இந்தப்பக்கத்தில் நான் என் எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன். இதில் கதைகள் இருக்கலாம். கவிதைகள் இருக்கலாம். கிறுக்கல்கள் இருக்கலாம். புலம்பல்கள் இருக்கலாம். உங்களின் ஒரு பிம்பமும் என்னுடைய பிம்பமும் கூட சேர்ந்து இருக்கலாம்.
வாழ்க்கை என்னும் பரமபதம்
பகடைகள் உருளும் பரமபதத்தில்
பகடைகள் அல்ல பகையாளி
அதை உருட்டும் விரல்கள்தான் பரமவிரோதி.
தடவிக்கொடுக்கும் விரல்களும்
தட்டிக்கொடுக்கும் விரல்களும்
தத்தம் சுற்றில்
பகடைகளை சுழற்றாமல் இல்லை.
ஏணிகள் மட்டும் உள்ள
பரமபதம் கேட்டேன்!
பாம்புகள் மட்டும் உள்ள
பரமபதம் இருக்கிறதென்றார்கள்.
ஏணிகளும் இல்லாத,
பாம்புகளும் இல்லாத,
பரமபதம் கேட்டேன்.
பாதைகள் இல்லாத
பரமபதம் இருக்கிறதென்றார்கள்.
எல்லா பரமபதத்திலும்
ஏணிகளை விட பாம்புகளே அதிகம்.
ஆளை விழுங்கும் பாம்புகள்,
ஆயுளை விழுங்கும் பாம்புகள்,
கனவுகளை கவ்வி விழுங்கும் பாம்புகள்,
என பாம்புகள் பலவிதம்.
ஏணிகளின் படிகட்டுகள் போல
வரிகள் கொண்ட
கட்டுவிரியன்களும் இங்கு உண்டு.
ஏணி எது?
பாம்பு எது?
யார் அறிவார்?
வாழும் வழி எது?
பாம்பின் வாய் எது?
யார் அறிவார்?
தாயங்கள் உருளாமல் இருக்குமா?
காயங்கள் ஆறாமல் இருக்குமா?
கால்கள் படியேறுமா?
விஷம் தலைக்கேறுமா?
பகடைகள் உருளும்
பாம்புகள் காலைச்சுற்றும்
ஏணிகள் சறுக்கும்
பாதைகள் மாறும்
கால்கள் களைத்துப்போகும்
பரமபதத்தை நித்தம்
விளையாடிப் பார்த்திட வா.
காதல் என்னும் பெயரோடு
எண்ணெய் இல்லாத கினற்றில்
என்னைத் தள்ளிவிட்டாள்.
எண்ணெய் ஊற்றி
என்னைப் பற்றிவைத்தாள்...
பற்றி எரியும் என்னைப் பற்றி
அவள் துளியும் பதறவில்லை.
பற்றவைத்தவள் பதறுவாளா?
அனலில் அவள் குளிர்காய்ந்தாள்.
என் கதறலில் அவள் ராகம் தேடினாள்.
அவள் கண்ணில் என்ன கண்ணீரா?
எனக்காக அவள் அழுகிறாளா?
என் மேனி எரிந்த புகைப்பட்டு
அவள் கண் எரிந்ததா?
கண் கொட்டாமல் நான் கருகுவதைப் பார்க்கிறாள்.
நான் துடிதுடிப்பதை நிறுத்தியதும்
அவள் வேடிக்கைப்பார்ப்பதை நிறுத்தினாள்.
திரும்பிப்பார்த்தவளுக்கு அதே பாலைவனம் பல்லிளத்தது.
தனிமையில் தீயிட்டு விளையாட
என்னைத் தேடினாள்.
பாலைவனத்தில் மழைவர
வானத்தை வேண்டினாள்.
உயிர் முழுதாய்ப் போகும்முன்
முதல் மழைத்துளிப்பட்டு கண்விழித்தேன்.
கருகிய தேகத்தோடு
கருப்பு வெள்ளை கண்ணோடு!
காதல் என்னும் பெயரோடு!
