Tag Archives: Malayalam

அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

அம்மு – Ammu (2022)

அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த அம்மு படம், சத்தமில்லாமல் பல மெளனங்களை உடைத்தது என்றே சொல்லலாம். உடைபட்ட உடன் மெளனங்கள் உரக்கப் பேசின என எண்ண வேண்டாம். அதுதான் நடக்கவில்லை. சில மெளனங்களை உடைக்கும் சத்தம் அதிகமாக இருக்கும். சில மெளனங்கள் உடைந்த பிறகு வரும் குரலின் சத்தம் அதிகமாக இருக்கும். சில சமயம் அந்த குரலின் கனம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருந்தது. இது ஒரு பெரும் மெளனத்தை உடைத்தது. உடைக்கும் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. உடைத்த பிறகும் எந்த சத்தமும் எழவில்லை. ஆம் அப்படி ஒரு நிசப்தமான பேரசைவுதான் அம்மு. 

இந்தப் படத்தில் வரும் அம்முவின் கணவர் பெயர் ரவி. ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ரவியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் எந்தளவிலான முரடன் என்பதை சாட்சிப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தத்ரூபமான கதாப்பாத்திரம் ரவி. அதை ஏற்று நடித்த நவின் சந்திரா கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தத்தில் ஆண்கள் அனைவரும் ரவி அளவிற்கு கொடூரக்காரர்கள் இல்லை என்றாலும் சில சில இடங்களில் ரவியுடன் ஒத்துப்போகாமல் இருக்க முடியாது. நிஜத்தில் பல ரவி’க்களும் இங்கு உள்ளனர்.

போலீஸ் ரவி வில்லன். திருடன் பிரபு ஹீரோ. பிரபு கதாப்பாத்திரத்தில் பாபி சிம்மா நடித்துள்ளார். ஜிகர்தண்டா, இறைவி படங்களுக்குப்பிறகு அவரது நல்ல நடிப்பை அம்முவில் காணலாம். தான் செய்த எந்தத் தப்பிற்கும் சிறிதும் வருந்தாத ரவி மிருகமாகவும் தான் செய்த ஒரே ஒரு தவறுக்கு தினந்தினம் மனம் வருந்தும் பிரபு நல்லவனாகவும் தெரிகிறார்கள். ரவி பிரபுவை அடிக்கும் போது பிரபு சொல்லும் ஒரு வசனம், ‘ஆனா நீங்க சூப்பர் சார்! யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்களோ கரெக்டா செலெக்ட் பண்ணி அடிக்றீங்க சார்.’ என்று சொல்லிவிட்டு அம்முவை நோக்கி, ‘மேடம் கரெக்டா?’ என்பான். இதுதான் உண்மையும் கூட. ரவி’களுக்கு யாரை அடிக்க முடியும் யாரால் நம்மை திருப்பி அடிக்க முடியாது என்பதெல்லம் அத்துபடி. மனதில் இருக்கும் வன்மத்தை பெண்கள் மீது காட்டுவதை மிக மிக எளிதாக்கிக் கொள்வார்கள். ரக்கட் பாய் மொமெண்ட்டுகள் நிறையவே இருக்கும். ஆனால் அது பெண்கள் மீது மட்டுமே இருக்கும்.

அம்மு படத்தின் இயக்குநர் சாருகேஷ் சேகர். நிஜத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியுள்ளார். ஆனால், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை மட்டும் நிஜத்தில் நடப்பது போல் யோசிக்காமல் சினிமாத்தனமாக தீர்வை வைத்துள்ளார். படத்தின் முதல் பாதி அப்பட்டமான நிஜ வாழ்வியலைக் கண்முன்னே நிறுத்திவிட்டு. இரண்டாம் பாதியை வழக்கமான வெற்றித் திரைப்படங்களின் பேட்டர்னில் திரைக்கதை அமைத்துள்ளார். அம்மு படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதையை zootopia (2016) என்னும் அனிமேஷன் படத்தில் இருந்து தழுவி எடுத்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

