று சில நாட்களாகவே தேடிக்கொண்டிருந்தான். வழக்கம் போல் காலை நாளிதழ்களைப் படித்து அவற்றில் கிடைத்த சில சில துணுக்குத் தகவல்களைப் பத்திரமாக மூளையில் தரவேற்றிக் கொண்டான்.

“சொத்துக்காக தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பள்ளி தாளாலர் கைது, லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது”,

என எல்லாக் காரமான விசயங்களையும் தன் உடல்மொழியில் ஒலிபரப்பு செய்யத் தயாராக இருந்தான். ஆனால், இத்தனை வருடங்களில் எல்லா விதமான சம்பவங்களையும் கிட்டத்தட்ட கண்ணில் பட்ட எல்லோரிடமும் அவன் அரங்கேற்றிவிட்டான். சம்பவங்களின் இடமும் பெயரும் வயதும் மட்டுமே மாறும். சம்பவங்கள் சில டஜன்கள்தான் நடக்கின்றன. சிறிய கிராமத்தில் அவன் சொல்லும் நியாயங்களைக் காதுகொடுத்துக் கேட்க வெறும் ஐம்பது ஜோடி காதுகள்தான் கிடைக்கும். அதிலும் சில காதுகளில் அவன் கத்திப் பேசினால்தான் கேட்கும்.

கடந்த சில நாட்களில் குறை சொல்வதற்கும், நியாயம் பேசுவதற்கும் உள்ளாட்சித் தேர்தலோ, தேர் திருவிழாவோ, நல்லது கெட்டதோ, எது ஒன்றும் நிகழவில்லை. நல்லசாமியின் ஐம்பது வருட வாழ்க்கையில் இப்படி ஒரு தருணத்தை அவன் கடந்து வந்ததில்லை. எதாவது நடக்கும் அதைப்பற்றி கண்ணில் படும் அனைவரிடமும் கிட்டத்திட்ட ஒரேமாதிரியான தோரணையில் ஒப்பித்து அந்தக் கூற்றுகளில் தன் கருத்தைச் சொல்லி அதன்மூலம் தன்னை ஒரு சரியானவனாக நியாயாமானவாகக் காட்டிக்கொண்டே வாழ்ந்து வந்த அவனுக்கு, எந்த ஒரு பேசுபொருளும் கிடைக்காதது பெரும் தவிப்பையே தந்தது.

இருந்தும் அவன் விடவில்லை, இரண்டு மூன்று நாட்களாக அந்தக்கிராமத்தில் இருந்தவர்களிடம் ஏதோதோ பேசிப்பார்த்தான். சுவைபடச் சொல்லிப்பார்த்தான். யாரும் ரசித்துக்கேட்கவில்லை. கவனம் கொடுக்கவில்லை. எல்லோரும் சொங்கிப்போய் இருந்தார்கள். சிலரை வம்பிழுத்தும் பார்த்தான். சண்டை லேசாக முற்றும் போது ‘நல்லசாமி மீதுதான் தப்பு’ என்று யாரும் சொல்லும் முன்னரே கவனமாக அதைத் தவிர்த்தும் கொண்டான்.

2. கிணறு

மின்வெட்டு நாள் என்பதால் அன்று பகல் முழுக்க டிவி பார்க்க முடியவில்ல. நியுஸ் சேனலும் இல்லை, கேடிவியும் இல்லை. ஆனிமாசமும் வெயில் சுட்டெரிப்பதை நிறுத்தாமல் இருந்தது. நாள் நெடுக்க தவிப்புடன் இருந்த நல்லசாமிக்கு, மாலை ஐந்து மணிக்கு கிணற்றில் குளிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. துணைக்கு ஆளைத்தேடினான். சரியான தோழர்கள் யாருமே கண்ணில் படவில்லை. வேறு வழியின்றி பெரும் சலிப்புடனே கரும்புக் காட்டின் விளிம்பில் உள்ள வட்டக்கிணற்றை நோக்கி நடந்தான். கிராமத்தின் கடைசிவீட்டில் இருந்துப் பார்த்தால், சராசரி மனிதன் அடிவயிற்றை இருக்கி உயிர் போகக் கத்திக் கூப்பிட்டாலும் குறைந்த அலைநீளத்தில் கேட்கக் கூடிய தூரத்தில் அந்தக் கிணறு இருந்தது.

