இந்த தலைப்பும் சற்று சென்சிடிவான தலைப்பு. எனவே, அடிப்படையில் இருந்து அலசி பார்த்தோமேயானால் ஒரு தெளிவுக்கு வரலாம்.
பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னார் முதன் முதலில் உயிர் தோன்றியபோது அது ஆணாக இருந்ததா? பெண்ணாக இருந்ததா? அல்லது இரண்டுமாக இருந்ததா? அல்லது இரண்டும் இல்லாமல் வேறு ஒரு பாலின வகையில் இருந்ததா? பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஒரு கருத்தும் நம்பிக்கையும் இதுதான் உண்மை என்று நேரில் பார்த்தது போல சத்தியம் செய்து எல்லாம்கூட சொல்லுவர்.
90களின் முடிவில் எனது ஊரில் சர்ச்சில் திரை கட்டி ஒரு படம் ஓட்டினார்கள். அதில் மண்ணில் இருந்து ஒரு மணிதன் தோன்றுவான் (ஆதாம்). அவன் தனியாக காட்டில் திரிந்து கொண்டிருப்பான். பிற விலங்குகள் எல்லாம் அதனதன் இணையோடு இருப்பதைக்கண்டு அவன் தனக்கொரு துனை இல்லை என்று ஏங்குவான். பிறகு எங்கிருந்தோ இன்னொரு பெண் ஒருத்தி (ஈவ்) வருவாள். இதைத்தான் மனிதனின் தோற்றம் என்று எத்தனை நாள் நம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால், டார்வினின் தியரி விரைவில் என்னை வந்தடைந்து நம்பும்படியான ஒரு கதையைத் தந்தது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் உண்மை என்று நம்பும் ஒரு கூற்று ஆணும் பெண்ணும் இனைந்தால் தானே இன்னொரு உயிர் தோன்றும் என்பது. ஆனால் ஒரு உயிர் தோன்ற ஆணும் பெண்ணும்தான் தேவை என்பது நூறு விழுக்காடும் அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நத்தை இனங்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். இணை சேரும்போது எதோ ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் பங்காற்றி இனப்பெருக்கச் சேர்க்கையில் ஈடுபடும். எந்த ஒரு நத்தையாலும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்ய முடியும், கரு முட்டைகளையும் உற்பத்தி செய்து இனச்சேர்க்கையின் மூலம் கருக்களையும் சுமக்க முடியும். அதாவது நத்தை ஆணாகவும் இருக்கும், பெண்ணாகவும் இருக்கும், சமயத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஆணாகவும் நடந்து கொள்ளும், பெண்களாகவும் நடந்து கொள்ளும். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இதைவிட ஆச்சர்யம், நன்கு வளர்ந்த சில நத்தைகளால் தானாகவே கருவுற முடியும். இன்னொரு நத்தையின் துணை தேவையில்லை. இவ்வகை உயிரினங்களை hermophrodites என்பார்கள். மண் புழுக்களும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால், அவைகளால் சுயமாக கருவுற முடியாது.
சில உயிரினங்கள் இதற்கு நேர்மாரானவை. ஒன்று ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டு பாலுறுப்புகளையும் ஒரே உயிர் கொண்டிருக்காது. அவ்வகை உயிரினங்களை gonochoristic species என்பார்கள். விலங்குகளில் 95 விழுக்காடு gonochoristic தான். முதுகெலும்பு கொண்ட 99% உயிரினங்கள் gonochoristic தான். அது ஏன் 99% என்கிறார்கள் என்றால், மனிதர்களில் சிலர் அரிதாக இரண்டு பாலுறுப்புகளுடனும் இருப்பது உண்டு. அவர்களை true hermophordites அல்லது intersex என்றழைக்கிறார்கள். ‘LGBTQIA+’ல் உள்ள ‘I’ எழுத்து intersex ஐ குறிப்பதாகும். இவர்களுக்கு இரண்டு பாலுறுப்புகள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுதான் முழு பயன்பாட்டில் இருக்கும். இவர்களை பலசமயங்களில் transgender/திருநர் என குழப்பிக்கொள்வார்கள்.
trioecy என சொல்லப்படும் உயிரினங்களில் male ஆண் இனங்கள் இருக்கும், female பெண் இனங்கள் இருக்கும், இந்த இரண்டு பாலுறுப்புகளும் கலந்த hermophrodites களும் இருக்கும்.
