Keyboard கிறுக்கல்கள்

இஜ்ஜென்ம வன்மங்கள்

யாரும் அற்ற வீட்டிலும்
பற்றிப் படரும்
கொடி போல.
நொறுங்கிப்போகும் என் எண்ணங்களில்
கொட்டிக் கிடக்கும்
உன் நினைவுகள்.

உன் நினைவுகளின்
குப்பல்களில் சிதறிக்கிடக்கும்
என் பிம்பங்கள்.

என் பிம்பம் யாவும்
உன் வண்ணங்கள்.

உன் வண்ணம் தீர்க்கும்
என் இஜ்ஜென்ம வன்மங்கள்.
நீ நான் நிலா காய்கிறோம்

நிலவும் காய்கிறது.
நிலவொளியில் நாமும் காய்கிறோம்.
குளம் மட்டும் ஏன் குளர்கிறது.
நீர் இருப்பதாலா?
நம்மில் நீர் இல்லையா?
நிலவில் நீர் இல்லையா?
நட்சத்திரங்களைக் கேட்போம்.
நயமாக விசாரிப்போம்‌.
நிலவில் நீர் இருக்குமா?
நமக்கும் தாகம் தீர்க்குமா?
வேண்டாம்.
தாகம் தீர வேண்டாம்.
இதழ்கள் ஈரமாகட்டும்.
விழிகளில் நீர் கசியட்டும்.
காரணம் இன்பமாய் இருக்கட்டும்.
தாகம் தீர்க்கும் தேடலே வாழ்வாய் அமையட்டும்.
நீ நான் நிலா என்றென்றைக்கும் காய்வோம்.
ஈரம் குறையாமல் காய்வோம்.
மறந்துப்போகும் வாழ்க்கை

கதை எழுத மறந்து
கவிதை எழுத மறந்து
கட்டுரை எழுத மறந்து
காசு தேடித் திரிந்தே
பொருட்களின் குவியலில்
வார்த்தைகளைத் தேடவும் மறந்துவிட்டேன்.
தொலைத்ததையும் மறந்துவிட்டேன்.
மறக்க மட்டும் மறப்பதேயில்லை.
மரத்துப்போன மனதுக்கு மறதி ஒன்றும் வலியில்லை.
உயிரோடு இருப்பதெல்லாம் வாழ்வதாக அர்த்தமில்லை.
பொருட்கள் இல்லாத வாழ்வு அர்த்தமேயில்லை என்றோடி
பொருட்கள் யாவும் வந்தப்பிறகு
சற்றிருந்த பொருளும் அர்த்தமற்றதாகி
அச்சொற்களின் வரிசையின் கடைசியில் நானும் நிற்கிறேன்.
எழுத்துப்பிழை யாவும் என் விரல் வழியே வழிந்தோட,
காட்சிப்பிழை யாவும் என் கண் வழியே கசிந்தோட,
எழுத்துப்பிழையில் ரத்த வாடையும்
காட்சிப்பிழையில் கண்ணீர் தடமும்
புலன்களின் உணர்வில் உரைந்திருக்க 
நானே சாட்சியாகிறேன் !