Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023

1 thought on “Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹”

  1. இந்த பதிவு எழுதியதும் , எழுதுவதற்க்கும் மகிழ்ச்சி🙏வாழ்த்துக்கள் 👏👏👏நன்றிகள்🙏.

    இனி என்னுடைய துணைப்பதிவு .. இதில் சொல்லப்படுபவை தேவை இருக்கும் பட்சத்தில் எடுத்துக்கொள்ளவும், பல பிதற்றல் இருக்கலாம் இருந்தும் எழுதுகிறேன் .

    நான் அதிகமாக சினிமா படங்களை பார்ப்பதில்லை, இந்த சினிமா படமும் அப்படியே. சில படங்களின் டிரெயிலர் கூட பார்த்ததில்லை அதிலும் இப்படம். இது வெற்றி பெற்றாதாக இருந்தால் அப்படத்தின் கடை நிலை ஊழியனுக்கும் வெற்றியாக இருப்பின் மகிழ்ச்சி. இல்லையெனில் வருத்தங்களே.
    சினிமா
    ஒரு எளிய மக்களின்
    அசதி
    இளைப்பாறல் ..
    ****
    அக்கப்பலில் அவளையும்
    என்னையும்
    அம்மணமாக
    நிற்க வைத்து
    கசையடியால்
    கூட்டத்தையே அடிமையாக்கி
    கொண்டு போய் கொண்டு இருந்து இருக்கலாம்.
    அதே பாணி காலம் மாறியதாய்
    இருக்கிறது ஆனால் நான் தரையிலே
    இருக்கிறேன் அவளும் இருக்கிறாள்
    இருவருக்கும் பிடித்த உடையில் இருவருக்கும் பிடித்த படி இருக்கிறோம் ஆனால் கசையடிகள்
    வடிவம் மாறி இருக்கிறது. அந்த அடிகள் வலிக்க வில்லை, திசைகள் எங்கே என தெரியவில்லை.
    போய் கொண்டு இருக்கிறோம்.
    &&&&
    இறுதி ஊர்வலம்
    சவம்
    மணம்
    மனம்
    மானம்
    அவமானம்
    அம்மணம்
    இதன் இடையில்
    அவள் அவன்
    பிறந்து கொண்டே..

    காதல் சகித்து
    சகித்து
    சகித்து போதல் ..
    கடந்து போய்
    ஈர்த்து ஈரமாகி
    போகும்
    விழிகளுக்குள்..
    பிறந்து
    வாடிக்கொள்ளும்
    பூக்கள்..
    மறைக்கப்பட்ட
    நிலாவை
    கொண்ட சூரியன்..
    &&&&
    ஆணுக்கு பெண்ணும்
    பெண்ணுக்கு ஆணும்
    சமமாக தேவை பட்டு கொண்டே
    இருக்கிறார்கள்.
    இயற்கை அப்படியானது
    இல்லையே.
    இயற்கையின்
    வழியில்
    நாம்.
    நிலம் பொருத்து. இயற்க்கை சூழல்
    பொருத்து
    இரு மனம் பொருத்து
    ஐந்துக் கு
    ஒன்று
    ஒன்றுக்கு ஐந்து என மாறுபடுகிறது.
    ஒன்றுக்கு ஒன்று.
    ஒன்றுக்கு சுழியம் எனவும் மாறுபடுகிறது.
    இந்த தாக்கங்களுக்கு
    இடையில்
    அரசோ
    அரசியோ
    அவனோ
    எதுவும் செய்ய முடிய போவதில்லை.
    அது அவர்களின் மனதை பொருத்து.
    ஆனால் ஒவ்வொரு மனதும் ஒவ்வோரு
    மாதிரி மாறிக்கொண்டே இருக்கிறது.
    அவை மீரப்படும் பொது ,
    முதலில்
    தோற்றவையோ,
    கருப்போ,
    கிழ்மையானவையோ,
    எளிமையானவையோ,
    அழகானவையோ,
    அதித
    சேதங்களுக்கு உண்டாகிறது .

    அழகிகள் மீது
    இன்னும்
    செல்வந்தர்களும்
    வெள்ளுடை காரர்களும்
    வீரர்களும்
    இராணுவ வீரர்களும்,
    பல அவன்களும்
    அத்துமீறி
    படமெடுத்தும்
    படையெடுத்தும்
    கொண்டே தான் இருக்கிறார்கள்.

    இந்த இருப்பு
    நகர்வில்
    அவளுடன்
    அடுத்த
    நகர்வுக்கு
    மனமும்
    இயற்கையே
    திருத்திக் கொள்ளட்டும்.
    ***
    இன்னும் மனித மன நிலையில் மாற்றம் இல்லை, மனித மனங்களில் நிறைய malware இருக்கத்தான் செய்கிறது. அதற்கு patch release செய்து கொண்டே இருந்தாலும் , பயன்பாடுகளில் இல்லை.

    பெண்ணை வைத்து ஒரு கரிசனத்தை உண்டு பண்ணி படம் செய்து அதை வைத்து காசு செய்யும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறது.
    எனக்கு தெரிந்து
    புனைவு கதை என எடுத்து கொண்டால், ஆடை உருவி , உருவாக்கி கடவுள் உருவாதால், அதே கடவுள் அவளின் ஆடைகளை மற்றொரு சீனில் களவாடுதால்.

    அவளின் தற்கொலைக்கு முயற்சிக்கு முன்னால் இரு வாடிக்கையாளர்களை
    திருப்தி படுத்த வேண்டி இருக்கிறது .

    அவளை சில கிலோ மீட்டர் இழுத்து செல்லும் காட்சிகளும், ஆசிட் வீச்சு, தொழில்நுட்ப எடிட்டிங் என எல்லா வகையான மன கோளாறு ஆண்டுக்கு ஆண்டு வடிவம் மாறி இருக்க செய்கிறது.
    அப்படியே அவள் அவனை நம்பினாலும், “பெல்டால் அடிக்காதிங்க , அண்ணா.” காட்சிகளும் இருக்க செய்கிறது.
    ஆண் வளர்ப்பு,
    மனம் மாறப்படவேண்டும்.
    மீசை வெறும் மயிர்.
    ***
    பிரியாணிக்கு
    ஆசைப்பட்டு, அதிகாலை
    குளிரில்
    கிணற்றில்
    வீசி
    குழந்தையை
    கொள்ளும்
    அவள் களின்
    மனமும்
    இதற்கு
    சமமாக மாற வேண்டி இருக்கிறது.

    இக்கால
    விதிகள் மாற்றத்தால்,
    பல
    விலங்குகள்
    உடைக்கப்பட்டு
    இருக்கிறது,
    அச்
    சலுகைகளில்
    தங்காமல்,
    அவள்கள்,
    மானுட தாங்களில்
    ஒருவரை
    ஒருவர்
    அன்பு
    கொண்டு
    தாங்கி
    தங்கி
    கொள்ளட்டும்.
    இயற்கையில்.
    ****
    இயற்க்கையின்
    மேல்
    இயற்க்கை
    கொண்ட பற்றில்
    இயற்கையே
    உருவாகி கொள்ளட்டும்.
    ****
    இன்னும்
    எழுதி கொண்டே போகலாம், ஆனால்
    வள்ளுவனின் வழியில், நின்று விடுகிறேன்.
    “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.”
    ***
    கலை./05/Jan/23

    Reply

Leave a Comment