அம்மு. அம்மு ஒரு சராசரி இந்தியப் பெண் என்று சொல்லலாம். உலகம் தெரியாதவள். ரவிதான் அவளுக்கு உலகம் என நம்பிக்கொண்டிருப்பவள். ரவியை விட்டுவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாதவள். நாள் முழுக்க ரவியையும் தன் வீட்டையுமே சிந்தனையாய்க் கொண்டவள். அக்கம் பக்கத்தினரிடம் தன் மனதைப் பேசி ஆறுதல் அடைந்து கொள்ளும் இயல்பான பெண். ஒரு கொடூர ஆணிடம் சிக்கித் தவிக்கிறாள். இதற்கிடையில் தான் கருவுற்றால், குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று திணறுகிறாள். இவள் அனுபவிக்கும் வதைகளே போதும். இந்தப் போராட்டத்தில் இன்னொரு உயிரைக்கொண்டு வர வேண்டாம் என்று எண்ணுகிறாள். ஆனால் நிஜம் வேறு. ஓரிரு வருடத்தில் ஒரு குழந்தையும் அடுத்த மூன்று நான்கு வருடத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்துவிடும். சுற்றி சுற்றி அழுகையும், முதுகை ஒடிக்கும் வீட்டு வேலையும், சமையல் வாடையுமாய் ஆறேழு ஆண்டுகள் ஓடுவதே தெரியாமல் போய்விடும். இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றால்தால்தான் மதிய வேளையில் அப்பாடா என்று ஜன்னல் திரையை இழுத்து வெளிச்சத்தை மறைத்துவிட்டு அலுப்பில் பாதி தீர ஒரு உறக்கம் போட முடியும். இதில் கணவனின் அறச்சீற்றங்கள், நாத்தனாரின் நாரதர் பணிகள், மாமியாரின் புதுப்புது அர்த்தங்கள், மாமனாரின் லேட்டஸ்ட் ரூல்ஸ்கள், என டிசைன் டிசைனாக சவால்கள் வந்தவண்ணம் இருக்கும். அம்மு நிஜமானவள். அம்முவின் பிரச்சனைகளும் நிஜமானவை. அம்முவிற்கான தீர்வு மட்டும் கற்பனையானது வருத்தம்.

தி கிரேட் இந்தியன் கிட்சன் – The great Indian kitchen (2021)

சென்ற வருட தொடக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் இதை மறு உருவாக்கம் செய்கிறார்கள் என்று அறிகிறேன்.

சமையல் தெரியாத பெண்கள் இன்று ஏராளம். அது தவறு இல்லை. சமையலின் முக்கியத்துவம் தெரியாததில்தான் பிரச்சனை. சமைக்க வராத பெண்களுக்கு சமையலின்மீது ஒரு பெருங்கோபம் இருக்கும். அதை யார்மீது காட்டுவது என்று தெரியாது. அவர்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்தப் படமாகத் தெரியும். அதுதான் ஆபத்து. படத்தின் பேசுபொருளாக இருப்பது ஆணாதிக்கம் என்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பேசுபொருள் ‘உழைப்பு’. யார் எங்கு என்ன உழைக்கிறார்கள் என்பதே அடிநாதம். சமைக்க வரவில்லை அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு தீர்வு ஒரு சமையல் தெரிந்த வேலையாள். அது போதும். மருமகளேதான் சமைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. சமையலுக்கு ஆள் போட வேண்டும் என்றால் மருமகள் அதற்கேற்றார்போல் சம்பாதிக்கவும் வேண்டும். முப்பதாயிரம் நாப்பதாயிரம் என சம்பளம் வாங்கும் பெண் சுலபமாக ஒரு பணியாளை சமையலுக்கு வைத்துக்கொள்ளலாம். வேலைக்கும் போக மாட்டேன், டான்ஸ் க்ளாஸ் போவேன், அரசு வேலைத்தேர்வுகளுக்கு படிக்கிறேன் பேர்வழி தன் பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள ஏதுவாக ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

ஒரு கற்பனை பரிமாணத்திற்குள் செல்வோம். பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். ஆண்கள் அனைவரும் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். ஆண்களும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். பெண்களும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்க வேண்டும்.

