Tag Archives: love

தற்கொலைக் காதல்கள்

காட்சி 1:

வழக்கம் போல ஆஃபிஸுக்கு வெளியில் நின்று ஃபோனில் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபிஸுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியே வந்து  பால்கனியில் வசதியாக ஒரு கார்னரை தேர்வு செய்து சாய்ந்து நின்றுகொண்டேன். இப்போது ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்த வீடியோக்களும் ஒரு சலுப்பை ஏற்படுத்தின. ஃபோனை லாக் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சிலாகித்து ரசிக்கும் அளவிற்கு காற்று ஒன்றும் வீசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரவு காணக்கிடைத்த காட்டுத்தீயும் அந்த மலையில் இன்று ஜொலிக்கவில்லை. சற்றே பெரும்மூச்சுடன் திரும்பி இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த ரவுண்டானாவை வேடிக்கைப்பார்த்தேன்.

எப்போதும் அந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுழன்று சென்று கொண்டேயிருக்கும். உயரத்தில் இருந்த வாகன நெரிசலைக்காண்பதே ஒரு அலாதி இன்பம்தான் போல இருந்தது. எல்லாத்துக்கும் உயரத்தில் இருக்கும் கடவுளுக்கும் நாம் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கும், நாம் முட்டிக்கொள்வதைப் பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்குமோ என்னவோ. நாமக்குள்ளும் கடவுள் இருப்பாரென்றால், கடவுளுக்குள்ளும் நாம் இருக்கலாம் தானே. இன்று அப்படி ஒரு சம்பவம்.

ஒரு பெண், சேலைக்கட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்கிறாள். எவ்வளவு நேரமாக அங்கு நிற்கிறாள் என்று எனக்கு தெரியாது. பைக்கில ஒரு ஆள் வந்தான், அவளது கையைப்பிடித்து வண்டியில் ஏற சொன்னான். துல்லியமாக என்ன பேசினார்கள் என்று இரண்டாவது மாடியில் இருந்த எனக்கு தெரியாது. அங்கிருக்கும் ஐம்பது  வண்டிகளின் சத்தமும் அவற்றிலிருந்து  வரும் நூறு ஹாரன் சத்தமும்  அவர்களின் பேச்சை நசுக்கியிருந்தன. அவர்களை யாரும் மோதிவிடவில்லை. இருந்தாலும். வேறு என்ன சொல்லிருக்கப்போகிறான்? பத்து  நொடிகளாவது அவள் இசைவதாக இல்லை.

எனக்கு என் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளும் ஆஃபிசுக்கு உள்ளேதான் இருந்தாள். வேகமாக சென்று அவளை அழைத்து வந்தேன். அந்த முப்பது நொடிகளும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று பேராசைதான் எனக்கு. ரவுண்டானாவின்  அருகில் ஒரு ஜோடி நிற்பதையும் அவன் வந்த பைக்கும் நடுரோட்டிலே இருப்பதையும் அவள் பார்த்தாள். நாங்கள் அந்த எபிசோடுகளை கடந்து வந்தாயிற்று என்றவாறு பேசினோம். எப்படியும் அவ ஏறி போயிருவா. வேற என்ன செய்ய முடியும்? என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த ஆள் அந்தப்பெண்ணின் காலில் விழுகிறான், அவள் பின்னால் நகர்ந்து அவனது கையை விலக்குகிறாள். அவள் அப்போதும் வண்டியில் ஏறி உட்காரவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஐந்து ஆறு நிமிடங்கள் அவள் அசையவில்லை. அவனோ வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அவளது கைகளைப்பற்றி கெஞ்சிக்கொண்டு இருக்கிறான். இறுதியில் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளது முந்தானையை அள்ளி மடியில் பிடித்துக்கொண்டாள். அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிரிப்பு இல்லை. வாழ்வின் மீதான பெரும் கோபமும், வெறுப்பும் மட்டும் நிறையவே இருந்தன. அவர்களது பைக் கிளம்பிப்போவதைப்பார்த்துக்கொண்டிருந்த செளமியா,”நீயா இருந்திருந்தா நேரா ஒரு ஹோட்டலுக்குதான் வண்டிய விடுவ.” என்று சொல்லி நகைத்தாள். “ஆமா, சாப்பாட்ட முன்னாடி வச்சிகிட்டு யாராலும் சண்ட போட முடியாது”என்று என் சாப்பாட்ராம கேரக்டருக்கு வக்காலத்து வாங்கினேன்.

