நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

மஞ்சு from அவள் அப்படித்தான்

ரெனேவைப் பேசுவதென்றால், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சுவைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

“வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்”,

“ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன்தான். ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்”,

“பழமொழிகளால வாழ்றத நான் விரும்பல”,

“i hate hypocrytes. வேஷம் போடுறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது.”

“அவங்க அப்டிதான் இருப்பாங்கன்னா, நானும் இப்டிதான் இருப்பேன்”,

“முரண்பாடு இல்லாம யாரு இருக்காங்க? முரண்பாடு இருக்கிறதாலதான் நாம மனுஷனா இருக்கோம்.”

“நீங்க ரொம்ப கஷ்டப்படப்போறீங்க” என்ற கமலின் வார்த்தைகளுக்கு “அதப்பத்தி எனக்கு கவலயில்ல” என்று நொடியில் பதிலளிக்கும் மஞ்சுதான், பின்பு தன்னை நல்லவன் போல் நடித்து உடலுறவு கொண்டவன் தன்னை தங்கை என்று சொல்லியதற்காக “அவன் தங்கச்சினு கூப்பிடாம, தேவிடியானு கூப்டிருந்தான்னா கூட I wouldn’t have bothered” என்று கொதிக்கிறாள்.
(படத்தை துள்ளலான தொனியில் நகர்த்திச்செல்வதே ரஜினியின் ரகளையான நடிப்பும் வசனங்களும்தான். இந்த ரஜினியை ரசிக்க தவறிவிடாதீர்கள். அவள் அப்படித்தான் படத்தின் லிங்க். https://youtu.be/lvhZBBt7oD8)

ரெனே – nose-cut நாயகி

தனக்கெனவே தனித்துவமான திமிருடன் மிளிரும் ரெனேக்கள் எப்படி உருவாகிறார்கள்? ரெனேக்களை உருவாக்குவது காயங்கள்தான். what doesn’t kill you makes you stronger. மனிதர்களின் வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் பார்வைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அவர்களைத் துள்ளியமாகக் கணிக்கத் தெரிந்தவர்கள். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களின் பாசாங்குகளினாலும் ஆசை வார்த்தைகளினாலும் சிறுபிள்ளைப்போல ஏமாந்து இருப்பார்கள். ரெனேக்களை பெண் என்பதாலே ருசிபார்த்திருப்பார்கள். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல தான் ஒரு பெண் என்பதையே கேடையமாக பயன்படுத்துவாள்.

ரெனேக்களுக்கும் மஞ்சுக்களுக்கும் பசப்புக்காரர்களின் பாசாங்குகள் நன்கு தெரியும். ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல ஒரே பேட்டர்னில் கொக்கி போடுவார்கள். ரெனேக்களுக்கு அலுத்தே போகியிருக்கும். இவன் அடுத்து இந்த நகர்வைத்தான் மேற்கொள்வான் என்று. பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, யாவரையும் கயவர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே யூகித்துப் பழகுவார்கள். 99 விழுக்காடு அவர்களின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். ஆதரவு தருவதாகக்கூறி ஆர்கஸத்திற்கு அடித்தளமிடுவார்கள் ஆண்கள். பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள். கோரப்பற்கள் நிறைந்த தந்திர நரிகள். முத்தம் கொடுத்தால்கூட அக்கோரப்பற்களால் காயம்தான் படும். இடைவெளி கடைபிடிப்பது ரெனேக்களுக்கு நல்லது. மீதி ஒரு விழுக்காட்டு தூயமனம் படைத்த ஆண்களாகவே 99 விழுக்காடு ஆண்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நெருங்கி வருபவர்களையெல்லாம் தூக்கி எறிவதே ரெனேக்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ரெனேவிற்கு பொருத்தமான ஆண் என்றாவது ஒருநாள் அமையலாம். இனியனைவிட, அர்ஜுனைவிட மிகப்பொருத்தமாய். ஆனால், அவனுடனும் ரெனே சண்டையிடுவாள். உலகின் மிக உண்ணதமான ஆணுடனும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். உலகின் மகா அய்யோக்கியனிடமும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். இந்த விஷியத்தில் ரெனேவும் ஒரு பெண்தான், எல்லாப் பெண்களும் ஒரு ரெனேதான். (ஆமா அந்தப்படத்துல இருந்துதான் சுட்டேன்.) தம்பி ஒருவன் என்னிடம் ஒரு பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டான், “அவ கல்யாணம் பண்ணிகிட்டாலே நிறைய சண்ட வரும்னு பயப்படுறாண்ணா, என்ன சொல்றது”. நான், “கல்யாணம் பண்ணினாலே சண்ட போட்டுதான் ஆகனும், அதுக்குதான் மனசுக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் சலிக்காம சண்ட போடலாம்னு சொல்லு”என்றேன். காதலும் மோதலும் வாழ்க்கைல சாதாரணமில்லையா?