வட்டக்கிணற்றின் கிழக்கு மேற்கு என இருபுறங்களிலும் நேர்த்தியாக அடுக்கப்பட்ட படிக்கட்டுகள் டி.என்.ஏ போல, எதிரெதிர் திசையில் சுழன்று கினற்றுக்குள் இறங்கின. ஐம்பது வருடங்களுக்கு முன் திருத்தமாகக் கட்டப்பட்ட அந்த வட்டக்கிணற்றில் குளிக்காத ஆட்கள் அந்த ஊரிலே இல்லை. ஊருக்குள் தண்ணி டேங்க் கட்டியப் பிறகு இந்த முப்பது வருடங்களில் ஒரு நாளுக்கு குறைந்தது ஒருவராவது வந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் குறைந்து வந்தது. ஒரு மாறுதலுக்காக நல்லசாமி அந்தக்கிணற்றில் குளிக்க முடிவெடுத்தான். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அவனுக்கு இந்த முடிவு ஓரளவிற்கு ஆறுதலைத் தந்தது.

தோளில் வேஷ்டி மற்றும் அரக்கு நிறத் துண்டையும், ஒரு கையில் சின்த்தால் சோப்பையும், மறு கையில் ரப்பர் பேண்ட் போட்டு பின்பக்க மூடியை இறுகப்பற்றிய நோக்கியா ஃபோனையும் எடுத்துக்கொண்டு, மண்டைக்குள் ஐம்பது வருட வாழ்வின் பல ஞாபகங்களைப் புரட்டிக்கொண்டும், அதிலே தன் கற்பனைகளைத் திணித்துக்கொண்டும் நடந்ததில் சட்டென கிணற்றை நெருங்கிவிட்டான். சந்தேகத்துடன் திரும்பி ஊரின் கடைசி வீட்டைப்பார்த்தான். அதே தூரம்தான் இருந்தது.

மூன்று பக்கம் கரும்புத் தோட்டமும், ஒரு பக்கம் தரிசாகவும், நடுவில் அந்தக் கினறும், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், மஞ்சள் பரப்பும் மேற்கு வானமும், லேசான காற்றும் அவனுக்கு மாயைப்போன்றதொரு புத்துணர்வைத் தந்தன. சிறு லயிப்புடன் நல்லசாமி கண்ணதாசனின் பாடலொன்றை முனுமுனுத்தான். இன்னும் அவன் கிணற்றை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதற்குள்ளாகவே குளித்துமுடித்த ஒரு பரவசத்திற்கு வந்துவிட்டான்.

மேற்கு பக்கப் படிக்கட்டில் வழக்கமாக பெண்கள்தான் குளிப்பார்கள். அதனாலேயே அது சற்று சேதமடையாமல் இருந்தது. ஆண்கள் எப்போதும் கிழக்குப் பக்கப் படிக்கட்டில்தான் குளிப்பார்கள். ஊரில் இருந்து நடந்து வந்தால் முதலில் கிழக்குப்பக்க படிக்கட்டுதான் இருக்கும். ஆம்பளைங்க வந்தோமா குளித்தோமா போனோமா என்று இருப்பார்கள். யாரும் அதிகம் பயன்படுத்தாதலேயே மேற்குப் பக்க படிகட்டை பெண்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார்கள். ஆண்களின் படிகட்டு சற்று அதிகமாகவே சேதமடைந்து இருந்தது. ஆட்கள் அடிக்கடி வராததால் ஆண்கள் இறங்கும் கிழக்குப்பக்க படிக்கட்டில் ஒரு புதர் போல அரசமரங்கள் முளைத்திருந்தன.

கிழக்கில் இருந்து வந்த அவன், ஏனோ இன்று மேற்குப் பக்க படிக்கட்டில் இறங்கி குளிக்கலாம் என்று முடிவெடுத்து கிணற்றை எட்டிப்பார்த்தான். பன்னிரெண்டடி ஆழத்தில் பச்சையும் நீலமும் கலந்த ஒரு இலகுவான நிறத்தில் இருந்த அந்தக் கிணற்றுத் தண்ணீர் சிறு அழகான அசைவுகளுடன் உயிர்க்கொண்ட கண்ணாடிப்போல மேகங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

வட்டக்கிணற்றைச் சுற்றிவந்து பெண்களின் படிகட்டில் இறங்கிக் குளிக்கலாம் என்று முடிவெடுத்தான். அந்த எண்ணமே அவனுக்கு ஒருவிதமான கிளுகிளுப்பைத் தந்தது. அந்த கான்கிரீட் சுவர்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் பொட்டுகளைக் கண்டதும் அதுவரை அவன் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த சிலப் பெண்களை கிணற்றுக்குள் குளிக்கும் தோற்றத்தில் நிற்பதுபோல் கற்பனை செய்துகொண்டே மேற்கு பக்க முதல் படிகட்டில் கால் வைத்தவன் திடுக்கிட்டுப் போனான்.