காட்சி 2:

பிறகு பேசி முடித்துவிட்டு, வேலையையும் முடித்துவிட்டு ஆஃபிசில் இருந்து கிளம்பினோம். செளமியா வந்த டியோவில் அவளும், நான் வந்த காரில் நானும் கிளம்பினோம், அப்போது அன்றிரவு செய்வதற்கு நான் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதில் செளமியா இல்லை. அவளிடம் அனுமதி கேட்டேன். ஒழுங்காக வீட்டுக்கு வா என்று அதட்டலுடன் ஆணையிட்டாள். வீட்டில் பேசிக்கொள்ளலம் என்று மலுப்பிக்கொண்டிருந்தேன். அந்நேரம், ஆஃபிசின் அருகில் ஒரு இருபதைத்தாண்டிய ஆண் பிள்ளை, நல்ல உயரம், யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். சட்டென சிறுபிள்ளைப்போல அழ ஆரம்பித்தான். அழுதுக்கொண்டே சில சில வார்த்தைகளை உச்சரித்தான். நான் செளமியாவிடம் கேட்டேன், “தம்பி என்ன பேசுறாரு?”. யாருக்கு தெரியும்? ஒன்னும் கேக்கல. ட்ராபிக் எத்தனை பேச்சுக்களை முழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு ராட்சசன் என்பதை உணர்ந்துகொண்டேன். அந்த ராட்சசனைத்தாண்டி ஒரே ஒரு வார்த்தை மட்டும் எனதிரு காதுகளில் விழுந்தது. “சொல்லுடி” என்ற வார்த்தை. பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

காட்சி 3:

நான் வீட்டுக்கு செல்லும் வழியில் எனது தம்பி அர்ஜுனை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினேன். அவன் வரும் வரை காரிலேயே காத்திருந்தேன். எல்லா ஜன்னல்களும் மூடியிருந்தும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. வெளியே இறங்கி யாரெனப் பார்த்தேன். அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்‌. “ஏய், நீ, வா, போ, டி” என்ற சொற்களின் மூலம் மறுபக்கத்தில் இருப்பது ஒரு பெண் என யார் வேண்டுமானாலும் யூகித்துவிடலாம். இங்கு மட்டும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி சத்தத்தை விடவும் இவனது சத்தம் பலமாய் இருந்தது. ஆத்திரத்துடன் கத்தி கத்திப் பேசினான்‌. நான்கு நடை கிழக்கும் திரும்பி நான்கு நடை மேற்கும் என திரும்பத் திரும்ப நடந்துக் கொண்டிருந்தான்‌. நான் எனது காரை சற்று நகர்த்தி அவனுக்கும் காருக்கும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்திக்கொண்டேன். ஆத்திரத்தில் அருகில் இருக்கும் பொருட்களை உடைப்பது ஆண்களின் இயல்பு என்று எண்ணினேன். ஏன்னா நான் அப்டிதான்.

காட்சி 4:

தம்பி  அர்ஜுன் வந்தப்பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்சி யா காயத்ரியா என்பது அவனது குழப்பம். நான்சிக்கு அர்ஜுனைப் பிடித்திருக்கிறது. நான்சி க்ரிஸ்டின், அவளைக்கட்டிக்கொள்ள வேண்டுமானால் கிறுத்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்பது அவளின் அம்மாவது நிபந்தனை. நான்சியும் அம்மாவின் விருப்பப்படியே எல்லாமும் நடக்கனும் என்று சொல்லிவிட்டாள். நான்சி ஒரே பொண்ணு. வேற யாரும் இல்லை. அப்பா எப்போதோ இறந்துவிட்டார். குடும்ப சொத்தாக ஒரு கோடி இருக்கலாம். மேலும், நான்சி சொந்தமகள் இல்லை, வளர்ப்பு மகள் என்றும், இது அவளுக்கு மட்டும் தெரியாது என்றும் கூறினான். நான் குறுக்கிட்டேன், கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நான்சியிடம் யாராவது இதை சொல்லி இருப்பார்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த ஒரு கிக்கும் கிடைக்கப்போவது இல்லை. ரகசியத்தை கசியவிடுவதிலேயே தனது கெத்தைக்காட்டிக் கொள்ளும் கூட்டம் இது.

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் செளமியாவிற்கு கால் செய்து 

நான், “பத்து இருவதுக்கு மாமனிதன் படத்துக்கு போலாம் வரியா?”, 

அவள், “யாரெல்லாம் போறீங்க?”;

நான், “வேற யாரு நீயும் நானும் மட்டும்தான். வேற யார நீ எதிர்பாக்குற?”

அவள், “எப்டியும் உன் ஃப்ரெண்ட்ஸ், அர்ஜுன், யாராவது வருவாங்களே!”

நான், “அதெல்லாம் யாரும் இல்ல, நீயும் நானும் மட்டும்தான், சீக்கிரம் சொல்லு, இப்பவே மணி ஒம்பதே முக்கால்.”

அவள் நீண்ட யோசனைக்குப்பிறகு வரவில்லை என்றாள்.