படத்தில் வரும் மாமனார் கதாப்பாத்திரம் காலத்துக்கும் உழைத்து ஓய்ந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை பராமரிப்பதற்கே மருமகளுக்கு அலுப்பாய் இருக்கிறது. அத்தனையையும் சேர்ப்பதற்கு மாமனாரும் பாடுபட்டிருப்பார். மாமனார் வெளியே செல்லும் போதெல்லாம் மாமியார்தான் வந்து செருப்பை எடுத்து தருவார். தினமும் காலையில் பல்விளக்க ப்ரஷில் பேஸ்ட் வைத்து தருவார். இப்படி கணவனை தாங்கிக்கொண்டிருக்கும் மாமியார் ஊருக்கு சென்றுவிட்டப்பிறகு அந்தப் பணிகளை மருமகள் செய்வது போல் ஆகும். ஒரு கிழவனுக்கு பேஸ்ட் எடுத்து கொடுப்பதும் செருப்பு எடுத்து கொடுப்பதுமா இந்த நவயுவதிகளின் ஆசை கனவு லட்சியம்? அந்த மாமனார் பேஸ்ட் கேட்பார் ஆனால் செருப்பை அவரே எடுத்து போட்டுக்கொள்வார். மருமகளிடம் கேட்க மாட்டார். தனக்கு வைக்கும் சோற்றை விறகடுப்பில் வைக்கச் சொல்வார். அது அவரது விருப்பம். ஆனால் மருமகளுக்கு அது கடினம். கேஸ் அடுப்பு என்றால் சற்று எளிதாக முடியும் வேலை. விறகடுப்பில் கண்கள் எரிய சமைக்கவேண்டும்.

சரி இப்படி வைத்துக் கொள்வோம். இதே கதையில் வரும் கணவனும் மாமனாரும் அவர்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவர்களது தினசரிகளில் யார் யாரையெல்லாம் எதிர்கொள்கிறார்கள், எதையெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்ற அவர்களது சவால்களையும் பிரதான காட்சிகளாகக் காட்டிவிட்டு, அவ்வப்போது மருமகள் கோரும் வசதிகள், ஆடைகள், ஊர்சுத்தல்கள், தீனிகள், நகைகள், செளகரியங்கள் யாவற்றையும் காட்சிப்படுத்தினால், மருமகள்மீது அனைவருக்கும் கோபம்தான் வரும். எவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது இதில் இது தேவைதானா என்று சலிப்பார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் ஜோ பேபி. சமையலறையில் நடக்கும் அலுப்பூட்டும் வேலைகளை மிகத்துல்லியமாக படமாக்கியுள்ளார். ஆனால், அவராலும் முதல் பாதிக்கு மேல் கதையை நகர்த்த முடியாமல் திசைமாறி மாதவிடாய் என்ற மற்றொரு கருப்பொருளுக்குள் சென்றுவிடுகிறார். மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றளவிலும் பல இடங்களில் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தப்படத்தில் இந்தத் தலைப்பிற்கு இடமில்லை என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் படத்தின் எதிரி ஆணாதிக்கமாக இருக்க முடியாது. படத்தில் வரும் கணவன் மாமனார் என இரு ஆண்களுமே முழுமையான ஆணாதிக்கவாதிகள் இல்லை. ஆணாக நடந்துக் கொள்பவர்கள். அவர்களை முழுமையான ஆணாதிக்கவாதியாகக் காட்டாமல், ஆணாதிக்கத்தை எதிர்த்து ‘பெண்களை சமைக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்பது பூட்டிய வீட்டில் சண்டைக்குப்போவது போல் ஆகிறது.

கணவனும் மாமனாரும் முருங்கைக்காயை மென்று துப்பி மேசையில் வைத்து விடுவார்கள். அதை மருமகள் எடுக்கும் போது ஏதோ குடிகாரனின் வாந்தியை அள்ளுவது போல் முகும் சுழிப்பாள். ஓவராகத்தான் இருந்தது. அடுத்தவர் மென்றுவிட்டு துப்பியவற்றை அள்ளி எடுக்க அருவறுப்பாக இருந்தால், ஒரு சின்ன தட்டோ ப்ளேட்டோ வைத்து அதில் வைக்குமாறு சொல்லிவிடலாம். அந்த தட்டை அப்படியே எடுத்து குப்பை தொட்டியில் தட்டிவிடலாம். பிரச்சனைக்கு தேவை தீர்வு. அதை சிந்திக்கவோ சரியான முறையில் அணுகவோ பெண்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஒரு இயக்குநருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளுக்காக மருமகள் மாமனாரின் மீதும் கணவன் முகத்திலும் அழுக்குத்தண்ணியை ஊற்றிவிட்டு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். இதைப்பார்க்கும் சமையலறையில் வெந்து தவிக்கும் பெண்களுக்கு விசிலடித்து கைத்தட்டி கொண்டாடத் தோன்றும். இதைப்படிக்கும் உங்களுக்கும் அப்படி தோன்றினால், வெறுமனே கேட்பதையும் பார்ப்பதையும் மட்டுமே நம்புபவர்கள் நீங்கள் என அறிந்து கொள்ளுங்கள். உண்மையை உற்றுப்பாருங்கள். சோசியல் செக்யுரிட்டி என்ற ஒன்று நமது ஊரில் நிச்சயம் தேவை. அது இந்த மாமனாரின் வீட்டில் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண்ணுக்கு இருக்காது. அந்த இன்னொரு பெண் ஒரு சிங்கிள் மதர். அவளது சமூக செயல்பாட்டிற்காக அவளது வீட்டில் கல்லெறிவார்கள். ஸ்கூட்டியை கொளுத்துவார்கள். இந்த மருமகளின் வீட்டில் யாரும் வந்து அப்படி ஒரு கல்லை எறிந்துவிட முடியாத அளவிற்கு அந்த ஊரில் செல்வாக்கை சம்பாதித்து வைத்திருக்கிறார் மாமனார். அந்த சிங்கிள் மதர் பதிவிடும் முகநூல் பதிவைப்பார்த்துதான் இந்த மருமகளுக்கும் உணர்ச்சிகள் பொங்கும்விதமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர். இப்படி நிறைய இடத்தில் ஸ்லீப்பர் செல் போல சேம் சைட் கோல் அடித்திருக்கிறார் இயக்குநர். படம் எதை எதிர்க்கிறதோ அதற்கு ஆதரவான பல விசியங்கள் படத்திலேயே இருக்கின்றன.

