கண்ணாடி எழுத்துக்கள்
நேர்த்தி இல்லாமல்
அர்த்தம் இல்லாமல்
எதுகை மோனை சுவை இல்லாமல்
காட்சியில் தொடர்ச்சி இல்லாமல்
வருவது எல்லாம் என் எண்ணங்கள்தான்!
என்னையே பிரதிபலிக்கும்
என் எழுத்துக்கள்கூட
என்னையே பழிக்கும்
கண்ணாடிகள் ஆகின.
கோபத்தில் தூக்கிபோட்டு
எழுத்துக்களை உடைக்க
உடைந்த அக்கண்ணாடி
எழுத்துக்களின் கூர்முனையில்
தன்னைத்தானே
கிழித்து சிவப்பை கசியவிட்டு
அதிலே நீலத்தில்
கிறுக்கிக்கொண்டிருக்கும்
பேனாவுக்குச் சொந்தக்காரன்
நான்தான்!
கசப்பாக கசங்கிய காகிதத்தில்
மங்களாய்த் தெரிவதும்
நானும் என்
கண்ணாடி எழுத்துக்களும்தான்.
அதிலே உங்களின் முகங்கள்கூட
தொடர்ச்சியில்லாமல் தெரியலாம்,
என்றோ நாம் சிரித்தப்பேசிய
சித்திரமும் நிறமற்றுத் தெரியலாம்,
அன்று சினத்தில் நான் வீசிய
கோபச்சொற்கள் யாவும்
கண்ணாடித் துகள்களாய்
என்னைக் கீறிச் சென்று கொண்டிருக்கலாம்!
கொஞ்சம் மட்டும் கொல்லும்
தன்னைக் கொஞ்சம் மட்டும் கொல்லும்
எதுவும் நிறையப் பிடிக்கிறது.
தானே தேடி எடுத்துக்கொள்ளும்
வலியத்தேடி வருத்திக் கொள்ளும்
வலி ஒரு சுகமோ!
ரனமும் அழுகையும் வதையும் பழகிய மனதிற்கு
காயங்கள் மீது எக்கமோ!
சக உறவை பலியாக்குவது சரியோ!
நாயும் பூனையும்
மௌனங்கள் காதடைக்க
பசி வயிற்றடைக்க
துக்கம் தொண்டை நிறைக்க
வலி தலைக்கேறியது.
விழி ஊற்றானது.
சாபம் ஏதும் உண்டா?
சோகம் தீர யாகம் ஏதும் உண்டா?
நாகம் தீண்ட பாடம் ஏதும் உண்டா?
பாவம் போக்க பூசை ஏதும் உண்டா?
புன்னியம் கொஞ்சம் கொண்டு வா
புத்தி கொஞ்சம் கொண்டு வா
அமைதி கொஞ்சம் கொட்டிப் போ
ஆறுதல் கொஞ்சம் தந்துப் போ
விடுதலை யாருக்கு வேண்டும்?
விடாமல் என்னை சிறையிடு.
சுதந்திரம் யாருக்கு வேண்டும்?
வலிக்காமல் என்னைக் கொன்றுவிடு.
மீண்டுமொரு ஜென்மத்தில் சந்திப்போம்.
நாயும் பூனையுமாய்.
காதலிக்காமல் சண்டையிட்டு மாண்டிடுவோம்.
காதலித்து சண்டையிடுவதே சாபம் என்றிடுவோம்.