3. நாகம்

கிழக்குப் பக்க ஆண்களின் கல் படிகட்டில் ஒரு கருநாகம் நீட்டி நெழிந்து அசைவற்று சாவகாசமாகப் படுத்திருந்தது. நீர் இருக்கும் உயரத்தில் இருந்து இரண்டு கல் படிகட்டுகளுக்கு மேல் அதுவும் லயித்துக் கொண்டிருந்தது.

கடப்பாறைக் கம்பியைவிடவும் சுற்றளவு அதிகம் கொண்ட அந்தக் கருநாகம், கடப்பாறை நீளத்திற்கும் இருக்கும் என்று அனுமானித்தான். அதன் கம்பீரம் சில நொடிகளுக்கு, நல்லசாமியின் கண்பார்வையைக் காந்தம் போல பிடித்துக்கொண்டது. சில நொடிகள் அவனை உறைய வைத்தது, அதன் மினுமினுப்பான பாலிஷ் போட்டது போல் இருந்த கண்ணாடிப்போன்ற கரு மேனிதான். கால் அங்குல கருப்புநிற வைரங்களை நேர்த்தியாக அடுக்கி வைத்தாற் போல் ஒரு பளபளப்பான மதிமயங்கும் மேனி அந்த நாகத்திற்கு.

நல்லசாமி தன் கண்ணையும் கைக்கால்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். ஆனால், கரு நாகம் இன்னும் உறைந்ததுப் போல்தான் இருந்தது. சற்றும் நகரவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம், அல்லது மிகவும் துன்பத்தில் இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? தோலுரித்த கரு நாகம் வட்டக்கிணற்றின் படிகட்டுகளில் படுத்துக்கிடப்பது அதற்கு ஆறுதலைத் தருமா அல்லது ஆர்கஸத்தை தருமா என்று.

நல்லசாமி அங்கே என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் இருந்தான். அந்த சிந்தனை வறட்சியைப் போக்க தன் உள்ளாடைப் பாக்கெட்டில் இருந்த பீடிக்கட்டை எடுத்தான். ஒரே ஒரு பீடியை உருவி வறண்டுக் கிடந்த அவனது கருத்த உதடுகளுக்கு இடையில் பிடிகொடுத்து, தீப்பெட்டியின் ஒரே உரசலில் சரட்டென்று நெருப்பை எரியவிட்டு பீடிக்கு உயிர்க் கொடுத்தான். அவன் விடும் வெண்ணிறப்புகை மேகம் போல மிதந்து காற்றில் கரைந்தது. அதையும் கிணற்றுக் கண்ணாடி நீர் பிரதிபலிக்கத் தவறவில்லை.

மூளைக்குள் பலப்பல எண்ணங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டு முன்வந்தன. அவற்றில பலவும் அந்த நாகத்தைக் கொல்லவே கூச்சலிட்டன. பிறகு கண்ணில் படும் அனைவரிடமும் அதைப்பற்றி பேசி குறைந்தது ஒருவாரம் ஓட்டலாம் என்று கணக்குப்போட்டான். சரி கொன்றிடலாம் என்று நாகத்திற்கு மரண தண்டனை முடிவானது நல்லசாமியின் மனக்கோர்ட்டில். நீதிபதிகள் தீர்ப்பெழுதிவிட்டு பேனா முனையை உடைப்பதைப்போல பீடியை கான்கிரீட் திட்டில் குத்தி நசுக்கி நெருப்பை அணைத்தான்.

4. வன்மம்

நாகத்தை கொல்ல சரியான ஆயுதத்தைத் தேடினான். கிணற்றைச் சுற்றி வந்தான், மக்கிய சோப்புக் கவர், கிழிந்த ஷேம்பு பாக்கெட், என குளியல் குப்பைகளைத் தவிற வேறு எதுவும் திடமான கூர்மையான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிணற்றிக்கு வரும் வழியில் புளியமரத்தடியில் சாரம் கட்டும் கழிகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைசியாக கோவில் திருவிழாவின் போது பந்தல் போடுவதற்கு அந்தக் கழிகள் பயன்பட்டன. இப்போது அதன் ஞாபகம் வந்து புளியமரத்தை நோக்கி வேகமாக நடந்தான்.