Patriarchy and Feminism

இன்றும் பல குடும்பங்களில் கணவன்கள் மனைவிகளைக் கொன்றுவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். ஆனால் கொன்றுவிட்டால் எங்கு போலீஸில் மாட்டிக்கொள்வோமோ, ஊரில் மரியாதைக் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உயிரோடு விட்டுவிடுவார்கள். சரியாகச் சொல்வதென்றால் உயிரை மட்டும் விட்டுவிடுவார்கள். மீதி இருக்கும் நிம்மதி, மரியாதை, மன அமைதி, ஆசை, ஆழ் மனம், உடல்நலம், மனநலம் என அனைத்தையும் தினந்தினம் அடித்துக் கொன்று மென்று தூ எனத் துப்பிவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொல்வார்கள், அதே மனைவியிடம். 

இவை அனைத்தும் அவர்களது குழந்தைகளை பார்வையாளர்களாக வைத்துக்கொண்டேதான் நடக்கும். பிறகு அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் அதே முரட்டு அப்பா போலவும், பெண்ணாக இருந்தால் அதே அப்பாவி அம்மா போலவும் வளர்ந்து நிற்கும். தொன்றுதொட்டு இது தொடரவது கவலைக்குரியது. இந்த அபாயத்தை திரையில் கொண்டுவந்திருக்கலாம். திருமணத்திற்குப்பிறகு கணவன் மனைவி உறவில் பல உரசல்கள் சலசலப்புகள் நிகழும் அது இயல்பு. இன்னொரு உயிருடன் வாழ்வதற்கு ஒரு குறைந்தபட்ச சகிப்புத்தன்மை நிச்சயம் வேண்டும். ஆனால், எந்த அளவிற்கு அந்த சகிப்புத்தன்மையின் எல்லையை நீட்டிக்கொண்டே போவது என்பதில்தான் பெரும் பிரச்சனை. எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதா? எதையுமே சகித்துக்கொள்ளாமல் செல்வதா? எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும்? எதையெல்லாம் எள்ளளவும் சகித்துக்கொள்ளவே கூடாது? பதில் எளியது.

தன்னை ஒரு சக மனிதராகக்கூட பார்க்கத்தெரியாத, பார்க்கமுடியாத, தன் மன அமைதியை கெடுக்கவும், என்ன சொன்னால் என்ன செய்தால் தான் பாதிப்புக்கு உள்ளாவேன் என்பதைத் தெரிந்து தன் பலவீனத்தினால் தன்னைக் காயப்படுத்தவும் ஆட்டிவைக்கவும் தயங்காத எவரையும் வாழ்க்கைத் துணையாக தொடராதீர்கள்.

அது கணவனோ மனைவியோ. சின்ன சின்ன விசியங்களை சகித்துக்கொள்ளுங்குள். பேசி சரி செய்யுங்கள். சகிக்கவே முடியாத காரியங்களை மூடி மறைக்க ஆயிரம் குட்டிக்கரணங்கள் அடித்தாலும் அதை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.

கணவன்கள் செய்துவரும் அட்டூழியங்கள் ஏராளம். அதைத் தாங்கிப்பிடிக்க சில சொற்றொடர்களை வசதியாக துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.

