ஆண் பெண் ஆற்றல்தேடிக் களைக்கும் இம்மனம்.
கூடிக் களைக்கும் இவ்வுடல்.
இவ்விரண்டு தளங்களிலும் ஒரு ஆணின் வாழ்க்கை முழுவதும் சோர்வு தொடர்ந்தாலும், அவனின் ஆற்றலை கையாளும் சாவி என்றும் பெண்ணிடம்தான் பொதிந்துள்ளது.
ஆணுடைய ரத்தத்தில் உள்ள ஆற்றலை வேகப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும். களைப்பில் வரும் உறக்கமே உடலின் முழு அமைதி. அமைதி இல்லாத மனம் நூலற்ற பட்டம்போல் அலைந்து திரியும். மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா?
செலவழிக்காத ஆற்றல் திசையறியாமல் திக்குமுக்காடி கிடைத்த இடத்தில் வெடித்துச் சிதறும். அதன் வடிவம் கோபமாக இருக்கலாம், கண்ணில் படும் பெண்களிடம் வழிவதாக, அளவுக்கு மீறி உழைப்பதாக, மது குடிப்பதாக, ஆங்காரமாய் கத்துவதாக, என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆண் அத்து மீறும்போது, அவனது வீட்டில் இருக்கும் பெண்களும் அவனை கையாள தவறிவிட்டார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் சமைக்காத போது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வார்கள். ஹோட்டல் போக வழியோ வசதியோ தைரியமோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கௌரவம் பார்க்காதவர்கள் ரோட்டில் கையேந்தி பிச்சை எடுப்பார்கள். பசி தாங்காதவர்கள் இறுதியில் திருடுவார்கள். மாணத்திற்கும் பயந்து பசியையும் பொறுக்க முடியாதவர்கள் எச்சில் விழுங்கி குப்புற படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்வார்கள். யாரும் பட்டினியோடு உறங்க மாட்டார்கள்.
தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் மூஞ்சில் எச்சில் துப்பும்முன், தன் வீட்டில் நுழைய முயலும் திருடனின் கண்ணில் மிளகாய் தூவும்முன், தன் வீட்டு ஆண் பிச்சை எடுக்கிறனா திருடுகிறானா என்று பெண்ணும் யோசித்துப் பார்க்க வேண்டும். தன் வீட்டை எத்தனை பிச்சைக்காரர்கள் திருடர்கள் குறிவைத்து காத்திருக்கின்றனர் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
எதிர் பாலின ஈர்ப்பு என்பது டி என் ஏ வில் உள்ள சமாச்சாரங்களே தவிர, குணம் சார்ந்த விடயம் அல்ல. நல்லவன் கெட்டவன் குமரன் கிழவன் வீரன் கோழை ஞானி முட்டாள் என உடல் கொண்ட அனைவருக்கும் எதிர் பாலின ஈர்ப்புணர்வு என்பதுண்டு. அதை பதின்ம வயதுகளில் துளிர்விடும் போது அடக்கி வைக்க முற்படுவது வன்மம் கடந்தது. அவ்வாற்றலை முறையாகக் கையாள கற்றுத்தர வேண்டும்.
வயிற்றின் பசிக்கு ஊண் உண்பது போல,
உடலின் பசிக்கு ஊடல் கொள்வது இன்றியமையாதது.
எல்லோருக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான். அக்கரையில் இருப்பவர்களின் கண்களில் பாருங்கள் இக்கரை எவ்வளவு பச்சை என்று தெரியும்.
உயிரினங்கள் அனைத்திலும் ஆண் இனமே அழகு பொருந்தியதாக இருக்கிறது. அழகு காரணமாகவே பெண்களை கவர்ந்து ஈர்க்கின்றன. மனித இனத்தில் மட்டும் பெண் இனம் அழகு என்பதன் வரையறையை தனதாக்கிக் கொண்டது. சிந்தியுங்கள். ஆணுக்கும் அழகு கட்டுபாடு என எல்லாம் உண்டு. பெண்ணுக்கும் அறிவு அத்துமீறல் என எல்லாமும் உண்டு.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இதுவும் நம் உடல் நித்தம் கோறும் பசிதான்.