அர்ஜுன், காயத்ரியைப்பற்றி பிறகொரு நாள் சொன்னான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறாள். அப்பா போலீஸ், அவர் இறந்தப்பிறகு அவரது போலீஸ் வேலையை இவள் வாங்கிக்கொண்டாள். வீட்டில் அம்மா அப்ரானி. மாமாதான் எல்லாமும். ஏற்கனவே ஒரு கல்யானம் நிச்சயம் ஆகி, கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் காணாமல் போய்விட்டாளாம். நேப்பால் வரை தனியாக ரயிலில் பயணித்துவிட்டு திரும்ப வந்துவிட்டாலாம்.

காயத்ரி அர்ஜுனிடம், “நீ நல்ல ஃப்ரெண்டுன்னு தெரியும், ஆனா ஹஸ்பண்ட் மெட்டீரியலான்னு தெரியல, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் லிவிங்’ல இருந்து பாக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாள். இதை நானும் அர்ஜுனும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா என்ன? எத மீன் பண்றா? காலைல எழுந்திரிச்சு பாத்தரமெல்லாம் வெளக்கி வைக்கனுமா? சலுப்பா இருக்குன்னு சொன்னா சமைச்சு தரனுமா? இல்ல, என்ன சொதப்பு சொதப்புனாலும் சூடு சொரனலாம் வராம கோவப்படாம இருக்கனுமா? ஒன்னும் புரியலையே.

எனக்கு தெரிஞ்சி அவ யாரையோ பாத்து நல்லா பயந்துருக்கா. கல்யாணம் பண்ணா இவ்ளோ அவஸ்தப்படனும்னு அவ மனசுல இருக்கு. அதனாலதான் உன்ன நல்ல ஃபிரண்டா தெரிஞ்சிருந்தும் நீயும் நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு காட்டுமிராண்டியா மாறிடுவியோனு பயப்படுறா. இந்த சொசைட்டீல நிறைய சைக்கோங்க இருக்கு, தாலி கட்ற வரைக்கும் நைஸ் டு பி பர்ஸனா நடந்துக்குவானுங்க, ஒன்ஸ் தாலிகட்டிட்டா போதும், இஷ்டத்துக்கு போட்டு ஹரஸ் பண்ணுவானுங்க. அப்டியும் இருக்கானுங்க. இது எந்த சைக்கோ நல்ல சைக்கோன்னு கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்ல. காயத்ரி உன்கிட்ட ஓபன்னா கேட்டுட்டா. 

சொல்லு அவகிட்ட, “கல்யாணம் பண்ணினா எப்டியும் காலத்துக்கும் சண்ட போட்டுதான் ஆகனும். யார்கூட சண்ட போடப்போறங்கிறதுதான் நீ ச்சூஸ் பண்ண வேண்டியது. யார்கிட்ட சண்டப்போட்டாலும், மண்ணிப்பு கேட்டோ, இல்ல மண்ணிச்சோ, மறுபடி சமாதானம் ஆகி அடுத்த கணமோ, அடுத்த நாளோ இயல்பா பேசி சிரிச்சி வாழ்க்கைய வாழமுடியனும். அப்டி யார்கிட்ட தோனுதோ அவங்களையே கட்டிக்க சொல்லு”னு சொல்லிட்டேன்.

காயத்ரியே ஒத்துக்கொண்டாலும், அவளது வீட்டில் எப்படி பேசி சம்மதம்வாங்குவது என்று அர்ஜுனுக்கு ஒரே யோசனை. கண்டிப்பாக காதல் திருமணம் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றான். ஏன் என்றேன். ஏற்கன்வே ஒரு கல்யாணத்த நிறுத்தி எங்க மானத்த வாங்கின. இப்ப லவ் பண்ணி வேற அசிங்கப்படுத்துறியா என்று சண்டைக்கு வருவார்கள்.

நீ காயத்ரியையே கல்யாணம் பண்ணிக்கு. நான்சிய கட்டிக்கிட்டு உன்னால உன் இயல்புக்கு மாறா வாழமுடியாது. காயத்ரிக்கு சில மனக்குழப்பம்தான் இருக்கு, நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு வா, நானும் செளமியாவும் பேசுறோம். அவதான் உனக்கு செட் ஆவா. அவ ஃபோட்டோ காட்டு பாக்கலாம். அர்ஜுன் அவனது ஃபோனில் இருந்து ஓரிரு ஃபோட்டோவைக் காட்டினான். லட்சனமான முகம். உனக்கு காயத்ரியா நான்சியானுலாம் குழம்ப வேண்டாம். ஒரே முடிவா காயத்ரிய கல்யாணம் பண்ற வழிய பாரு.

காட்சி 5:

ஒரு வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். செளமியாவிடம் அர்ஜுனுடனான பேச்சுகளின் சுருக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவள் குறுக்கிட்டு, “புங்கவாடில, பூங்கொடி மவ காவ்யா சூசைட் பண்ணிக்கிட்டாளாம்.” 