அங்கே சென்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த கழிகளில் நல்லதாக ஒன்றை கண்களால் தேடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த இடத்திற்கு ஊரில் இருந்து இன்னொருவன் வந்துக் கொண்டிருந்தான். அவன் களியமூர்த்தியின் இளைய மகன் செந்தில் என பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டான் நல்லசாமி. அவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சென்று நாகத்தை கொன்றிடலாம் என்று முடிவு செய்தான். அவன் அருகில் வருவதற்காகக் காத்திருந்தான். செந்திலுக்கு எந்த அவசரமும் இல்லை. தன் சைனா ஃபோனில் சினிமாப் பாடலொன்றை ஒலிக்கவிட்டு சாவகாசமாக நடந்து வந்துக்கொண்டிருந்தான். அதற்குள் நல்லசாமி நடக்கப்போகும் சம்பவங்களை மனத்திரையில் வேகமாக முன்னோட்டிப்பார்த்தான். அதில்,

"நல்லசாமியும் செந்திலும் சேர்ந்து நாகத்தைக் கழியால் அடித்துக் கொன்றனர். அதைப்பற்றி ஊராரிடம் அனைவரிடமும் அதிசயித்து சொல்லினர்."  

இந்தக் கற்பனை அவனுக்கு போதிய பரபரப்பைக் கொடுக்கவில்லை. அவன் இருந்த பெருந்தவிப்பிற்கு ஒரு பாம்பைக் கொன்று அதைப்பற்றி பேசித்தீர்ப்பது போதுமானதாக இல்லை. பரபரப்புப்பசித் தீர வேறு ஒரு கற்பனையை மனத் திரையில் ஓட்டினான். அதில்,

"நல்லசாமியும் செந்திலும் சேர்ந்து நாகத்தைக் கழியால் அடித்துக் கொல்லும்போது, நாகம் செந்திலைக் கொத்திவிட, அவனைக் காப்பாற்ற பெரிய ஆஸ்பித்திரிக் தூக்கிச்சென்று, ஊரே பதறிப்போக, வட்டக்கிணற்றில் இருக்கும் அந்த நாகத்தைக் கொல்ல ஊரே குத்துகோல், கழி, கம்புடன் கிளம்பி வர, நல்லசாமியிடம் அனைவரும் எப்படி ஆச்சி, என்ன பாம்பு என்று கேட்க அதைப்பற்றி ஊராரிடம் அனைவரிடமும் அதிசயித்து சொன்னான் நல்லசாமி. செந்திலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்ததை கூடுதல் சிலாகிப்பாகப் பார்த்தான்"  

இந்தக் கற்பனை அடடா, பலே என்று இருந்தது. திடீரென்று அறிவுகெட்ட மனசு அந்த சம்பவத்தில், செந்திலுக்கு பதிலாக பாம்பு நல்லசாமியை தீண்டிவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தது. நல்லசாமி தன்னை அந்த அபாயகரமான இடத்தில் வைத்துப்பார்த்துவிட்டு சற்று திடுக்கிட்டுப்போனான். இந்தக் கற்பனைகளை முன்னோட்டங்களை மனத்திரையில் ஓடவிட்டுப்பார்த்த இந்த இருபது நொடிகளில் செந்தில் நல்லசாமியின் அருகில் வந்துவிட்டான்.

செந்தில், “ண்ணா, குளிக்க போறீங்களா?” என்று சிறு புன்னகையுடன் கேட்க,

கனநேரத்தில் ஒரு குதூகலமான யோசனையை யோசித்துவிட்டு,

நல்லசாமி, “ஆமா கண்ணு, இப்பதான் வந்தேன், இந்த சதாசிவம் இந்தா வந்தர்றேன் சொன்னான், அவனும் வரட்டும்னுதான் பாத்துக்கிட்டு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே பாம்பு இருப்பதைப் பற்றி சொல்வதைக் கவனமாகத் தவிர்த்தான். சட்டென அவனது மூளை அவனுக்கே உண்டான பானியில் யோசித்து ஒரு திட்டத்தை வகுத்தது. அதன்படி,