இவ்வளவு விளக்கங்கள் எதற்காக என்று யோசித்திருப்பீர்கள். ஒருவர் யாராக இருக்க வேண்டும், யாராக இருக்கப் போகிறார் என்ற முடிவு கருவில் இருக்கும் போது முடிவாவது. அது ரசாயன செயல். எந்தெந்த ஹார்மோன்கள் எவ்வளவு சுரக்க வேண்டும் என்பது யார் ஒருவரும் முடிவு செய்வதில்லை. அது இயற்கை. அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது.” – கந்தன் கருணை படத்தில் இருந்து ‘அரியது கேட்கும்’ பாடல் வரிகள். இந்தப் பாடலை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இதில் வரும் பேடு என்ற சொல் hermaphrodites ஐக் குறிக்கும் சொல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு உயிர் முறையே முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ பிறத்தல்தான் அரிது என்கிறார். ஏனென்றால் அதுதான் இனப்பெருக்கத்திற்கான வழி. ஆனால், வாழ்தல் என்பது வெறும் இனப்பெருக்கத்தை மட்டுமே மையப்படுத்தியது அல்ல. வாழ்க்கை என்பது பலவாறானது.
சில ஆண்களிடம் பெண்மைக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். சில பெண்களிடம் ஆண்களுக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் புரிதலும் எந்தக்காலத்திலும் மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கலை கலைஞர்களில் கைகளில் வந்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
L G B T Q I A +

‘L’ என்றால் Lesbian. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல். இது உணர்வு சார்ந்த விடயம். ஒரு பெண்ணுக்கு எப்படி இன்னொரு பெண்ணைப் பிடிக்கும் என்பதுதான் இன்னமும் பலரது கேள்வி. இக்கேள்விக்கு பதில் கிடைக்காமல் இல்லை. பதில்களை ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாதவர்களால் இதனை எளிதில் கடந்து வர முடியாது. தாராளமாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கலாம். இது உடல்சார்ந்த விடயம் அல்ல. முழுமையான பெண்களுக்கும் இன்னொரு பெண்ணின் மீது காதலும் வரும்.
‘G’ என்றால் ‘Gay’. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு ஆணைக் குறிக்கும் சொல். லெஸ்பியன்கள் போலதான் இவர்களும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மீது காதலும் காமமும் ஏற்படலாம். இவர்களும் உடல் அளவில் முழு ஆணாக இருப்பார்கள். சிலர் gay என்ற சொல் பொதுவாக தன்பாலீர்ப்பு கொண்டவர்களை குறிக்கும் எனவும் விளக்குகின்றனர்.
‘B’ என்றால் ‘Bisexual’. சிலருக்கு ஆண் பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். திருநங்கையாகவும் இருக்கலாம். இதுவும் அவரவர் மனதின் விருப்பத்தைப்போன்றது.
