“இப்ப எதுக்கு தனிமனித ஒழுக்கத்த பத்தி பேசிகிட்டு, எல்லாரும் ஒழுக்கமாத்தன இருக்காங்க? ” என்பது உங்களின் வாதமாக இருந்தால், பொது கழிப்பறை, தெருமுனை குப்பைத்தொட்டி, நடைபாதை ஒரம், போன்ற இடங்களை சற்று நிதானமாக நினைவுகூருங்கள். அங்கிருக்கும் மலம் சிறுநீர் எல்லாம் தாமாக அங்கு உருவெடுத்தவை அல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பற்ற போக்கே அந்த நிலைக்கு காரணம் ஆகும். ஏதோ ஒரு இடம்தானே, வீதியோரம்தானே, என்று தனிமனிதன் செய்யும் அவலத்தில் தொடங்கி முடிவின்றி அந்த அறுவருப்பு தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேயிருக்கும்.
எங்கிருந்து இதனை சரி செய்வது ? பதில் பள்ளி மற்றும் வீடு. அதாவது குழந்தைகள் வளரும்போதே சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளியை சுத்தமாக வைத்திருக்க ஆயமாவை பணிக்கு வைப்பதைக் காட்டிலும், பள்ளியை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து தினமும் ஒருமணிநேரம் பள்ளியின் சுத்தத்திற்காக செலவிடலாம். “ஆயிர கணக்குல பணத்தகட்டி எம்புள்ளய குப்ப பொறுக்கவும் கக்கூஸ் கழுவவும் அனுப்ப சொல்றியா?” என்று சண்டைக்கு வருபவர்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி, “ஆயிர கணக்குல் பணத்தக்கட்டி உம் பிள்ளைக்கு ஆய் இருந்துட்டு தன்னி ஊத்தகூட தெரியலனா பரவாயிலையா? “. குளிப்பது, சிந்தாமல் சாப்பிடுவது, சாப்பிட்ட தட்டை சுத்தமாக கழுவி வைப்பது, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது என எல்லாமே தனிமனித ஒழுக்கம்தான்.
வீட்டு குப்பைகளை அம்மாக்கள் மட்டுமே அப்புறப்படுத்துவதை தவிர்த்து, ஆண் பெண் என இருபாலரும் சுத்தமான வீட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்பதை குழந்தைகளின் மனதில் பதிய வையுங்கள். குப்பைகளை சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்லும் துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்று புரியவையுங்கள். அவர்களது வேலையை சேவையை எளிமையாக்க உதவுங்கள். மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரிக்கக் கற்றுக் கொடுங்கள்.
தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு சிறந்த குணம். உங்கள் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் நன்மைகளை கூறி வளருங்கள். கழிவறையில் தகாத வார்ததைகளை எழுதுவது வரைவது எல்லாம் அவரவர் மனதில் இருக்கும் அழுக்கையே உணர்த்துகிறது. அந்த கழிவறையைக் காட்டிலும் அவர்களது மனம் நாறிக்கிடக்கிறது என்றே அர்த்தம். பள்ளியில் இருந்தே கழிவறை கிறுக்கல்களை களைய வேண்டும்.
“ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போது எதைப்பற்றி சிந்திக்கின்றானோ அப்படியே அவனது வாழ்வும் அமையும்.” என்பதை வலியுறுத்துங்கள்.
தனிமையில் நல்ல சிந்தனையை மேற்கொள்ள meditation யோகா போன்ற அகத்தூண்டல்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அதைப் பயிற்றுவிக்க மறவாதீர்கள். அதோடு குப்பைகளை நல்ல முறையில் அப்புறப்படுத்தவும் கற்றுக் கொடுங்கள். நெகிழி (plastic) குப்பைகளை தவிர்க்க, நெகிழி கொண்டு அடைக்கப்பட்ட பொருட்களை விலை கொடுத்து வாங்க தவிர்ப்பதும், கடைகளுக்கு பழையபடி துனிப்பைகளை கொண்டு செல்வதுமே தீர்வாகும்.
சரி குழந்தைகளுக்கு தனிமனித ஒழுக்கம் குறித்த அறிவைப் புகுத்திவிட்டால் சமூகத்தில் எல்லாம் சரியாகிவிடுமா ? என்றால் ஆகாது என்பதே பதில். ஏனென்றால் நகர்புறங்களில் மக்கள்தொகை, அடர்த்தியான இடங்களில் எத்தனை நபர்களுக்கு ஒரு கழிவறை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அதிர்ந்து போவீர்கள்.
