நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

3 thoughts on “நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்”

Leave a Comment