செந்தில் மட்டும் வட்டக்கிணற்றில் குளிக்கச்செல்ல, நாகம் அவனைத் தீண்ட, உயிருக்குப் போராடும் அவனை புளியமரத்தடியில் இருந்து ஓடிச்சென்று நல்லசாமி காப்பாற்றி பெரிய ஆஸ்பித்திரிக்கு தூக்கிச் செல்ல, செந்தில் உயிர் பிழைத்தால் செந்திலின் குடும்பம் நல்லசாமிக்கு கடன்பட்டுவிடும், சாமிபோல வந்து காப்பாத்திட்டாரு என்று எல்லோரும் சொல்வர்கள், செந்தில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு மாசம் துக்கம் பேசலாம்.

இந்த கற்பனைக் குதூகலத்தில் நல்லசாமியிடம் செந்தில் பேசிய சத்தத்தை மூளை உள்வாங்கிக்கொண்டு அதனை வார்த்தைகளாகப் பிரிக்கத் தவறியிருந்தது. அதை மீண்டும் கேட்க, நல்லசாமி, “என்ன கண்ணு சொன்ன?” என்றான்.

செந்தில், “கரெண்ட்டு இன்னும் வரல, இங்கத்தான் வரனும்னேன்” என்று சிரித்தான்.

நல்லசாமியும், “ஆமா ஆமா, இங்க வந்துதான் ஆவனும்” என்று போலித்தனமின்றி சிரித்தான். செந்தில் கிணற்றுக்குச் சென்று கிழக்குப் பக்கப்படிகட்டில் இறங்கினால், அரசமர புதரை விலக்கினால் புதருக்குக் கீழே இருக்கும் கருநாகம் அவன் காலைத் தீண்டும் இடைவெளியில் சரியாக இருக்கும் என்று மனக்கணக்கொன்றைப் போட்டான்.

5. அரங்கேற்றம்

செந்தில் வட்டக்கிணற்றை நோக்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே, இன்னொரு பீடியை எடுத்து உதடுகளுக்கு இடையில் பிடிகொடுத்து, பந்தாவாக ஒரு உரசலில் பற்றவைத்தான். புகையை வானோக்கி விட்டான். மீண்டும் ஒரு இழுப்பு, ஒரு பெரிய புகையை ஊதினான், இப்படி அவன் செந்தில் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டிருக்க, பீடியின் கடைசி புகை புளியமரத்தைத் தாண்டும்போது செந்தில் வட்டக்கிணற்றை அடைந்திருந்தான். நல்லசாமி நடந்து வரும்போது சட்டென வந்த வட்டக்கிணறு, செந்தில் நடந்துசெல்லும்போது, ஒரு பீடியை முழுவதுமாக புகைத்துமுடிக்கும் தூரத்திற்கு நீண்டுப்போனதுபோல் உணர்ந்தான். நேரத்தையும் தூரத்தையும் கொண்டு ஒரு புதிய சார்புக் கோட்பாட்டையே அவன் இயற்றிக்கொண்டிருந்தான். உயிர்துறந்த பீடித்துண்டை தூக்கி எறிந்தான்.

செந்தில் கிழக்குப்பக்க படிகட்டில் இறங்குவதைப் பார்த்துக்கொண்டு மீண்டும் ஒரு பீடிக்கு உயிர்க்கொடுத்தான். ஏதாவது ஒரு சத்தத்தை கிணற்றுக்குள் இருந்து எதிர்பார்த்து கூர்மையாகக் கவனித்தான். காற்றின் வீச்சும், பறவைகளின் சத்தமும், பீடியில் இருக்கும் நெருப்பு காய்ந்த தெண்டு இலைகளை (பீடி இலைகளை) எரித்து உண்ணும் சத்தமுமே அவன் செவிகளில் கேட்டன. இரண்டாவது பீடியையும் தூக்கிப்போட்டான். மூன்றாவது பீடியையும் தூக்கிப்போட்டான். நல்லசாமி பொறுமை இழந்தான்.

வட்டக்கிணற்றை நோக்கி நடந்தவனுக்கு தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது. அது செந்தில் கிணற்றில் தத்தளிக்கும் ஒலிதான் என்று கற்பனை செய்து கொண்டு, நடையை வேகப்படுத்தினான். அப்போது அவனது நோக்கியா போன் ஒலி எழுப்பி அழைத்தது. சட்டென நின்று உள்ளாடைப் பையில் இருந்து போனை எடுத்தான். அதில் கண்ணன் என்று இருந்தது. அழைப்பை ஏற்க பச்சைப் பொத்தானை அழுத்தி காது கொடுத்துக் கேட்டான்.