எனக்கு ஒரு நிமிடம் யாரென கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

சற்று நினைவுகளை திரட்டிக்கொண்டு, “யாரு?”

செளமியா, “பூங்கொடி மொவப்பா, காவியா, நீ கூட பூங்கொடி மவளா நீஈயி.. னு கிண்டல் பண்ணுவியே”

நான்,”ஆமா காவியா? அவளா அப்டி பண்ணா?”

செளமியா, “ஆமாம் எதோ லவ் மேட்டராம், வீட்ல தெரிஞ்சிரிச்சி போல, வேற மாப்ள பாத்து கல்யாணம் தேதி குறிச்சிட்டாங்க. அதான் சூசைட் பண்ணிக்கிட்ட”

காவியா காதலிக்கும் வயதுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது எனது முதல் ஆச்சர்யம். ஆனால், அந்த ஆச்சர்யத்தை நான் அடைவதற்குள் அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும் என்பது பெரும் அதிர்ச்சி. 

சின்ன பொண்ணுதான் அவ. பதினாறு இல்ல பதினெட்டு வயசுதான் இருக்கும்.

வீட்டுல என் தங்கச்சி சபியிஷா படுத்திருந்தா, அவள எழுப்பி என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். சபியின் சிநேகிதிதான் காவியா. லவ் பண்ணினது அஜித்னு ஒரு பையன. முன்னாடி வீடாம். டிப்ளமோ படிச்சிட்டு சென்னைல வேலபாக்றானாம். எங்க ஊர்ல பொறந்துட்டு தெள்ளவாரி ஆகாம படிச்சிட்டு வேலைக்கு போறதுலாம் ஒரு பெரிய சவால். அந்தப்பையன் படிச்சிட்டு வேலைக்கு போறதே எனக்கு பெருசாதான் தெரிஞ்சிது. காவியாவோட அம்மா பூங்கொடிதான், “அவனதான் கட்டிகுவன்னா நீ செத்து ஒழிடி”னு சொல்லிருச்சாம். அவ கொஞ்ச நாளாவே யார்கிட்டயும் பேசுறதே இல்லையாம். அவங்க அப்பா செல்வம் வண்டிக்கு போயிருந்தாராம். அவர் வர வரைக்கும் காத்திருந்து, அவர பாத்துட்டு, வீட்ல யாரும் இல்லாத சமையம் அம்மா பூங்கொடியோட சேலைல தூக்கு போட்டுகிட்டாளாம்.

எல்லாரும் பூங்கொடிய திட்டினாங்க, செல்வம் உட்பட சிலர் அடிச்சாங்க. ஆனா, போஸ் மாடம் பண்ண விடாம, ப்ளஸ் டூவுல மார்க்கம்மி அதனால புள்ள சூசைட் பண்ணிக்கிச்சினு விசியத்த மூடி மறச்சிட்டாங்களாம். மார்க் எவ்வளவுன்னு கேட்டேன். ஐநூறுக்கு முன்னூத்தி தொன்னூத்தி ஏழுன்னா சபி. புங்கவாடி போலாமா சபின்னு கேட்டேன். இல்லண்ணா, அப்பவே அவள எடுத்துட்டாங்கண்ணா என்றாள்.

மனசு கேட்காமல், அவளைப்பற்றியும், ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களைப்பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் குற்றங்கள் பற்றியும், ஜாதி, பணம், எல்லாம் எப்படி எல்லாத்தையும் பாதிக்கிறது என்று என்னென்னமோ பேசினோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செளமியாவும் சபியும் தூங்கச் சென்றார்கள்.

நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் போட்டுவிட்டு, கிச்சன் சிங்க்கில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

-சூர்யா வாசு // 27-ஜூன்-2022

காதல், மேட்டர் மற்றும் தமிழ் சினிமா

சினிமாவுல சொல்ற நிறைய விசியங்கள் முகம் சுளிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆண்-பெண் உறவுகளில் அது சொல்லவரும் கருத்து/நியாயம் என்பது பலவாறானது. அது அந்தந்த சினிமாக்காரர்களின் இலக்கணம், விருப்பம், ஆசை, நிராசை, கற்பனை இப்டிலாம் வச்சிக்கலாம் ரசிக்கலாம் தவிற, அது மக்களின் வாழ்க்கைக்கான நெறிகள் இல்லை. ஆனால் மக்கள் அவ்வளவு தெளிவா என்ன?


இப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாறதுதான் கான்சப்ட்.

லவ்’ங்கிற கான்செப்ட்ட ஓவர்ரேட் பண்ணி பண்ணி ரொமான்டிசைஸ் பண்ணி பண்ணி லவ்வுன்னா என்னன்னே தெரியாம நானும் லவ் பண்றேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. (இருந்தோம், இருக்கிறோம், இன்னும் பலனூறு ஆண்டுகளுக்கு இருப்போம்.) 

