கவிதையைக் கொன்றவன்
கவிதையைக் கொன்றவன்.
போதையில் பாதை தொலைத்தவன்.
துணைக்கு வந்த கவிதைகளைக் கொன்றவன்.
கொன்ற வருத்தம் இல்லாதவன்.
அழகுக் குப்பைகளை அள்ளிக்குவத்தவன்.
ஆசை வார்த்தைகளை கிள்ளி எறிந்தவன்.
தன் நிலையை எண்ணி நிறுத்தாமல் சிரித்தவன்.
மறுத்துப்போன மனதால் வாழ்வை வெறுத்தவன்.
கருத்துப்போன கண்களால் பார்வை அறுத்தவன்.
விரக்தியே விருப்பமாக ஏற்றுக்கொண்டவன்.
சிரத்தையில்லாமல் சிதையத் துணிந்தவன்.
நான்தான் என்று சொல்ல மறந்தவன் நான்தான்.
நானேதான் !
வார்த்தைகளில் வலி
வலிகளை வர்ணிக்கத் தோன்றியதில்லை.
அளவுகடந்து உணர்ந்த போதும்
வலியை வார்த்தைகளாகக் கடத்தியதில்லை.
முதுகுத்தணடில்
பூட்டொன்றை மாட்டி
அதிலே ஊஞ்சலாடும்
கருங்கல்லாக வரும் வலியை
யாருக்கும் நான் சொல்லியதில்லை!
பெற்றக்குழந்தைக்கூட
இடுப்பில் இருந்து குதித்தோட!
பெற்றெடுக்காத குழந்தையாக
இடுப்பில் இருந்து இறங்காத
வலியொன்றுக்கு பெயர் தெரியவில்லை!
கான்க்ரீட்டில் அடிக்கும் ஆணியாக
ஏதோவொரு அருவம்
தலையை சுற்றி
டங்டங்கென்று முத்தமிடும்
சத்தத்தை பிரிந்ததேயில்லை!
நடக்கப் பிடிக்கும் மனதை
கால்களுக்கு சற்றும் பிடிப்பதேயில்லை!
வலி மட்டுமே துணையாய்
வழி முற்றுமே ரனமாய்
விதி எனவே மரமாய்
வரமாய் வந்தது இவ்வாழ்வு.
வலித்தாலும் அழுவதில்லை.
கண்ணீரும் வருவதில்லை.
ஆம் மறுத்துவிட்டது.
வலி நிரந்தரமாய் உயர்தரமாய்
உடம்பில் பாய்விரித்து படுத்துவிட்டது.
வலிக்கும் உருப்பை மட்டும்
கழற்றி வைக்கும் வசதியிருந்தால்
அக்கக்காக என்னைக்கழற்றி
அலமாறியில் வைத்துவிட்டு
ஆன்மாவாக ஒரு மாசமே
ஓய்வெடுத்துக் கொள்வேன்.
ஆன்மா வலி உணராது
எனும் நம்பிக்கையில்
இதை ஆசையாய் எழுதி
வலிநிறைந்த உடலோடு
வாசித்துக் கொண்டிருக்கிறோம்.
வலி மறந்த காயங்களாய்
நீயும் நானும்.
கதைகள் பேசும் காயங்கள் ரெண்டு
கதைகள் பேசும்
காயங்கள் ரெண்டு
கண்ணீர் மழையில்
நனைந்து நின்றும்
பேசித்தீர்க்க
கதைகள் தேடின!
சதைகள் தரும்
சுகங்கூட வேண்டாமென்று
ஆறுதல் தரும்
இதம் போதுமென்று
உணர்ந்த நொடியில
உன்னதம் கூடின!
மருந்தும் ஆற்றாத
நெடுநாள் ரனங்களை
பேசி சிரித்து
மறக்க முடியுமென்று
நித்தம் நூறு
கூற்றுகள் இயற்றின.
தெரிந்தும்கூட முட்டிக்கொள்ளும்
பிள்ளை ஒன்று
அழுகையை நிறுத்த
ஆள் இல்லையென்று
தானேத் தேம்பித்தவழ்ந்து தூங்க
கண்ணீர்த்துளிகள் காய்ந்தன.