‘T’ என்றால் ‘Transgender’. இந்த வார்த்தை நம்மில் பலருக்கு தெரிந்ததுதான். ஆணாகப்பிறந்து, பெண்ணாகவோ அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகவோ மாறிவிடுவார்கள். இவர்களை இழிவாக சித்தரித்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காட்சிகள் காமெடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு ஆண் பெண்போல வேடமிட்டாலோ, நடந்துகொண்டாலோ அதனை நக்கலடிக்காமல் இருக்க யாருலும் முடியாது. அலி, பொட்ட, ஒம்போது என பலவாறான இழி பெயர்களை தவறாமல் அடுத்தத்த தலைமுறைகளுக்கு கடத்திவந்தனர். சமீப வருடங்களில்தான், இவர்களுக்கான பொதுப்பெயராக, திருநங்கை transwoman, திருநம்பி transman, இவர்கள் இருவரையும் குறிக்கும் பெயராக திருநர் transgender ஆகியவை வழக்கத்திற்கு வந்தன. ஒரு ஆணின் மனம் பெண்ணில் உடலில் சிக்கிக் கொண்டால் எவ்வளவு சிரமப் படுமோ, அதே சிரமம்தான் ஒரு பெண்ணாக உளமாற உணர்பவர்களும் பிறப்பால் ஆணின் உடலில் சிக்கிக்கொள்வர். தான் ஒரு தவறான உடலில் இருப்பதாக உணர்வார்கள். இது க்ரோமோசோம்களின் கலவையே அன்றி தனிப்பட்ட நபர்களின் கேரக்டர் இல்லை. சமூகத்தில் இவர்களும் நல்ல நல்ல பதவிகளில் கால்பதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

‘Q’ என்றால் ‘questioning’. இவ்வகை நபர்கள், தனக்கு யார் மீது ஆர்வம் மிகுதியாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லத்தெரியாதவர்கள். அல்லது அதைக்கண்டரியும் நோக்கில் பயனப்படுபவர்கள். ‘Q’ என்றால் ‘Queer’ என்றும் குறிப்பிடுகிறார்கள். gay என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது ஈர்ப்பு கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். குயிர் என்பதும் ஆணின்மீது வரும் ஈர்ப்புதான் ஆனால் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அற்று தனது விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்த உதவும் ஒரு தனிச்சொல்.
‘I’ என்றால் ‘Intersex’. இவர்கள் சற்று அரிய வகையினர். முழுமையான ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல், இரண்டும் கலந்து, பிறப்புறுப்பு, க்ரோமோசோம்கள், இனப்பெருக்க உறுப்புகள் என்று அனைத்திலும் சின்ன சின்ன மாற்றங்களுடன் மொத்தம் முப்பது வகையாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ‘Intersex” என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால் மேலே உள்ள ஐந்து வகையினரும் LGBTQ தனித்தனியாக குறிப்பிட்ட உடல் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இண்டர்செக்ஸ் எனப்படுபவர்களுக்கு பலவாறான உடல் பண்புகள் இருக்கின்றன. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
‘A’ என்றால் ‘Asexual’. இவர்களுக்கு ஊடலில் குறைவான ஆர்வமோ அல்லது கொஞ்சம் கூட ஆரவமில்லாமலோ இருக்கும். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண், பெண், திருநர், இண்டர்செக்ஸ்.
இப்படி பலவாரன உடல் அமைப்புகளையும், பாலின ஈர்ப்புகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கிய பல வகுப்பினர் இங்கு இருக்கிறார்கள். இந்தப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்வதாலும், இவர்களுக்கென தனியே ஒரு + குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.
‘+’ என்றால் மேலே குறிப்பிட்ட வகுப்பினரும் அல்லாது ஏனையோரைக் குறிப்பது ஆகும். இதில் Pansexual, Allosexual, Aromantic, Demiromantic, Demisexual, Dyke, Faggot, Androsexual, Gynesexual, Polyamorous, skoliosexual, sapiosexual, reciprosexual, இத்யாதி இத்யாதி வகுப்பினர் உண்டு. அதனால் ‘+’ குறியீட்டை பயன்படுத்துகின்றனர். ‘+’ல் வகைப்படுத்தப்படும் பட்டியலில் சிலவகுப்பினர் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் heterosexual/straight- எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் cisgender- பிறப்பால் எந்த பாலினத்தவரோ அதே உணர்வுடன் வாழ்பவர்கள். ஆணாகப் பிறந்து உடலிலும் உணர்விலும் முழு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள் அல்லது பெண்ணாகப் பிறந்து உடலாலும் உணர்வாலும் முழு பெண்ணாக இருந்து ஒரு ஆணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள். இவர்கள் ‘+’ல் இடம்பெற மாட்டார்கள்.