சென்ஸிடிவ் விசியத்த சென்ஸிடிவா கையாளனும். அதுதான் சரி. அத வச்சி காமெடி பண்றது, நார்மலைஸ் பண்றது ரியாலிட்டிக்கு செட் ஆகாது. இவை பெரும்பாலும் வாழ்க்கையை கடினமாக்கும் விடயங்கள். ஒவ்வொன்றாக இதை வகைப்பிரிக்க முயற்சிக்கிறேன். நூறு சதவீதம் என்னால் இந்த சிக்கல்களை வகைப்பிரிக்க முடியாதுதான், இருந்தாலும் பரவால முயற்சிக்கிறேன்.

ஒரு ஆர்டராக வருவோம்.

  • புடிச்சிருக்கனும்
  • ப்ரொப்போஸ் பண்ணனும்
  • ஒன் சைட், டூ சைட் ஆகனும்
  • வீட்ல சொல்லனும், போராடி சம்மதிக்க வைக்கனும்
  • கல்யாணம்
  • ஃபஸ்ட் நைட் (90ஸ் கிட்ஸ் அப்டிதான் சொல்லுவோம். 2K கிட்ஸ்’கு மேட்டர்னு நெனைக்கிறேன்)
  • ப்ரெக்னெண்ட்
  • குழந்தை
  • அப்றம் ஸ்கூல் பீஸ் கட்ட போராடனும்.

இது யதார்த்த லவ் மேரேஜ் பண்ணவங்க லைப்ல நடக்கிற சம்பவங்கள். 

இதில் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபஸ்ட் நைட்/மேட்டர் வருதுனா அதுதான் ஆண் வர்க்கத்துக்கே உரித்தான லட்சியக் கனவு. அதற்காகவே ஏங்கித்தவிக்கும் வாலிபர்கள் இல்லாத பள்ளி, கல்லூரி, அலுவலகமே இல்லை.

அப்படி நடக்கும்போது மேட்டரின் போது இருந்த அதே காதலிதான் கல்யாணத்தின்போதும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால், இதை திரையில் கொண்டு வந்து நார்மலைஸ் ஆக்குவது ஆபத்து. ஆல்ரெடி மேட்டர்ங்கிறது அங்க இங்கன்னு நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரெக்னெண்ட் ஆகுறதுதான் ட்விஸ்ட்டு. அதுக்கு முன்னாடி மேல சொன்ன 1 to 9 ஆர்டர்ல, சினிமா என்னவெல்லாம் கலேபரம் பண்ணிவச்சிருக்குன்னு ஒரு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

கான்செப்ட் 1

காதல் – கல்யாணம் – சுபம். 

ஒரு பையனுக்கு ஒரு பொண்ண புடிச்சிபோச்சின்னா அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா போதும் அவங்க வாழ்க்கைல ஜெயிச்சுருவாங்க. இதுல முக்கியமா கீழ் ஜாதி மேல் ஜாதி கலக்கனும், இல்லன்னா கிக் இருக்காது. தொரத்தி தொரத்தி அந்த பையன் ‘நீ என்னத்தான் லவ் பண்ணனும்’னு டார்ச்சர் பண்ணி, ‘ஆமா நான் உன்னதான் லவ் பண்றேன்’னு அந்த பொண்ணே சொல்லிறனும். பல வருடங்களா மொத்த தமிழ் சினிமாவும் இதுதான். இப்பவும் இது தொடருது. இந்த மண்டையனுக்கு லவ் வந்துட்டா அந்தப் பொண்ணுக்கும் இவன் மேல லவ் வந்தே ஆகனும். உன் லவ் ட்ரூ லவ்தான் இல்லங்குல, ஆனா உனக்கு புடிச்சிருக்குன்னா அவங்களுக்கும் புடிச்சே ஆகனுங்கிறது ஒருவிதமான சைக்கோத்தனத்துல வரலையா? ஸ்டாக்கிங்-க்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டுனா இதான் கதி.

எ.கா. காதலுக்கு மரியாதை, சிவாஜி, ஆடுகளம், இத்யாதி இத்யாதி, மெளனராகம்.

கான்செப்ட் 2

முதல் காதல் – தோல்வி – ரெண்டாவது காதல் – கல்யாணம் – சுபம்.

இது கொஞ்சம் யதார்த்தம், சில உஷாரான பொண்ணுங்க என்னதான் தொரத்தி தொரத்தி சைக்கோத்தனம் பண்ணினாலும் ஏமாறமாட்டாங்க. போடா டோமருன்னுட்டு தப்பிச்சு போயிடுவாங்க. (சினிமால இத ப்ரேக் அப்னு சொன்னா நல்லாருக்காதுன்னு, கதைப்படி முதல் காதிலி செத்துட்டான்னு ஒரே போடா போட்டுருவாங்க) ஆனா அதே பைத்தியக்காரத்தனம் சில பொண்ணுங்களுக்கு புடிச்சு போயிருக்கும். ஆமாம். 

