நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

3 thoughts on “நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்”

  1. அய்யா ,
    இந்த பதிவு எழுதியதும் , வானத்தில் (கிளௌடில்)இருப்பதும் எழுத்துவதற்க்கும் மகிழ்ச்சி🙏வாழ்த்துக்கள் 👏👏👏நன்றிகள்🙏 .

    இனி என்னுடைய துணைப்பதிவு .. இதில் சொல்லப்படுபவை தேவை இருக்கும் பட்சத்தில் எடுத்துக்கொள்ளவும் தேவையின்றி வைவதை தவிர்க்கலாம் 😆.
    இப்பதிவின் தேவை இருக்காது என்பதால் எழுதுகிறேன் .(குறிப்பு : நான் நட்சத்திரம் நகர்கிறது படம் இன்னும் பார்க்கவில்லை )

    ஒரு சிறு கவிதை ,

    நட்சத்திரம் நகர்வதில்லை..
    நாம் நகருகிறோம் ..
    நகர்த்த படுகிறோம் ..
    பொழுதுகள் மாறுகிறது ..
    பார்ப்பதில் மகிழ்ச்சி
    வானத்திரையில் ..
    வண்ணத்தில்
    நீலம்
    கடல்
    காதல்
    ஆழம் ..
    உயிர்கள்
    வாழ்கிறது
    நிலத்தில் ..
    அடுத்த
    பிரபஞ்சித்தின்
    நகர்வு
    காதல்
    படைத்தல் காத்தல் அழித்தல் .

    குறிப்பாக ஒரு கருத்தாக்க சமுதாய முன்னேற்ற சினிமா🤣 படத்திற்கு இவ்வளவு பெரிய கருத்துரு எதிர்பார்ப்புகள் மக்களிடம் தேவை இருப்பதில்லை .தேவை இருக்கும் பட்சத்தில் அது வெற்றி யாகவும் , வெற்றி இல்லாமலும் வியாபார உலகத்தில் மடை மாற்றப்படுகிறது . அதே தான் காதலும் இருவரை ஒன்றாக்க
    என்ன என்ன தேவை இல்லாமல் இருக்கிறதோ , அதை வைத்து நம் மூத்த உலகம் செய்த தவறை (அல்லது) நகர்வை , சரி செய்ய (அல்லது ) நகர்வை ஒருவர் அல்லது சிலர் தமிழ் சினிமாவில் முன்னெடுத்து இருப்பது மகிழ்ச்சி . என்னுடைய பார்வையில் பா.ரஞ்சித் அவர்கள் இப்படத்தின் மூலம் ஒரு உரையாடலை தொடங்குகிறார் .

    ஒரு கால சமூக மாற்ற படங்களில் சமூதாய கருத்துக்கள் மட்டும் தேவை இருக்கும் பட்சத்தில் வெற்றி அடைகிறது . எனக்கு தெரிந்து பராசக்தி மற்றும் ரத்தக்கண்ணீர் . இந்த இரு படங்களிலும் கதை நாயகன் ரங்கூனில் அல்லது அயலூரில் இருந்து வருவதாக மட்டும் இருக்கும். இந்த படத்தில் அந்த குறைகள் அந்த படத்தின் வெற்றியை பொருட் படுத்தவில்லை .

    இன்னும் மாற்றப்பட வேண்டிய சினிமா ,மாற்றி கொண்டிருக்கும் சினிமா .
    தற்காலிக தமிழ் சினிமாவின் ஒரு படத்தில் முன்னணி நடிகர் தன் எதிர்ப்பால் ஈர்ப்பு கொண்ட நடிகையை பார்க்க அக்கல்லூரிக்குள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வருவதும் , நாயகி உடனே அவ்வாகனத்தில் ஏறி அமர்ந்து உனக்காக வாழ நினைக்கிறேன் என கிளம்புவதும் ,சிரிப்பை வர வைப்பதாகவும் இருந்தாலும் நம் மனதை வெற்றியாக கொண்டாட வைத்து விட்டார்கள் . அதில் நாயகன் எந்த வேலைக்கு செல்கிறார் என்கிற கேள்வியெல்லம் நம் மனதில் ஏற்படுவதில்லை .இது போல் பல தமிழ் சினிமாக்கள் விளைவில் பல தங்க மகள்களும் , பல ராயல் என்பீல்ட் பேர்விழிகளை தேடுவதும் நிகழ்கிறது (அல்லது ) பல நெடுமாறன் ராஜாங்கங்கள் தன் சுந்தரிகளை தேடுவதும் ,(அல்லது ) பல வெள்ளை முடி பவுன்சர்களை கட்ட பஞ்சாயத்து காரர்களை ஐ.டி பெல்லோக்கள் தேடுவதும்,(அல்லது )பல கார்த்திக்குகள் யாமினிக்காவும் , ஜெஸ்சிக்ககாகவும் விட முயற்சியில் இருப்பதும் , பல பழங்கள் ஷோபனா மனதில் சேர் போட்டு அமர்த்திருக்கவும் . இங்கு காதல் காதலாக காத்து வாக்கால் மாற்ற பட்டு காதல் முற்று பெறாமல் நகர்கிறது , இருக்கிறது .

    கோடுகள்
    கோட்டுக்கு அந்த பக்கம் ஒரு காதலும் ,
    கோட்டுக்கு இந்த பக்கம் ஒரு காதலும்
    கோட்டை தாண்டி இருக்கும் காதலும் வெட்டப்படுவதும்
    வெட்டிவிடப்படுவதும் வெட்டி கொள்வதும்
    என்னை எனக்கும்
    என்னை அவளுக்கும்
    அவளுக்கு என்னையும்
    அவளுக்கு அவள்களையும்
    எனக்குள் பல நான்களும்..
    காதல்
    நகர்தலே …

    இன்னும் முற்று பெறாமல் ,
    முற்று பெறாமலே போகும் ,
    காதல்
    கடந்து,
    கடந்தும்
    போகும் ..

    இந்த சமூக இன்ஸ்டா ரீல்களால் நம்முடைய எளிய பிள்ளைகளை
    பாதுகாத்தால் 🤣

    நம்முடைய பிரச்சனைகளை
    கடவுளுக்கு முன்னே
    கொண்டு சென்று
    கடவுளுக்கும்
    கடவுளுக்கும்
    பிரச்சனை
    ஆக்கி
    இரு பெரும் வெவ்வேறு
    கடவுளுக்கு
    போர் ஆக்குவதை விட ..
    கடவுளுக்கு தெரியும்
    நம்
    அன்றாட பிரச்சனைகள் பற்றி
    என காலண்டர் கிழிப்பதே
    மேல்
    இல்லை
    கீழ் 🤣
    என்றும் இராமல்,
    கடவுளை
    காதலிக்காமல்
    காதலியை &காதலனை
    காதலித்து
    கொஞ்சம் திகட்டாமல் ..
    கொஞ்சி திகட்டி ,
    நம்மை சுற்றி
    நாமும்
    நாமை
    சுற்றி
    நம்மவர்களையும்,
    நமக்கு நாமே
    திட்டத்தின் மூலம் 🤣
    பேசுவதாலும் எழுதுவதாலும்..
    நகைப்புடன்
    நகரலாம்🤣 .
    மகிழ்ச்சி 🙏
    கலை.

    Reply

Leave a Comment