  1. ஆம்பளனா கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பான்
  2. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
  3. அரசன நம்பி புருசனா விட்றாத
  4. ஜான் பிள்ளைனாலும் ஆண்பிள்ளை
  5. ஆம்பள சிங்கம்டி
  6. அதிகமா ஆசபட்ற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. (அதாவது பொண்ணுங்க கோபப்படக்கூடாதாம்).

தனிப்பட்ட முறையில் சிறுவயது முதலே கணவன்கள் மனைவிகளை அடிப்பதை ஆங்காங்கே கண்டு வந்திருக்கிறேன். அதில் அடி உதையுடன் நின்றவைதான் அதிகம். சில சமயம் அறைவது முடியைப்பிடித்து ஆட்டுவது என்பதைத் தாண்டி தாக்குதல்கள் எல்லைமீறி செல்லும். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

  1. வயசான நபர் ஒருவர் தான் அழைப்பது கேட்காமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவிக்கு, தக்க பாடம் புகட்ட அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவளது ஒரு காதை கத்தியால் அறுத்துவிடுகிறார்.
  2. கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியின் தோடை பிடித்து இழுத்ததில் காது மடலில் இருக்கும் ஓட்டை கிழிந்துவிடுகிறது.

உண்மையான தீர்வு

நிஜ உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிஜ உலகில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை திரையில் கொண்டுவருவதே மிகச் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு லஞ்சம் என்பதை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்தாகிவிட்டது. ரமனா, அந்நியன், இந்தியன், இத்யாதி இத்யாதி. எதிலுமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசியல்வாதிகளை விதவிதமாக கொன்றுக் குவிப்பார்கள். யதார்த்தத்தில் இதற்கு சாத்தியமே இல்லை. அதாவது நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்யாமல் அதைவைத்து படம் எடுத்து மக்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்து பிரபலம் ஆகி செட்டிலும் ஆகிவிடுவார்கள். ஒரு பிரச்சனையை சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை வைத்து பணம் பண்ண நினைப்பது ஏதோ ஒரு வகையில் மருத்துவத் துறையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நோயை குணப்படுத்தும் வகையில் அவர்களின் ஃபீசில் குறியாக இருப்பார்கள். நோய் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் பில் கட்டித்தான் ஆகவேண்டும். தொழில் என்றால் அப்படிதான் இருக்கும். மருத்துவமும் இன்று சேவை இல்லை. சினிமாவும் இன்று கலையில்லை. எல்லாமும் வியாபாரம். நாம் அனைவரும் வாடிக்கையாளர்கள். தவறாமல் ஏமாறும் வாடிக்கையாளர்கள்.

மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022

ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் அக்கண்ணாடியின் கூர்மையில் நாம் கிழித்துக்கொள்ளாமல் இருப்பது சிரமம்.

மகேஷ் நாராயணன் எழுதி ஒளிப்பதிவு செய்ய சாஜிமோன் பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது. நேரம் ஒதுக்கி பார்க்குமளவிற்கு தரமான படைப்பு.

வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் நாம் எவ்வளவுதான் நல்ல சிந்தனைகளை மனதிற்குள் கொண்டிருந்தாலும், சூழ்நிலை நம்மை சோதிக்கும்போது, மனதில் ஆத்திரமும், வன்மம், கோபமும் முட்டி மோதிக்கொண்டு முதலில் வந்து நிற்கும். நல்லவை மனதின் ஏதோ ஒரு மூலையில் பாய் விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அனிக்குட்டனாக நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வாழ்க்கை தந்த வலியை யாரிடமெல்லாமோ கோபமாய் கொட்டித் தீர்க்கப்பார்க்கிறார். ஆனாலும் தீரவில்லை. இறுதியில் அழுது கொட்டுகிறார் வலியும் வன்மமும் தீர்ந்து விடுகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற எண்ணத்தினாலோ என்னமோ, வலியைக்கூட கோபமாகவே வெளிப்படுத்தத் தெரிகிறது அனிக்குட்டன் உட்பட பல ஆண்களுக்கு. முழு சைக்கோக்கள் இல்லை இவர்கள், ஷார்ட் டேர்ம் சைக்கோக்கள்.