எ.கா. வாலி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ராஜா ராணி, 7ஜி ரெயின்போ காலனி.

கான்செப்ட் 3

நிறைய காதல் – நிறைய தோல்வி – கடசியா ஒரு கல்யாணம் – சுபம்.

இத விளக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். கிடைக்கிற வரைக்கும் அலைய வேண்டியதுதான். பாக்குற எடத்துல எல்லாம் அப்ளிக்கேசன் போட்டறனும்.

எ.கா. ஆட்டோகிராஃப், ப்ரேமம், அட்டக்கத்தி.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ் மேட்டர். என்ன மாயமோ தெரியல தமிழ் சினிமால கல்யாணத்துக்கு முன்னாடி மேட்டர் பண்றதெல்லாம் ok cool / casual / not a problem / heavenly / so what? / they need it னு glorify பண்ற காலகட்டம் சீக்கிரமா முடிஞ்சிரிச்சி. அதிக டைம் எடுத்தக்கல.

கான்செப்ட் 4

காதல் – மேட்டர் – ப்ரேக்கப் – வேற ஒருத்தனோட கல்யாணம் – ஹீரோக்கும் வேற ஒரு புது லவ்.

எ.கா. வின்னைத்தாண்டி வருவாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா.

கான்செப்ட் 5

கல்யாணம் – குழந்தை – டிவோர்ஸ் – ரெண்டாவது காதல்

எ.கா. என்னை அறிந்தால், ரிதம், வேட்டையாடு விளையாடு, 

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன கொஞ்ச வருசத்துல தன் கனவன் இறந்துட்டா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுன்னா அந்தப் பொண்ணுக்கே தப்புன்னு தோணும். அந்த அளவுக்கு சமூகம் போதிச்சு வச்சிருக்கும். இது வாழ்க்கைய இன்னும் கடினமாக்குறது. ரெண்டாவது கல்யாணம் எனும்போது, இது சரிதான் யார் என்ன சொன்னாலும் தன் நலனுக்காகவும் தன் குழந்தையின் நலனுக்காகவும் சில சமூக கட்டுபாடுகளை தாண்டி வந்துதான் கல்யாணம் செய்வார்கள். அது வரவேற்கத் தக்கது. வாழ்க்கை வாழ்வதற்கே. சமூகத்தை மனம் கோணாமல் வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.

திருமணத்திற்கு பிறகான காதலை பதிவு செய்த படங்கள் என்பது மிகச்சொற்பம். இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன். மிகைப்படுத்தப் படாத காதலை, யதார்த்த காதலை பதிவு செய்தப் படங்களுள் ஒன்று அட்டக்கத்தி. பசங்க அப்டிதான் லவ் பண்ணுவானுங்க. ஒன்னு போச்சினா இன்னொன்னு. 96 காதல்லாம் ரியாலிட்டில கோடில ஒன்னுதான். அதுவும் பைத்தியக்காரத் தனமாத்தான் தெரியுது எனக்கு. வேணும்னே கல்யாணம் பண்ணிக்காம இருந்துகிட்டு ஜானு மாதிரி யதார்த்த பொண்ணுக்கும் ஒரு கில்ட் ஃபீலிங் ஏற்படுத்த முயற்சிக்கிறது எவ்ளோ சைக்கோத்தனம்? அந்த கில்ட் போக அவ என்ன பண்ணனும். 96 படத்த பாத்துட்டு, கேரலாவுல நடந்த ஒரு ஸ்கூல் கெட்டுகெதர்ல ஒருவரது மனைவி தன் முன்னால் காதலனுடன் ஓடிப்போனதுதான் ரியாலிட்டி.

மேட்டர் லவ்வர் கூட மட்டுமா? இல்ல ஃபிரண்டஸ் வித் பெனிஃபிட்டா, மேட்டர் பண்ணிட்டா அந்த நபரையேத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களானுலாம் கேக்காதீங்க. பதில் இல்லை. பதில் இருந்தாலும் அது சரியா தவறா என்பதெல்லம் அந்தந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா இல்லை காயப்படுத்திக் கொள்கிறார்களா என்பதே தீர்மானிக்கும். 

சில டாக்ஸிக் நபர்களிடம் இருந்து உறவுகளை முறித்துக் கொண்டால் அது சரியே. அது திருமணமே ஆகி மூன்று குழந்தைகள் இருந்தாலும் சரி. நம் வீக்நெஸ்ஸை தெரிந்துக் கொண்டு, நம்மை எமோஷ்னலாக துண்புறுத்தும் ட்ரிக்கர் செய்யும் எவரையும் நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவதே சரி.