மறுமுனையில் கண்ணன், “ஹலோ, நான் கண்ணன் பேசுறண்ணா,”

நல்லசாமி, “சொல்லு கண்ணா, நல்லாருக்கியா?,

கண்ணன், “நல்லாருக்கண்ணா, எங்க அம்மா அங்கயேதும் வந்துச்சாண்ணா?

நல்லசாமி, “இல்லையேப்பா!, ஏன் என்னாச்சி? ஏதும் சண்டையா?

கண்ணன், “சண்டலாம் எதும் இல்லண்ணா, சும்மா எப்பவும் போலத்தான் பேசிட்டு இருந்துச்சி, பாத்தா ஆளக்காணும். அதான் அங்கயேதும் வந்துச்சா கேட்டேன்.”

நல்லசாமி, “நான் இப்பதான் குளிக்க கெணத்துக்கு வந்தேன். நான் எதுக்கும் வீட்டுக்கு போய் பாத்துட்டு உன்ன கூப்பட்றேன்.” என்று சொல்லிக்கொண்டே கிணற்றை நோக்கி நடந்தவன், திரும்பி ஊர்ப்பக்கம் நின்றான்.

கண்ணன், “சரிண்ணா, போய் பாத்துட்டு சொல்லுங்க, நான் வச்சிடறேன்.” என்றான்.

நல்லசாமி, “ஆங்.. ஆங் சரி” என்று இணைப்பை துண்டித்தவாறே நிகழ்காலத்திற்கு திரும்பியவன், தன் உடல் தன்னை அறியாமல் ஊர்ப்பக்கம் திரும்பி இருந்ததைக் கவனித்தான், தான் காப்பாற்ற ஒரு உயிர் கிணற்றுக்குள் துடித்துக் கொண்டிருப்பதை எண்ணி சட்டென்று கிணற்றுப்பக்கம் திரும்பினான்.

செந்திலின் முக உருவத்தை புன்னகையுடன் மிக அருகில் வருவதைக் கண்டதில் திடுக்கிட்டுப்போனான். செந்திலை நாகம் தீண்டவில்லை நன்றாக இருக்கிறான் என்னும் அதிர்ச்சியில் இருந்து நல்லசாமி மீள்வதற்குள் செந்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பதை நல்லசாமி உணர்ந்து, “என்ன கண்ணு சொன்ன?”

செந்தில், “சதாசிவம் இன்னும் வரலையா? பொழுதே சாயப்போகுது” என்றவாறே நல்லசாமியைக் கடந்துச் செல்ல,

நல்லசாமி, “ஆமா கண்ணு, நாம ஒன்னு நெனச்சா, அது ஒன்னு நடக்குது. கொஞ்சம் நேரம் பாக்க வேண்டியத்தான்.” என்று தனக்கு மட்டுமே புரிய பதிலளித்தான். செந்தில் எதுவும் பேசுவதற்குள், பொறுமையற்ற நல்லசாமி, “ஏன்பா சட்டுன்னு குளிச்சிட்டு போற? ஏதும் அவசரமா?” என்றான்.

செந்தில், “அவசரம்லாம் இல்லண்ணா, வந்தேன் குளிச்சேன், கெளம்பிட்டேன், அவ்ளோதான்” என்று சொல்லுவதற்கு மட்டும் நின்றுவிட்டு தன் இயல்பான வேகத்தில் நடக்க ஆரம்பித்தான். அவன் சைனா போனில் ஏதோ சினிமா பாடலொன்றைக் கேட்டுக்கொண்டே நடந்தான்.

நல்லசாமி, “நான்கூட கல்யாணம் ஆன புதுசுல வேகமாத்தான் இருந்தேன்” என்று நக்கலாக வம்பிழுத்துப் பார்த்தான். செந்தில் ஒரு சின்ன தலையசைப்புடன் அந்த கிண்டலை வாங்கிக்கொண்டு பதில் ஏதும் கூறாமல், திரும்பிக்கூடப் பார்க்காமல், பாட்டின் இசையில் தன் தலைமுடி ஈரத்தை உலர்த்திக்கொண்டு ஊரின் பக்கம் மெல்ல நடந்துகொண்டே இருந்தான். அவன் பதில் ஏதும் சொல்லாமல் சென்றது நல்லசாமிக்கு ஒரு அருவருப்பான முகசுளிப்பைத் தந்தது. ஒரு ஏமாற்றத்தில் தான் தேவையற்ற வார்த்தைகளைப் பேசியதை நினைத்து அருவருப்பாக உணர்ந்தான்.