படம்முழுக்க அனிக்குட்டன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது போல இருக்கும். அவன் கோபப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் வரும்போது அவனால் பொறுமை காக்க முடியவில்லை. காற்றடைத்த பலூனில் ஊசி குத்தியது போல வெடித்துச்சிதறுகிறான். என்றோ எங்கோ எதற்கோ யாரிடமோ ஏற்பட்ட வலி உணர்வு, அவனை நிழல்போல துரத்திக்கொண்டே வருகிறது.

மனிதன் ஒரு சமூகவிலங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. மனிதன் ஒரு உண்ர்ச்சிமிகு மிருகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆறு அறிவு இல்லை நூறு அறிவு இருந்தாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான். படம் நெடுக இதனை காட்சிப்படுத்திக் கொண்டே வருவர். அனிக்குட்டன் புத்திசாலி, சாமர்த்தியகாரன், விவரமான மனிதன். ஆனால் என்ன பயன், கோபம் அவனை அடிமுட்டாளாக்கிவிட்டது.

படத்தின் இன்னொரு ராட்சசன் இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான். இசையின் மழையில் நனைந்து நனைந்து மனமென்னும் ஈரமற்ற மலை கரைந்து சரிந்து தரைமட்டம் ஆகிவிடுகிறது. இயற்கை சீற்றத்திற்கு இசைப்புயலின் இசை ராகம் கூட்டியிருந்தது.

ஆயிரம் வருஷம் வாழும் ஒருவன் எத்தனை வருஷம் நல்லவனாக இருப்பான்? முதல் ஐநூறு ஆண்டுகள்? கடைசி நூறு ஆண்டுகள்? அறுபது வருசம் வாழும் நாமும் அப்படித்தான். இடையில் நல்லவராய் இருப்போம். இடையில் கெட்டவராய் இருப்போம். கெட்டதை உணர்ந்து திருந்தி நல்லவராய் இருப்போம். நல்லவராய் இருந்து பயனில்லை என்று அலுத்துபோய் மனம்போன போக்கில் அலைவோம். எல்லாம் முடியும் போது எது நல்லது என்று தேடித்தேடி அதை நோக்கி மட்டுமே நகர்வோம். இறுதி நிமிடங்களில் அனிக்குட்டன் தேடுவதைப் போல.

இது ஃபீல் குட் மூவி இல்லை. ஃபீல் கில்ட் மூவி. நாம் வில்லன் இல்லைதான். ஆனால் நல்லவனும் இல்லை. நமக்குள் இருக்கும் நல்லவனை வெளியில் கொண்டுவர போதாத காலம் வரும்வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் நல்லதில் மனதில் இட்டுச்செல்லுங்கள். இதை உணர்த்த ஃபகத் ஃபாசிலும், ரஹ்மானும், மகேஷ் நாராயணனும், சாஜிமோனும், படத்தில் பங்களித்த அனைவரும் கைகோர்த்து படத்தை செதுக்கியுள்ளனர்.

பிரிவு 19(1)(a) & திரைப்படம் 19(1)(a) – 2022

Article 19(1)(a) in The Constitution Of India 1949 – to freedom of speech and expression

எழுத்து உரிமைக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதனை அச்சிட்டு பிரசுரம் செய்யும் உரிமைக்கும் தனியே ஒரு பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமோ என்கிற எண்ணத்தை வலியுறுத்தும் ஒரு உண்மை நிகழ்வும் ஒரு நிழற்படமும்மாய் கெளரி லங்கேஷும் 19(1)(a)வும்.

Chief editor Gauri Lankesh (55)

இந்தத் திரைப்படம் பெங்களூரில் 2017 செப்டம்பர் 5ல் நடத்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரான கெளரி லங்கேஷ் (வயது 55) அவர்களின் படுகொலையை கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை குறிக்கவே விஜய் சேதுபதியின் பெயர் ‘கெளரி சங்கர்’ என கொண்டு வரப்பட்டது. (‘சங்கர்’ என பெயரிட்டதற்கும் உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் 16ல் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட கெளசல்யாவின் கனவர் ‘சங்கர்’-கும் தொடர்பு உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை. அது கெளரவக் கொலை என்பது குறிப்பிடப்பட்டது.) கெளரி லங்கேஷ் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல அவர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ‘கெளரி லங்கேசு பத்ரிகே’ என்ற கன்னட வார இதழின் தலைமையாசிரியர். இவரது அப்பா P.லங்கேஷ் அவர்கள் தொடங்கிய பத்திரிக்கை அது. கெளரி லங்கேஷ் அவர்கள் இந்துத்துவா அவர்களுக்கு எதிராக அவரது பத்திரிக்கையில் எழுதிவந்ததினால், மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இப்படத்திலும் கெளரி சங்கரை மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுக் கொல்கின்றனர். அதே அதிகாலை நேரம் அது. படத்தில் சங்கரைக் கொன்ற இடம் தருமபுரி மாவட்டம். தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டும் போது கூட அவர் ஒரு சின்ன புன்னகையோடு தோட்டாக்களை பெற்றுக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