ஒரே ஒரு படம் வந்துச்சு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’னு அதுலையும் ஏகப்பட்ட நாராசமான விசியங்கள 18+ ஆ இல்ல அடல்ட் காமெடியா இல்ல என்ன எழவுன்னே வகைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நான் ஒரு விர்ஜின் பையன், எனக்கு விர்ஜின் பொண்ணுதான் வேணும்னு ஜி.வி. கேக்க, விடிவி கனேஷ் ‘அதெல்லாம் டைநோசர் காலத்துலையே அழிஞ்சி போச்சிடா தம்பி’னு சொல்லுவார். என்ன சொல்ல வர்றாங்க? ஊர்ல இருக்குற பொண்ணுங்கெல்லம் தேவிடியான்னா? இதுக்கும் தேட்டர்ல விசில் பறந்துச்சு. அந்த தேட்டர்ல பெரும்பாலும் பசங்கதான், சில லவ்வர்ஸ் கப்பில்ஸ் வந்திருந்தாங்க. ஒரு குடும்பமும் வந்திருந்துச்சு. அதுவும் இண்டர்வல்ல கிளம்பி போகல. முழுபடமும் பாத்துட்டுதான் போனாங்க. டிக்கட் காசு வீணாகக்கூடாதுன்னு நெனச்சிருப்பாங்க போல. அந்தக்குடும்பத்துல பத்து வயசுப் பையனும் அடக்கம்.

அடுத்து அப்டி மேட்டர் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுறது தனி கிக் ஆடியன்ஸுக்கு. இப்போ என்ன பண்ண போறாங்கன்னு இவங்களாலையே யூகிக்க முடியலனாதான் படம் சுவாரசியமா போச்சின்னு மைக்ல, fbல, டிவிட்டர்ல, யுடியுப்ல எல்லாம் சொல்லுவாங்க. இல்லன்னா படம் ஓடாது. லாபம் வராது. சினிமாக்காரங்க சிலர் கார் வீடு பங்களானு செட்டில் ஆக முடியாது.

அந்த சினிமால எதுலையும் கண்டிப்பா ஒரு மாத்திரைல கருவ கலைக்க மாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கலைக்க மனசு வராது. வராதா? இல்ல வரக்கூடாதா? இப்டிதான் கொஞ்ச காலம் தாலி செண்டிமெண்ட்ட தூக்கி புடிச்சிட்டு இருந்தாங்க. தாலி கட்டிட்டா அவந்தான் புருசன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. புதுப்பேட்ட தனுஷ் மாதிரி எவனாச்சும் தாலி கட்டினா யாரும் தாலிக்கட்டினவன் கூடத்தன வாழனும்னு பேசப்போறதில்ல. கழட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.

அப்போ தாலி, இப்போ கற்பம். 

கலைக்கவே கூடாதாம். ஏன்னா அது ஒரு உயிராம். அவசரப்பட்டு பையனும் பொண்ணும் தப்பு பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சரி. குழந்த பொறந்து நாலு அஞ்சு வருசம் கழிச்சி அந்தப் பையனுக்கு ஒரு சந்தேகம் வருது. சுயமாகவோ இல்லை சொல்லிக்கொடுத்தோ வரலாம். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அந்த பொண்ணோட வாழ்க்கையே சூனியமாகிவிடும். மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எல்லருக்கும் இங்கு புரிய வாய்ப்பில்லை. மெண்டல் ஹெல்த் குறைவாக உள்ளவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தவர்களுக்குதான் அது புரியும். ஒரு உயிர காப்பாத்தறதா சொல்லி, அந்த பொண்ண காயப்படுத்தி ரணமாக்கி கடசில அந்த குழந்தையோட மனசுலையும் நஞ்சுதான் வளரும்.

ப்ரோ டாடி படத்துல வர மாதிரியோ அர்ஜுன் ரெட்டி படத்துல வர மாதிரியோ அவ்ளோ ஈசியா கற்பமான பொண்ண ஒத்துக்க மாட்டாங்க. குடும்பம் அக்கம் பக்கம்னு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் அவள பேசிப்பேசியே சாவடிச்சிருவாங்க. அவ ஒரு தேவிடியாத்தான்னு நிரூபிக்க அவள எப்பவும் ஒரு கூட்டம் மொச்சிகிட்டே இருக்கும். அவளோட நடை உடை பாவனை பாவாடை மயிர் மட்டைன்னு எல்லாத்தையும் நோட்டம் விடும். எதாவது ஒரு நேரத்துல, அவ கால் சந்துல வேற யாரு இருக்கா, இருந்தா, இருப்பானு தெரிஞ்சிறாதானு தேடுவாங்க. அவ்ளோ அரிப்பு இருக்கு அடுத்தவங்க அந்தரங்கத்த தெரிஞ்சிக்கிறதுல.