தவளைகள் மாலை நேர பின்னனி இசையை வாசிக்கத் தொடங்கின. வெட்டுக்கிளிகளும் அதை ஆமோதித்தன. சூரியன் மறைவதற்கு தயாரானான் .

6. தீர்ப்பு

நல்லசாமிக்கு நல்ல கோவம் வந்தது. கிணற்றை நோக்கி நடந்தான். வன்மக் கற்பனைகள் அரங்கேறாத விரக்தியில் வாயில் சில கொச்சை வார்த்தைகளை முனுமுனுத்தான். காரித் துப்பினான். நடந்து கொண்டே பீடியை பையில் தேடினான். ஒரே ஒரு பீடிதான் மீதமிருந்தது. உதட்டில் பிடிகொடுக்க, அது தவறிக் கீழே விழுந்தது. ஒரு நொடி விழுந்த பீடியைப் பார்த்துவிட்டு, அதை எடுத்து நன்றாக உதடுகளில் பிடிகொத்தான். தீக்குச்சியை உரச அது பற்றாமல் ஒடிந்து மடங்கிக்கொண்டது. அதைத்தூக்கி எறிந்துவிட்டு வேறு திக்குச்சியை உரசினான், பற்றவில்லை, வேகமாக உரசி ஆத்திரத்துடன் பற்றவைத்தான். உயிர்கொண்ட பீடியை பற்களால் கடித்துக்கொண்டே கிணற்றை நெருங்கினான்.

கிணற்றினுள் எட்டிப்பார்த்தான். முன்பு பார்த்த உயிர்பெற்ற கண்ணாடித் தண்ணீர் இப்போது சற்று கருத்துக்காணப்பட்டது. ஆனால் நல்லசாமியால் அதை கவனிக்கமுடியவில்லை. அவனது பார்வையெல்லாம் நாகம் எங்கே என்பதில்தான் இருந்தது. வெளிச்சம் குறைந்து கொண்டு வந்ததில் கருநாகத்தைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருந்தது. வட்டக்கிணற்றை வட்டமிட்டு நாகம் எங்கே என்று பார்த்தான். இறுதியாக ஒரு கல் இடுக்கில்மட்டும் இருள் நிறைந்திருப்பதை அடையாளம்கண்டான். அது இருள் இல்லை. கருநாகத்தின் கருத்த மேனி. அதன் பட்டைத்தீட்டிய பளபளப்பு மின்னுவதைத் தவிர்க்கவில்லை.

நல்லசாமியின் மனதில் இருந்த கோபம் அவன் தலைக்கு ஏறியது. அந்த நாகத்தை எப்படியாவது கொன்றாக வேண்டும் என்று துடித்தான். நல்லசாமியின் மனதில்,

"ஒருவேளை நாகம் வெளியே வராமல் அங்கேயே இருந்தால் உண்மையிலேயே ஊர்க்காரங்களுக்கு ஃபோனப்போட்டு குத்துக்கோலோட வரசொல்லிரலாம். இன்னிக்கி இந்தப்பாம்ப கொன்னாக்கூட இன்னும் நாலஞ்சு நாளைக்கு இதப்பத்தி பேசலாம்."

என்று யோசித்தவன். மறுகனமே,

"செந்தில் பைய இப்பத்தான் வந்துட்டுப்போனான். அவன்கிட்ட நான் ஏன் அவசரமா குளிச்சிட்டன்னு வேற கேட்டுத் தொலச்சிட்டேன். அவன் நான் என்ன எதிர்பாத்து காத்துக்கிடந்தேன்னு கணிச்சிட்டான்னா? அவனுக்கு அந்தளவுக்கு அறிவு இருக்குமா? இல்ல நாம அந்தளவுக்கு முட்டாளா நடந்துகிட்டமா? சதாசிவத்துகிட்ட கேட்டுத்தொலச்சிட்டான்னா? 