குறைந்தது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு கழிவறை வேண்டும். ஆண் பெண் மாற்று திறனாளி என்று தனித்தனியாக கட்டமைக்க வேண்டும். 500 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக் திறக்கும் அரசாங்கம், தாராளமாக ஆயிரம் மீட்டருக்கு ஒரு கழிவறையை திறக்கலாம். இவையெல்லாம் அரசு அதிகாரிகளின் அறிவுக்கு எட்டாமல் இல்லை. சமூகம், சுத்தம் சுகாதாரம் என்று செழிப்பதைக் காட்டிலும் கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். இப்படி கழிவறைகளே இல்லாத சமூகத்தில், மலம் இடுப்பை முட்டும் போது தனிமனித ஒழுக்கம் இருந்துமட்டும் என்ன செய்வது ? சாலையோரமும், குப்பைத்தொட்டி மறைவும், ரயில்பாதை ஒரமும்தான் கழிவறையாகும். மேலும் பெண்கள் பயனத்தின்போது சிறுநீர் கழிக்க நல்ல பொது கழிப்பிடங்கள் இருக்காது என்பதால், பயனத்திற்கு முன்பும் பயனத்தின்போதும் தண்ணீர் அருந்துவதில்லை என்பதெல்லாம் அரசாங்கம் செய்யும் வதை.
கழிவறைக் கட்டுவது நம் கையில் இல்லை. அரசாங்க வேலை என்று பின்வாங்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு கழிவறைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள், குறைந்த பட்சம் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைகூடவா மாவட்ட ஆட்சியர் ஆகாமல் போய்விடும் ?. அந்த ஒரு குழந்தை கழிவறைகளை நகரெங்கும் அமைக்கும், மற்ற குழந்தைகள் அவற்ற நல்ல முறையில் பயன்படுத்தும்.
வீடு மற்றும் பள்ளியில் இருந்தே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து அதை செயல் படுத்துங்கள். 25 வயதைத் தாண்டியும் சுத்தம் இல்லாமல் குளிக்க தெரியாமல் கழிவறையை பயன்படுத்தத் தெரியாத சுகாதாரமற்ற, ஆனால் ஊருக்குள் கெத்தாக சுற்றும் இளைஞர்களை நாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். நாம் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை, அடுத்த தலைமுறை நல்ல சமூகத்தில் வாழ வித்திட்டு செல்வோம்.
மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.
பின்னுட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.
Surya devan V —— 15.04.2018
ஒவ்வொரு வரிகளும் பசுமரத்து ஆணி பதிவுகள் ..
என் அகத்தில் தேங்கித் தவிக்கும் வெதும்பல்கள் ..
ஒழுக்கம் என்பது பாலினம் சம்பத்தப்பட்டது அல்ல , அது மானுடம் சம்பந்தப்பட்டது ,
மானுடவியல் சம்பந்தப்பட்டது ..
ஒழுக்கம் என்பது
தவழும் வயது முதல் தள்ளாடிக்
கவிழும் வயது வரை பயின்று பழகும் மொழி ..
ஒழுக்கம் என்பது அழகிய வாழ்வியல் மொழி ..
சிறப்பான மிகவும் அவசியமான பதிவு அன்பு சகோதரன் ..
பாராட்டுகள் உடன்பிறப்பே ..
-பரிதி இளவல்
ஒவ்வொரு வரிகளும் பசுமரத்து ஆணி பதிவுகள் ..
என் அகத்தில் தேங்கித் தவிக்கும் வெதும்பல்கள் ..
ஒழுக்கம் என்பது பாலினம் சம்பத்தப்பட்டது அல்ல , அது மானுடம் சம்பந்தப்பட்டது ,
மானுடவியல் சம்பந்தப்பட்டது ..
ஒழுக்கம் என்பது
தவழும் வயது முதல் தள்ளாடிக்
கவிழும் வயது வரை பயின்று பழகும் மொழி ..
ஒழுக்கம் என்பது அழகிய வாழ்வியல் மொழி ..
சிறப்பான மிகவும் அவசியமான பதிவு அன்பு சகோதரன் ..
பாராட்டுகள் உடன்பிறப்பே ..
-பரிதி இளவல்
சிறப்பான பதிவு அண்ணா. எழுத்து பிழை: அருவருப்பு
@
அந்த அறுவருப்பு தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேயிருக்கும்