ஆண்கள், நாக்கை தொங்க போடாதீர்கள். வாயிலும் வயிற்றிலும் குப்பையை கொட்டாதீர்கள். பேரழகு கொள்ளுங்கள். துர்நாற்றமில்லாத மேனி பேணுங்கள். கடப்போர் கடை கண்ணின் எல்லையை நீட்டுங்கள்.
பெண்கள், அழகுபோல் அறிவையும் மெருகேற்றுங்கள். வீட்டு ஆண்களை முந்தானையில் முடியுங்கள். சொக்கிக்கிரங்கி சொர்க்கம் அழைத்துச் செல்லுங்கள். குடும்பம் குதூகலித்தால் வாழ்க்கை வளம் பெரும்.
ஊடலை இன்னும் பூடகமாக்காதீர்கள். காதலும் ஊடலும் சொல் வேறு செயல் ஒன்றல்லவா!
மணி மூனு
சரியா மணி மூன தாண்டும்போது மூளைக்குள்ள ஏதோ ஒரு புலப்படாத ஏரியா ஓபன் ஆகுது. அங்க கனவும் வராது, நிஜமும் தொடராது. இரண்டுக்கும் இடையில ஒரு பெண்டுலம் போல ஓடிட்டு இருக்கும். ஒரு வித போதன்னு கூட சொல்லலாம். இந்த மிதவைய
நிறுத்துவது சாதாரண காரியமல்ல. ஏன்னா நான் இத எழுத ஆரமிச்சி அரைமணி நேரம் ஆச்சு. இப்பதான் எழுதி முடிக்கிறேன்.
சென்னை இரவுகள் நினைவுக்கு வந்ததும், அந்த நிலைகொள்ளாத மனநிலையும் கூடவே வருது. எத்தனை இரவுகள் எத்தனை சிந்தனைகள், அவ்வளவையும் அனாயசமாக வீசியெரிந்துவிடும் பகல் பொழுதில்தான் எத்தனை இரைச்சல்கள்.
ஆஷ் ட்ரே
மேசையின் ஒரு ஓரத்தில் அந்த ஆஷ் ட்ரே இருந்தது. மேசையின் அந்தப் பக்கம் அவர் உக்கார்ந்து இருந்தார். அவர் எதிரில் நான் உட்கார்ந்து இருந்தேன். வசமாய் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். என் வயதே இருந்தாலும் அவரிடம் எப்போதும் மரியாதையோடே நடந்து கொள்வேன். வழக்கம்போல இரண்டாவது தீக்குச்சியில்தான் நெருப்பு பற்றியது. சிகரட்டைp புகைத்தபடி அரசியல் வரலாற்றை பேச ஆரம்பித்தார். பிறகு ஆன்மீகம் பற்றி பேசினார். அப்புறம் விவசாயம். அப்புறம் கார்ப்பரேட். ஒவ்வொரு தலைப்பும் முடியும்போது அந்த ஆஷ் ட்ரேவில் சாம்பல் கட்டிகளை தட்டி கொட்டிவிட்டு அடுத்த ப்பஃப்-ஐ இழுத்து பேசிக்கொண்டே புகைக்கலானார். புகை அவரது நெஞ்சிலும் அந்த அறையிலும் மட்டுமல்ல, எனது நாசியிலும் சிறிதளவேனும் நுழைந்திருக்கும். கடைசி ப்பஃபை இழுத்து உதடு சுட்டப்பிறகும் நம்பிக்கை இல்லாமல் சிகரட்டை கடைசியாக ஒருமுறை பார்த்தார். உண்மையிலே சிகரட் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தது. மரண தண்டனை எழுதிவிட்டு பேனா முள்ளை குத்தி உடைப்பதுப் போல புகைக் கசிந்த அந்த சிகரட்டை ஆஷ் ட்ரேவில் குத்தி நசுக்கினார். நீண்ட புகையை தலைக்கு மேல் ஊதிவிட்டு அடுத்த தலைப்பை யோசித்தார். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மேசை மீது வைத்திருந்த கண்ணாடியை எடுத்து சுவற்றில் மாட்டிவிட்டு கதவைத் திறந்து பார்த்தேன். வாசலில் யாருமே இல்லை.