சிங்கிள் மதர்களிடம் கேட்டுப்பாருங்கள், நியாமான காரணத்திற்காகவே அவர்கள் தன் கனவனை பிரிந்து தானே குழந்தையை வளர்க்க முயற்சித்தாலும், அது அவ்வளவு சுலபமாக இருந்திராது. பல ஆண்கள் தீண்டத்துடிப்பார்கள். சின்ன கேப் கிடைக்காதா எனக் காத்திருப்பர்கள். நல்லவர்கள் போல் நயமாக பேசி மனதைக்கவர மெனக்கெடுவார்கள். இவர்கள் அனைவரும் நரிகள்தான். அசந்த நேரம் வாயில் போட்டு மென்று தின்று சற்று கசந்தவுடன் சக்கையாய் துப்பிவிட்டு போடி தேவிடியா என்று வாயாற வாழ்த்திவிட்டு அடுத்த தேவிடியா யாரென்று தேடிப் போய் விடுவார்கள். ஆண்களுக்கு வெரைட்டியாக அனுபவிப்பதில் அவ்வளவு அலாதி இன்பம்.

ப்ரோ டாடில வர மாதிரி ரெண்டு பேர் வீட்லையும் அப்பா அம்மாலாம் எங்கயுமே இருக்க மாட்டாங்க. நாப்பது ஐம்பது வயச நெருங்கிய எல்லாருக்கும் தெரியும் சமூகத்துல நமக்கான மரியாத’ங்கிறது எவ்வளவு முக்கியம்னு. தன் பையனோ பொண்ணோ இப்டி பண்ணிட்டான்னு வெளிய தெரிஞ்சா தன்ன புறக்கனிப்பாங்கன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ப்ரோ டாடில வர மாதிரி எல்லா அப்பாக்களும் இங்க கோடீஸ்வர முதலாளிகள் கிடையாது. பலரும் தமிழ்நாட்டுல மிடில் கிலாஸ்தான். இந்த எலைட் குடும்பங்கள் ஒரு பிரச்சனையை கையாளும் விதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு சாதாரன மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஒரு இன்ச் கூட அனுக முடியாது.

ஆதலால் காதல் செய்வீர்தான் ரியாலிட்டியை பதிவு செய்த படம். அதுதான் யதார்த்தம். சபையில் ஒருவர் “ஏன்யா சும்மா பேசிட்டு இருக்கீங்க? பொண்ணோட ஒரு நைட்டு ரேட்டு எவ்ளோன்னு சொல்லுயா.” என்பார். எந்தத் தகப்பனும் கேட்கக் கூடாத வார்த்தைகள்.

இந்த சினிமாக்காரனுங்க இப்டிதான் எதையாவது டிரெண்ட் பண்ணிட்டு சமூகத்துல ஒரு மனநிலையை உருவாக்கிட்டு அடுத்த டிரெண்ட செட் பண்ண போயிருவானுங்க. பாவம் இந்த மக்கள்தான் அந்த டிரெண்டை தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணி செத்துகிட்டு இருக்காங்க. நல்லத சொல்லவும் இங்க படங்கள் இருக்கு. ஆனா சொற்பம். பேசப்படாத பல விசியங்கள பேசி ஒரு தீர்வு கொண்டு வரனும், அதற்கு கலை ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை திருத்தமா பயன்படுத்தனும். இல்லன்னா அது திசையறியாமல் எல்லாரையும்தான் சிதைக்கும். முக்கியமா சினிமாவ பாத்து இதுதான் உலகம்னு நினைக்கிற வளரும் தலைமுறையினர ரொம்ப பாதிக்கும்.

இங்க யார் என்ன சொல்லனும்ங்கிற வரைமுறைய வகுக்குறது மிகப்பெரிய சிரமம். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. தெரியுதோ இல்லையோ வாய்க்கு வந்தத பேசிவச்சிட்டும் தோன்றத எல்லாம் படமா எடுத்துவச்சிட்டும் போயிருவாங்க. அது நன்மையா தீமையானு தெரியாம பரவசத்துல எடுத்து வாழ்க்கைல பொறுத்திபாத்துட்டு, பின்னாடி அவதிபடுறது என்னமோ சாதாரண மக்கள்தான்.

ஆகையால், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்”ங்கிறத அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவது நமது கடமை. நம் கடமை என்றென்றும் தவறேல். கலையை கலங்கமில்லாமல் உருவாக்கவும் உள்வாங்கவும் நல்லறிவுடன் முனைவோம்.

#brodaddymovie  #bachelormovie  #arjunreddymovie  #மா shortfilm #ஆதலால்_காதல்_செய்வீர்

-சூர்யா வாசு

-26-06-2022 11.20 am