நடந்த வன்ம முயற்சியை யாரும் கண்டுபிடிக்கக்கூடாது. யாரிடமும் சொல்லவும் முடியாது. தனக்கே ஆபத்தாக முடியும். ஏமாற்றத்தினால் வந்த மொத்த வன்மத்தையும் நாகத்தின் மீது காட்ட முடிவு செய்தான். பாதி எரிந்திருந்த பீடியை அனைத்து பையில் போட்டுக்கொண்டான்.

வேகவேகமாக நடந்து புளியமரத்தடிக்கு வந்து ஒரு தோதான கழியை எடுத்தான். ஆள் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு வேக வேகமாக திரும்பி கிணற்றுப்பக்கம் நடந்தான். நாகம் இருக்கும் கல் இடுக்கையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிணற்றிலும் இப்போது தவளைகள் ராகம்பாட ஆரம்பித்தன.

கெட்ட நேரம், நாகத்திற்கு என்ன தோன்றியதோ, தானாக கல் இடுக்கில் இருந்து வெளியே வந்து ஒவ்வொரு படிகட்டுகளாக மேலே ஏறிவந்தது. நல்லசாமி மிகக்கவனமாக நாகத்தை எதிர்பார்த்துக்கொண்டு கான்கிரீட் திட்டில் கால்களை அகட்டி வாக்காக நின்று, கழியை உலக்கை போல் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தான். நாகம் ஒவ்வொரு படிகல்லாக மேலேறி வந்தது. செந்தில் நடந்துச் சென்ற வேகமும் நாகம் மேலேறி வரும் வேகமும் ஒன்றுபோல் நல்லசாமிக்கு தெரிந்தது. நாகம் தரையை அடைந்ததும், பெண்கள் உலக்கையில் குத்துவது போல கழியின் முனையை நாகத்தின் தலையில் நச்சென்று குத்தினான்.

நாகத்தின் தலை மடித்த வெற்றிலை நசுங்குவது போல் நசுங்கி சில ரத்தத்துளிகளை தெரித்தன. நாகத்தின் உடல் சட்டென அந்தக்கழியை சுற்றி முறுக்கியது. நல்லசாமி தன் பலத்திற்கு நாகத்தின் தலையை கான்கிரீட் தரையோடு அரக்கினான். நாகம் தன் உடலை அங்குமிங்குமாக ரம்யமாக நெளித்தது. உண்மையில் நாகம் தன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. நல்லசாமி தன் அழுத்தத்தைக் குறைக்கவில்லை. நாகமும் தன் உடலை மெல்ல அசைத்துக்கொண்டே இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு நாகம் தன் அசைவைக் குறைத்துக்கொண்டிருந்தது. அதன் விஷம் அதன் தலையில் இருந்து வந்த ரத்தக்கசிவில் கலந்து வந்திருக்கக்கூடும் என்று நல்லசாமி அனுமானித்தான். மெல்ல தன் அழுத்தத்தை கழியில் இருந்து எடுத்தான். கழியை உயர்த்திப்பார்த்தவன், நாகத்தின் உடல் கழியை சுழன்றிருக்க அதை உதறிவிட்டு, நாகத்தின் தலையை தன் வஞ்சம் தீரும் வரை நையப்புடைத்தான்.

நாகம் சிறு அசைவும் இன்றிக் கிடந்தது. நல்லசாமிக்கு லேசான மன ஆறுதல் கிடைத்தது. இருந்தாலும் யாரிடமும் உச்சரிக்கமுடியாத பெருமைமிகு வன்மங்களை மனதினுள் சேகரித்து வைத்திருப்பது எத்தகைய பாரம் என்பதை மீண்டும் இன்று நினைவுபடுத்திக்கொண்டான்.

நாகத்தின் உடலை கழியில் தூக்கி கரும்புக்காட்டினுள் வீசியெறிந்தான். பையினுள் இருந்த பாதி எரிந்த பீடிக்கு உயிர்க்கொடுத்து, “விஷத்தக் கக்காத நீ எதுக்கு பாம்பா பொறந்த?” என்று சொல்லிவிட்டு ஊரைப்பார்த்து நடந்தவன், கண்ணனின் அம்மா தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைபட்டான். அவன் பெயர் நல்லசாமி.

நல்லசாமிக்கு மட்டுமல்ல நாம் வணங்கும் சாமிக்கும், விஷம் கக்காத யாரையும் விட்டுவைக்க பிடிப்பதே இல்லை.

~சூர்யதேவன்.

24-செப்-2023 5.12 am.