கெளரி லங்கேஷ் அவர்கள் திருமணமாகி விவாகரத்தும் ஆனவர். குழந்தைகள் யாரும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைகளை அநியாயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் உண்மையான journalist-ஆக வாழ்ந்து வந்தார். திரைப்படத்திலும் கெளரி சங்கர் (விஜய் சேதுபதி) அவர்களை தனிமையான ஆளாகத்தான் காட்டுவார்கள். தன் ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையைக் கூட அவர் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தெருவில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து குப்பையில் போடுகிறார். சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் அன்பும் தன்மீதுகூட இருந்ததில்லை என்பது போன்ற காட்சியமைப்புதான். இதை மனதில் வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறே அமைந்து போனது.

இப்படத்தின் நாயகி பெண்குட்டி (நித்யா மேனன்), கேரளாவில் தன் அப்பாவின் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். தனது அப்பா தொடங்கிய கடையை, அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சரிவர பார்த்துக்கொள்ளாததால், பெண்குட்டியே எடுத்துக்கொள்கிறார். யாருடைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிடாக்கூடாதென தன்னுடைய ஆசை எண்ணம் யாவற்றையும் பொருட்படுத்தாமல் வாழும் இந்தியப்பெண்கள் பெரும்பாலானோரது பிம்பமே இப்பெண். அதனாலோ என்னவோ இப்படத்தில் இவளது பெயர் இதுவென குறிப்பிட படவில்லை. இப்படத்தில் வரும் இசைகள் இப்பெண்குட்டியின் இதயத்துடிப்பாக எண்ண ஓட்டத்தின் இனிய சப்தமாக, அவளது உணர்வுகளை நம் மனதிற்கு கடத்தி விடுகிறது. உண்மையில் படத்தின் நாயகன் இசைதான். படம் மெதுவாக நகர்வதாக இருந்தாலும் தேவையான நேரம் கொடுத்தால்தான் பார்வையாளர்களின் மனதில் இப்பெண்குட்டியின் மனப்போராட்டம் சென்றடையும் என்ற முடிவு சரியானாதாகவே நம்புகிறேன்.

இப்படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சி. எழுத்தாளர் கெளரி சங்கர் (வி.சே.) தான் எழுதிய ‘கருப்பு’ என்னும் புத்தகத்தை நகல் எடுப்பதற்காக இப்பெண்குட்டியின் கடைக்கு வருகிறார். அதை நகல் எடுக்க சொல்லியும் அன்றிரவு வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கடைசியாக அப்பெண் கேட்கிறாள், பைண்டிங் பண்ணவா இல்ல ஸ்பைரல் போடவா என்கிறாள். கெளரி சங்கர், “உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவரது பணி எழுதுவது அதை என்ன செய்ய வேண்டும் என்பது இச்சமூகமே முடிவு செய்யட்டும் என்பதாகவே என் காதுகளில் விழுகிறது.

அதன் பிறகே அவர் கொல்லப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ‘கருப்பு’ எனும் புத்தகமும் அதன் நகலும் அப்பெண்குட்டியினிடமே இருந்துவிடுகிறது. கடைக்கு வந்து நகலெடுக்க சொன்னவர் யாரென்றே தெரியாத பெண்குட்டி அவரது இறப்புக்கு பின்பே அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். இச்சமூகம் இறந்தபிறகுதான் ஒருவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறது. சிலை வைக்கிறது. வாழும் பலரையும் கொண்டாட மறந்துவிடுகிறது. பலரது படைப்புகளையும்கூட மறந்துவிடுகிறது.

அவரை தெரிந்து கொள்ளும் பயனத்தில் சமூகத்தில் சத்தமில்லாமல் கிடக்கும் பல கேள்விகளையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். தன் சகோதரியிடமும்கூட அவளது கேள்விகேட்கத் தயங்கும், தன் கருத்தை சொல்லாமல் தவிர்க்கும் மனப்போக்கை கண்டு சமூகம் எப்படி கேள்விகளுக்கும் அதை எழுப்பும் குரல்களுக்கும் பூட்டு போட்டுள்ளது என சாட்சி படுத்திக்கொள்கிறாள். அவ்வப்போது காட்டப்படும் கருப்புக்கொடியும் கம்யுனிசக் கொடியும் சொல்லாமல் நிறைய சொல்லிவிட்டுப்போகின்றன.