பாசிட்டிவ் நெகட்டிவ் வேண்டாம்
பாசிட்டிவ் நெகட்டிவ் வேண்டாம்
அன்பும் வெறுப்பும் வேண்டாம்
சிரிப்பும் அழுகையும் வேண்டாம்
ஆசையும் கோபமும் வேண்டாம்
சிறு புன்னகையோடு கடந்து செல்லும்
யாரோ ஒருவராக வாழ்ந்துவிடப் பார்க்கிறேன்
நெருங்கி வந்து ஏன் என்னை
கொன்று போகிறீர்கள்.
அருகில் வர வேண்டாம்.
ஆறுதல் தர வேண்டாம்.
அதற்கு முன் ரனங்களையும்
தரவே வேண்டாம்.
பேசவும் வேண்டாம்.
சிரிக்கவும் வேண்டாம்.
தோன்றவும் வேண்டாம்.
மறையவும் வேண்டாம்.
தனிமையில் நான் லயிப்பது சோகத்தைதான்.
ஒருமையில் நான் பயில்வது நிம்மதியைதான்.
சாமியிடம் நான் கேட்பது
இன்மையைதான்.
எதுவும் வேண்டாம்.
யாரும் வேண்டாம்.
நான் மட்டும் போதும்.
எனக்கு நான் மட்டும் போதும்.
விழிகள் விற்பனைக்கு
பலவாறாக அழுதுத்தேம்பி
பலவருட காலம் அனுபவமுள்ள
விழிகள் விற்பனைக்கு !
கண்ணீர் வற்றாது
ஆறு அங்குல ஆழத்தில்
கண்ணீர் ஊற்றெடுக்கும்
விழிகள் விற்பனைக்கு !
முறைக்காத
சந்தேகப்படாத
ஏளனமாய்ப் பார்க்காத
விழிகள் விற்பனைக்கு !
கருணை குறையாத
ஏக்கம் மறையாத
குற்றம் இழைக்காத
விழிகள் விற்பனைக்கு !
இரவிலும் தூங்காத
பகலிலும் தூங்காத
அழுதும் வீங்காத
விழிகள் விற்பனைக்கு !
கருப்பு வெள்ளை நிறத்தில்
காதல் இருந்த இடத்தில்
மழலைப் போன்ற தரத்தில்
இரு விழிகள் விற்பனைக்கு !
விலை மலிவுதான்.
அன்புதான் விலை.
இலவச இனைப்பாக
ஆயுள் வரை நினைவில் இருப்பீர்கள்!
இன்றே முந்துவீர்.
இரு கண்களே உள்ளன!
In small talks we know about others.. In long conversations we know about ourselves…
வேறு ஒரு உலகம் வேண்டும்
வேறு ஒரு உலகம் வேண்டும்
அங்கு நான் பாவங்கள்
செய்யாதிருக்க வேண்டும்
வேறு ஒரு பெயர் வேண்டும்
அதை அனைவரும்
அன்போடு அழைக்க வேண்டும்
வேறு ஒரு மனம் வேண்டும்
அதில் ரனங்கள் ஏதும்
இல்லாதிருக்க வேண்டும்
வேறு ஒரு வானம் வேண்டும்
அதில் நிலவு தேயாது
வளர்ந்து வானமாக வேண்டும்
வேறு ஒரு தேகம் வேண்டும்
அதில் தழும்புகள்
இல்லாதிருக்க வேண்டும்
வேறு ஒரு வாழ்க்கை வேண்டும்
அதில் பிழைகள்
இல்லாதிருக்க வேண்டும்
வேறு ஒரு மொழி வேண்டும்
அதில் வார்த்தைகள் எல்லாம்
மெட்டுக்களாக வேண்டும்
வேறு ஒரு சுற்றம் வேண்டும்
அதில் குற்றம்
இல்லாதிருக்க வேண்டும்
வேறு ஒரு நவரசம் வேண்டும்
அதில் பயம் இழிவு அழுகை கோவம்
இல்லாதிருக்க வேண்டும்
வேறு ஒரு வேஷம் வேண்டும்
அதிலாவது கெட்டவனாய் இருந்து நல்லவனாய் நடிக்க
தெரிந்திருக்க வேண்டும்.