அர்ஜுன் – a miserable character or a miserable characterisation?

வானவில்லைக் கடந்த காகம் பஞ்சவர்ணக்கிளி ஆனதுண்டா? அர்ஜுனும் அப்படித்தான். கபாலத்தில் அடிப்பட்ட உடன், திடீரென நல்லவனாக மாறிவிடுகிறான். அவன் தன் தவறை உணர்ந்து மாறும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? திருநங்கை, தன்பாலீர்ப்பாளர்கள் மீதான அவனுடைய மதிப்பீடுகளை யார் மாற்றினார்கள்? தான் ஒரு நிகழ்வில் சண்டையிட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அதனால் நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கிறேன் என்று யாரும் கூறிவிடமுடியுமா? அப்படி மாறியதாகக் கூறினால் இதுவும் வெறும் நடிப்புதான் அன்றி வேறில்லை. அர்ஜுன்கள் இங்கு நிறைய உள்ளனர். ரெனே அவளைப்பற்றி சொல்லும் கதையைக் கேட்டு, அவள்மீது அனுதாபக்காதல் கொள்ளவில்லை அர்ஜுன். ஏற்கனவே அவள்மீதிருக்கும் தனது ஈர்ப்பை அவள் இளகிய நேரம்பார்த்து இறுதி ஆயுதத்தை கையில் எடுக்கிறான். ‘I love you Rene’ என்கிறான். ரெனே சலித்தேப்போய்விட்டாள். போடா டேய் என்கிறாள்.

அர்ஜுனின் மூலம் நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதை சொல்ல முயற்சிக்கிறார் பா.ரஞ்சித். இன்னும் சற்று இறங்கி அர்ஜுனின் வீட்டில் நடக்கும் நாடகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாடகம் இருப்பக்கங்களிலும் இருக்கின்றன. அதனை இருத்தரப்புகளும் மறுத்துப் பேசுவது வாதமாக மட்டுமே இருக்கிறது. நியாயமாக இல்லை.

இப்படத்தில் தவிர்க்கமுடியாத இன்னொரு பெண் ரோஷினி. மாடர்ன் மங்கையாக வருபவர். மிகவும் இயல்பாகத் தன் வாழ்வியலுக்கேற்ற ஆடையுடனும் வரைமுறையுடனும் எல்லைகளுடனும் வாழும் பல பெண்களை, ஆடைகளைக் கொண்டு, கடிகார நேரங்களைக் கொண்டு குத்திவிளையாட ‘தேவிடியா’ என்ற சொல்லுடன் கண்படும் தூரத்தில், காது கேட்கும் தூரத்தில் எப்போதும் ஆண்கள் காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரக் காவலர்களிடமிருந்து இந்த பாலாய்ப்போன கலாச்சாரத்தை யாராவது காப்பாற்றினால் பரவாயில்லை என்றிருக்கும். ரெனேவும் இன்னொரு ரோஷினியாகியிருக்க வேண்டியவள். பிறப்பின்பால் தாழ்த்தப்படும் சமுதாயத்தில் ரெனேக்கள் என்றுமே ரோஷினியாக முடியாது.

ரெனேக்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் ஆர்வமானவர்கள். அழகானவர்கள். அனைவரையும் அசரடிக்கும் அழகுகுணம் பொருந்தியவர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சி போன்றவர்கள். அவர்களின் ரெக்கைகளை காதல் காமம் என இரு விரல்களுக்கு இடையில் வைத்து கசக்கிவிடத் துடிக்காதீர்கள். பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால்தானே ரசிக்க முடியும். ரெனே ரெனேவாகவே பறக்கட்டும். நாம் ரசிகனாகவே ரசிக்கலாம். காதலோடு, ரசனையோடு, இளையராஜாவின் இசையோடு, வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

2 thoughts on “நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்”

Leave a Comment