ஆற்றோடு மிதந்து வரும் ஏதோ ஒரு பறவையின் இறகை தன் மேசைவரை கொண்டு வந்து வைத்துக்கொள்கிறாள் அப்பெண்குட்டி. கெளரி எழுதிய பிற புத்தகங்களுக்கும் அப்படிதான் அவள் தன் மேசையில் இடம் கொடுக்கிறாள்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கெளரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வந்த கெளரி பதறிப்போய் தேடுவது தான் எழுதிய புத்தகத்தின் தாள்களைத்தான். எதைவிடவும் தன் எழுத்துதான் முக்கியம் என இருக்கும் ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தின் அசலை அப்பெண்ணிடம் நம்பிக்கையோடு கொடுத்துவிட்டுச் செல்கிறார். அப்பெண்ணும் அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுகிறாள். அவள் இஷ்டம்போல செய்கிறாள். அதுவே சரியானதாக இருக்கிறது. எது சரியோ அதுவே எனது இஷ்டம் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தடைகிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக “ஒரு எழுத்தாளருக்கு இந்த உலகம் என்ன தந்துவிடப்போகிறது?” என்ற கேள்விதான் “அவர் எழுத வேண்டுமா?“அப்படி எழுதினால் எதை எழுத வேண்டும்? ” போன்றவற்றை முடிவு செய்கிறது. நன்கு கவனித்தீர்களானால் ஒன்று புரியும். ஒரு எழுத்தாளர் இவ்வுலகுக்கு எவ்வளவோ தரலாம், பதிலுக்கு இவ்வுலகம் ஒரு எழுத்தாளருக்கு மரியாதையையும் வசதியையும் மட்டுமே தரவியலும். இதை உணர்ந்ததினால்தான் சில எழுத்தாளர்கள் கொடுக்கவல்ல இடத்தைவிட்டு விலக மறுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை எழுத்தாளனை விலைக்கு வாங்கிவிட முடியாது. அப்படி வாங்க முடிந்தால் அவன் சாதாரன கதாசிரியராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நேர்மையான எழுத்தாளராகவும் ஒரு இயக்குனராகவும், நல்லதை கொடுக்கவல்ல இடத்தில் இருந்து பொறுப்புடன் திருமதி இந்து V. S. இப்படத்தை செதுக்கியுள்ளார்.

கெளரி சங்கரை கொலை செய்யும் மர்ம நபர்கள் வரும் இருசக்கர வாகனத்தின் ஒலி, படத்தின் இறுதியில் அப்பெண்குட்டி தன் கடையை அடைத்துவிட்டு வெளியே செல்லும்போதும் வரும். கெளரி சங்கரைக் கொன்ற போது வந்த அதே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுவிடுமோ என்ற பதற்றத்தை அது தந்துவிடுகிறது. சத்தம் கேட்டதா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Hotstar-ல் படம் காணக்கிடைக்கிறது. தேட்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் நிச்சயமாக ஃப்லாப் லிஸ்டில் சேர்த்திருப்பார்கள். ஓடிடி என்பதால் இது மக்களுக்கு சென்றடைய போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

விஜய் சேதுபதியின் பேச்சு இன்னும்கூட நன்றாக இருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் இன்னும் வீரியமாக இருந்திருக்கலாம். இந்திய மசாலாப் படங்களைப் பார்த்து பார்த்து ஊறிப்போன மனதிற்கு இயல்பான இறுக்கட்ட காட்சிகள் சற்று சலூப்பூட்டுவதாகவே தோன்றுகிறது. இப்படத்தைப் போன்ற படங்கள் அதிகம் வரும் போது இந்த dramatic, cinematic எல்லாமும் மனதின் எதிர்பார்ப்புகளில் இருந்து குறைந்துவிடும்.

“ஒரு படத்தைக்காண்பவர் அப்படத்தில் என்ன காட்டப்படுகிறதோ அதைப் பார்ப்பதைக்காட்டிலும்ம் தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் காண்கிறார்.” – (இதைச் சொன்னவர் யாரென சரியாகத் தெரியவில்லை. மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சொல்லியதாக ஞாபகம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.)

-சூர்யா வாசு 10.00 pm 11-08-2022