ஏன் இவ்வளவு தனித்தனிப்பெயர்கள்? ஏன் இவ்வளவு பெருமை இதில்? இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது? என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அதுவும் ப்ரைட் வாக்கின் போது வரும் சகிக்கவியலாத பேச்சுகளுக்கு குறைவே இல்லை. அதற்கான பதிலும், மேலே வகைப்படுத்தப்பட்ட தனிப்பெயர்களுக்கான தேவையும் இதோ. இங்கு பெரும்பாண்மை என்னவாக இருக்கிறதோ அதுவாகத்தான் சிறுபாண்மையும் இருக்கவேண்டும் என்ற திணிப்பும் அப்படி இல்லையேல் அதை வதைகளுக்கும், இழிவுகளுக்கும், குற்றவுணர்வுக்கும் உட்படுத்த முற்படும் மிருகத்தனம்தான் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருவரை அவரது பாலின அடையாளத்தை வைத்து சிறுமை படுத்த முயற்சிக்கும் போது, குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும்போது, தன்போன்றோரைத்தேடி தனக்கான குரலை பதிவு செய்து, தனக்கான அடிப்படை மரியாதையேக் கோரவும், “தனது பாலினத்தாலும், தனது பாலீர்ப்பாலும் தான் குறைவாக உணரவில்லை, நிறைவாகத்தான் உணர்கிறேன். சரியாகத்தான் உணர்கிறேன்.” என்பதை உரக்கச் சொல்வதற்கும் ‘எனது சுயத்தில் நான் வெட்கப்பட ஏதுமில்லை” என்பதை உலகுக்கு உணர்த்த இந்தப் பெயர்களும், முத்திரைகளும், pride-உம் அவசியம் தேவைப்படுகிறது.

சரி இவ்வளவு விசியங்களையும் பெரும்பாண்மையான பொதுப் புத்திக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பாக்கலாமா? இதை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று யோசியுங்கள். இத்தனை நாட்கள் முகம்சுளித்தே பழகியவர்கள், இழிவுபடுத்தி பழகியவர்கள், நகைத்துப்பேசி மட்டுமே பழிகியவர்கள், அசிங்கம், கேவலம், என்று பலவாறு அறுவருப்புடன் பேசியவர்களால் முழுமனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வரும் தலைமுறையினருக்கு இதனை முறையே நல்வழியில் அறிமுகப் படுத்த முடியும். அதற்கு இன்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நகரவேண்டும். நகரும் என்று நம்புவோம்.
None of your business. இதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். நான் யாருடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியா என்பதோ, நான் யாராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்பதோ நான் மட்டுமே கவலைப்படவும் மற்றும் நான் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைத் தீர்மானிக்க எனது குடும்பத்தினருக்கோ, சொந்தக்காரர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஊரார்களுக்கோ யாருக்கும் உரிமை இல்லை. Stereotype-களாகத்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. None of your business.
ஆனால், நான் யாரக இருக்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அக்கறைகொள்ளும் நபர்களும் என்னோடு சேர்ந்து பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். odd man out-ஆக ஒருவரை இச்சீர்மிகு சமூகம் புறக்கணிக்கும். இதைவெல்ல போதுமான மனத்திண்மை பாதிக்கப்படுவோர்களிடம் இருப்பது அரிது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பெண்களுக்கான வாக்குரிமையே சமீப ஆண்டுகளில்தான் நாம் பெற்றுள்ளோம். feminism-ஐ சரிவரப் புரிந்துகொள்ளவே (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இவர்களிடம் “LGBTQIA+” என்றால், “அப்டினா?” என்பார்கள்.
நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்
நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்
நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்
Pingback: நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள் – suryadevan.com
Pingback: நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம் – suryadevan.com